மக்களை எச்சரிக்க எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறீர்களா?
இருபதாம் நூற்றாண்டின் உதயத்தில், எ ட்ரிப் டௌன் மார்க்கெட் ஸ்ட்ரீட் என்ற ஊமைப் படம் வெளிவந்தது. அமெரிக்காவிலுள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகர வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாகக் காட்டியதால் மக்கள் அதைப் பார்த்து பரவசம் அடைந்தார்கள். படத்தயாரிப்பாளர்களின் கேமராக்கள் அந்தச் சந்தடிமிக்க தெருக்களை அழகாகப் படம்பிடித்திருந்தன. குதிரை வண்டிகள், அந்தக் காலத்து கார்கள், கடைகளுக்கு வந்துபோகும் ஆட்கள், அன்றாட செய்திகளைச் சுடச்சுட மக்களுக்குக் கொண்டு செல்லும் சிறுவர்கள் என தினசரி வாழ்க்கையை அதில் பார்த்து ரசித்தார்கள்.
சந்தோஷத்தில் திளைத்த மக்கள் சில நாட்களிலேயே சோகத்தில் மூழ்கினார்கள். ஏப்ரல் 1906-ல் படம் வெளிவந்த அதே மாதம் 18-ஆம் தேதியன்று படுபயங்கரமான பூகம்பமும் தீ விபத்தும் ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்தது; கிட்டத்தட்ட அந்த நகரையே புரட்டிப் போட்டது. படத்தில் முகம்காட்டிய மக்களில் சிலர் தங்கள் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரத்தில் முடிவடைந்துவிடும் என நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். படத்தயாரிப்பாளர் ஒருவருடைய உறவினர் ஸ்காட் மைல்ஸ் இப்படிச் சொன்னார்: “அந்த மக்கள பார்க்குறதுக்கே ரொம்ப பரிதாபமா இருந்துச்சு, வாழ்க்கை இனி எப்படி இருக்கும்னு தெரியாம தவிச்சாங்க. அவங்களுக்காக வருத்தப்படுறத தவிர என்னால வேற எதுவும் செய்ய முடியல.”
எச்சரிக்கப்படாததால், 1906-ல் ஏற்பட்ட பூகம்பமும் தீ விபத்தும் சான் பிரான்ஸிஸ்கோ நகரின் பெரும் பகுதியை நாசமாக்கின
இன்றைய நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. மக்களுக்காக வருத்தப்படுவதைத் தவிர வேறெதுவும் நம்மால் செய்ய முடியாது. சீக்கிரத்தில் இந்தப் பொல்லாத உலகிற்கும் தங்களுடைய வாழ்க்கைக்கும் வரப்போகும் அழிவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் அன்றாட வாழ்க்கையில் மூழ்கியிருக்கிறார்கள். இந்த அழிவு அன்று நடந்த பூகம்பத்தைப் போன்றது அல்ல. ஏனென்றால், யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி மக்களிடம் எச்சரிக்க இன்று நமக்கு கொஞ்சம் காலம் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் செலவிட்டாலும், மக்களை எச்சரிக்க உங்களால் இன்னும் அதிகம் செய்ய முடியுமா?
இயேசு எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தினார்
இயேசு எல்லாச் சமயங்களிலும் பிரசங்கிப்பதற்குத் தயாராக இருந்தார். வழியில் செல்கையில் ஒரு வரி வசூலிப்பவரிடம் பேசினார்; மதிய வேளையில் களைப்பாக உட்கார்ந்திருந்தபோது கிணற்றருகே வந்த ஒரு பெண்ணிடம் பேசினார். (லூக். 19:1-5; யோவா. 4:5-10, 21-24) இப்படி, கண்ணில் பட்ட எல்லோரிடமும் பிரசங்கித்தார். ஓய்வெடுக்கும் சமயத்தில்கூட மற்றவர்களிடம் பிரசங்கிப்பதற்காகத் தம்முடைய அட்டவணையை மாற்றி அமைத்துக்கொண்டார். மக்கள்மீதிருந்த கரிசனையால் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். (மாற். 6:30-34) பிரசங்கிப்பதில் இயேசு காட்டிய அதே அவசர உணர்வை நாம் எப்படி காட்டலாம்?
வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டவர்கள்
பலத்த பாதுகாப்புள்ள அபார்ட்மென்ட்டில் மெலிக்கா என்ற சகோதரி குடியிருக்கிறார். அங்கு வெளிநாட்டு மாணவர்கள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். பொதுவாக வரவேற்பறையில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில், குடியிருப்பவர்களுடைய பெயர்களும் ஃபோன் நம்பர்களும் இருக்கும்.
ஆனால், இந்த அபார்ட்மென்ட்டில் அது இல்லாததால், வரவேற்பறைக்கு வருவோரிடமும் லிஃப்ட்டில் செல்வோரிடமும் பேசுவதற்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர்களோடு பைபிள் விஷயங்களைப் பேசுகிறார். “இத என்னோட பிராந்தியமாவே ஆக்கிக்கிட்டேன்” என்று மெலிக்கா சொல்கிறார். அவர் வெவ்வேறு மொழி பிரசுரங்களைக் கைவசம் வைத்திருப்பதால், நிறையப் பேரிடம் துண்டுப்பிரதிகளையும் பத்திரிகைகளையும் கொடுக்கிறார். அதோடு, நம்முடைய jw.org வெப்சைட்டையும் பார்க்கச் சொல்கிறார். அநேக பைபிள் படிப்புகளையும் ஆரம்பித்திருக்கிறார்.சோனியா என்ற சகோதரியும் சாட்சி கொடுக்க தனக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்கிறார். அவர் ஒரு கிளினிக்கில் வேலை செய்கிறார். தன்னோடு வேலை செய்யும் எல்லோரிடமும் முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டுமென்ற இலக்கு வைத்தார். முதலில், ஒவ்வொருவருடைய தேவைகளையும் விருப்பங்களையும் தெரிந்துகொள்கிறார். பின்பு, உணவு இடைவேளையில் அவர்களைத் தனித்தனியாகச் சந்தித்து பைபிள் விஷயங்களைப் பேசுகிறார். இதனால், இரண்டு பைபிள் படிப்புகளை அவரால் ஆரம்பிக்க முடிந்தது. அது தவிர, வரவேற்பறையில் டாக்டருக்காகக் காத்திருப்போரிடம் பேசுவதற்கும் மற்ற இடைவேளைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்.
எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
1906-ல் நடந்த பூகம்பத்தில் உயிர்தப்பிய ஒருவர் “இதுபோன்ற படுபயங்கரமான பேரழிவு எந்தவொரு மாகாணத்தையும் நகரத்தையும் தாக்கியிருக்க முடியாது” என்று சொன்னார். ஆனால், ‘கடவுளை அறியாதவர்கள்மீது’ வரப்போகும் அவருடைய பழிவாங்கும் நாள் இந்த எல்லா பேரழிவுகளையும் விஞ்சிவிடும்; அது படுபயங்கரமானதாக இருக்கும். (2 தெ. 1:8) அதனால்தான் யெகோவா, தம்முடைய சாட்சிகள் கொடுக்கும் எச்சரிப்பின் செய்தியை மக்கள் ஏற்றுக்கொண்டு மனம் மாற வேண்டும் என்று விரும்புகிறார்.—2 பே. 3:9; வெளி. 14:6, 7.
அன்றாடம் சந்திக்கிற ஆட்களிடம் பிரசங்கிப்பதற்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்களா?
கொடிய காலத்தில் வாழ்கிறோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள, அவர்களுடைய மனக்கண்களைத் திறக்கும் மாபெரும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. அவர்கள் தங்களுடைய சுயநல ஆசைகளை விட்டொழித்து யெகோவாவைச் சேவிக்க உதவும் பாக்கியமும் உங்களுக்கு இருக்கிறது. (செப். 2:2, 3) எனவே, சக பணியாளர்களிடம், அக்கம்பக்கத்தாரிடம், வெளியில் சந்திக்கும் ஆட்களிடம் என எல்லோரிடமும் பேசக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வீர்களா?