பொது இறந்தகாலம்
இது, பைபிளில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழியைச் சேர்ந்த ஒரு வினைவடிவம். இது காலம் என்று அழைக்கப்பட்டாலும், பொதுவாக ஒரு செயல் எப்போது நடந்தது என்பதைக் குறிப்பதில்லை; அதற்குப் பதிலாக, ஒரு செயல் எப்படிப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பொது இறந்தகாலத்தில் உள்ள வினைச்சொற்கள் சூழமைவைப் பொறுத்து பல விதங்களில் மொழிபெயர்க்கப்படலாம். உதாரணத்துக்கு, வழக்கமாக அல்லது தொடர்ந்து நடக்கும் செயலையோ செயல்களையோ குறிக்காமல், அப்போதைக்கு மட்டுமே நடக்கும் செயலையோ செயல்களையோ அது குறிக்கலாம்.
1 யோவான் 2:1-ல், பொது இறந்தகாலத்தில் இருக்கும் கிரேக்க வினைச்சொல் “பாவம் செய்யாமல் இருப்பதற்காக” அல்லது “பாவம் செய்துவிட்டால்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது அப்போதைக்கு மட்டுமே நடக்கும் செயலை, அதாவது ஒரே ஒரு முறை செய்யப்படும் பாவத்தை, குறிப்பதாகத் தெரிகிறது. ஆனால், நிகழ்காலத்தில் இருக்கும் ஒரு கிரேக்க வினைச்சொல் பொதுவாகத் தொடர்ந்து நடக்கும் ஒரு செயலைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, 1 யோவான் 3:6-ல், அதே வினைச்சொல் நிகழ்காலத்தில் இருக்கிறது. அதனால், “பாவம் செய்துகொண்டே” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மத்தேயு 4:9-ல் பொது இறந்தகாலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியென்றால், இயேசுவிடம் பிசாசு, எப்போதுமே தன்னை வணங்க வேண்டுமென்று கேட்காமல், ‘ஒரேவொரு தடவை வணங்க’ வேண்டும் என்றுதான் கேட்டதாகத் தெரிகிறது.
ஒரு கட்டளைகூட பொது இறந்தகாலத்தில் இருக்கலாம். நிகழ்காலத்தில் இருக்கும் ஒரு கட்டளை, பொதுவாக ஒரு செயலைச் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதைக் குறிக்கலாம். (லூ 5:10; 23:28; யோவா 2:16) ஆனால், பொது இறந்தகாலத்தில் இருக்கும் ஒரு கட்டளை, எந்தவொரு சமயத்திலும் ஒரு செயலைச் செய்யக் கூடாது என்பதைக் குறிக்கலாம். உதாரணத்துக்கு, “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்” என்று மத்தேயு 6:34 சொல்கிறது. இந்த வார்த்தைகள் பொது இறந்தகாலத்தில் இருப்பதால், எந்தவொரு சமயத்திலும் கவலைப்படக் கூடாது என்பதைக் குறிக்கிறது.