Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘யெகோவாவுக்கு அடிமைகளாய் இருங்கள்’

‘யெகோவாவுக்கு அடிமைகளாய் இருங்கள்’

‘உங்கள் வேலையில் மந்தமாக இருக்காதீர்கள். . . . யெகோவாவுக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்.’—ரோ. 12:11.

1. பொதுவாக மக்கள் நினைக்கிற அடிமைக்கும் ரோமர் 12:11-ல் சொல்லப்பட்டுள்ள அடிமைக்கும் என்ன வேறுபாடு?

 அடிமை என்ற சொல்லைக் கேட்டாலே கொடூரமாய் நடத்தப்படுகிற... அடக்கி ஒடுக்கப்படுகிற... ஒருவனைத்தான் நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால், கடவுளுக்கு அடிமையாக இருப்பது என்றால் வேறு; அன்பான எஜமானருக்கு விருப்பத்தோடு வேலை செய்பவர்களையே அடிமை எனக் கடவுளுடைய வார்த்தை அழைக்கிறது. சொல்லப்போனால், ‘யெகோவாவுக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்’ என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கொடுத்தபோது, அன்புடன் கடவுளுக்குச் சேவை செய்யுங்கள் என்றே சொன்னார். (ரோ. 12:11) அப்படியானால், கடவுளுக்கு அடிமையாய் இருப்பது என்றால் என்ன? சாத்தானுக்கும் அவனுடைய உலகத்துக்கும் அடிமையாகாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவாவுக்கு உண்மையுள்ள அடிமையாய் வேலை செய்யும்போது என்ன பலன்கள் கிடைக்கும்?

‘என் எஜமானை நேசிக்கிறேன்’

2. (அ) ஓர் இஸ்ரவேலன் தொடர்ந்து அடிமையாக இருக்க ஏன் விரும்பலாம்? (ஆ) ஓர் அடிமை தன் காதைக் குத்திக்கொள்ள விரும்புவது எதைக் காட்டியது?

2 இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தில், ஓர் அடிமையிடம் யெகோவா என்னென்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். எபிரெய அடிமைக்கு ஏழாம் ஆண்டில் விடுதலை வழங்க வேண்டுமெனச் சொல்லியிருந்தார். (யாத். 21:2) ஆனால், ஓர் அடிமை தன் எஜமான்மீது மிகுந்த அன்பு வைத்து அவருக்குக் காலமெல்லாம் வேலை செய்ய விரும்பினால், அவன் அடிமையாகவே இருக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், எஜமான் அந்த அடிமையைக் கதவின் அருகே அல்லது நிலைக்காலின் அருகே கொண்டுவந்து அவனுடைய காதைக் கம்பியினால் குத்த வேண்டியிருந்தது. (யாத். 21:5, 6) எதற்காகக் காதைக் குத்த வேண்டியிருந்தது? எபிரெய மொழியில், கீழ்ப்படிதல் என்ற வார்த்தை காதுகொடுத்துக் கேட்பதோடு சம்பந்தப்பட்டிருந்தது. ஆகவே ஓர் அடிமை தன் காதைக் குத்திக்கொள்ள விரும்புவது, அவன் தொடர்ந்து தன் எஜமானுக்குக் கீழ்ப்படிந்து நடக்க விரும்பியதைக் காட்டியது. அதுபோலவே, நாமும் யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, அன்புடன் அவருக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம் என்பதைத் தெரிவிக்கிறோம்.

3. எதனால் கடவுளுக்கு நம்மையே அர்ப்பணிக்கிறோம்?

3 யெகோவாவுக்கு அடிமையாக வேலை செய்ய தீர்மானித்ததால்தான் நாம் ஞானஸ்நானம் எடுத்தோம். யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும் அவருடைய சித்தத்தைச் செய்யவும் விரும்பியதால்தான் நம் வாழ்வை அவருக்கு அர்ப்பணித்தோம். அப்படிச் செய்ய யாரும் நம்மைக் கட்டாயப்படுத்தவில்லை. இளைஞர்களும்கூட தாங்களாகவே இஷ்டப்பட்டுத்தான் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறார்கள், பெற்றோரைப் பிரியப்படுத்துவதற்காக அல்ல. ஆம், பரலோக எஜமானரான யெகோவாவின் மீதுள்ள அன்பினால்தான் நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கிறோம். “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—1 யோ. 5:3.

விடுதலை பெற்றிருந்தாலும் அடிமைகள்

4. ‘நீதிக்கு அடிமைகளாயிருக்க’ என்ன செய்ய வேண்டும்?

4 யெகோவாவுக்கு அடிமைகளாய் வேலை செய்யக் கிடைத்த பாக்கியத்திற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! கிறிஸ்துவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதால் பாவம் எனும் நுகத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். நாம் அபூரணராக இருந்தாலும் யெகோவாவையும் இயேசுவையும் நம் எஜமானர்களாக ஏற்றிருக்கிறோம், அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க முன்வந்திருக்கிறோம். பவுல் இதை ஒரு கடிதத்தில் தெளிவாக விளக்கினார்; “பாவத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களாகவும், கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுளுக்காக உயிர்வாழ்கிறவர்களாகவும் உங்களை எண்ணிக்கொள்ளுங்கள்” என்றார். அதன்பின், இவ்வாறு எச்சரித்தார்: “யாருக்கு உங்களை அர்ப்பணித்துக் கீழ்ப்படுத்துகிறீர்களோ அவருக்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தால் மரணமடைவீர்கள், கீழ்ப்படிதலுக்கு அடிமைகளாக இருந்தால் நீதிமான்களாவீர்கள். முன்பு நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தாலும், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதனைக்கு இருதயப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தீர்கள்; அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு நீதிக்கு அடிமைகளானீர்கள்.” (ரோ. 6:11, 16-18) இங்கே பவுல், ‘இருதயப்பூர்வமாகக் கீழ்ப்படிவதை’ பற்றிக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இப்படிப்பட்ட கீழ்ப்படிதலுக்கு அடையாளமாக, யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது ‘நீதிக்கு அடிமைகளாகிறோம்.’

5. நாம் எந்த எதிரியோடு போராட வேண்டியிருக்கிறது, ஏன்?

5 என்றாலும், கடவுளுடைய அடிமைகளாகிய நமக்கு இரண்டு விதமான போராட்டங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அபூரணம் என்ற எதிரியோடு போராட வேண்டியிருக்கிறது. பவுலுக்கும் இந்தப் போராட்டம் இருந்தது. “கடவுளுடைய சட்டத்தைக் குறித்து என் உள்ளத்தின் ஆழத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், என் மனதின் சட்டத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலுறுப்புகளில் இருப்பதைக் காண்கிறேன்; என் உடலுறுப்புகளில் உள்ள பாவத்தின் சட்டமாகிய அது என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது” என்று அவர் எழுதினார். (ரோ. 7:22, 23) நாமும் அபூரணராக இருப்பதால், கெட்ட ஆசைகளை எதிர்த்துச் சதா போராட வேண்டியிருக்கிறது. “நீங்கள் சுதந்திரமாக வாழுங்கள்; என்றாலும், உங்களுடைய சுதந்திரத்தைத் தீய செயல்களை மறைக்கும் போர்வையாகப் பயன்படுத்தாதீர்கள், கடவுளுக்கு அடிமைகளாகவே வாழுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு அறிவுறுத்தினார்.—1 பே. 2:16.

6, 7. சாத்தான் எப்படி இந்த உலகத்தைக் கவர்ச்சியாகக் காட்டுகிறான்?

6 இரண்டாவதாக, பேய்களின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த உலகத்தோடு நாம் போராட வேண்டியிருக்கிறது. சாத்தானே இந்த உலகத்தை ஆளுகிறான்; யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நாம் காட்டுகிற உத்தமத்தைக் குலைக்க அவன் நம்மீது நெருப்புக்கணைகளைத் தொடுக்கிறான். அவனுடைய கெட்ட வழிக்கு நம்மைச் சுண்டியிழுத்து அடிமையாக்கப் பார்க்கிறான். (எபேசியர் 6:11, 12-ஐ வாசியுங்கள்.) அதற்காக, இந்த உலகத்தைக் கவர்ச்சியாகக் காட்டி நம்மை வசீகரிக்கிறான். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எச்சரித்தார்: “ஒருவன் இந்த உலகத்தின் மீது அன்பு வைத்தால், பரலோகத் தகப்பன்மீது அவனுக்கு அன்பில்லை; ஏனென்றால், உலகத்திலுள்ள அனைத்தும், அதாவது உடலின் இச்சையும், கண்களின் இச்சையும், பகட்டாகக் காட்டப்படுகிற பொருள் வசதிகளும் பரலோகத் தகப்பனிடமிருந்து தோன்றுவதில்லை, இந்த உலகத்திடமிருந்தே தோன்றுகின்றன.”—1 யோ. 2:15, 16.

7 ஆடம்பரமாக வாழ வேண்டுமென்ற ஆசை இன்று எல்லோருக்குள்ளும் வேரூன்றியிருக்கிறது. பணத்துக்கு மறுபெயர்தான் மகிழ்ச்சி என்ற கொள்கையைச் சாத்தான் பரப்பியிருக்கிறான். எங்கு பார்த்தாலும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள் நெடுநெடுவென நிற்கின்றன. பொருள்களை வாங்கிக் குவியுங்கள்... ஜாலியாகப் பொழுதைக் கழியுங்கள்... என்ற எண்ணத்தைத்தான் விளம்பரங்கள் ஊக்குவிக்கின்றன. குறைந்த கட்டணத்தில் கண்கவர் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்லலாம் என டிராவல் ஏஜென்ஸிகள் ஆசைகாட்டுகின்றன; ஆனால் அந்தச் சுற்றுலாக்களில் இந்த உலகத்தார்தான் நம்மோடு வருவார்கள். இன்று, ‘வாழ்க்கையில் முன்னுக்கு வாருங்கள்’ என்ற அழைப்பு எல்லாப் பக்கமும் கேட்கிறது, உண்மையில் உலகம் போகிற போக்கில் போகவே எல்லோரும் நம்மைத் தூண்டுகிறார்கள்.

8, 9. என்ன பேராபத்து இருக்கிறது, அது ஏன் பேராபத்தானது?

8 உலக கண்ணோட்டத்தை வளர்த்திருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பற்றி எழுதியபோது பேதுரு இவ்வாறு எச்சரித்தார்: “பட்டப்பகலில் பாவ இச்சைகளில் புரளுவதை இன்பமென அவர்கள் கருதுகிறார்கள். உங்களோடு விருந்து சாப்பிடும்போது தங்களுடைய போதனைகளால் உங்களை வஞ்சிப்பதில் மட்டுக்கு மீறி சந்தோஷமடைகிறார்கள். உங்கள் மத்தியில் அவர்கள் கறையாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்; அவர்கள் வீண்பெருமை பேசுகிறார்கள்; நெறிதவறி நடக்கிறவர்களிடமிருந்து தப்பித்து வருகிறவர்களைப் பாவ இச்சைகளினாலும் வெட்கங்கெட்ட பழக்கங்களினாலும் வசீகரிக்கிறார்கள். அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக வாக்குக் கொடுக்கிறார்கள், ஆனால் தாங்களே ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்; எது ஒருவனை அடக்கி ஆளுகிறதோ அதற்கு அவன் அடிமையாகிவிடுகிறான்.”—2 பே. 2:13, 18, 19.

9 ‘கண்களின் இச்சைக்கு’ இணங்குவதால், அதாவது கண்ணில் படுவதையெல்லாம் வாங்குவதால், நமக்கு விடுதலை கிடைத்துவிடாது. மாறாக, இந்த உலகத்தின் எஜமானுக்கு... மனித கண்களுக்குப் புலப்படாத சாத்தானுக்கு... அடிமையாகிவிடுவோம். (1 யோ. 5:19) உண்மையில், பொருளாசைக்கு அடிமையாவது பாழுங்கிணற்றில் விழுவதைப்போல் பேராபத்தானது; அதிலிருந்து தப்பிப்பது மகா கஷ்டம்.

திருப்தியான வேலை

10, 11. இன்று சாத்தான் யார்மீது கண்ணாக இருக்கிறான், இன்றுள்ள கல்வித் திட்டங்கள் எப்படி அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன?

10 ஏதேன் தோட்டத்தில் செய்ததைப் போலவே இன்றைக்கும் அனுபவமில்லாதவர்களைச் சாத்தான் குறிவைக்கிறான். முக்கியமாக இளைஞர்கள்மீது கண்ணாக இருக்கிறான். இளைஞர்களாக இருந்தாலும்சரி வேறு யாராக இருந்தாலும்சரி, யெகோவாவுக்கு அடிமைகளாக வேலை செய்வதை அவன் விரும்புவதில்லை. யெகோவாவுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிற அனைவருடைய பக்தியையும் உத்தமத்தையும் குலைக்கவே விரும்புகிறான்.

11 இஸ்ரவேலர் காலத்தில் காது குத்திக்கொள்ள முன்வந்த அடிமையின் உதாரணத்தை மறுபடியும் சிந்திக்கலாம். அவனுக்குச் சற்று நேரம் வலி இருந்திருக்கும், ஆனால் அதன்பின் அடிமைக்குரிய நிரந்தர அடையாளம் கிடைத்திருக்கும். அதுபோலவே, நண்பர்களைப் போலில்லாமல் வித்தியாசமாக வாழ்வது இன்று இளைஞர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம், வேதனையாகக்கூட இருக்கலாம். உதாரணத்துக்கு, திருப்தியான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வேலை தேவை என்ற கருத்தைச் சாத்தான் பரப்புகிறான்; ஆனால், ஆன்மீகப் பசியைத் தீர்ப்பதற்குக் கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும். “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு கற்பித்தார். (மத். 5:3) அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்யவே உயிர்வாழ்கிறார்கள், சாத்தானுடைய சித்தத்தை அல்ல. அவர்கள் யெகோவாவின் சட்டத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அதைத் தியானிக்கிறார்கள். (சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்.) ஆனால் இன்றுள்ள பல கல்வித் திட்டங்கள், ஆன்மீக விஷயங்களைத் தியானிப்பதற்கும் ஆன்மீகப் பசியைத் தீர்ப்பதற்கும் நேரம் அனுமதிப்பதே இல்லை.

12. இன்று இளைஞர்கள் என்ன தீர்மானம் செய்ய வேண்டியிருக்கிறது?

12 உலக எஜமான் ஒருவன் கிறிஸ்தவ அடிமையின் வாழ்க்கையைத் திண்டாட்டமாய் ஆக்கியிருக்கலாம். பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், “நீங்கள் அடிமையாக இருக்கும்போது அழைக்கப்பட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்; ஆனாலும், நீங்கள் சுதந்திரமாவதற்கு வாய்ப்பிருக்கிறதென்றால், அதை நழுவ விடாதீர்கள்” என்று சொன்னார். (1 கொ. 7:21) அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற அவர் ஊக்கப்படுத்தினார். இன்று அநேக நாடுகளில், ஒரு குறிப்பிட்ட வயதுவரை கல்வி பயில வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. அதன்பின் என்ன செய்வதென மாணவர்கள் தீர்மானிக்கலாம். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக உயர்கல்வி கற்கத் தீர்மானித்தால், முழுநேர ஊழியம் செய்யும் சுதந்திரம் பறிபோய்விடும்.1 கொரிந்தியர் 7:23-ஐ வாசியுங்கள்.

எந்த எஜமானுக்கு நீங்கள் அடிமையாய் இருப்பீர்கள்?

உயர் கல்வியா உன்னதக் கல்வியா?

13. யெகோவாவின் ஊழியர்களுக்கு எப்படிப்பட்ட கல்வி மிகவும் கைகொடுக்கும்?

13 “தத்துவங்களினாலும் வஞ்சனையான வீண் கருத்துகளினாலும் ஒருவனும் உங்களைக் கவர்ந்துகொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவை மனித பாரம்பரியங்களையும் இவ்வுலகின் அடிப்படைக் காரியங்களையுமே சார்ந்தவை, கிறிஸ்துவைச் சார்ந்தவை அல்ல” என்று கொலோசெயருக்கு பவுல் எழுதினார். (கொலோ. 2:8) ‘மனித பாரம்பரியங்களைச் சார்ந்த தத்துவங்களையும் வஞ்சனையான வீண் கருத்துகளையும்தான்’ இன்று மாணவர்களின் மனதில் ஆசிரியர்கள் பதிய வைக்கிறார்கள். உயர் கல்வியால் பட்டதாரிகளை உருவாக்க முடிகிறது; ஆனால், அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் திறமைகளைக் கற்றுத்தர முடிவதில்லை. அதனால் வாழ்க்கையின் எதார்த்தங்களைச் சந்திக்க பட்டதாரிகள் தயாராய் இருப்பதில்லை. யெகோவாவின் ஊழியர்களோ, எளிய வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொண்டு யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள்; ஆகவே, அதற்குக் கைகொடுக்கிற கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த இந்த அறிவுரையின்படி நடக்கிறார்கள்: “தேவபக்தி மிகுந்த ஆதாயம் தரும் என்பது உண்மைதான்; ஆனால் தேவபக்தியோடுகூட, போதுமென்ற மனம் உள்ளவர்களுக்கே அது மிகுந்த ஆதாயம் தரும். அதனால், நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.” (1 தீ. 6:6, 8) பட்டங்களைப் பெறுவதற்கு அல்ல, ஊழியத்தில் முடிந்தளவுக்கு முழுமையாக ஈடுபடுவதன் மூலம் “சிபாரிசுக் கடிதங்களை” பெறுவதற்கே உண்மைக் கிறிஸ்தவர்கள் முயலுகிறார்கள்.2 கொரிந்தியர் 3:1-3-ஐ வாசியுங்கள்.

14. பிலிப்பியர் 3:8-ன்படி, கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமையாக இருக்கிற பாக்கியத்தை பவுல் எப்படிக் கருதினார்?

14 அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திருச்சட்ட போதகரான கமாலியேலிடம் அவர் கல்வி பயின்றிருந்தார். அது இன்றைய பட்டப்படிப்புக்குச் சமம். ஆனால், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமையாக இருக்கிற பாக்கியத்தோடு ஒப்பிட அதை பவுல் எப்படிக் கருதினார்? “என் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம் என்பதால், மற்ற எல்லாவற்றையும் நஷ்டமென்று கருதுகிறேன். அவருக்காக எல்லா நஷ்டத்தையும் ஏற்றிருக்கிறேன்; கிறிஸ்துவை நான் லாபமாக்கிக்கொண்டு அவரோடு ஒன்றுபட்டிருப்பதற்காக அவற்றையெல்லாம் வெறும் குப்பையாகக் கருதுகிறேன்” என்று எழுதினார். (பிலி. 3:8) பவுலின் இந்தக் கண்ணோட்டம், கல்வியை ஞானமாகத் தேர்ந்தெடுப்பதற்கு இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் உதவும். (படங்களைப் பாருங்கள்.)

உன்னதக் கல்வியால் பயனடையுங்கள்

15, 16. யெகோவாவின் அமைப்பு எப்படிப்பட்ட கல்வியை வழங்குகிறது, அதன் நோக்கம் என்ன?

15 உயர் கல்வி நிறுவனங்களில் இன்று எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது? அரசாங்கத்துக்கோ வேறு அதிகாரங்களுக்கோ எதிரான போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும்தான் அங்கு அடிக்கடி நடக்கின்றன. (எபே. 2:2) ஆனால் யெகோவாவின் அமைப்பு, சமாதானம் நிலவும் கிறிஸ்தவச் சபையில் உன்னதக் கல்வியை வழங்குகிறது. வாரந்தோறும் நடைபெறுகிற தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நாம் ஒவ்வொருவரும் பயனடைகிறோம். இது தவிர, முழுநேர ஊழியம் செய்கிறவர்களுக்கு விசேஷப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன; உதாரணத்துக்கு, மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியும் கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளியும் நடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட தேவராஜ்ய கல்வி நம் பரலோக எஜமானரான யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க நம்மைப் பயிற்றுவிக்கிறது.

16 நம்முடைய பிரசுரங்களில் ஆன்மீகப் புதையல்களை ஏராளமாகத் தோண்டியெடுக்கலாம். பைபிள் கல்வியின் முக்கிய நோக்கமே யெகோவாவைச் சிறந்த விதத்தில் வழிபடுவதற்காகும். அவரோடு சமரசம் ஆக மற்றவர்களுக்கு எப்படி உதவலாமென அது நமக்குக் கற்பிக்கிறது. (2 கொ. 5:20) நம்மிடம் கற்றுக்கொள்கிறவர்கள் இன்னும் பலருக்குக் கற்றுக்கொடுக்கவும் உதவுகிறது.—2 தீ. 2:2.

அடிமைக்குக் கிடைக்கும் பலன்கள்

17. உன்னதக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதால் என்ன பலன்கள் கிடைக்கின்றன?

17 தாலந்துகளைப் பற்றி இயேசு சொன்ன ஓர் உவமையில், விசுவாசமுள்ள இரண்டு அடிமைகளைப் பற்றி வாசிக்கிறோம். எஜமானுடைய பாராட்டை அவர்கள் சம்பாதித்தார்கள்; இன்னும் அதிக பொறுப்புகளையும் பெற்று, எஜமானோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள். (மத்தேயு 25:21, 23-ஐ வாசியுங்கள்.) இன்று உன்னதக் கல்வியைத் தேர்ந்தெடுக்கும்போது சந்தோஷமும் இன்னும் பல பலன்களும் கிடைக்கின்றன. மைக்கேலின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் பள்ளியில் மிக நன்றாகப் படித்து உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றார். ஆகவே, பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் படிப்பதைப் பற்றி ஆசிரியர்கள் அவரை அழைத்துப் பேசினார்கள். ஆனால், குறுகியகால தொழிற்கல்வி பயில விரும்புவதாக மைக்கேல் சொன்னபோது அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். சீக்கிரத்திலேயே, அவர் திட்டமிட்டபடி சொந்தக் காலில் நின்று ஒழுங்கான பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தார். இப்போது, எதையோ இழந்துவிட்டதாக நினைக்கிறாரா? “தேவராஜ்ய கல்வி ஒரு பயனியராகச் சேவை செய்ய எனக்கு ரொம்பவே உதவியிருக்கிறது, இப்போது ஒரு மூப்பராகச் சேவை செய்வதற்கும்கூட பிரயோஜனமாக இருக்கிறது” என்று அவர் சொல்கிறார். “ஒருவேளை மேல்படிப்பு படித்து கைநிறைய சம்பாதித்திருந்தாலும், இப்போது அனுபவிக்கிற ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது. பட்டப்படிப்பு படிக்காததற்காக நான் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன்” என்றும் சொல்கிறார்.

18. உன்னதக் கல்வியைத் தேர்ந்தெடுக்க எது உங்களைத் தூண்டுகிறது?

18 உன்னதக் கல்வி யெகோவாவின் சித்தத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது, அவருக்கு அடிமையாய் வேலை செய்யவும் உதவுகிறது. ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறுகிற எதிர்பார்ப்பை’ தருகிறது. (ரோ. 8:21) எல்லாவற்றுக்கும் மேலாக, நம் பரலோக எஜமானரான யெகோவாமீது உள்ளப்பூர்வமான அன்பு வைத்திருப்பதை எப்படிக் காட்டலாம் என்றும் கற்றுக்கொடுக்கிறது.—யாத். 21:5.