சகரியா 3:1-10

3  யெகோவாவின் தூதருக்கு முன்னால் தலைமைக் குருவாகிய யோசுவா+ நின்றுகொண்டிருந்ததை அவர் எனக்குக் காட்டினார். யோசுவாவை எதிர்ப்பதற்காக அவருடைய வலது பக்கத்தில் சாத்தான் நின்றுகொண்டிருந்தான்.+  பின்பு யெகோவாவின் தூதர் சாத்தானிடம், “சாத்தானே, யெகோவா உன்னைக் கண்டிக்கட்டும்!+ எருசலேமைத் தேர்ந்தெடுத்த யெகோவா+ உன்னைக் கண்டிக்கட்டும்! இந்த மனுஷன், எரிகிற நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை போல இருக்கிறான்” என்று சொன்னார்.  யோசுவா அழுக்கான உடையைப் போட்டுக்கொண்டு கடவுளுடைய தூதருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தார்.  அந்தத் தூதர் தனக்கு முன்னால் நின்றிருந்தவர்களிடம், “அவனுடைய அழுக்கான உடையைக் கழற்றுங்கள்” என்று சொன்னார். பின்பு யோசுவாவைப் பார்த்து, “உன்னுடைய குற்றங்களை உன்னைவிட்டு நீக்கிவிட்டேன், நீ போட்டுக்கொள்வதற்கு விசேஷ உடைகளைத் தருவேன்”+ என்றார்.  அப்போது நான், “சுத்தமான தலைப்பாகையை அவருக்குப் போட்டுவிடுங்கள்”+ என்று சொன்னேன். உடனே அவர்கள், சுத்தமான தலைப்பாகையையும் விசேஷ உடைகளையும் அவருக்குப் போட்டுவிட்டார்கள்; யெகோவாவின் தூதர் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.  பின்பு யெகோவாவின் தூதர் யோசுவாவிடம்,  “‘நான் காட்டும் வழியில் நடந்து, நான் கொடுத்த பொறுப்புகளைச் செய்தால், என்னுடைய ஜனங்களுக்கு நீ நீதிபதியாக இருப்பாய்,+ என்னுடைய வீட்டை* கவனித்துக்கொள்வாய். இங்கு நிற்பவர்களைப் போலவே எப்போது வேண்டுமானாலும் என் முன்னிலையில் வருகிற பாக்கியத்தைப் பெற்றுக்கொள்வாய்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.  ‘தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும் உனக்கு முன்பாக உட்காருகிற உன் நண்பர்களும் நான் சொல்வதைத் தயவுசெய்து கேளுங்கள். எதிர்கால சம்பவங்களுக்கு நீங்கள் ஒரு அடையாளமாக இருக்கிறீர்கள். இதோ, தளிர்+ என்றழைக்கப்படும் என் ஊழியனை நான் அழைத்து வருகிறேன்.+  யோசுவாவுக்கு முன்னால் நான் வைத்துள்ள கல்லைப் பாருங்கள்! அதன்மேல் ஏழு கண்கள் இருக்கின்றன. நான் உளியால் அதில் செதுக்குகிறேன். இந்தத் தேசத்தின் குற்றங்களை ஒரே நாளில் நீக்கிவிடுவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 10  ‘அந்த நாளில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்து பேசுவதற்காக அக்கம்பக்கத்தாரைக் கூப்பிடுவீர்கள்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்” என்றார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “பிரகாரங்களை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா