நியாயாதிபதிகள் 10:1-18

10  அபிமெலேக்கு இறந்த பிறகு, இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்த தோலா என்பவர் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவதற்காக நியாயாதிபதியாய் நியமிக்கப்பட்டார்.+ அவர் தோதோவின் மகனாகிய பூவா என்பவரின் மகன். எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள சாமீரில் வாழ்ந்துவந்தார்.  அவர் 23 வருஷங்கள் இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதியாக இருந்தார். பின்பு இறந்துபோய், சாமீரில் அடக்கம் செய்யப்பட்டார்.  அவருக்குப்பின் கீலேயாத்தைச் சேர்ந்த யாவீர் 22 வருஷங்கள் இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதியாக இருந்தார்.  அவருக்கு 30 மகன்கள் இருந்தார்கள். அவர்கள் 30 கழுதைகளில் சவாரி செய்தார்கள். அவர்களுக்கு 30 நகரங்கள் இருந்தன. கீலேயாத் பிரதேசத்தில் இருக்கும் அந்த நகரங்கள் இன்றுவரை அவோத்-யாவீர்+ என்று அழைக்கப்படுகின்றன.  பின்பு யாவீர் இறந்துபோய், காமோனில் அடக்கம் செய்யப்பட்டார்.  அதன்பின், இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தார்கள்.+ பாகால்களின் சிலைகளையும்+ அஸ்தரோத்தின் சிலைகளையும் அராமின்* தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும்+ அம்மோனியர்களின் தெய்வங்களையும்+ பெலிஸ்தியர்களின் தெய்வங்களையும்+ கும்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் யெகோவாவை வணங்காமல் அவரைவிட்டு விலகினார்கள்.  அதனால், யெகோவாவின் கோபம் இஸ்ரவேலர்கள்மேல் பற்றியெரிந்தது. பெலிஸ்தியர்களின் கையிலும் அம்மோனியர்களின் கையிலும் அவர்களை அவர் விட்டுவிட்டார்.*+  அந்த வருஷம் தொடங்கி 18 வருஷங்களுக்கு அவர்கள் இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தி, ரொம்பவே அடக்கி ஒடுக்கினார்கள். யோர்தானுக்குக் கிழக்குப் பக்கத்தில், அதாவது எமோரியர்களின் தேசமான கீலேயாத்தில், வாழ்ந்துவந்த எல்லா இஸ்ரவேலர்களையும் அடக்கி ஒடுக்கினார்கள்.  யூதா, பென்யமீன், எப்பிராயீம் கோத்திரத்தாருடனும் போர் செய்ய அம்மோனியர்கள் யோர்தானைக் கடந்து வந்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் பெரிய இக்கட்டில் சிக்கித் தவித்தார்கள். 10  அப்போது யெகோவாவிடம், “எங்கள் கடவுளே, நாங்கள் உங்களை விட்டுவிட்டு பாகால்களை வணங்கி, உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோம்”+ என்று சொல்லி, உதவிக்காகக் கெஞ்சினார்கள்.+ 11  ஆனால் யெகோவா இஸ்ரவேலர்களிடம், “எகிப்தியர்களும்,+ எமோரியர்களும்,+ அம்மோனியர்களும், பெலிஸ்தியர்களும்,+ 12  சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மீதியானியர்களும் உங்களை அடக்கி ஒடுக்கியபோது, அவர்களிடமிருந்து நான் உங்களைக் காப்பாற்றவில்லையா? நீங்கள் என்னிடம் கதறி அழுதபோது, அவர்களுடைய கையிலிருந்து நான் உங்களைக் காப்பாற்றவில்லையா? 13  ஆனால், நீங்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கினீர்கள்.+ அதனால், இனி நான் உங்களைக் காப்பாற்ற மாட்டேன்.+ 14  நீங்கள் தேடிப்போன தெய்வங்களிடமே உதவி கேளுங்கள்.+ கஷ்ட காலத்தில் அந்த தெய்வங்களே உங்களைக் காப்பாற்றட்டும்”+ என்று சொன்னார். 15  அப்போது இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “நாங்கள் பாவம் செய்துவிட்டோம். அதற்காக எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இன்று மட்டும் தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினார்கள். 16  அதோடு, தங்களிடமிருந்த பொய் தெய்வங்கள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு யெகோவாவை வணங்கினார்கள்.+ அதனால், அவர்கள் கஷ்டப்படுவதை அதற்கு மேலும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.+ 17  பின்பு, அம்மோனியர்கள்+ போருக்காக ஒன்றுதிரண்டு, கீலேயாத்தில் முகாம்போட்டார்கள். இஸ்ரவேலர்களும் ஒன்றுதிரண்டு மிஸ்பாவில் முகாம்போட்டார்கள். 18  அப்போது, கீலேயாத் ஜனங்களும் அதிகாரிகளும், “அம்மோனியர்களை எதிர்த்துப் போர் செய்ய யார் நமக்குத் தலைமைதாங்குவாரோ+ அவர்தான் கீலேயாத் ஜனங்கள் எல்லாருக்கும் தலைவராக இருக்க வேண்டும்” என்று பேசிக்கொண்டார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சீரியாவின்.”
நே.மொ., “விற்றுப்போட்டார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா