நீதிமொழிகள் 26:1-28

26  கோடைக் காலத்துக்குப் பனியும், அறுவடைக் காலத்துக்கு மழையும் எப்படிப் பொருந்தாதோ,அப்படித்தான் முட்டாளுக்கும் மதிப்பு மரியாதை பொருந்தாது.+   காரணமில்லாமல் பறவை தப்பிக்காது, தகைவிலான் குருவியும் பறந்து போகாது.அதேபோல், காரணமில்லாமல் எந்தச் சாபமும் வராது.*   குதிரைக்குச் சாட்டையும் கழுதைக்குக் கடிவாளமும் தேவை.+அதேபோல், முட்டாளின் முதுகுக்குப் பிரம்படி தேவை.+   முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்லாதே.நீ ஏன் அவன் அளவுக்கு இறங்கி வர வேண்டும்?*   முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்.அவன் ஏன் தன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ள வேண்டும்?+   முட்டாளை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைப்பதும்,தன் காலையே முடமாக்கிக்கொண்டு தனக்கே கேடு செய்துகொள்வதும் ஒன்றுதான்.   முட்டாள் சொல்கிற பழமொழியும்+கால் ஊனமானவனின் நொண்டிக் காலும்* ஒன்றுதான்.   கவணில் கல்லைக் கட்டுவதும்முட்டாளைப் புகழ்வதும் ஒன்றுதான்.+   முட்டாள் சொல்கிற பழமொழியும்குடிகாரன் கையில் இருக்கிற முட்செடியும் ஒன்றுதான். 10  முட்டாளையோ முன்பின் தெரியாதவனையோ கூலிக்கு வைக்கிறவனும்,கண்மூடித்தனமாக அம்பு எறிந்து மற்றவர்களை* காயப்படுத்துகிறவனும் ஒன்றுதான். 11  நாய் தான் கக்கியதையே திரும்பப் போய்த் தின்பதுபோல்,முட்டாளும் தான் செய்த முட்டாள்தனத்தையே திரும்பவும் செய்கிறான்.+ 12  தன்னை ஞானியாக நினைத்துக்கொள்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?+ அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு. 13  “வெளியில் ஒரு இளம் சிங்கம் சுற்றுகிறது,தெருவில் ஒரு பெரிய சிங்கம் அலைகிறது!” என்று சோம்பேறி சொல்கிறான்.+ 14  கீலில்* கதவு ஆடிக்கொண்டே இருப்பதுபோல், சோம்பேறியும் கட்டிலில் புரண்டுகொண்டே இருப்பான்.+ 15  சோம்பேறி பாத்திரத்துக்குள் கை விடுவான்,ஆனால் சாப்பாட்டை வாய்வரை கொண்டுபோகக்கூட சோம்பல்படுவான்.+ 16  புத்திசாலித்தனமாகப் பதில் சொல்கிற ஏழு பேரைவிட,தானே ஞானி என்று சோம்பேறி நினைத்துக்கொள்கிறான். 17  வழியிலே யாரோ சண்டை போடுவதைப் பார்த்து ஆவேசப்படுவதும்,*நாயின் காதுகளைப் பிடிப்பதும் ஒன்றுதான்.+ 18  தீ பறக்கும் ஆயுதங்களையும் கொடிய* அம்புகளையும் எறிகிற பைத்தியக்காரனைப் போலத்தான், 19  அடுத்தவனை ஏமாற்றிவிட்டு, “விளையாட்டுக்காகச் செய்தேன்!” என்று சொல்கிறவனும் இருக்கிறான்.+ 20  விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்.இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் இல்லையென்றால் சண்டை சச்சரவுகள் அடங்கிவிடும்.+ 21  கரியும் விறகும் நெருப்பை மூட்டிவிடுவதுபோல்,சண்டைக்காரன் வாக்குவாதங்களை மூட்டிவிடுகிறான்.+ 22  இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனின் வார்த்தைகள் சிலருக்கு ருசியான உணவு* போல் இருக்கின்றன.அதை அவர்கள் ஆசை ஆசையாக விழுங்குகிறார்கள்.+ 23  உள்ளத்தில் பகையும் உதட்டில் பாசமும் காட்டுகிறவன்வெள்ளி முலாம் பூசப்பட்ட மண் ஓடுபோல் இருக்கிறான்.+ 24  ஒருவன் இனிக்க இனிக்கப் பேசி தன் பகையை மூடி மறைக்கிறான்.ஆனால், உள்ளத்தில் வஞ்சனையை வளர்க்கிறான். 25  அவன் தேனொழுகப் பேசினாலும் நம்பிவிடாதே.ஏனென்றால், அருவருப்பான ஏழு விஷயங்கள் அவன் உள்ளத்தில் இருக்கின்றன.* 26  என்னதான் நயவஞ்சகமாக அவன் தன் பகையை மறைத்தாலும்,அவனுடைய கெட்ட எண்ணம் சபையில் வெட்டவெளிச்சமாகும். 27  ஒருவன் குழி வெட்டினால் அவனே அந்தக் குழியில் விழுவான்.ஒருவன் கல்லை உருட்டிவிட்டால் அவன் மேலேயே அது உருண்டு விழும்.+ 28  பொய் பேசுகிற நாவு, தான் புண்படுத்தியவர்களை வெறுக்கிறது.பொய்யாகப் புகழ்கிற வாய், அழிவை உண்டாக்குகிறது.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “காரணமில்லாமல் விடுகிற சாபம் பலிக்காது.”
வே.வா., “நீ ஏன் அவனுக்குச் சமமாய் ஆக வேண்டும்?”
வே.வா., “தள்ளாடுகிற காலும்.”
வே.வா., “எல்லாரையும்.”
கீல் என்பது கதவைத் திறந்து மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகப் பட்டை.
அல்லது, “தேவையில்லாமல் தலையிடுவதும்.”
வே.வா., “உயிரைப் பறிக்கும்.”
வே.வா., “பேராசையோடு விழுங்குகிற உணவு.”
வே.வா., “ஏனென்றால், அவனுடைய உள்ளம் முழுவதும் அருவருப்பானது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா