Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வரலாற்றுச் சுவடுகள்

ஆமை ஓடுபோல் என் வீடு”

ஆமை ஓடுபோல் என் வீடு”

வருடம் 1929. ஆகஸ்ட்/செப்டம்பரில் அமெரிக்கா முழுவதிலும் 10,000-க்கும் மேலான ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் ஒன்பது நாள் விசேஷ வினியோகிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்கள். இரண்டரை லட்சம் புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் வினியோகித்தார்கள். அந்தப் பிரசங்கிப்பாளர்களில் சுமார் ஆயிரம் பேர் கால்பார்ட்டர்கள். அவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவாய் அதிகரித்திருந்தது! 1927-29-க்குள் அந்த பயனியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருப்பது “நம்ப முடியாத ஒன்று” என புலட்டின் * அறிவித்தது.

அக்டோபர் 29, 1929 செவ்வாய்கிழமை ஒரு கறுப்பு நாள் என்றே சொல்லலாம். நியு யார்க் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை மடமடவென சரிந்த நாள் அது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி உலகையே உலுக்கியது. ஆயிரக்கணக்கான வங்கிகள் திவாலாயின. பண்ணை வேலைகள் நின்றுபோயின. புகழ்பெற்ற தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. லட்சக்கணக்கானோருக்கு வேலை பறிபோனது. 1933-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 1,000 வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன.

இப்படியொரு நெருக்கடியை முழுநேர ஊழியர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? வீட்டுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்கள், அதாவது வாகன வீடுகளை அமைத்தார்கள். அவற்றுக்கு வாடகையும் இல்லை, வரியும் இல்லை! மிகக் குறைந்த பட்ஜெட்டில் தங்கள் பயனியர் ஊழியத்தைத் தொடர நினைத்த ஏராளமான பயனியர்களுக்கு இந்த வாகன வீடுகள் கைகொடுத்தன. * அதுமட்டுமல்ல, மாநாட்டு சமயங்களில், இலவச ஓட்டல் அறைகளாக மாறின! அடுப்பு, மடக்குக் கட்டில், குழாய் வசதி, குளிர் தடுப்பு வசதி போன்ற அடிப்படைத் தேவைகளோடு இந்த வாகன வீடுகளைக் கச்சிதமாக, சௌகரியமாக அமைப்பது பற்றிய விரிவான திட்டங்கள் 1934-ஆம் வருடம் புலட்டினில் வெளியிடப்பட்டன.

உலகெங்கும் இருந்த ஊழியர்கள் இத்தகைய வாகன வீடுகளை அமைத்து இந்த நெருக்கடியைப் புத்திசாலித்தனமாகச் சமாளித்தார்கள். “கப்பலைக் கட்டும் அனுபவம் நோவாவுக்கு இருக்கவில்லை, அதேபோல் வாகன வீட்டைக் கட்டும் அனுபவமும் அறிவும் எனக்கு இருக்கவில்லை” என்கிறார் விக்டர் ப்ளாக்வெல். ஆனாலும், அவர் அதைக் கட்டி முடித்தார்.

இந்தியாவில், மழைக்காலத்தின்போது அக்கரைக்குச் செல்ல வாகன வீடு ஒன்று படகில் ஏற்றப்படுகிறது

ஏவரி-லோவன்யா ப்ரிஸ்டோ தம்பதியிடம் ஒரு வாகன வீடு இருந்தது. “ஆமை ஓடுபோல் என் வீடு எப்போதும் என் கூடவே வந்தது” என்கிறார் ஏவரி. இந்தத் தம்பதியர், ஹர்வி-ஆனி கான்ரோ தம்பதியோடு சேர்ந்து பயனியர் ஊழியம் செய்தார்கள். இந்தத் தம்பதியின் வாகன வீடு தார் பூசப்பட்ட அட்டைகளால் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் வாகன வீட்டை ஓட்டிச் செல்லும்போது, அந்த அட்டைகளில் சில துண்டுதுண்டாக விழுந்தன. “அப்படியொரு வாகன வீட்டை யாருமே அதற்குமுன் பார்த்திருக்க மாட்டார்கள், அதற்குப் பின்பும் பார்த்திருக்க மாட்டார்கள்!” என்கிறார் ஏவரி. என்றாலும், கான்ரோ தம்பதியையும் அவர்களுடைய இரண்டு மகன்களையும் போல ‘சந்தோஷமான குடும்பத்தை இதுவரை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்’ என்றும் அவர் சொல்கிறார். ஹர்வி கான்ரோ இப்படி எழுதினார்: “எங்களுக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. யெகோவாவின் சேவையிலும் அவருடைய அன்புக் கரத்திலும் ரொம்பவே பாதுகாப்பாக உணர்ந்தோம்.” கான்ரோ குடும்பத்தினர் நான்கு பேரும் பிற்பாடு கிலியட் பள்ளியில் கலந்துகொண்டார்கள்; அதன்பின், பெரு நாட்டிற்கு மிஷனரிகளாக நியமிக்கப்பட்டார்கள்.

ஜ்யூஸ்டோ-வின்சென்ஸா பட்டைனோஸ் தம்பதியும் பயனியர்களாகச் சேவை செய்தார்கள். தாங்கள் பெற்றோராகப்போவது தெரிந்தவுடன், 1929 மாடல் ஏ ஃபோர்டு ட்ரக் வண்டி ஒன்றைத் தங்களுடைய வாகன வீடாக மாற்றியமைத்தார்கள்; அவர்கள் முன்பு வசித்துவந்த கூடாரங்களோடு ஒப்பிட அது “அருமையான ஓட்டல் போல” இருந்தது. பிற்பாடு அமெரிக்காவில், இத்தாலியர் வசிக்கும் பகுதியில் தங்கள் குட்டிப் பெண்ணோடு சேர்ந்து ஆசை ஆசையாக பயனியர் ஊழியத்தைத் தொடர்ந்தார்கள்.

அநேகர் நற்செய்திக்குச் செவிசாய்த்தார்கள்; ஆனால், அவர்கள் ஏழைபாழைகளாக, வேலை இல்லாதவர்களாக இருந்தார்கள். அதனால் பைபிள் பிரசுரங்களுக்கு நன்கொடை அளிக்க முடியவில்லை. பணத்திற்குப் பதிலாக விதவிதமான பொருள்களை நன்கொடையாகக் கொடுத்தார்கள். ஆர்வம் காட்டிய நபர்கள் தங்களுக்கு அளித்த 64 விதமான பொருள்களை பயனியர் சகோதரிகள் இருவர் பட்டியலிட்டனர். அந்தப் பட்டியல் “மளிகை சாமான் பட்டியல்” போல இருந்தது!

ஃபிரெட் ஆன்டர்சென் என்ற சகோதரர் ஒரு விவசாயியிடம் பிரசங்கித்தபோது, அந்த விவசாயி நம் புத்தகங்களை வாங்கிக்கொண்டு, இறந்துபோன தன் அம்மாவின் மூக்குக் கண்ணாடியை நன்கொடையாகக் கொடுத்தார். சகோதரர் அடுத்த வயலுக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு நபர் நம் பிரசுரங்களை வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால், “படித்துப் பார்க்க என்னிடம் கண்ணாடி இல்லையே” என்று வருத்தப்பட்டார். உடனே, சகோதரர் தனக்குக் கிடைத்த மூக்குக் கண்ணாடியை அவரிடம் கொடுத்தார். அதைப் போட்டுப் பார்த்தபோது அவரால் நன்றாகப் படிக்க முடிந்தது; அதனால், புத்தகங்களுக்கும் கண்ணாடிக்கும் சேர்த்து சந்தோஷமாக நன்கொடை அளித்தார்.

ஹர்பர்ட் அபோட் என்ற சகோதரர் தன் காரில் ஒரு கோழிக் கூட்டை வைத்திருந்தார்; பிரசுரங்களுக்கு நன்கொடையாக மூன்று நான்கு கோழிகளைப் பெற்றுக்கொண்டார்; பின்பு, அவற்றைச் சந்தையில் விற்றார். விற்ற பணத்தில் தன் காருக்கு பெட்ரோல் போட்டார். “கையில் சல்லிக் காசுகூட இல்லாத நிலைமையும் எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்காக நாங்கள் முடங்கிவிடவில்லை. காரில் பெட்ரோல் மட்டும் இருந்தால் போதும் யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்து ஊழியத்திற்குக் கிளம்பிவிடுவோம்.”

அந்தக் கடினமான காலத்திலும் யெகோவாவுடைய மக்கள் அவரைச் சார்ந்திருந்தார்கள், திடத்தீர்மானத்தோடு இருந்தார்கள். மாக்ஸ்வெல்-எமி லூயி தம்பதி தங்கள் வாகன வீட்டிற்குள் இருந்த சமயத்தில் புயல்மழை அடித்தது; அப்போது, ஒரு மரம் அவர்களுடைய “வீட்டின்மீது” விழுந்து அதை இரண்டாகப் பிளந்தது; அவர்களோ மயிரிழையில் உயிர்தப்பினார்கள். “இவையெல்லாம் எங்களுக்குத் தடைக்கற்களாகத் தெரியவில்லை, சாதாரண விஷயமாகத்தான் தெரிந்தது. என்ன நடந்தாலும் ஊழியத்தை விட்டுவிட வேண்டுமென்ற எண்ணம் எங்கள் மனதில் துளிகூட எழவில்லை. செய்வதற்கு இன்னும் நிறைய இருந்தது, அதையெல்லாம் செய்துமுடிக்க நாங்கள் தீர்மானமாய் இருந்தோம்” என எழுதினார் மாக்ஸ்வெல். அன்பான நண்பர்களின் உதவியோடு தங்கள் வாகன வீட்டைத் திரும்பக் கட்டினார்கள்.

அவர்கள் காட்டிய அதே சுய தியாக மனப்பான்மையை இன்று இந்தக் கடினமான காலங்களில் வாழும் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளும் காட்டிவருகிறார்கள். அக்கால பயனியர்களைப் போலவே, பிரசங்க வேலையில் தொடர்ந்திருக்க... ‘வேலை முடிந்தது’ என யெகோவா சொல்லும்வரை அதில் தொடர்ந்திருக்க... திடத்தீர்மானமாய் இருக்கிறார்கள்!

^ தற்போது நம் ராஜ்ய ஊழியம் என்றழைக்கப்படுகிறது.

^ அந்தக் காலத்தில், பெரும்பாலான பயனியர்கள் வேலைக்குப் போகாமல் ஊழியம் செய்தார்கள். அவர்கள் பைபிள் பிரசுரங்களைக் குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள். அப்படிக் கொடுக்கும்போது கிடைத்த நன்கொடைகளை அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்தினார்கள்.