Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏழாம் அதிகாரம்

“யெகோவாவின் துணையோடு வளர்ந்துவந்தான்”

“யெகோவாவின் துணையோடு வளர்ந்துவந்தான்”

1, 2. எப்படிப்பட்ட சூழலில் இஸ்ரவேல் மக்களிடம் சாமுவேல் பேசினார், ஏன் அவர்களை மனந்திரும்ப தூண்ட வேண்டியிருந்தது?

கடல் அலையென திரண்டு வந்திருக்கிற இஸ்ரவேல் மக்களை சாமுவேல் பார்வையிடுகிறார். பல்லாண்டுகளாய்த் தீர்க்கதரிசியாகவும் நீதிபதியாகவும் உண்மையுடன் உழைத்திருக்கிற இவர்தான் கில்காலுக்கு அவர்களை அழைத்திருக்கிறார். நம் நாட்காட்டியின்படி அது மே அல்லது ஜூன் மாதமாக இருக்கலாம்; கோடைக்காலம் விடைபெற தயாராயிருக்கிறது. கோதுமைப் பயிர்கள் பொன்னிறத்தில் மின்னுகின்றன, அறுவடைக்கு ஆயத்தமாய் இருக்கின்றன. கூடி வந்திருக்கிற மக்கள் கூட்டத்தில் மயான அமைதி! அவர்களுடைய இதயத்தைத் தொடும் விதத்தில் சாமுவேல் எப்படிப் பேசுவார்?

2 தாங்கள் செய்தது மகா பெரிய பாவம் என்பதை அந்த மக்கள் உணரவில்லை. மண்ணில் பிறந்த மனிதரில் ஒருவரைத் தங்களுக்கு ராஜாவாக ஏற்படுத்த சொல்லி சாமுவேலை நச்சரித்திருந்தார்கள். யெகோவா தேவனையும் அவரது தீர்க்கதரிசியையும் எந்தளவு அவமதித்திருந்தார்கள் என்ற உணர்வே அவர்களுக்கு இருக்கவில்லை. உண்மையில் பார்த்தால், தங்களுக்கு ராஜாவாய் இருந்த யெகோவாவையே ஒதுக்கித்தள்ளிவிட்டார்கள்! இப்போது, சாமுவேல் எப்படி அவர்களை மனந்திரும்ப தூண்டுவார்?

கெட்டவர்கள் நம்மை சூழ்ந்திருந்தாலும் நாம் விசுவாசத்தை வளர்க்க முடியும் என்பதை சாமுவேலின் பிள்ளைப்பருவம் காட்டுகிறது

3, 4. (அ) சாமுவேல் ஏன் தன்னுடைய இளமைக் கால வாழ்க்கையைக் குறித்துப் பேசினார்? (ஆ) சாமுவேலின் விசுவாசமிக்க வாழ்க்கை நமக்கு ஏன் உதவியாக இருக்கிறது?

3 ‘எனக்கு வயதாகிவிட்டது, தலை நரைத்துவிட்டது’ என்று சொல்லி சாமுவேல் பேச ஆரம்பிக்கிறார். அவரது நரைமுடி அவர் சொல்கிற வார்த்தைகளுக்கு வலுசேர்க்கிறது. “என் இளமைமுதல் இந்நாள்வரை நான் உங்களை வழிநடத்தியிருக்கிறேன்” என்று சொல்கிறார். (1 சா. 11:​14, 15; 12:2; பொ.மொ.) சாமுவேலுக்கு வயதாகியிருந்தாலும், இளமைக் கால நினைவுகள் இன்னும் அவரது நெஞ்சைவிட்டு நீங்காமல் இருக்கின்றன. அப்போது அவர் எடுத்த தீர்மானங்கள்தான் இன்றுவரை யெகோவாவுக்கு விசுவாசமாகவும் பயபக்தியாகவும் வாழ கைகொடுத்திருக்கின்றன.

4 விசுவாசமும் உண்மையும் இல்லாத ஆட்கள்தான் பெரும்பாலும் சாமுவேலைச் சுற்றியிருந்தார்கள்; இருந்தாலும் அவர் தன் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டார், காத்துக்கொண்டார். விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது இன்றைக்கு நமக்கும் சவாலாக இருக்கிறது; ஏனென்றால், நாமும் விசுவாசமற்ற உலகில்... சீர்கெட்ட உலகில்... வாழ்கிறோம். (லூக்கா 18:​8-ஐ வாசியுங்கள்.) சிறுவயதுமுதல் விசுவாசத்தைக் காட்டிய சாமுவேலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

‘யெகோவாமுன் ஊழியம் செய்த சிறுவன்’

5, 6. எந்த விதத்தில் சாமுவேலின் பிள்ளைப்பருவம் வித்தியாசமாய் இருந்தது, அவனுடைய பெற்றோர் ஏன் அவனைக் கூடாரத்தில் நம்பிக்கையுடன் விட்டுவந்தார்கள்?

5 சாமுவேலின் பிள்ளைப்பருவம் வித்தியாசமானது. பால்குடி மறந்த கொஞ்ச காலத்திலேயே, மூன்று அல்லது அதற்கும் சற்று அதிக வயதிலேயே, சீலோவிலுள்ள யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய ஆரம்பித்தான். அது, ராமாவில் உள்ள அவனது வீட்டிலிருந்து 30 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்தது. அவனுடைய பெற்றோர் எல்க்கானாவும் அன்னாளும் அவனை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருந்தார்கள், அதாவது வாழ்நாளெல்லாம் நசரேயனாய் விசேஷ சேவை செய்ய அர்ப்பணித்திருந்தார்கள். * அப்படியானால், சாமுவேலை ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்றோ அவன்மீது அவர்களுக்கு அன்பே இல்லை என்றோ அர்த்தமா?

6 இல்லவே இல்லை! அவனைக் கவனித்துக்கொள்ள சீலோவில் ஆட்கள் இருந்தார்கள் என அவர்களுக்குத் தெரியும். வழிபாட்டுக் கூடாரத்தில் செய்யப்படும் வேலைகளையெல்லாம் தலைமைக் குரு ஏலி கண்காணித்து வந்தார், அவருக்கு சாமுவேல் ஒத்தாசையாக இருந்தான். அதுமட்டுமல்ல, வழிபாட்டுக் கூடார வளாகத்தில் பெண்கள் பலரும் முறைப்படி வேலை செய்து வந்தார்கள்.​—யாத். 38:​8, NW; நியா. 11:​34-40.

7, 8. (அ) வருடா வருடம் சாமுவேலின் பெற்றோர் எப்படி அவனுக்கு அன்புடன் உற்சாகமளித்தார்கள்? (ஆ) சாமுவேலின் பெற்றோரிடமிருந்து இன்றைய பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்?

7 அன்னாளும் எல்க்கானாவும் தங்கள் தலைமகனை... அன்பு மகனை... அங்கு கொண்டுபோய் விட்டதோடு மறந்துவிடவில்லை. கடவுளிடம் மன்றாடி பெற்ற பிள்ளை ஆயிற்றே! கடவுளுடைய சேவைக்கு அர்ப்பணிப்பதற்காகப் பெற்ற பிள்ளை ஆயிற்றே! வருடாவருடம் அவனைப் போய்ச் சந்தித்தபோது, ஒரு சிறிய மேலங்கியை அன்னாள் கொண்டு செல்வாள்; கூடார சேவை செய்கையில் போட்டுக்கொள்வதற்காக அவனுக்குக் கொடுப்பாள். அம்மா அப்பாவின் ஒவ்வொரு வருகையும் அவனுக்கு ஆனந்தம் அளித்திருக்கும். இப்படிப்பட்ட விசேஷ இடத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று சொல்லி அவனுடைய பெற்றோர் அன்புடன் தட்டிக்கொடுத்தபோது... ஆலோசனை அளித்தபோது... அவன் ரொம்பவே உற்சாகம் அடைந்திருப்பான்.

8 அன்னாள்-எல்க்கானா தம்பதியிடமிருந்து இன்றுள்ள பெற்றோர் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். பொதுவாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுகிறார்கள், அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளையோ அசட்டை செய்துவிடுகிறார்கள். ஆனால், சாமுவேலின் பெற்றோர் ஆன்மீகக் காரியங்களுக்கே முதலிடம் கொடுத்தார்கள். சாமுவேல் நல்ல பிள்ளையாக வளர்ந்து ஆளானதற்கு அதுவே முக்கியக் காரணம்.​—நீதிமொழிகள் 22:​6-ஐ வாசியுங்கள்.

9, 10. (அ) வழிபாட்டுக் கூடாரத்தையும் அந்தப் புனித இடத்தைப் பற்றிய சாமுவேலின் உணர்வுகளையும் விவரியுங்கள். (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) சாமுவேல் என்னென்ன வேலைகள் செய்திருக்கலாம், அவனுடைய முன்மாதிரியை இன்று இளைஞர்கள் எப்படிப் பின்பற்றலாம்?

9 இப்போது சற்று கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வருகிறான், சீலோவைச் சுற்றியுள்ள குன்றுகளில் ஏறிப் பார்க்கிறான். கீழே காட்சியளிக்கும் ஊரையும் ஒருபுறத்தில் உள்ள பள்ளத்தாக்கையும் கவனிக்கிறான்; யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்தைக் கண்டு ஆனந்தமும் பெருமிதமும் அடைகிறான். அந்தக் கூடாரம் மிகவும் புனிதமான இடம். * உலகிலேயே அது ஒன்றுதான் யெகோவாவின் தூய வழிபாட்டுக்குரிய மையமாகத் திகழ்ந்தது; கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்பு மோசேயின் மேற்பார்வையில் கட்டப்பட்டிருந்தது.

10 அந்தக் கூடாரத்தில் சேவை செய்வதென்றால் குட்டிப்பையன் சாமுவேலுக்குக் கொள்ளைப் பிரியம். ‘நாரிழையால் நெய்யப்பட்ட ஏபோது [அதாவது, மேலங்கி] அணிந்து, சிறுவன் சாமுவேல் யெகோவாமுன் ஊழியம் செய்தான்’ என்று பிற்காலத்தில் சாமுவேலே எழுதிய புத்தகத்தில் வாசிக்கிறோம். (1 சா. 2:​18, NW) அவன் வழிபாட்டுக் கூடாரத்தில் குருமார்களுக்குப் பணிவிடை செய்துவந்ததை அந்த எளிமையான மேலங்கி சுட்டிக்காட்டியது. சாமுவேல் குருமார் வகுப்பைச் சேர்ந்தவன் அல்ல; என்றாலும், வழிபாட்டுக் கூடாரத்தின் பிரகாரக் கதவுகளைத் தினமும் காலையில் திறப்பது... முதியவர் ஏலிக்கு உதவுவது... போன்ற பணிவிடைகளைச் செய்துவந்தான். இதையெல்லாம் பாக்கியமாய் நினைத்து சந்தோஷப்பட்டான், ஆனால் கள்ளங்கபடமில்லாத அவனுடைய மனம் ஒரு காலகட்டத்தில் கலங்கியது. நடக்கக் கூடாத ஒன்று யெகோவாவின் வீட்டில் நடந்தது.

ஒன்றுக்கும் உதவாதவர்கள் மத்தியில் ஓர் உத்தமன்

11, 12. (அ) ஓப்னியும் பினெகாஸும் பாவத்துக்கு மேல் பாவம் செய்ய எது காரணம்? (ஆ) வழிபாட்டுக் கூடாரத்தில் ஓப்னியும் பினெகாஸும் செய்த அட்டூழியமும் அக்கிரமமும் என்ன? (அடிக்குறிப்பையும் காண்க.)

11 அந்தப் பிஞ்சுப் பருவத்தில், அட்டூழியத்தையும் அக்கிரமத்தையும் சாமுவேல் கண்ணாரக் கண்டான். ஓப்னி, பினெகாஸ் என்ற இரண்டு மகன்கள் ஏலிக்கு இருந்தார்கள். “ஏலியின் மகன்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை மதிக்கவில்லை” என்று சாமுவேலின் பதிவு சொல்கிறது. (1 சா. 2:​12, NW) அவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாக இருப்பதற்கும் யெகோவாவை மதிக்காததற்கும் சம்பந்தம் இருப்பதை இந்த வசனம் எடுத்துக்காட்டுகிறது; ஆம், ஓப்னியும் பினெகாஸும் யெகோவாவைத் துளியும் மதிக்காததால்தான் ‘ஒன்றுக்கும் உதவாதவர்களாக’ இருந்தார்கள். அவருடைய நீதி நெறிகளையும் கட்டளைகளையும் பற்றி அவர்களுக்குக் கொஞ்சம்கூட கவலையே இல்லை. அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்ய இதுதான் காரணமாக இருந்தது.

12 வழிபாட்டுக் கூடாரத்தில் குருமார்கள் என்ன வேலைகளைச் செய்ய வேண்டும்... எப்படிப் பலிகளைச் செலுத்த வேண்டும்... என்பதையெல்லாம் திருச்சட்டம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தது. அதற்கு நல்ல காரணம் இருந்தது! பாவங்களை மன்னிக்க கடவுள் செய்திருந்த எல்லா ஏற்பாடுகளுக்கும் அந்தப் பலிகள் படமாக இருந்தன; அந்தப் பலிகள் மூலம்தான் கடவுளுடைய பார்வையில் மக்கள் சுத்தமாக முடியும், அவரது ஆசியையும் அங்கீகாரத்தையும் பெற முடியும். ஆனால், ஓப்னியும் பினெகாஸும் அந்தப் பலிகளைத் துளிகூட மதிக்கவில்லை, சக குருமார்களையும் மதிக்க விடவில்லை.  *

13, 14. (அ) வழிபாட்டுக் கூடாரத்தில் நடந்த அக்கிரமங்களால் அப்பாவி மக்கள் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்? (ஆ) தலைமைக் குருவாகவும் சரி தகப்பனாகவும் சரி, ஏலி எவ்வாறு தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்?

13 இதை உங்கள் கற்பனையில் காணுங்கள்: இப்படிப்பட்ட பெருத்த அநியாயங்களைச் சிறுவன் சாமுவேல் அதிர்ச்சியுடன் பார்க்கிறான், அவனுடைய கண்களில் மிரட்சி தெரிகிறது; ஆனால் இதையெல்லாம் சரிப்படுத்த யாருமே இல்லை. ஏழை எளியோர்... ஒடுக்கப்பட்டோர்... என எத்தனையோ பேர் ஆன்மீக ரீதியில் ஆறுதலும் உற்சாகமும் தேடி வழிபாட்டுக் கூடாரத்திற்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்தோடும் வேதனையோடும் அவமானத்தோடும் வீடு திரும்புகிறார்கள். அதுமட்டுமா, ஓப்னியும் பினெகாஸும் வழிபாட்டுக் கூடார வளாகத்தில் சேவைசெய்த பெண்கள் சிலருடன் உறவுகொள்கிறார்கள்; யெகோவாவின் ஒழுக்கநெறிகளுக்குத் துளியும் மதிப்புக் காட்டுவதில்லை. இதையெல்லாம் பார்த்தபோது சாமுவேலுக்கு எப்படி இருந்திருக்கும்? (1 சா. 2:22) ஏலி ஏதாவது செய்வார் என்று ஒருவேளை அவன் எதிர்பார்த்திருக்கலாம்.

ஏலியின் மகன்கள் செய்த அக்கிரமங்களைக் கண்டு சாமுவேல் மிகவும் மனம் கலங்கியிருப்பான்

14 இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போனது, இதற்கு முடிவுகட்ட ஏலிக்குத்தான் அதிகாரம் இருந்தது. அவர் தலைமைக் குருவாக இருந்ததால், வழிபாட்டுக் கூடாரத்தில் நடந்த காரியங்களுக்கு அவர்தான் பொறுப்பாளி. அதோடு, அவர் ஒரு தகப்பனாக இருந்ததால், தன்னுடைய மகன்களைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. அவருடைய மகன்கள் தங்களுக்கு மட்டுமல்ல, எண்ணற்ற இஸ்ரவேல் மக்களுக்கும் கெடுதல் செய்துகொண்டிருந்தார்களே! ஆனால், தலைமைக் குருவாகவும் சரி தகப்பனாகவும் சரி, ஏலி தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டார். தன் மகன்களை லேசாக அதட்டினார், அவ்வளவுதான்! (1 சாமுவேல் 2:​23-25-ஐ வாசியுங்கள்.) ஆனால், அவர்களைக் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். அவர்கள் செய்துவந்த பாவங்கள் மரண தண்டனைக்குரிய பாவங்கள் ஆயிற்றே!

15. ஏலிக்கு யெகோவா அறிவித்த கடுமையான தண்டனைத் தீர்ப்பு என்ன, அந்த எச்சரிக்கையை ஏலியின் குடும்பம் காதில் போட்டுக்கொண்டதா?

15 நிலைமை படுமோசமாக ஆனதால், யெகோவா நடவடிக்கை எடுத்தார். எப்படி? ‘தேவனுடைய மனுஷனை,’ அதாவது பெயர் குறிப்பிடப்படாத ஒரு தீர்க்கதரிசியை, ஏலியிடம் அனுப்பி கடுமையான தண்டனைத் தீர்ப்பை அறிவித்தார்; ‘நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரை மதிக்கிறாய்’ என்று சொன்னார். ஏலியின் பொல்லாத மகன்கள் இருவருக்கும் ஒரே நாளில் சாவு வரும்... ஏலியின் குடும்பத்திற்கு அடிமேல் அடி விழும்... குருமார் வகுப்பில் அவர்களுக்கு இருக்கும் விசேஷ ஸ்தானமும் பறிபோகும்... என்று முன்னறிவித்தார். இந்தக் கடும் எச்சரிப்பைக் கேட்ட பிறகாவது ஏலியின் குடும்பம் மாற்றம் செய்ததா? எந்த மாற்றமும் செய்ததாகத் தெரியவில்லை.​—1 சா. 2:27–3:1.

16. (அ) சிறுவன் சாமுவேலின் முன்னேற்றத்தைப் பற்றி என்ன விஷயங்களை வாசிக்கிறோம்? (ஆ) அந்த விஷயங்கள் உங்களுக்குச் சந்தோஷத்தைத் தருகின்றனவா? விளக்குங்கள்.

16 தன்னைச் சுற்றி இத்தனை அக்கிரமம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் சிறுவன் சாமுவேல் எப்படி நடந்துகொண்டான்? அட்டூழியங்களைப் பற்றிய இந்த இருண்ட பதிவில், இடையிடையே பிரகாசமான ஒளிக்கீற்றுகளையும் நாம் காணலாம்; ஆம், சாமுவேலின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பற்றிய நல்ல செய்திகளை வாசிக்கலாம். 1 சாமுவேல் 2:​18-ல், “சிறுவன் சாமுவேல் யெகோவாமுன் ஊழியம் செய்தான்” (NW) என்று வாசித்ததை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அந்தச் சின்ன வயதிலேயே கடவுளுடைய சேவைக்கு சாமுவேல் முதலிடம் கொடுத்தான். இதைவிட சந்தோஷமான விஷயத்தை அதே அதிகாரம் 21-ஆம் வசனத்தில் பார்க்கிறோம்; “சிறுவன் சாமுவேல் தொடர்ந்து யெகோவாவின் துணையோடு வளர்ந்துவந்தான்” (NW) என்று வாசிக்கிறோம். அவன் வளர வளர, பரம தகப்பனோடு அவனுக்கு இருக்கிற பந்தமும் வளர்ந்துவந்தது. யெகோவாவுடன் கொண்டுள்ள அப்படிப்பட்ட நெருங்கிய பந்தம்தான் எந்தவித தீய செல்வாக்கிலிருந்தும் ஒருவரைப் பாதுகாக்கும்!

17, 18. (அ) அக்கிரமங்கள் நடப்பதைப் பார்க்கும்போது கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படி சாமுவேலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்? (ஆ) சாமுவேல் சரியான பாதையில் நடந்தார் என்பதை எது காட்டுகிறது?

17 ‘தலைமைக் குருவும் அவருடைய மகன்களுமே இப்படிப் பாவம் செய்யும்போது, நானும் என் இஷ்டத்திற்கு நடந்தால் என்ன தப்பு?’ என்று சாமுவேல் நினைத்திருக்க முடியும், ஆனால் அவன் அப்படி நினைக்கவில்லை. மற்றவர்கள் செய்கிற... ஏன் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருக்கிறவர்கள் செய்கிற... அக்கிரமத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு பாவம் செய்வது சரியல்ல. இன்றும்கூட கிறிஸ்தவ இளைஞர்கள் பலர் சாமுவேலின் விசுவாசத்தைப் பின்பற்றுகிறார்கள்; தங்களைச் சுற்றியுள்ளவர்கள் நல்ல முன்மாதிரி வைக்கத் தவறினாலும் ‘தொடர்ந்து யெகோவாவின் துணையோடு வளர்ந்துவருகிறார்கள்.’

18 சாமுவேல் சரியான பாதையில் சென்றதன் விளைவு என்ன? ‘சாமுவேல் என்னும் பிள்ளை பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனுஷருக்கும் பிரியமானவனாக ஆனான்’ என்று நாம் வாசிக்கிறோம். (1 சா. 2:26) ஆகவே, சாமுவேலை எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது, அதுவும் அவனுக்கு முக்கியமானவர்களுக்குப் பிடித்திருந்தது. இந்தச் சிறுவன் உத்தமனாய் நடந்துகொண்டதைப் பார்த்து யெகோவாவும் மகிழ்ச்சி அடைந்தார். சீலோவில் நடக்கும் அனைத்து அக்கிரமங்களுக்கும் கடவுள் ஒருநாள் நிச்சயம் முடிவுகட்டுவார் என்று சாமுவேல் நம்பிக்கையாய் இருந்தான்; ஆனால் எப்போது முடிவுகட்டுவார் என்பதுதான் அவனுக்குக் கேள்விக்குறியாகவே இருந்தது. ஒருநாள் இரவு அதற்குப் பதில் கிடைத்தது.

‘சொல்லும், அடியேன் கேட்கிறேன்’

19, 20. (அ) ஒருநாள் இரவு வழிபாட்டுக் கூடாரத்தில் சாமுவேலுக்கு கிடைத்த அனுபவத்தை விவரியுங்கள். (ஆ) தன்னிடம் யார் பேசியதென சாமுவேல் எப்படித் தெரிந்துகொண்டான், ஏலியிடம் எப்படி நடந்துகொண்டான்?

19 விடிந்தும் விடியாத காலைப்பொழுது; வழிபாட்டுக் கூடாரத்தின் பெரிய விளக்கு கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. நிசப்தமான வேளை; யாரோ தன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதுபோல் சாமுவேலுக்குக் கேட்டது! ஏலிதான் தன்னைக் கூப்பிட்டார் என்று நினைத்தான்; அப்போது ஏலிக்குத் தள்ளாத வயது, கண்பார்வையும் மங்கிவிட்டது. அதனால் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ‘ஓடினான்.’ ஏலிக்கு என்ன வேண்டுமோ என்று நினைத்து அந்தச் சிறுவன் பதறியடித்துக்கொண்டு வெறுங்காலோடு ஓடுவதை உங்களுடைய கற்பனைத் திரையில் காண முடிகிறதா? ஏலி பல பாவங்கள் செய்திருந்தாலும் இன்னும் தலைமைக் குருவாக யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தார்; ஆகவே, ஏலிக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையை சாமுவேல் கொடுத்தான். இது நம் உள்ளத்தை நெகிழ வைக்கிறது, அல்லவா?​—1 சா. 3:​2-5.

20 ஏலியை சாமுவேல் எழுப்பி, ‘இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீர்களா?’ என்று கேட்டான். “நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள்” என்று ஏலி சொன்னார். மறுபடியும் அப்படியே நடந்தது... மூன்றாம் முறையும் அப்படியே நடந்தது! கடைசியில், ஏலிக்குப் பிடிபட்டது. யெகோவாதான் பேசினார் என்பதைப் புரிந்துகொண்டார். யெகோவாவிடமிருந்து தரிசனமோ தீர்க்கதரிசன செய்தியோ கிடைத்து வெகுநாள் ஆகியிருந்தது, அதற்கான காரணமும் ஏலிக்கு நன்றாகத் தெரியும்! இப்போது யெகோவா மறுபடியும் பேச ஆரம்பித்திருக்கிறார்... இந்தச் சிறுவனிடம் பேச ஆரம்பித்திருக்கிறார்... என்பதைப் புரிந்துகொண்டார். அதனால், சாமுவேலை மீண்டும் போய்ப் படுத்துக்கொள்ளச் சொன்னார்; அடுத்த முறை அந்தக் குரலைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டுமென்றும் சொல்லி அனுப்பினார். அவர் சொன்னபடியே சாமுவேல் போய்ப் படுத்துக்கொண்டான். சற்று நேரத்தில் “சாமுவேலே சாமுவேலே” என்று மீண்டும் அதே குரல் கேட்டது. “சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” என்றான்.​—1 சா. 3:​1, 5-10.

21. இன்று நாம் எப்படி யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்கலாம், அது ஏன் சிறந்தது?

21 இதோ, யெகோவாவின் பேச்சைக் கேட்பதற்கு சீலோவில் ஓர் ஊழியன் கிடைத்துவிட்டான்! அன்று மட்டுமல்ல, சாமுவேல் தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தான். நீங்களும் எப்போதுமே யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்கிறீர்களா? இரவு நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்குமென்று நாம் காத்திருக்க வேண்டியதில்லை. ஒரு விதத்தில், நமக்கு எப்போதும் கடவுளின் குரல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆம், அவருடைய வார்த்தையான பைபிளிலிருந்து கேட்கிறது. கடவுளுடைய பேச்சை நாம் எந்தளவு கேட்டு நடக்கிறோமோ அந்தளவு நம்முடைய விசுவாசம் பலப்படும். சாமுவேலின் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது.

சாமுவேல் முதலில் பயந்தாலும் யெகோவா சொன்ன கண்டனச் செய்தியை ஏலிக்குத் தெரியப்படுத்தினான்

22, 23. (அ) சாமுவேல் முதலில் சொல்ல பயந்த செய்தி எப்படி நிறைவேறியது? (ஆ) சாமுவேல் எவ்வாறு இன்னும் பிரபலமடைந்தார்?

22 சீலோவில் அன்றிரவு சாமுவேலுக்குக் கிடைத்த அனுபவம் அவனுடைய வாழ்க்கையில் ஒரு மைல்கல் எனச் சொல்லலாம். ஏனென்றால், அதுமுதல் அவனுக்கும் யெகோவாவுக்கும் இடையே ஒரு விசேஷப் பந்தம் உருவானது; அவன் யெகோவாவின் தீர்க்கதரிசியாகவும் பிரதிநிதி பேச்சாளராகவும் ஆனான். யெகோவா சொன்ன செய்தியை ஏலியிடம் தெரிவிப்பதற்குச் சிறுவன் சாமுவேல் முதலில் பயப்பட்டான்; ஏனென்றால் ஏலியின் குடும்பத்தின் மீது விதிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பு நிறைவேறப்போவதைக் குறித்து அவன் தெரிவிக்க வேண்டியிருந்தது. எப்படியோ, தைரியத்தைத் திரட்டி அதை ஏலிக்குத் தெரியப்படுத்தினான்; ஏலியும் கடவுளுடைய தீர்ப்பை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். யெகோவா சொன்ன எல்லாம் சீக்கிரத்திலேயே நிறைவேறியது. பெலிஸ்தருக்கு எதிராக இஸ்ரவேலர் போருக்குச் சென்றார்கள்; ஓப்னியும் பினெகாஸும் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள்; ஒப்பந்தப் பெட்டி கைப்பற்றப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் ஏலியும் இறந்துபோனார்.​—1 சா. 3:​10-18; 4:​1-18.

23 சாமுவேல் யெகோவாவின் உண்மைத் தீர்க்கதரிசி என்பது இன்னும் தெளிவானது, அவருடைய பெயர் இன்னும் பிரபலமடைந்தது. ‘யெகோவா அவருடனேகூட இருந்தார்’ என்று பைபிள் சொல்கிறது; சாமுவேல் சொன்ன எந்தத் தீர்க்கதரிசனமும் நிறைவேறாமல் போகவில்லை, எல்லாவற்றையும் கடவுள் நிறைவேற்றினார் என்றும்கூட அது சொல்கிறது.​—1 சாமுவேல் 3:​19-ஐ வாசியுங்கள்.

‘சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்’

24. ஒரு காலகட்டத்தில், இஸ்ரவேலர் என்ன ஆசைப்பட்டார்கள், அது ஏன் கொடிய பாவம்?

24 இஸ்ரவேலர் சாமுவேலின் முன்மாதிரியைப் பின்பற்றி, ஆன்மீக மக்களாய், விசுவாசமுள்ளவர்களாய் மாறிவிட்டார்களா? இல்லை. ஒரு காலகட்டத்தில், தங்களுடைய குறைகளைக் கேட்டுத் தீர்ப்புச்சொல்ல ஒரு தீர்க்கதரிசி இருந்தால் மட்டும் போதாது என்று நினைத்தார்கள். மற்ற தேசத்தாரைப்போல் தங்களுக்கும் ஓர் அரசர் வேண்டுமென ஆசைப்பட்டார்கள். யெகோவாவின் அறிவுரைப்படி, சாமுவேல் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினார். ஆனாலும், அவர்கள் செய்த பாவம் கொடிய பாவம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியிருந்தது. ஏதோ ஒரு மனிதனை அல்ல, யெகோவாவையே அவர்கள் ஒதுக்கித்தள்ளிவிட்டார்கள்! அதனால்தான், சாமுவேல் அந்த மக்களை கில்காலில் கூடிவரச் செய்தார்.

சாமுவேல் விசுவாசத்தோடு ஜெபம் செய்தார், யெகோவா இடியுடன் கூடிய மழையைப் பொழியச் செய்தார்

25, 26. மகா பெரிய பாவம் செய்திருப்பதை மக்கள் உணர்ந்துகொள்ள கில்காலில் சாமுவேல் எவ்வாறு உதவினார்?

25 இப்போது, கில்காலில் திரண்டிருக்கிற இஸ்ரவேலருக்குமுன் வயதான சாமுவேல் பேசுகிற அந்தப் பதற்றமான சூழலுக்கு வருவோம். அங்கே... தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு உத்தமமாய் நடந்துவந்திருப்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறார். அதன் பிறகு, ‘யெகோவாவை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறார்.’ இடியுடன் கூடிய மழையைப் பொழியப் பண்ணும்படி யெகோவாவிடம் கேட்கிறார்.​—1 சா. 12:​17, 18.

26 இடியுடன் கூடிய மழையா? அதுவும் வெயில் கொளுத்துகிற அந்தக் கோடைக்காலத்திலா? விநோதத்திலும் விநோதம்! அந்தக் கூட்டத்தில் எழுகிற சலசலப்புக்கும் கிசுகிசுப்புக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் திடீரென மேகம் திரள்கிறது... வானம் இருள்கிறது... கடுங்காற்று வீசுகிறது... கோதுமைக் கதிர்களெல்லாம் சாய்கிறது... இடியோசை காதைப் பிளக்கிறது... சோவென்று மழை கொட்டுகிறது! அப்போது மக்கள் ‘எல்லோரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயப்படுகிறார்கள்.’ தாங்கள் செய்தது மகா பெரிய பாவம் என்பது கடைசியில் அவர்களுக்கு உரைக்கிறது.​—1 சா. 12:​18, 19.

27. சாமுவேலின் விசுவாசத்தைப் பின்பற்றுவோரைக் குறித்து யெகோவா எப்படி உணருகிறார்?

27 உண்மையில், அந்தக் கலகக்கார மக்களுக்கு அதைப் புரிய வைத்தது சாமுவேல் அல்ல, யெகோவாவே! வாலிபம் முதல் வயோதிபம் வரை, சாமுவேல் கடவுள்மீது விசுவாசம் வைத்தார். அதற்காக யெகோவா அவருக்குப் பலன் அளித்தார். இன்றும் யெகோவா நமக்குப் பலன் அளிப்பார்; ஆம், சாமுவேலின் விசுவாசத்தைப் பின்பற்றுவோருக்கு உறுதுணையாய் நிற்பார்.

^ பாரா. 5 நசரேயர்கள் மது அருந்தவோ முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்துகொள்ளவோ மாட்டார்கள். பெரும்பாலோர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நசரேயராய் இருந்தார்கள். ஆனால் சிம்சோன், சாமுவேல், யோவான் ஸ்நானகர் போன்ற சிலர் மட்டுமே வாழ்நாளெல்லாம் நசரேயராக இருந்தார்கள்.

^ பாரா. 9 அந்தக் கூடாரம் பெரியதாக இருந்தது, செவ்வக வடிவத்தில் இருந்தது, விலையுயர்ந்த மரச் சட்டங்களால் அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டங்கள்மீது தங்கத் தகடுகள் அல்லது வெள்ளித் தகடுகள் அடிக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடாரம் உயர் ரக விரிப்புகளால் மூடப்பட்டிருந்தது; அதாவது, கடல்நாய்த் தோல் விரிப்புகளாலும் பூத்தையல் போட்ட அழகிய விரிப்புகளாலும் மூடப்பட்டிருந்தது. அந்தக் கூடாரத்தைச் சுற்றிலும் செவ்வக வடிவில் பிரகாரம் அமைக்கப்பட்டிருந்தது; பலிகள் செலுத்த அங்கு ஒரு பலிபீடமும் வைக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில், குருமார்களுக்காகக் கூடாரத்தின் இரண்டு பக்கங்களிலும் அறைகள் அமைக்கப்பட்டன; அப்படிப்பட்ட ஓர் அறையில்தான் சாமுவேல் படுத்துத் தூங்கியிருப்பான் எனத் தெரிகிறது.

^ பாரா. 12 இதற்கு இரண்டு உதாரணங்களை சாமுவேல் புத்தகத்தின் பதிவு குறிப்பிடுகிறது. முதலாவதாக, பலிக்குரிய மிருகங்களில் எந்தெந்த பாகங்களைக் குருமார்கள் சாப்பிடலாம் எனத் திருச்சட்டம் திட்டவட்டமாகச் சொன்னபோதிலும், இந்தப் பொல்லாத குருமார்கள் ஏறுக்குமாறாக நடந்தார்கள். (உபா. 18:3) இறைச்சி வெந்துகொண்டிருக்கிற பாத்திரத்தில் ஒரு பெரிய முள்கரண்டியைவிட்டு நல்ல நல்ல துண்டுகளை எடுத்துவரும்படி பணியாட்களிடம் சொன்னார்கள்! இரண்டாவதாக, யெகோவாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய கொழுப்பைத் தகனிப்பதற்கு முன்பே பணியாட்களிடம் சொல்லி மக்களிடமிருந்து இறைச்சியை மிரட்டி வாங்கினார்கள்.​—லேவி. 3:​3-5; 1 சா. 2:​13-17.