ஆதியாகமம் 31:1-55

31  பிற்பாடு லாபானின் மகன்கள், “நம்முடைய அப்பாவுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அப்பாவுடைய சொத்துகளை வைத்து அவன் பெரிய பணக்காரனாகிவிட்டான்”+ என்று பேசிக்கொண்டதை யாக்கோபு கேட்டார்.  அதோடு, லாபானின் முகம் முன்புபோல இல்லாமல்+ கடுகடுப்பாக இருந்ததை யாக்கோபு கவனித்தார்.  ஒருநாள் யெகோவா யாக்கோபிடம், “உன்னுடைய முன்னோர்களின் தேசத்துக்குப் போய் உன்னுடைய சொந்தபந்தங்களோடு குடியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்” என்றார்.  அதன்பின் யாக்கோபு ஆள் அனுப்பி, தான் மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்த இடத்துக்கு ராகேலையும் லேயாளையும் வர வைத்தார்.  அவர் அவர்களிடம், “உங்கள் அப்பா முன்புபோல் இல்லை, என்னிடம் கடுகடுப்பாக நடந்துகொள்கிறார்.+ ஆனால், என்னுடைய அப்பாவின் கடவுள் எப்போதும் என்னோடு இருக்கிறார்.+  உங்கள் அப்பாவுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தேன் என்று உங்களுக்கே தெரியும்.+  அவர் என்னை ஏமாற்ற நினைத்தார், என் சம்பளத்தை 10 தடவை மாற்றினார். ஆனால், எனக்குக் கெடுதல் செய்ய கடவுள் அவரை விடவில்லை.  ‘புள்ளியுள்ள ஆடுகள்தான் உன்னுடைய சம்பளம்’ என்று அவர் சொன்னபோது ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டன. ‘வரியுள்ள ஆடுகள்தான் உன் சம்பளம்’ என்று அவர் சொன்னபோது ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளைப் போட்டன.+  கடவுள்தான் உங்கள் அப்பாவுடைய ஆடுகள் எல்லாவற்றையும் எடுத்து எனக்குத் தந்தார். 10  ஆடுகள் இணைசேரும் காலத்தில், நான் ஒரு கனவு கண்டேன். அதில், வெள்ளாடுகளோடு இணைசேரும் கடாக்கள் வரிகளுடனோ புள்ளிகளுடனோ கலப்பு நிறத்துடனோ இருந்ததைப் பார்த்தேன்.+ 11  அந்தக் கனவில் உண்மைக் கடவுளுடைய தூதர், ‘யாக்கோபே!’ என்று கூப்பிட்டார். நான் உடனே, ‘சொல்லுங்கள், எஜமானே!’ என்றேன். 12  அப்போது அவர், ‘கொஞ்சம் நிமிர்ந்து பார். வெள்ளாடுகளோடு இணைசேருகிற எல்லா கடாக்களும் வரிகளுடனோ புள்ளிகளுடனோ கலப்பு நிறத்துடனோ இருக்கின்றன. ஏனென்றால், லாபான் உனக்குச் செய்கிற எல்லா கெடுதலையும் நான் பார்த்தேன்.+ 13  நீ பெத்தேலில்+ நினைவுக்கல்லை அபிஷேகம் பண்ணி நேர்ந்துகொண்டபோது+ உன்முன் தோன்றிய உண்மைக் கடவுள் நான்தான். இப்போது நீ இந்தத் தேசத்திலிருந்து புறப்பட்டு உன்னுடைய சொந்த தேசத்துக்கே திரும்பிப் போ’+ என்று சொன்னார்” என்றார். 14  அதற்கு ராகேலும் லேயாளும், “எங்கள் அப்பாவுடைய சொத்திலிருந்து இனி எங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? 15  அவர் எங்களை முன்பின் தெரியாதவர்கள்* போல விற்றுவிட்டார், விற்ற பணத்தையும் விழுங்கிக்கொண்டாரே.+ 16  கடவுள்தான் எங்களுடைய அப்பாவிடம் இருந்த எல்லா சொத்துகளையும் எடுத்து நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் கொடுத்திருக்கிறார்.+ அதனால், கடவுள் உங்களிடம் சொன்னபடியெல்லாம் செய்யுங்கள்”+ என்றார்கள். 17  பின்பு, யாக்கோபு எழுந்து தன்னுடைய பிள்ளைகளையும் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றினார்.+ 18  பதான்-அராமிலே சேர்த்த எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு,+ அங்கே சம்பாதித்த எல்லா மந்தைகளையும் ஓட்டிக்கொண்டு, கானான் தேசத்திலுள்ள தன்னுடைய அப்பா ஈசாக்கிடம் போவதற்குப் புறப்பட்டார்.+ 19  அந்தச் சமயத்தில் லாபான் தன்னுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தார். அப்போது, அவருடைய மகள் ராகேல் அவருடைய+ குலதெய்வச் சிலைகளைத்+ திருடிக்கொண்டாள். 20  யாக்கோபும் தான் போகிற விஷயத்தைப் பற்றி அரமேயனான லாபானிடம் சொல்லாமல் சாமர்த்தியமாக நழுவினார். 21  யாக்கோபு தன்னுடன் இருந்தவர்களோடும் தனக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் ஆற்றை*+ கடந்து, கீலேயாத் மலைப்பகுதிக்குத்+ தப்பித்துப் போனார். 22  அவர் தப்பித்துப் போன விஷயம் மூன்றாம் நாளில் லாபானுக்குத் தெரியவந்தது. 23  உடனே, அவர் தன்னுடைய சொந்தக்காரர்களோடு சேர்ந்து யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனார். ஏழு நாட்கள் கழித்து, யாக்கோபு இருந்த கீலேயாத் மலைப்பகுதிக்குப் போய்ச் சேர்ந்தார். 24  அன்றைக்கு ராத்திரி அரமேயனான லாபானின்+ கனவில் கடவுள் வந்து,+ “நீ யாக்கோபின் விஷயத்தில் தலையிடாதே,* ஜாக்கிரதை!” என்று சொன்னார்.+ 25  யாக்கோபு கூடாரம் போட்டிருந்த கீலேயாத் மலைப்பகுதியில்தான் லாபான் தன்னுடைய சொந்தக்காரர்களோடு தங்கினார். அவர் யாக்கோபிடம் போய், 26  “ஏன் இப்படிச் செய்தாய்? ஏன் என்னிடம் சொல்லாமல் சாமர்த்தியமாகத் தப்பித்து வந்தாய்? என் மகள்களை ஏன் போர்க்கைதிகளைப் போலப் பிடித்துக்கொண்டு வந்தாய்? 27  ஏன் என்னை ஏமாற்றினாய்? என்னிடம் சொல்லாமல் ஏன் ரகசியமாக ஓடி வந்தாய்? சொல்லியிருந்தால், நானே மேளதாளத்தோடும்* பாடல்களோடும் உன்னைச் சந்தோஷமாக அனுப்பி வைத்திருப்பேனே. 28  என் பேரப்பிள்ளைகளையும் மகள்களையும் முத்தம்கொடுத்து அனுப்பக்கூட நீ எனக்குச் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. முட்டாள்தனமாக நடந்துகொண்டாய். 29  நான் நினைத்தால் உங்களையெல்லாம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் உங்களுடைய முன்னோர்களின் கடவுள் நேற்று ராத்திரி என்னிடம், ‘நீ யாக்கோபின் விஷயத்தில் தலையிடாதே, ஜாக்கிரதை!’ என்றார்.+ 30  உன்னுடைய அப்பாவின் வீட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஏக்கத்தில் நீ கிளம்பி வந்திருக்கலாம், ஆனால் என் சிலைகளை ஏன் திருடிக்கொண்டு வந்தாய்?”+ என்றார். 31  அப்போது யாக்கோபு லாபானிடம், “உங்களுடைய மகள்களைப் பிடித்து வைத்துக்கொள்வீர்களோ என்று பயந்துதான் நான் சொல்லாமல் வந்தேன். 32  உங்களுடைய சிலைகளை யார் திருடியிருந்தாலும் அவன் கொல்லப்படுவான். உங்களுடைய பொருள்கள் ஏதாவது என்னிடம் இருக்கிறதா என்று இங்கு இருக்கிறவர்களுக்கு முன்னால் தேடிப் பாருங்கள், இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். ஆனால், அவற்றை ராகேல் திருடியிருந்தது யாக்கோபுக்குத் தெரியாது. 33  லாபான் யாக்கோபுடைய கூடாரத்துக்கும் லேயாளுடைய கூடாரத்துக்கும் இரண்டு அடிமைப் பெண்களுடைய+ கூடாரத்துக்கும் போய்த் தேடிப் பார்த்தார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், லேயாளின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து ராகேலின் கூடாரத்துக்குள் போனார். 34  ராகேல் அந்தக் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தன்னுடைய ஒட்டகச் சேணத்துக்குள்* வைத்து, அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். அதனால், லாபான் அந்தக் கூடாரம் முழுக்கத் தேடிப் பார்த்தும் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. 35  அப்போது அவள், “கோபித்துக்கொள்ளாதீர்கள் அப்பா, என்னால் எழுந்து நிற்க முடியவில்லை, எனக்கு இப்போது மாதவிலக்கு”+ என்று சொன்னாள். அவர் நன்றாகத் தேடிப் பார்த்தும் அந்தச் சிலைகள்+ கிடைக்கவில்லை. 36  அதனால் யாக்கோபு கோபத்தோடு லாபானிடம் பொரிந்து தள்ளினார். “நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் இப்படி ஆவேசமாக என்னைத் துரத்திக்கொண்டு வந்தீர்கள்? நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்? 37  என்னுடைய எல்லா பொருள்களையும் தேடிப் பார்த்தீர்களே, உங்களுடைய வீட்டிலிருந்து நான் ஏதாவது எடுத்து வந்திருக்கிறேனா? என்னுடைய சொந்தக்காரர்களுக்கும் உங்களுடைய சொந்தக்காரர்களுக்கும் முன்னால் காட்டுங்கள், பார்க்கலாம். நம்முடைய பிரச்சினைக்கு அவர்களே ஒரு முடிவு சொல்லட்டும். 38  உங்களோடு நான் இருந்த இந்த 20 வருஷ காலத்தில், உங்களுடைய மந்தையில் ஒரு ஆட்டுக்குட்டிகூட செத்துப் பிறக்கவில்லை.+ ஒரு செம்மறியாட்டுக் கடாவைக்கூட நான் அடித்துச் சாப்பிடவில்லை. 39  காட்டு மிருகங்களிடம் சிக்கி செத்துப்போன எந்த ஆட்டையாவது நான் உங்களிடம் கொண்டுவந்தேனா?+ அந்த நஷ்டத்தை நான்தானே ஏற்றுக்கொண்டேன்? உங்களுடைய ஆடுகள் பகலில் திருடுபோயிருந்தாலும் சரி, ராத்திரியில் திருடுபோயிருந்தாலும் சரி, என்னிடம்தானே நஷ்ட ஈடு கேட்டீர்கள்? 40  காலையில் வெயிலில் காய்ந்தேன், ராத்திரியில் குளிரில் நடுங்கினேன்; எனக்குத் தூக்கமே இல்லாமல் போனது.+ 41  இப்படி 20 வருஷமாக உங்கள் வீட்டில் பாடுபட்டேன். உங்களுடைய இரண்டு மகள்களுக்காக 14 வருஷமும் உங்கள் ஆடுகளுக்காக 6 வருஷமும் வேலை செய்தேன். 10 தடவை என்னுடைய சம்பளத்தை மாற்றினீர்கள்.+ 42  என்னுடைய தாத்தா ஆபிரகாமும் அப்பா ஈசாக்கும் பயபக்தியோடு வணங்கிய கடவுள்+ என் பக்கம் இருந்திருக்காவிட்டால், என்னை வெறுங்கையோடுதான் அனுப்பியிருப்பீர்கள். நான் பட்ட வேதனையையும் சிந்திய வேர்வையையும் கடவுள் பார்த்திருக்கிறார். அதனால்தான், நேற்று ராத்திரி உங்களை எச்சரித்திருக்கிறார்”+ என்றார். 43  அப்போது லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என்னுடைய பெண்கள், இந்தப் பிள்ளைகள் என்னுடைய பிள்ளைகள், இந்த மந்தைகள் என்னுடைய மந்தைகள். உன்னுடைய கண் முன்னால் இருக்கிற எல்லாமே எனக்கும் என் மகள்களுக்கும் சொந்தமானதுதான். இவர்களுக்கும் இவர்கள் பிள்ளைகளுக்கும் இன்று நான் என்ன கெடுதல் செய்துவிடப்போகிறேன்? 44  நானும் நீயும் சமாதானமாக இருப்போம் என்பதற்கு சாட்சியாக இப்போது ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம், வா” என்றார். 45  அதனால், யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதை நினைவுக்கல்லாக நாட்டினார்.+ 46  பின்பு தன்னுடைய சொந்தக்காரர்களிடம், “கற்களைக் கொண்டுவாருங்கள்!” என்றார். அப்படியே அவர்களும் கற்களைக் கொண்டுவந்து குவித்தார்கள். பின்பு, அதன்மேல் உணவை வைத்து சாப்பிட்டார்கள். 47  லாபான் அதற்கு ஜெகர்-சகதூதா* என்று பெயர் வைத்தார், யாக்கோபு அதற்கு கலயெத்* என்று பெயர் வைத்தார். 48  அதன்பின் லாபான், “இன்று எனக்கும் உனக்கும் இடையில் சாட்சியாக இருப்பது இந்தக் கற்குவியல்தான்” என்று சொன்னார். அதனால்தான், யாக்கோபு அதற்கு கலயெத்+ என்றும், 49  காவற்கோபுரம்* என்றும் பெயர் வைத்தார். அப்போது லாபான், “நாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோன பின்பு என்னையும் உன்னையும் யெகோவா கண்காணிக்கட்டும். 50  நீ என்னுடைய மகள்களைக் கொடுமைப்படுத்தினாலோ இன்னும் நிறைய மனைவிகளை வைத்துக்கொண்டாலோ, மனுஷர்கள் பார்க்காவிட்டாலும் கடவுள் பார்ப்பார். உனக்கும் எனக்கும் இடையில் அவர் சாட்சியாக இருப்பார் என்பதை மறந்துவிடாதே” என்று சொன்னார். 51  அதுமட்டுமல்ல, “இதோ, உனக்கும் எனக்கும் நடுவில் நான் இந்தக் கற்குவியலையும் நினைவுக்கல்லையும் வைத்திருக்கிறேன். 52  நான் இந்தக் கற்குவியலைத் தாண்டி வந்து உனக்குக் கெடுதல் செய்ய மாட்டேன், நீயும் இந்தக் கற்குவியலையும் நினைவுக்கல்லையும் தாண்டி வந்து எனக்குக் கெடுதல் செய்யக் கூடாது. இதற்கு இந்தக் கற்குவியலும் நினைவுக்கல்லும் சாட்சியாக இருக்கும்.+ 53  ஆபிரகாமின் கடவுளும்+ நாகோரின் கடவுளும் அவர்களுடைய அப்பாவின் கடவுளும் நமக்குத் தீர்ப்பு கொடுக்கட்டும்” என்று லாபான் சொன்னார். அப்போது, யாக்கோபு தன்னுடைய அப்பா ஈசாக்கு பயபக்தியோடு வணங்கிய கடவுள்மேல்+ சத்தியம் செய்தார். 54  பின்பு, அந்த மலையில் யாக்கோபு பலி செலுத்திவிட்டு, சாப்பிடுவதற்குத் தன்னுடைய சொந்தக்காரர்களைக் கூப்பிட்டார். அவர்கள் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு, ராத்திரி அங்கேயே தங்கினார்கள். 55  லாபான் விடியற்காலையிலேயே எழுந்து தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கும் மகள்களுக்கும் முத்தம் கொடுத்து+ அவர்களை ஆசீர்வதித்தார்.+ அதன்பின், லாபான் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அன்னியர்கள்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றை.”
வே.வா., “நல்லதோ கெட்டதோ, நீ யாக்கோபிடம் எதையும் பேசாதே.”
நே.மொ., “கஞ்சிராவோடும் யாழோடும்.”
சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
அரமேயிக் மொழியில் இதன் அர்த்தம் “சாட்சிக் குவியல்.”
எபிரெய மொழியில் இதன் அர்த்தம் “சாட்சிக் குவியல்.”
வே.வா., “கண்காணிக்கும் கோபுரம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா