நெகேமியா 8:1-18

8  ‘தண்ணீர் நுழைவாசலின்’+ எதிரில் இருந்த பொது சதுக்கத்தில் ஜனங்கள் எல்லாரும் ஒருமனதாகக் கூடிவந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலம் யெகோவா கொடுத்திருந்த திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து வரும்படி நகலெடுப்பவராகிய* எஸ்றாவை+ அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.  அது ஏழாம் மாதம் முதல் நாள்.+ குருவாகிய எஸ்றா சபையாகக்+ கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், கேட்டு புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாகத் திருச்சட்டத்தை எடுத்துவந்தார்.  ‘தண்ணீர் நுழைவாசலின்’ எதிரில் பொது சதுக்கத்தில் கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாக விடியற்காலை தொடங்கி மத்தியானம்வரை அவர் அதைச் சத்தமாக வாசித்தார்.+ எல்லாரும் திருச்சட்ட புத்தகத்தின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள்.+  நகலெடுப்பவராகிய* எஸ்றா, அந்த நாளுக்காகவே செய்யப்பட்ட மரத்தாலான ஒரு மேடைமேல் நின்றுகொண்டிருந்தார். அவருடைய வலது பக்கத்தில் மத்தித்தியா, சேமா, ஆனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா ஆகியவர்களும், அவருடைய இடது பக்கத்தில் பெதாயா, மீஷாவேல், மல்கீயா,+ ஆசூம், அஸ்-பதானா, சகரியா, மெசுல்லாம் ஆகியவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.  உயரமான மேடையில் நின்றுகொண்டிருந்த எஸ்றா, ஜனங்கள் எல்லாரும் பார்க்கும்படி அந்தப் புத்தகத்தைத் திறந்தார். உடனே, எல்லாரும் எழுந்து நின்றார்கள்.  அப்போது எஸ்றா, மகத்துவமுள்ள உண்மைக் கடவுளாகிய யெகோவாவைப் புகழ்ந்தார். உடனே ஜனங்கள் எல்லாரும், “ஆமென்! ஆமென்!”*+ என்று சொல்லி, தங்கள் கைகளை வானத்துக்கு நேராக விரித்தார்கள். பின்பு, யெகோவாவுக்கு முன்பாக மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்கள்.  அதன்பின் யெசுவா, பானி, செரெபியா,+ யாமின், அக்கூப், சபெதாய், ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபத்,+ ஆனான், பெலாயா ஆகிய லேவியர்கள் திருச்சட்டத்தை விளக்கிச் சொன்னார்கள்.+ ஜனங்களும் நின்றுகொண்டே அதைக் கேட்டார்கள்.  இப்படி, எஸ்றாவும் லேவியர்களும் உண்மைக் கடவுளுடைய திருச்சட்ட புத்தகத்திலிருந்து சத்தமாக வாசித்து, அதைத் தெளிவாக விளக்கி, அதன் அர்த்தத்தை ஜனங்களின் மனதில் பதிய வைத்தார்கள். வாசிக்கப்பட்ட விஷயங்களை எல்லாரும் புரிந்துகொள்வதற்கு உதவி செய்தார்கள்.*+  திருச்சட்டத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்ட ஜனங்கள் எல்லாரும் அழுதுகொண்டிருந்தார்கள். அதனால் ஆளுநராக* இருந்த நெகேமியாவும், நகலெடுப்பவரும்* குருவுமான எஸ்றாவும்,+ ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்த லேவியர்களும் அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து, “இந்த நாள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்.+ அதனால் வருத்தப்படாதீர்கள், அழாதீர்கள்” என்று சொன்னார்கள். 10  பின்பு நெகேமியா அவர்களிடம், “நீங்கள் போய் நல்ல நல்ல உணவு வகைகளைச் சாப்பிடுங்கள், இனிப்பான பானங்களைக் குடியுங்கள், ஒன்றுமே இல்லாதவர்களுக்குப் பலகாரங்களை அனுப்பி வையுங்கள்.+ இந்த நாள் நம் எஜமானுக்குப் பரிசுத்தமான நாள். அதனால் சோகமாக இருக்காதீர்கள். யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”* என்று சொன்னார். 11  லேவியர்களும், “அழாதீர்கள்! இது பரிசுத்தமான நாள், வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லி ஜனங்களை அமைதிப்படுத்தினார்கள். 12  உடனே ஜனங்கள் எல்லாரும், சாப்பிடவும் குடிக்கவும் பலகாரங்களைக் கொடுக்கவும் கொண்டாடி மகிழவும்+ அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள். ஏனென்றால், அவர்கள் எல்லாரும் தங்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்ட விஷயங்களைப் புரிந்துகொண்டார்கள்.+ 13  இரண்டாம் நாளில், திருச்சட்ட வார்த்தைகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்காக, தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் குருமார்களும் லேவியர்களும் நகலெடுப்பவராகிய* எஸ்றாவைச் சூழ்ந்துகொண்டார்கள். 14  ஏழாம் மாதப் பண்டிகையின்போது+ இஸ்ரவேலர்கள் கூடாரங்களில் தங்க வேண்டுமென்று மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்ததை அப்போது அவர்கள் தெரிந்துகொண்டார்கள். 15  அதோடு, எல்லா நகரங்களிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம், “திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே மலைப்பகுதிக்குப் போய் ஒலிவ மரக் கிளைகளையும், எண்ணெய் மர* கிளைகளையும், குழிநாவல் மரக் கிளைகளையும், பேரீச்ச ஓலைகளையும், மற்ற அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டுவந்து கூடாரங்களை அமையுங்கள்” என்று அறிவிப்பு செய்ய வேண்டுமென்ற+ விஷயத்தையும் தெரிந்துகொண்டார்கள். 16  அதன்படியே, ஜனங்கள் போய் அடர்ந்த மரக் கிளைகளைக் கொண்டுவந்து தங்கள் மொட்டைமாடிகளிலும், முற்றங்களிலும், உண்மைக் கடவுளுடைய ஆலயப் பிரகாரங்களிலும்,+ ‘தண்ணீர் நுழைவாசலின்’+ பக்கத்தில் இருந்த பொது சதுக்கத்திலும், ‘எப்பிராயீம் நுழைவாசலின்’+ பக்கத்தில் இருந்த பொது சதுக்கத்திலும் கூடாரங்களை அமைத்தார்கள். 17  இப்படி, எருசலேமுக்குத் திரும்பி வந்த சபையார் எல்லாரும் கூடாரங்களை அமைத்து அதில் தங்கினார்கள். நூனின் மகனான யோசுவாவின்+ நாளிலிருந்து அந்த நாள்வரை இஸ்ரவேலர்கள் அவ்வளவு சிறப்பாக அந்தப் பண்டிகையைக் கொண்டாடியதே இல்லை. சந்தோஷத்தில் தேசமே களைகட்டியது.+ 18  முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை, உண்மைக் கடவுளின் திருச்சட்ட புத்தகம் தினமும் வாசிக்கப்பட்டது.+ ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது. எட்டாம் நாளில், திருச்சட்டத்தின்படியே ஒரு விசேஷ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “எழுத்தராகிய.”
வே.வா., “எழுத்தராகிய.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்! அப்படியே ஆகட்டும்!”
வே.வா., “ஜனங்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் வாசித்தார்கள்.”
வே.வா., “எழுத்தரும்.”
வே.வா., “திர்ஷாதாவாக.” திர்ஷாதா என்பது மாகாணத்தின் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட பெர்சியப் பட்டப்பெயர்.
வே.வா., “உங்களுக்குப் பலம்.”
வே.வா., “எழுத்தராகிய.”
நே.மொ., “பைன் மர.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா