Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | கடவுளுடைய அரசாங்கம்—அதனால் உங்களுக்கு என்ன நன்மை?

கடவுளுடைய அரசாங்கம்—இயேசுவுக்கு ஏன் முக்கியமாக இருந்தது?

கடவுளுடைய அரசாங்கம்—இயேசுவுக்கு ஏன் முக்கியமாக இருந்தது?

இயேசு பூமியில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார். உதாரணத்துக்கு, எப்படி ஜெபம் செய்ய வேண்டும், கடவுளுக்குப் பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்ள வேண்டும், உண்மையான சந்தோஷம் வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் அவருடைய சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். (மத்தேயு 6:5-13; மாற்கு 12:17; லூக்கா 11:28) இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி இயேசு அடிக்கடி பேசினார். அது அவருக்கு ரொம்ப பிடித்த விஷயமாக இருந்தது. அது என்னவென்று தெரியுமா? அதுதான் கடவுளுடைய அரசாங்கம்.​லூக்கா 6:45.

‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதும் அறிவிப்பதும்’ இயேசுவுக்கு ரொம்ப முக்கியமான ஒரு வேலையாக இருந்தது. (லூக்கா 8:1) இஸ்ரவேல் தேசம் முழுவதும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்தே போய், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர் மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். இயேசு செய்த ஊழியத்தைப் பற்றி பைபிளில் நான்கு சுவிசேஷப் புத்தகங்களில் இருக்கின்றன. அந்த புத்தகங்களில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய விஷயங்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான தடவை சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் பலதடவை கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு சொன்ன விஷயங்கள்தான் இருக்கின்றன. அவர் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எக்கச்சக்கமான விஷயங்களைப் பேசியிருந்தாலும், அதைப் பற்றி நாம் பைபிளில் படிக்கிற விஷயங்கள் எல்லாம் ரொம்ப கொஞ்சம்தான்!—யோவான் 21:25.

கடவுளுடைய அரசாங்கத்தை இயேசு ஏன் அந்தளவுக்கு முக்கியமானதாக நினைத்தார்? ஒரு காரணம் என்னவென்றால், கடவுள் அந்த அரசாங்கத்துக்கு தன்னைத்தான் ராஜாவாக தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று இயேசுவுக்குத் தெரியும். (ஏசாயா 9:6; லூக்கா 22:28-30) தன்னைப் பற்றி யோசித்ததாலோ தனக்கு புகழ் கிடைக்கும், அதிகாரம் கிடைக்கும் என்பதற்காகவோ அல்ல. அவர் அந்தளவுக்கு அதை முக்கியமானதாக நினைத்ததற்கு வேறு பல காரணங்கள் இருந்தன. (மத்தேயு 11:29; மாற்கு 10:17, 18) அதில் ரொம்ப முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த அரசாங்கத்தால் தன்னுடைய தகப்பனுக்கும் அவருக்கு உண்மையாக இருக்கும் மக்களுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று யோசித்துப் பார்த்தார். அதனால்தான் அன்றும் சரி, இன்றும் * சரி, கடவுளுடைய அரசாங்கம் இயேசுவுக்கு ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது.

இந்த அரசாங்கத்தால் இயேசுவுடைய அப்பாவுக்கு கிடைக்கும் நன்மைகள்

இயேசு தன்னுடைய அப்பாமேல் உயிரையே வைத்திருக்கிறார். (நீதிமொழிகள் 8:30; யோவான் 14:31) தன்னுடைய அப்பாவிடம் இருக்கும் அன்பு, கரிசனை, நீதி இதுபோன்ற குணங்களெல்லாம் இயேசுவுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதை அவர் ரசிக்கிறார். (உபாகமம் 32:4; ஏசாயா 49:15; 1 யோவான் 4:8) அதனால், மக்கள் தன்னுடைய அப்பாவைப் பற்றி தப்பு தப்பாக சொல்வதைக் கேட்கும்போது அவருக்கு வெறுப்பாக இருந்தது. கடவுளுக்கு மனிதர்கள்மீது அக்கறையே இல்லை, மனிதர்கள் கஷ்டப்பட வேண்டுமென கடவுள் ஆசைப்படுகிறார் போன்ற பொய்களை இயேசுவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய அப்பாமீது இருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் இந்த அரசாங்கம் கண்டிப்பாக பொய்யாக்கும் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான், ‘இந்த அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ அவர் எல்லாருக்கும் ரொம்ப மும்முரமாக சொன்னார். (மத்தேயு 4:23; 6:9, 10) கடவுளுடைய அரசாங்கம் அதை எப்படிச் சரிசெய்யும்?

இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி கடவுள் மனிதர்களுக்காக பெரியபெரிய மாற்றங்களைச் செய்யப்போகிறார். தனக்கு உண்மையாக இருக்கும் மக்களுடைய ”கண்ணீரையெல்லாம் அவர் துடைத்துவிடுவார்.” கண்ணீர் வருவதற்கு காரணமாக இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் கடவுள் நீக்கிவிடுவார். அதற்கு பின்பு, ”மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) இந்த அரசாங்கத்தால் மனிதர்கள் படும் எல்லா கஷ்டங்களையும் கடவுள் முழுமையாக சரிசெய்துவிடுவார். *

கடவுளுடைய அரசாங்கத்தின்மீது இயேசு ஏன் இவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்று இப்போது நமக்கு தெரிகிறது அல்லவா! ஏனென்றால் இந்த அரசாங்கத்தின் மூலமாக தன்னுடைய அப்பா எவ்வளவு அன்பானவர் எவ்வளவு சக்தியுள்ளவர் என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரியப்போகிறது. (யாக்கோபு 5:11) இந்த அரசாங்கத்தால் தன்னுடைய அப்பாவுக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப்போகிறது என்பதும் இயேசுவுக்குத் தெரியும்.

இந்த அரசாங்கத்தால் மனிதர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

இயேசு இந்தப் பூமிக்கு வருவதற்கு பல கோடி வருஷங்களுக்கு முன்பே, தன்னுடைய அப்பாவோடு பரலோகத்தில் இருந்திருக்கிறார். தன்னுடைய மகனைப் பயன்படுத்தித்தான் கடவுள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றையும் படைத்தார். இந்தப் பூமி, வானம், எக்கச்சக்கமான நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள், பூமியில் இருக்கும் மிருகங்கள் இதெல்லாவற்றையும் படைக்க கடவுள் தன்னுடைய மகன் இயேசுவைத்தான் பயன்படுத்தினார். (கொலோசெயர் 1:15, 16) இதையெல்லாம் படைக்க இயேசு உதவி செய்திருந்தாலும் முக்கியமாக “மனுஷர்கள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தேன்” என்று சொல்கிறார்.—நீதிமொழிகள் 8:31.

மக்கள்மேல் இருந்த அன்பினால்தான் இயேசு ஊழியம் செய்தார். மக்களுக்கு ‘நல்ல செய்தியைச் சொல்வதற்காகத்தான்’ அவர் இந்தப் பூமிக்கு வந்தார் என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக தெரிந்தது. (லூக்கா 4:18) ஆனால், மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது வெறுமனே இயேசுவுடைய சொல்லில் மட்டும் இல்லை. அவருடைய செயலிலும் அந்த அன்பை எப்போதும் காட்டினார். உதாரணத்துக்கு, ஒரு பெரிய கூட்டமே அவர்முன் திரண்டு வந்தபோது அவர், “மனம் உருகி, அங்கிருந்த நோயாளிகளைக் குணமாக்கினார்.” (மத்தேயு 14:14) ரொம்ப மோசமான வியாதி இருக்கிற ஒருவர் இயேசுவிடம் வந்து, உங்களுக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்ததென்றால் உங்களால் என்னை குணமாக்க முடியும் என்று சொன்னார். அவருடைய விசுவாசத்தைப் பார்த்து இயேசு அன்பினால் தூண்டப்பட்டு அவரைக் குணமாக்கினார். “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். (லூக்கா 5:12, 13) தன்னுடைய தோழி மரியாளுடைய சகோதரன் லாசரு இறந்துபோய்விட்டார். அதைப் பார்த்த மரியாள் ரொம்ப வேதனைப்பட்டார். அப்போது இயேசு “உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார்,” “கண்ணீர்விட்டார்.” (யோவான் 11:32-36) அதற்குபிறகு, யாருமே கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷயத்தை இயேசு செய்தார். அதாவது, நான்கு நாட்களுக்கு முன்பு இறந்துபோயிருந்த லாசருவை உயிரோடு கொண்டுவந்தார்.—யோவான் 11:38-44.

இதெல்லாமே தற்காலிகமான உதவிதான் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஏனென்றால், அவர் குணமாக்கின நபருக்கு மறுபடியும் நோய்வரும் என்றும் அவர் உயிரோடு எழுப்பிய நபர் மறுபடியும் இறந்துபோவார் என்றும் இயேசுவுக்குத் தெரியும். ஆனாலும், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு கடவுளுடைய அரசாங்கம்தான் நிரந்தரமான தீர்வைத் தரும் என்பதை இயேசு நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அதனால்தான் அவர் அற்புதங்களை மட்டும் செய்யாமல், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” எல்லாருக்கும் மும்முரமாகச் சொன்னார். (மத்தேயு 9:35) கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும் என்பதை பூமியில் இருந்தபோது ஒரு சின்ன அளவில் அற்புதங்கள் மூலம் இயேசு செய்து காட்டினார். அந்த அரசாங்கத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றி பைபிள் கொடுக்கும் வாக்குறுதிகளைப் பார்க்கலாம்.

  • இனிமேல் நோய் இருக்காது.

    “அப்போது, கண் தெரியாதவர்களுக்குக் கண் தெரியும். காது கேட்காதவர்களுக்குக் காது கேட்கும். நடக்க முடியாதவர்கள் மான்போல் துள்ளி ஓடுவார்கள். பேச முடியாதவர்கள் சந்தோஷத்தில் பாடுவார்கள்.” அதோடு, “ ‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்”​—ஏசாயா 33:24; 35:5, 6.

  • இனிமேல் மரணம் இருக்காது.

    “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.

    “மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.”​—ஏசாயா 25:8.

  • இறந்துபோனவர்கள் உயிரோடு வருவார்கள்.

    “நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.”—யோவான் 5:28, 29.

    “உயிரோடு எழுப்பப்படுவார்கள்.”—அப்போஸ்தலர் 24:15.

  • இனிமேல் வீடு இல்லை வேலை இல்லை என்ற பிரச்சினை இருக்காது.

    “ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார். ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார் . . . நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:21, 22.

  • இனிமேல் போர் இருக்காது.

    “அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.”—சங்கீதம் 46:9.

    “ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.”—ஏசாயா 2:4.

  • இனிமேல் பஞ்சம் இருக்காது.

    “பூமி விளைச்சல் தரும். கடவுளாகிய நம் கடவுளே நம்மை ஆசீர்வதிப்பார்.”—சங்கீதம் 67:6.

    “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.

  • இனிமேல் வறுமை இருக்காது.

    “ஏழைகள் என்றைக்குமே மறக்கப்பட மாட்டார்கள்.”—சங்கீதம் 9:18.

    “ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். எளியவனுக்கும் ஆதரவற்றவனுக்கும் கைகொடுப்பார். ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.”—சங்கீதம் 72:12, 13.

கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்று பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளைப் பார்த்தபிறகு, இயேசுவுக்கு இந்த அரசாங்கம் ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா? இயேசு பூமியில் இருந்தபோது யாரெல்லாம் ஆர்வம் காட்டினார்களோ அவர்கள் எல்லாரிடமும் கடவுளைப் பற்றி பேசினார். ஏனென்றால், இன்று நாம் அனுபவிக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுளுடைய அரசாங்கம்தான் நிரந்தரமான தீர்வைக் கொடுக்கும் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அப்படியென்றால், இந்த அரசாங்கத்தைப் பற்றி நீங்கள் எப்படி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம்? இந்த அரசாங்கம் கொடுக்கப்போகும் எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் பைபிளிலிருந்து பதில்களைத் தெரிந்துகொள்ளலாம்.

^ இந்தக் கட்டுரையில், இயேசுவுடைய உணர்ச்சிகளைப் பற்றி சொல்லும்போது அது நிகழ்காலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால், இயேசு இப்போது பரலோகத்தில் உயிரோடு இருக்கிறார். அவர் பரலோகத்துக்குப் போன பிறகும்கூட கடவுளுடைய அரசாங்கம் அவருக்கு ரொம்ப முக்கியமானதாகத்தான் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.​—லூக்கா 24:51.

^ கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டங்களை அனுமதித்திருக்கிறார்? என்று தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 11-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். இதை www.jw.org என்ற வெப்சைட்டிலும் பார்க்கலாம்.