எசேக்கியேல் 42:1-20

42  அதன்பின், அவர் என்னை வடக்கிலிருந்த வெளிப்பிரகாரத்துக்குக் கொண்டுபோனார்.+ அங்கிருந்து, திறந்தவெளிப் பகுதிக்குப் பக்கத்திலும் அதை ஒட்டியிருந்த கட்டிடத்தின்+ வடக்கிலும் இருந்த சாப்பாட்டு அறைகளுக்கு என்னைக் கொண்டுபோனார்.+  அவற்றின் வடக்கு நுழைவாசல் 100 முழ* நீளத்திலும் 50 முழ அகலத்திலும் இருந்தது.  அவை உட்பிரகாரத்தில் 20 முழ அகலத்தில் இருந்த காலியான பகுதிக்கும் வெளிப்பிரகாரத்தின் தளத்துக்கும் இடையில் இருந்தன.+ அவற்றின் நடைக்கூடங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி இருந்தன. அவை மூன்று அடுக்குகளிலும் இருந்தன.  சாப்பாட்டு அறைகளுக்கு முன்னால் உட்புற நடைபாதை ஒன்று இருந்தது.+ அதன் அகலம் 10 முழமாக இருந்தது, நீளம் 100 முழமாக இருந்தது.* அவற்றின் நுழைவாசல்கள் வடக்குப் பக்கமாக இருந்தன.  நடு அடுக்கிலும் கீழ் அடுக்கிலும் இருந்த சாப்பாட்டு அறைகளைவிட மேல் அடுக்கிலிருந்த சாப்பாட்டு அறைகள் சின்னதாக இருந்தன. ஏனென்றால், நடைக்கூடங்கள் அதிக இடத்தை எடுத்துக்கொண்டன.  அவை மூன்று அடுக்குகளாக இருந்தன. ஆனால், பிரகாரங்களில் இருந்தது போல அங்கே தூண்கள் இல்லை. அதனால்தான் கீழ் அடுக்கையும் நடு அடுக்கையும்விட மேல் அடுக்கின் அறைகள் சின்னதாக இருந்தன.  வெளிப்பிரகாரத்தை ஒட்டிய சாப்பாட்டு அறைகளுக்குப் பக்கத்தில், அதாவது மற்ற சாப்பாட்டு அறைகளுக்கு எதிரில், ஒரு கற்சுவர் இருந்தது. அதன் நீளம் 50 முழமாக இருந்தது.  வெளிப்பிரகாரத்தை ஒட்டிய சாப்பாட்டு அறைகளின் மொத்த நீளம் 50 முழமாக இருந்தது. ஆனால், ஆலயத்தின் பக்கமாக இருந்த சாப்பாட்டு அறைகளின் மொத்த நீளம் 100 முழமாக இருந்தது.  சாப்பாட்டு அறைகளுக்குக் கிழக்குப் பக்கத்தில் ஒரு நுழைவாசல் இருந்தது. அது வெளிப்பிரகாரத்திலிருந்து சாப்பாட்டு அறைகளுக்குப் போவதற்கான வாசலாக இருந்தது. 10  கிழக்கே, காலியான இடத்துக்கும் கட்டிடத்துக்கும் பக்கத்தில் இருந்த பிரகாரத்தின் கற்சுவருக்கு உள்ளேயும் சாப்பாட்டு அறைகள் இருந்தன.+ 11  அவற்றுக்குமுன், வடக்கிலிருந்த சாப்பாட்டு அறைகளுக்கு இருந்தது போலவே ஒரு நடைபாதை இருந்தது.+ அவை ஒரே நீளத்திலும் அகலத்திலும் இருந்தன. அவற்றின் வாசல்களும் கட்டமைப்பும் ஒரேபோல் இருந்தன. அவற்றின் நுழைவாசல்கள், 12  தெற்கில் இருந்த சாப்பாட்டு அறைகளின் நுழைவாசல்களைப் போலவே இருந்தன. நடைபாதை தொடங்கிய இடத்தில், கிழக்கிலிருந்த கற்சுவருக்கு முன்னால் ஒரு நுழைவாசல் இருந்தது.+ 13  அவர் என்னிடம், “வடக்கிலும் தெற்கிலும் இருக்கிற திறந்தவெளிப் பகுதிகளுக்குப் பக்கத்திலுள்ள சாப்பாட்டு அறைகள்+ பரிசுத்தமானவை. அங்கேதான் யெகோவாவின் சன்னிதியில் வேலை செய்கிற குருமார்கள் மகா பரிசுத்த பலிகளைச் சாப்பிட வேண்டும்.+ அங்கேதான் மகா பரிசுத்தமான பலிகளையும், உணவுக் காணிக்கைகளையும், பாவப் பரிகாரப் பலிகளையும், குற்ற நிவாரண பலிகளையும் அவர்கள் வைக்க வேண்டும். ஏனென்றால், அந்த இடம் பரிசுத்தமான இடம்.+ 14  பரிசுத்த இடத்துக்குள் போகிற குருமார்கள் பரிசுத்த சேவைக்கான உடைகளைக் கழற்றி வைத்த பின்புதான் வெளிப்பிரகாரத்துக்கு வர வேண்டும்.+ ஏனென்றால், அந்த உடைகள் பரிசுத்தமானவை. ஜனங்கள் இருக்கும் பிரகாரத்துக்கு வரும்போது குருமார்கள் வேறு உடைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார். 15  ஆலயத்துக்கு உள்ளே இருந்த பகுதிகளை அவர் அளந்து முடித்த பின்பு கிழக்கு நுழைவாசல் வழியாக என்னை வெளியே கூட்டிக்கொண்டு வந்து,+ அந்த முழு வளாகத்தையும் அளந்தார். 16  அளவுகோலினால்* அவர் கிழக்குப் பக்கத்தை அளந்தார். அது ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம்வரை 500 அளவுகோல் நீளமாக இருந்தது. 17  அவர் வடக்குப் பக்கத்தை அளந்தபோது, அது 500 அளவுகோல் நீளமாக இருந்தது. 18  அவர் தெற்குப் பக்கத்தை அளந்தபோது, அது 500 அளவுகோல் நீளமாக இருந்தது. 19  பின்பு, மேற்குப் பக்கத்துக்குப் போய் அதை அளந்தார். அது 500 அளவுகோல் நீளமாக இருந்தது. 20  இப்படி, வளாகத்தின் நான்கு பக்கங்களையும் அளந்தார். பரிசுத்தமான இடத்தையும் பொது உபயோகத்துக்கான இடத்தையும் பிரிப்பதற்காக+ அதைச் சுற்றிலும் ஒரு சுவர் இருந்தது.+ அதன் நீளம் 500 அளவுகோலாகவும் அகலம் 500 அளவுகோலாகவும் இருந்தது.+

அடிக்குறிப்புகள்

இது பெரிய முழத்தைக் குறிக்கிறது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
கிரேக்க செப்டுவஜன்ட் பிரதியின்படி, “நீளம் 100 முழமாக இருந்தது.” எபிரெயப் பிரதியின்படி, “ஒரு முழ பாதை இருந்தது.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா