எசேக்கியேல் 18:1-32

18  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “‘தகப்பன்கள் புளிப்பான திராட்சைகளைச் சாப்பிட்டார்கள்; ஆனால், பிள்ளைகளின் பற்கள் கூசுகின்றன’+ என்ற பழமொழியை இஸ்ரவேல் தேசத்தில் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே, அதற்கு என்ன அர்த்தம்?  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இஸ்ரவேலில் இனி இந்தப் பழமொழியை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்.  எல்லா உயிர்களும்* எனக்குத்தான் சொந்தம். தகப்பனுடைய உயிரும் சரி, மகனுடைய உயிரும் சரி, எனக்குத்தான் சொந்தம். பாவம் செய்கிற எவனும் செத்துப்போவான்.  ‘நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கிற ஒரு நீதிமானை எடுத்துக்கொள்ளலாம்.  அவன் மலைகள்மேல்+ சிலைகளுக்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடாமலும், இஸ்ரவேல் ஜனங்களுடைய அருவருப்பான* சிலைகளை வணங்காமலும், அடுத்தவருடைய மனைவியோடு முறைகேடான உறவு வைக்காமலும்,+ மாதவிலக்கு ஏற்பட்ட ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்ளாமலும் இருக்கிறான்.+  அவன் யாரையும் மோசமாக நடத்தாமல் இருக்கிறான்,+ கடன் வாங்கியவனுக்கு அடமானத்தைத் திருப்பிக் கொடுக்கிறான்.+ மற்றவர்களுடைய பொருள்களைத் திருடாமல்,+ இல்லாதவர்களுக்குத் தன்னுடைய உணவையும்+ உடையையும் கொடுக்கிறான்.+  அநியாய வட்டி வாங்காமலும் மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்காமலும்+ அநீதி செய்யாமலும்+ இருக்கிறான். மற்றவர்களுடைய வழக்குகளை நியாயத்தோடு தீர்த்து வைக்கிறான்.+  எப்போதுமே என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் உண்மையோடு கடைப்பிடிக்கிறான். அப்படிப்பட்டவன்தான் நீதிமான். அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 10  ‘ஆனால் அவனுடைய மகன் இதில் எந்தக் குற்றத்தையாவது செய்கிறவனாக, ஒருவேளை திருடுகிறவனாக+ அல்லது கொலை செய்கிறவனாக+ இருக்கலாம். 11  (தகப்பன் இதில் எதையுமே செய்யாவிட்டாலும்) அவனுடைய மகன் மலைகள்மேல் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறவனாகவும், அடுத்தவரின் மனைவியோடு முறைகேடான உறவு வைக்கிறவனாகவும், 12  ஏழை எளியவர்களை மோசமாக நடத்துகிறவனாகவும்,+ மற்றவர்களுடைய பொருள்களைத் திருடுகிறவனாகவும், அடமானமாக வாங்கியதைத் திருப்பிக் கொடுக்காதவனாகவும், அருவருப்பான சிலைகளை வணங்குகிறவனாகவும்,+ அருவருப்பான காரியங்களைச் செய்கிறவனாகவும்,+ 13  மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்கிறவனாகவும், வட்டி வாங்குகிறவனாகவும் இருக்கலாம்.+ அப்படிப்பட்ட மகன் தொடர்ந்து உயிர்வாழ முடியாது. இந்த எல்லா அருவருப்புகளையும் செய்ததால் அவன் கொல்லப்படுவான். அவனுடைய சாவுக்கு அவனே காரணமாக இருப்பான். 14  ‘ஆனால் தகப்பன் செய்கிற பாவங்களையெல்லாம் ஒரு மகன் பார்த்தும் அந்தப் பாவங்களைச் செய்யாமல் இருக்கலாம். 15  அவன் மலைகள்மேல் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடாமலும், இஸ்ரவேல் ஜனங்களுடைய அருவருப்பான சிலைகளை வணங்காமலும், அடுத்தவருடைய மனைவியோடு முறைகேடான உறவு வைக்காமலும் இருக்கலாம். 16  அவன் யாரையும் மோசமாக நடத்தாமல் அடமானமாக வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கிறவனாக இருக்கலாம். மற்றவர்களுடைய பொருள்களைத் திருடாமல், இல்லாதவர்களுக்குத் தன்னுடைய உணவையும் உடையையும் கொடுக்கிறவனாகவும் இருக்கலாம். 17  ஏழைகளை அடக்கி ஒடுக்காதவனாகவும், அநியாய வட்டி வாங்காதவனாகவும், மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்காதவனாகவும் இருக்கலாம். என்னுடைய நீதித்தீர்ப்புகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்கிறவனாக இருக்கலாம். அப்படிப்பட்டவன் தன்னுடைய தகப்பன் செய்த பாவத்துக்காகச் சாக மாட்டான். அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான். 18  ஆனால், அவனுடைய தகப்பன் மோசடி செய்கிறவனாகவும், தன்னுடைய சகோதரனிடமிருந்து திருடுகிறவனாகவும், தன்னுடைய ஜனங்களின் நடுவில் கெட்டதைச் செய்கிறவனாகவும் இருந்தால், அவன் செய்த பாவத்துக்காக அவன் கண்டிப்பாகச் செத்துப்போவான். 19  ஆனால் நீங்கள், “தகப்பன் செய்த பாவத்துக்காக ஏன் மகன் தண்டிக்கப்படுவதில்லை?” என்று கேட்பீர்கள். மகன் நியாயமாகவும் நீதியாகவும் நடந்து, என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதால் அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.+ 20  பாவம் செய்கிறவன்தான் சாவான்.+ தகப்பன் செய்த குற்றத்துக்காக மகன் தண்டிக்கப்பட மாட்டான், மகன் செய்த குற்றத்துக்காகத் தகப்பன் தண்டிக்கப்பட மாட்டான். அவரவர் செய்கிற நீதியான காரியங்களுக்கு அவரவருக்குத்தான் ஆசீர்வாதம் கிடைக்கும். அவரவர் செய்கிற கெட்ட காரியங்களுக்கு அவரவருக்குத்தான் தண்டனை கிடைக்கும்.+ 21  பொல்லாதவன் ஒருவன் எல்லா பாவங்களையும் விட்டுவிட்டு, என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து, நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பித்தால் அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான். அவன் சாக மாட்டான்.+ 22  முன்பு செய்த எந்தக் குற்றத்துக்காகவும் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.+ இப்போது நீதியானதைச் செய்வதால் அவன் தொடர்ந்து உயிர்வாழ்வான்.’+ 23  ‘பொல்லாதவன் சாக வேண்டும் என்றா நான் ஆசைப்படுகிறேன்?+ அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன்?’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 24  நீதிமான் ஒருவன் நீதியாக நடப்பதை விட்டுவிட்டு கெட்டது செய்தால், அதாவது பொல்லாதவன் செய்கிற எல்லா அருவருப்பான காரியங்களையும் செய்தால், தொடர்ந்து உயிர்வாழ முடியுமா? அவன் செய்த எந்த நீதியான காரியத்தையும் நான் நினைத்துப் பார்க்க மாட்டேன்.+ அவன் துரோகம் செய்ததாலும் பாவம் செய்ததாலும் செத்துப்போவான்.+ 25  ஆனால் நீங்கள், “யெகோவா செய்வது அநியாயம்”+ என்று சொல்வீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, தயவுசெய்து கேளுங்கள். நான் செய்வதா அநியாயம்?+ நீங்கள் செய்வதுதானே அநியாயம்?+ 26  நீதிமான் ஒருவன் நீதியாக நடப்பதை விட்டுவிட்டு கெட்டது செய்து செத்துப்போனால், அவன் செய்த கெட்ட காரியத்துக்காகத்தான் அவன் செத்துப்போவான். 27  பொல்லாதவன் ஒருவன் கெட்டது செய்வதை விட்டுவிட்டு நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பித்தால், அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.+ 28  குற்றத்தை உணர்ந்து, எல்லா பாவங்களையும் விட்டுத் திருந்தினால், அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான். அவன் சாக மாட்டான். 29  ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள், “யெகோவா செய்வது அநியாயம்” என்று சொல்வார்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நான் செய்வதா அநியாயம்?+ நீங்கள் செய்வதுதானே அநியாயம்?’ 30  ‘இஸ்ரவேல் ஜனங்களே, அவரவருடைய செயலுக்கு ஏற்றபடி அவரவருக்கு நான் தீர்ப்பு கொடுப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘திருந்துங்கள்! எல்லா குற்றங்களையும் விட்டுத் திருந்துங்கள்! அப்போதுதான், குற்றப் பழியைச் சுமக்கவோ படுகுழியில் விழவோ மாட்டீர்கள். 31  எல்லா பாவங்களையும் அடியோடு விட்டுவிடுங்கள்.+ உங்கள் இதயத்தையும் மனதையும் புதிதாக்குங்கள்.+ இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் ஏன் சாக வேண்டும்?’+ 32  ‘யாரும் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை.*+ அதனால் திருந்தி வாழுங்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
வே.வா., “யாருடைய சாவிலும் நான் சந்தோஷப்படுவதில்லை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா