எசேக்கியேல் 47:1-23

47  பின்பு, அவர் என்னை மறுபடியும் ஆலயத்தின் வாசலுக்குக் கொண்டுவந்தார்.+ ஆலயத்தின் முன்பகுதி கிழக்கே பார்த்தபடி இருந்தது. அங்கே வாசலறையின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டு கிழக்கு நோக்கி ஓடுவதை நான் பார்த்தேன்.+ அது ஆலயத்தின் வலது பக்கமாக, அதாவது பலிபீடத்தின் தெற்குப் பக்கமாக, ஓடியது.  பின்பு, அவர் என்னை வடக்கு நுழைவாசல்+ வழியாக வெளியே கொண்டுபோனார். அங்கிருந்து, கிழக்கே பார்த்தபடி இருந்த வெளிவாசலுக்குக் கொண்டுபோனார்.+ அங்கே வலது பக்கத்தில் தண்ணீர் லேசாக ஓடுவதைப் பார்த்தேன்.  அவர் ஒரு அளவுகோலுடன்+ கிழக்குப் பக்கமாகப் போய், 1,000 முழத்தை* அளந்து, அங்கே தண்ணீரைக் கடந்துபோகும்படி என்னிடம் சொன்னார். அப்போது, தண்ணீர் என்னுடைய கணுக்கால் அளவுக்கு இருந்தது.  பின்பு இன்னொரு 1,000 முழத்தை அளந்து, தண்ணீரைக் கடந்துபோகும்படி என்னிடம் சொன்னார். அப்போது, தண்ணீர் என்னுடைய முழங்கால் அளவுக்கு இருந்தது. பின்பு இன்னொரு 1,000 முழத்தை அளந்து, தண்ணீரைக் கடந்துபோகும்படி என்னிடம் சொன்னார். அப்போது, தண்ணீர் என்னுடைய இடுப்பு அளவுக்கு இருந்தது.  பின்பு, இன்னொரு 1,000 முழத்தை அளந்தார். என்னால் கடந்துபோக முடியாதளவுக்கு அது ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது. நீந்திப் போகிற அளவுக்கு அது ஆழமாக இருந்தது. ஒருவராலுமே நடந்துபோக முடியாதளவுக்கு இருந்தது.  அவர் என்னிடம், “மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா?” என்று கேட்டார். பின்பு, என்னை மறுபடியும் ஆற்றங்கரைக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.  நான் ஆற்றங்கரைக்குத் திரும்பி வந்தபோது, இரண்டு பக்கங்களிலும் ஏராளமான மரங்கள் இருப்பதைப் பார்த்தேன்.+  அவர் என்னிடம், “இந்த ஆறு கிழக்குப் பிரதேசத்தின் திசையில் பாய்ந்தோடி, அரபா*+ வழியாகப் போய், கடலில்* கலக்கும்.+ அப்போது, கடல் தண்ணீர் நல்ல தண்ணீராக ஆகும்.  இந்த ஆறு எங்கெல்லாம் பாய்ந்தோடுகிறதோ அங்கெல்லாம் ஏராளமான உயிரினங்களால் உயிர்வாழ முடியும். இந்த ஆறு பாய்ந்தோடுகிற இடங்களில் மீன்கள் கணக்குவழக்கில்லாமல் பெருகும். கடல் தண்ணீர் நல்ல தண்ணீராக ஆகும். இந்த ஆறு எங்கே பாய்ந்தோடினாலும் அங்கே இருக்கிறவையெல்லாம் உயிர் பிழைக்கும். 10  என்-கேதி+ தொடங்கி என்-எக்லாயிம் வரைக்கும் மீனவர்கள் அந்தக் கரையில் நிற்பார்கள். மீன் வலைகளைக் காயவைக்கும் இடம் அங்கே இருக்கும். பெருங்கடலில்*+ இருப்பதைப் போல அங்கும் வகை வகையான மீன்கள் ஏராளமாக இருக்கும். 11  அதை ஒட்டியிருக்கிற சதுப்பு நிலங்கள் நல்ல நிலங்களாக மாறாமல் உப்பு நிலங்களாகவே இருக்கும்.+ 12  இந்த ஆற்றின் இரண்டு கரைகளிலும் விதவிதமான மரங்கள் வளர்ந்து கனிகளைக் கொடுக்கும். அவற்றின் இலைகள் உதிராது. அவை கனி கொடுக்காமல் போகாது. ஒவ்வொரு மாதமும் புதிய கனிகளைக் கொடுக்கும். ஏனென்றால், அவற்றுக்குக் கிடைக்கும் தண்ணீர் ஆலயத்திலிருந்து பாய்ந்து வரும்.+ அவற்றின் கனிகள் உணவாகவும், அவற்றின் இலைகள் மருந்தாகவும் பயன்படும்”+ என்றார். 13  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுக்கு இந்தத் தேசத்தைத்தான் நீங்கள் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும். யோசேப்புக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும்.+ 14  நீங்கள் இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். எல்லாருக்கும் இதில் சமமான பங்கு கிடைக்கும். இந்தத் தேசத்தைத்தான் உங்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக நான் வாக்குறுதி கொடுத்திருந்தேன்.+ இப்போது இது உங்களுக்குச் சொத்தாகக் கொடுக்கப்படுகிறது. 15  தேசத்தின் வடக்கு எல்லை பெருங்கடல் தொடங்கி எத்லோன்+ வழியாக சேதாத்,+ 16  காமாத்,+ பேரொத்தா+ ஆகிய இடங்களுக்கும், தமஸ்குவுக்கும் காமாத்துக்கும் இடையிலுள்ள சிப்ராயிமுக்கும், ஆப்ரானின்+ எல்லையில் உள்ள ஆத்சார்-அத்தீகோனுக்கும் போகிறது. 17  அது கடல் தொடங்கி தமஸ்குவின் எல்லையில் உள்ள ஆத்சார்-ஏனான்+ வரைக்கும், வடக்கிலே காமாத்தின்+ எல்லை வரைக்கும் போகிறது. இதுதான் வடக்கு எல்லை. 18  அதன் கிழக்கு எல்லை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையில் போகிறது. கீலேயாத்துக்கும்+ இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையில் யோர்தான் நெடுகப் போகிறது. நீங்கள் எல்லையிலிருந்து* கிழக்குக் கடல்வரை* அளக்க வேண்டும். இதுதான் கிழக்கு எல்லை. 19  அதன் தெற்கு எல்லை தாமார் தொடங்கி மேரிபாத்-காதேசின்+ தண்ணீர் வரைக்கும், பின்பு பள்ளத்தாக்கு* வரைக்கும், அங்கிருந்து பெருங்கடல்+ வரைக்கும் போகிறது. இதுதான் தெற்கு எல்லை. 20  அதன் மேற்குப் பகுதியில் பெருங்கடல் இருக்கிறது. தெற்கு எல்லையிலிருந்து லெபோ-காமாத்துக்கு*+ எதிரில் உள்ள பகுதி வரையாக அதன் எல்லை போகிறது. இதுதான் மேற்கு எல்லை.” 21  “நீங்கள் இந்தத் தேசத்தை இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும். 22  உங்களுக்கும், உங்கள் நடுவில் குடியேறி பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட மற்ற தேசத்து ஜனங்களுக்கும் இந்தத் தேசத்தைச் சொத்தாகப் பங்கிட வேண்டும். அவர்களை இஸ்ரவேலின் குடிமக்களைப் போலவே ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்ரவேலின் கோத்திரங்கள் மத்தியில் உங்களுக்குப் பங்கு கிடைக்கும்போது அவர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். 23  அவர்கள் எந்தக் கோத்திரத்துக்குச் சொந்தமான இடத்தில் குடியிருக்கிறார்களோ அந்த இடத்திலேயே அவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டும்” என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.

அடிக்குறிப்புகள்

இது பெரிய முழத்தைக் குறிக்கிறது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பாலைநிலம்.”
அதாவது, “சவக் கடலில்.”
அதாவது, “மத்தியதரைக் கடலில்.”
அதாவது, “வடக்கு எல்லையிலிருந்து.”
அதாவது, “சவக் கடல்வரை.”
அதாவது, “எகிப்தின் காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.”
வே.வா., “காமாத்தின் நுழைவாசலுக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா