தானியேல் 7:1-28

7  அது பாபிலோனின் ராஜா பெல்ஷாத்சார்+ ஆட்சி செய்த முதலாம் வருஷம். ஒருநாள் ராத்திரி தானியேல் படுத்திருந்தபோது கனவையும் தரிசனங்களையும் பார்த்தார்.+ பார்த்ததையெல்லாம் அவர் விவரமாக எழுதி வைத்தார்.+  தானியேல் இப்படிச் சொன்னார்: “ராத்திரி நான் பார்த்த தரிசனத்தில், நான்கு திசைகளிலிருந்தும் காற்று அடித்து ஒரு பெரிய கடலைக் கொந்தளிக்க வைத்தது.+  அப்போது, வித்தியாசமான உருவங்களில் நான்கு பெரிய மிருகங்கள்+ அந்தக் கடலிலிருந்து எழும்பி வந்தன.  முதலாவது மிருகம் சிங்கத்தைப் போலிருந்தது.+ அதற்கு கழுகின் சிறகுகள் இருந்தன.+ அதன் சிறகுகள் பிடுங்கப்பட்டதைப் பார்த்தேன். அது தரையிலிருந்து தூக்கப்பட்டு மனிதனைப் போல் இரண்டு கால்களில் நிற்க வைக்கப்பட்டது. அதற்கு மனித இதயம் கொடுக்கப்பட்டது.  அதன் பின்பு, கரடியைப் போன்ற இன்னொரு மிருகத்தைப் பார்த்தேன்.+ அது ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று, மூன்று விலா எலும்புகளைத் தன்னுடைய பற்களில் கவ்விக்கொண்டிருந்தது. ‘எழுந்து, இஷ்டம்போல் இறைச்சி சாப்பிடு’+ என்று அதற்குச் சொல்லப்பட்டது.  அதற்குப் பின்பு, சிறுத்தையைப் போன்ற இன்னொரு மிருகத்தைப் பார்த்தேன்.+ அதனுடைய முதுகில் பறவையின் சிறகுகளைப் போன்ற நான்கு சிறகுகள் இருந்தன. அந்த மிருகத்துக்கு நான்கு தலைகளும் இருந்தன.+ ஆட்சி செய்யும் அதிகாரம் அதற்குக் கொடுக்கப்பட்டது.  அதற்குப் பின்பு அந்தத் தரிசனத்தில், நான்காவது மிருகத்தைப் பார்த்தேன். அதனுடைய உருவம் பயங்கரமாகவும் திகிலூட்டுவதாகவும் இருந்தது. அது அபார பலம் உள்ளதாக இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது எல்லாவற்றையும் நொறுக்கி, விழுங்கியது; மீதியானதைக் கால்களால் மிதித்துப்போட்டது.+ முந்தின மூன்று மிருகங்களிலிருந்து அது வித்தியாசமாக இருந்தது. அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.  அந்தக் கொம்புகளை நான் கவனித்துக்கொண்டே இருந்தபோது, அவற்றுக்கு இடையில் இன்னொரு சிறிய கொம்பு முளைத்தது.+ அப்போது, முந்தின கொம்புகளில் மூன்று கொம்புகள் பிடுங்கப்பட்டன. புதிய கொம்புக்கு மனிதக் கண்களைப் போன்ற கண்களும், பெருமை பேசுகிற வாயும் இருந்தன.+  அதற்குப் பின்பு, சிம்மாசனங்கள் வைக்கப்பட்டன. யுகம் யுகமாக வாழ்கிறவர்+ தன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தார்.+ அவருடைய உடை பனிபோல் வெண்மையாக இருந்தது,+ அவருடைய தலைமுடி பஞ்சுபோல் வெள்ளையாக இருந்தது. அவருடைய சிம்மாசனம் தீக்கொழுந்துகளாகவும் அதன் சக்கரங்கள் எரிகிற நெருப்பாகவும் இருந்தன.+ 10  ஒரு நெருப்பு ஓடை அவருடைய சிம்மாசனத்திலிருந்து புறப்பட்டு ஓடியது.+ ஆயிரமாயிரம் பேர் அவருக்குச் சேவை செய்தார்கள், கோடானுகோடி* பேர் அவருக்கு முன்னால் நின்றார்கள்.+ நீதிமன்றம்+ கூடியது, புத்தகங்கள் திறக்கப்பட்டன. 11  பின்பு, அந்தக் கொம்பு பெருமையான வார்த்தைகளைப் பேசும் சத்தத்தை நான் கேட்டேன்.+ அதனால் நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். பின்பு, அந்த மிருகம் கொல்லப்பட்டது. அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டது. 12  மற்ற மிருகங்களிடமிருந்து+ அரசாட்சி பறிக்கப்பட்டது. ஆனால், அவற்றின் ஆயுள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நீட்டிக்கப்பட்டது. 13  அதற்குப் பின்பு, ராத்திரியில் நான் பார்த்த அந்தத் தரிசனத்தில், மனிதகுமாரனைப்+ போன்ற ஒருவர் வானத்தின் மேகங்களோடு வந்தார். யுகம் யுகமாக வாழ்கிறவரின்+ முன்னால் வர அனுமதி அளிக்கப்பட்டு, அவருக்குப் பக்கத்தில் கொண்டுபோகப்பட்டார். 14  எல்லா இனத்தினரும் தேசத்தினரும் மொழியினரும் இவருக்குச் சேவை செய்வதற்காக,+ அரசாட்சியும்+ மேன்மையும்+ ராஜ்யமும் இவருக்கே கொடுக்கப்பட்டன. இவருடைய அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும், இவருடைய ராஜ்யம் அழிக்கப்படாது.+ 15  தானியேலாகிய நான் அந்தத் தரிசனங்களைப் பார்த்துப் பயந்துபோனேன்.+ அவற்றை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன். 16  அங்கு நின்றவர்களில் ஒருவரிடம் போய் அவற்றின் உண்மையான அர்த்தத்தைக் கேட்டேன். அவர் எல்லாவற்றையும் எனக்கு விளக்கினார். 17  ‘அந்த நான்கு பெரிய மிருகங்கள்,+ பூமியில் எழும்பப்போகும் நான்கு ராஜாக்களைக் குறிக்கின்றன.+ 18  ஆனால், மகா உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள்தான்+ ராஜ்யத்தைப் பெறுவார்கள்.+ என்றென்றைக்கும், சதா காலத்துக்கும், அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்’+ என்று சொன்னார். 19  பின்பு, மற்ற எல்லா மிருகங்களிலிருந்தும் வித்தியாசமாக இருந்த அந்த நான்காவது மிருகத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன். அது இரும்புப் பற்களோடும் செம்பு நகங்களோடும் பார்ப்பதற்கு படுபயங்கரமாக இருந்தது. அது எல்லாவற்றையும் நொறுக்கி, விழுங்கியது; மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது.+ 20  அதன் தலையில் 10 கொம்புகள்+ இருந்தன. பின்பு, புதிதாக ஒரு கொம்பு முளைத்தது. அப்போது, முந்தின கொம்புகளில் 3 கொம்புகள் விழுந்தன.+ அந்தப் புதிய கொம்புக்குக் கண்களும் பெருமை பேசுகிற வாயும் இருந்தன. அது மற்ற கொம்புகளைவிட பெரியதாக இருந்தது. 21  அதற்குப் பின்பு, அந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடு தொடர்ந்து போர் செய்து அவர்களை ஜெயித்துவந்தது.+ 22  கடைசியில், யுகம் யுகமாக வாழ்கிறவர்+ வந்தார். மகா உன்னதமானவரான அவர் தன்னுடைய பரிசுத்தவான்களின் சார்பாக நியாயத்தீர்ப்பு வழங்கினார்.+ அந்தப் பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதற்கு நேரம் வந்தது.+ 23  அவர் என்னிடம், ‘நான்காவது மிருகம், இந்தப் பூமியில் எழும்பப்போகிற நான்காவது ராஜ்யத்தைக் குறிக்கிறது. அது மற்ற எல்லா ராஜ்யங்களிலிருந்தும் வித்தியாசமாக இருக்கும். அது பூமியிலுள்ள எல்லாவற்றையும் மிதித்து, நொறுக்கி, விழுங்கிவிடும்.+ 24  அந்த 10 கொம்புகள், அந்த ராஜ்யத்தில் எழும்பப்போகிற 10 ராஜாக்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பின்பு இன்னொரு ராஜா தோன்றுவான். முன்பிருந்த ராஜாக்களிலிருந்து அவன் வித்தியாசமாக இருப்பான். அந்த ராஜாக்களில் 3 பேரை அவன் தோற்கடிப்பான்.+ 25  அவன் உன்னதமானவருக்கு எதிராகப் பேசுவான்.+ மகா உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்கு எப்போதும் தொல்லை கொடுப்பான். காலங்களையும் சட்டத்தையும் மாற்ற நினைப்பான். அந்தப் பரிசுத்தவான்கள் ஒரு காலத்துக்கும், இரண்டு காலங்களுக்கும், அரைக் காலத்துக்கும்*+ அவனுடைய கையில் கொடுக்கப்படுவார்கள். 26  ஆனால், நீதிமன்றம் கூடும். அவனுடைய அரசாட்சி பறிக்கப்படும். அவன் ஒரேயடியாக ஒழித்துக்கட்டப்படுவான்.+ 27  உலகெங்கும் இருக்கிற ராஜ்யங்களும் அவற்றின் அரசாட்சியும் மேன்மையும் மகா உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படும்.+ அவர்களுடைய ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ எல்லா ராஜ்யங்களைச் சேர்ந்த ஜனங்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்வார்கள்’ என்றார். 28  நான் பார்த்த தரிசனத்தின் முடிவு இதுதான். தானியேலாகிய நான் இதையெல்லாம் நினைத்துக் கதிகலங்கிப்போனேன். என் முகம் வெளுத்துப்போனது.* ஆனாலும், எல்லாவற்றையும் என் உள்ளத்திலேயே வைத்துக்கொண்டேன்.”

அடிக்குறிப்புகள்

நே.மொ., “பத்தாயிரம் தடவை பத்தாயிரம்.”
அதாவது, “மொத்தம் மூன்றரை காலங்களுக்கு.”
வே.வா., “தோற்றம் மாறியது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா