Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவ மூப்பர்கள் ‘நம் சந்தோஷத்திற்குச் சக வேலையாட்கள்’

கிறிஸ்தவ மூப்பர்கள் ‘நம் சந்தோஷத்திற்குச் சக வேலையாட்கள்’

“உங்களுடைய சந்தோஷத்திற்காக உங்கள் சக வேலையாட்களாகவே இருக்கிறோம்.”—2 கொ. 1:24.

1. கொரிந்து சகோதரர்களைக் குறித்து பவுல் சந்தோஷப்படக் காரணம் என்ன?

 வருடம் கி.பி. 55. அப்போஸ்தலன் பவுல் துறைமுக நகரமான துரோவாவில் இருந்தார். அவரால் கொரிந்து சபையிலிருந்த சகோதரர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அந்த வருடத்தின் ஆரம்பத்தில், சகோதரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதங்கள் செய்தது அவருடைய காதுகளுக்கு எட்டியபோது மனவேதனை அடைந்திருந்தார். எனவே, ஒரு தகப்பனாக அவர்கள்மேல் அக்கறை வைத்திருந்ததால், அவர்களைக் கண்டித்துத் திருத்துவதற்காக ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். (1 கொ. 1:11; 4:15) தன் சக வேலையாளான தீத்துவையும் அவர்களிடம் அனுப்பி வைத்திருந்தார்; துரோவாவுக்கு வந்து கொரிந்து சபையாரைப் பற்றிய விவரங்களைத் தன்னிடம் தெரிவிக்கும்படி அவரிடம் சொல்லியிருந்தார். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என தீத்துவிடமிருந்து தெரிந்துகொள்ள ஆவலாய்க் காத்திருந்தார். ஆனால், தீத்து வராததால் அதிக ஏமாற்றமடைந்தார். அதன்பின் அவர் மக்கெதோனியாவுக்குக் கப்பலேறிச் சென்றார். சில நாட்கள் கழித்து அங்கு தீத்து வந்து அவரைச் சந்தித்தபோது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். பவுலின் கடிதத்தைப் படித்த கொரிந்தியர்கள் மனந்திரும்பியதையும், பவுலைக் காண ஏக்கமாயிருப்பதையும் பவுலிடம் தீத்து தெரிவித்தார். அந்த நல்ல செய்தியைக் கேட்ட பவுல், ‘இன்னும் அதிகமாகச் சந்தோஷப்பட்டார்.’—2 கொ. 2:12, 13; 7:5-9.

2. (அ) விசுவாசத்தையும் சந்தோஷத்தையும் பற்றி கொரிந்தியர்களுக்கு பவுல் என்ன எழுதினார்? (ஆ) எந்தக் கேள்விகளைச் சிந்திக்கப்போகிறோம்?

2 பவுல் சீக்கிரத்திலேயே, தன் இரண்டாவது கடிதத்தை கொரிந்தியர்களுக்கு எழுதினார். “உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாய் இருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை; உங்களுடைய சந்தோஷத்திற்காக உங்கள் சக வேலையாட்களாகவே இருக்கிறோம்; ஏனென்றால், உங்களுடைய விசுவாசத்தினால்தான் நீங்கள் உறுதியாய் நிற்கிறீர்கள்” என்று அவர்களுக்கு எழுதினார். (2 கொ. 1:24) அவர் அப்படி எழுதியதன் அர்த்தம் என்ன? அந்த வார்த்தைகளிலிருந்து இன்று மூப்பர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

நம் விசுவாசமும் சந்தோஷமும்

3. (அ) “உங்களுடைய விசுவாசத்தினால்தான் நீங்கள் உறுதியாய் நிற்கிறீர்கள்” என்று பவுல் எழுதியதன் அர்த்தம் என்ன? (ஆ) பவுலின் முன்மாதிரியை இன்றுள்ள மூப்பர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்?

3 நம் வணக்கத்தின் இரண்டு முக்கிய அம்சங்களைப் பற்றி பவுல் குறிப்பிட்டார்—ஒன்று விசுவாசம், மற்றொன்று சந்தோஷம். விசுவாசத்தைப் பற்றி அவர் என்ன எழுதினார் என்று கவனியுங்கள்: “உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாய் இருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை, . . . ஏனென்றால், உங்களுடைய விசுவாசத்தினால்தான் நீங்கள் உறுதியாய் நிற்கிறீர்கள்.” கொரிந்தியர்கள் உறுதியுடன் இருந்ததற்கு தானும், மற்றவர்களும் காரணம் அல்ல, கடவுள்மீது அவர்களுக்கு இருந்த உறுதியான விசுவாசமே காரணம் என்பதை பவுல் அறிந்திருந்தார். அதனால் தன் சகோதரர்களுடைய விசுவாசத்திற்கு அதிகாரியாயிருக்க அவர் நினைக்கவில்லை, அதை அவர் விரும்பவும் இல்லை. விசுவாசமிக்க கிறிஸ்தவர்களாக அவர்கள் சரியானதையே செய்வார்கள் என்று அவர் உறுதியாக நம்பினார். (2 கொ. 2:3) இன்றுள்ள மூப்பர்கள் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றி, தங்கள் சகோதரர்கள் கடவுள்மீது விசுவாசம் வைத்திருக்கிறார்கள் என்றும், நல்ல எண்ணத்தோடு அவருக்குச் சேவை செய்கிறார்கள் என்றும் உறுதியாக நம்புகிறார்கள். (2 தெ. 3:4) அதோடு, சபையில் கறாரான சட்டதிட்டங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, பைபிள் நியமங்களையும் யெகோவாவின் அமைப்பு கொடுக்கிற அறிவுரைகளையும் சார்ந்திருக்கிறார்கள். ஆம், இன்றுள்ள மூப்பர்கள் தங்கள் சகோதரர்களுடைய விசுவாசத்திற்கு அதிகாரிகளாக இருப்பதில்லை!—1 பே. 5:2, 3.

4. (அ) “உங்களுடைய சந்தோஷத்திற்காக உங்கள் சக வேலையாட்களாகவே இருக்கிறோம்” என்று பவுல் எழுதியதன் அர்த்தம் என்ன? (ஆ) பவுலின் மனப்பான்மையை இன்று மூப்பர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்?

4 இப்போது, சந்தோஷத்தைப் பற்றி பவுல் என்ன எழுதினார் என்று கவனியுங்கள்: “உங்களுடைய சந்தோஷத்திற்காக உங்கள் சக வேலையாட்களாகவே இருக்கிறோம்.” இந்த ‘சக வேலையாட்கள்’ யார்? கொரிந்தியர்களுக்கு உதவ பவுலோடு சேர்ந்து உழைத்தவர்களே. அது நமக்கு எப்படித் தெரியும்? அவர்களில் இருவரைப் பற்றி கொரிந்தியர்களுக்கு எழுதிய அதே கடிதத்தில் அவர் குறிப்பிட்டார்: “கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றி நானும் சில்வானுவும் தீமோத்தேயுவும் உங்களிடையே பிரசங்கித்தோம்.” (2 கொ. 1:19) “சக வேலையாட்கள்” என்று அவர் தன் கடிதங்களில் எழுதியபோதெல்லாம், பிரசங்க வேலையில் தன்னோடு உழைத்த அப்பொல்லோ, ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள், தீமோத்தேயு, தீத்து போன்றவர்களைப் பற்றித்தான் குறிப்பிட்டார். (ரோ. 16:3, 21; 1 கொ. 3:6-9; 2 கொ. 8:23) எனவே, “உங்களுடைய சந்தோஷத்திற்காக உங்கள் சக வேலையாட்களாகவே இருக்கிறோம்” என்று பவுல் சொன்னபோது, கொரிந்து சபையாரின் சந்தோஷத்திற்காக தானும் தன் சக ஊழியர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாக அவர்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்று கிறிஸ்தவ மூப்பர்களுக்கும் அதே ஆசை இருக்கிறது. தங்களுடைய சகோதரர்கள் ‘யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய’ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.—சங். 100:2, NW; பிலி. 1:25.

5. எந்தக் கேள்விக்கான பதில்களைக் கலந்தாலோசிப்போம், எதைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்?

5 உலகத்தின் வெவ்வேறு பாகங்களில் வாழும் நம் சகோதர சகோதரிகள் சிலரிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது: “ஒரு மூப்பருடைய எந்த வார்த்தையும் செயலும் உங்களுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது?” அந்தச் சகோதர சகோதரிகள் சொன்ன பதில்களை இப்போது கலந்தாலோசிக்கும்போது, நீங்கள் என்ன பதில் சொல்லியிருப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். சபையிலுள்ள சகோதர சகோதரிகளின் சந்தோஷத்தை அதிகரிக்க நாம் எல்லோருமே என்ன செய்யலாம் என்பதையும் யோசித்துப் பாருங்கள். *

‘அன்புக்குரிய பெர்சியாளுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்’

6, 7. (அ) இயேசு, பவுல் போன்ற கடவுளுடைய ஊழியர்களை மூப்பர்கள் பின்பற்றுவதற்கு ஒரு வழி என்ன? (ஆ) சகோதர சகோதரிகளின் பெயர்களை நாம் நினைவில் வைக்கும்போது, அவர்களுடைய சந்தோஷம் ஏன் அதிகரிக்கிறது?

6 மூப்பர்கள் தங்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டியபோது தாங்கள் அதிக சந்தோஷம் அடைந்ததாக அநேக சகோதர சகோதரிகள் சொல்கிறார்கள். மூப்பர்கள் தனிப்பட்ட அக்கறை காட்டுவதற்கு ஒரு வழி தாவீது, எலிகூ, இயேசு ஆகியவர்களின் உதாரணங்களைப் பின்பற்றுவதாகும். (2 சாமுவேல் 9:6-ஐயும் யோபு 33:1-ஐயும் லூக்கா 19:5-ஐயும் வாசியுங்கள்.) கடவுளுடைய ஊழியர்களான இவர்கள் மற்றவர்களைப் பெயர் சொல்லி அழைத்ததன் மூலம் உண்மையான அக்கறையை வெளிக்காட்டினார்கள். சக விசுவாசிகளின் பெயர்களை நினைவில் வைப்பதும், பயன்படுத்துவதும் எவ்வளவு முக்கியம் என்பதை பவுலும்கூட அறிந்திருந்தார். தான் எழுதிய ஒரு கடிதத்தின் முடிவில், 25-க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்தார். பெர்சியாள் என்ற சகோதரியையும் குறிப்பிட்டு, “அன்புக்குரிய பெர்சியாளுக்கும் வாழ்த்துத் தெரிவியுங்கள்” என்று எழுதினார்.—ரோ. 16:3-15.

7 பெயர்களை நினைவில் வைப்பது சில மூப்பர்களுக்குக் கடினமாக இருக்கிறது. என்றாலும், அதற்காக அவர்கள் உண்மையான முயற்சி எடுத்து பெயர் சொல்லி அழைக்கும்போது, ‘நீங்கள் எனக்கு முக்கியமானவர்கள்’ என்று சக விசுவாசிகளிடம் சொல்லாமல் சொல்கிறார்கள்; இவ்வாறு, தங்கள் அக்கறையை வெளிக்காட்டுகிறார்கள். (யாத். 33:17) முக்கியமாக, மூப்பர்கள் காவற்கோபுர படிப்பின்போதும், மற்ற கூட்டங்களின்போதும், சகோதர சகோதரிகளைப் பெயர் சொல்லி அழைக்கும்போது அவர்களுடைய சந்தோஷம் அதிகரிக்கிறது.—யோவான் 10:3-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.

‘நம் எஜமானருக்காகக் கஷ்டப்பட்டுப் பல வேலைகள் செய்தவள்’

8. எந்த முக்கியமான விஷயத்தில் யெகோவாவையும் இயேசுவையும் பவுல் பின்பற்றினார்?

8 பவுல் மற்றவர்களை மனதார பாராட்டுவதன் மூலம் அவர்கள்மீது அக்கறை காட்டினார். சக விசுவாசிகளின் சந்தோஷத்தை அதிகரிப்பதற்கு இது மற்றொரு வழியாகும். கொரிந்தியருக்கு எழுதிய அதே கடிதத்தில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “உங்களைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்.” (2 கொ. 7:4) இந்தப் பாராட்டு கொரிந்து சகோதரர்களின் இதயத்திற்கு நிச்சயம் இதமளித்திருக்கும். பவுல் மற்ற சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு எழுதியபோதும், அவர்களுடைய நற்செயல்களுக்காகப் பாராட்டுத் தெரிவித்தார். (ரோ. 1:8; பிலி. 1:3-5; 1 தெ. 1:8) ரோமிலிருந்த சபைக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘நம் எஜமானருக்காகக் கஷ்டப்பட்டுப் பல வேலைகள் செய்தவள்’ என்று பெர்சியாளைப் பாராட்டினார். (ரோ. 16:12) விசுவாசமிக்க அந்தச் சகோதரிக்கு இந்தப் பாராட்டு எவ்வளவு மகிழ்ச்சி அளித்திருக்கும்! ஆம், மற்றவர்களைப் பாராட்டும் விஷயத்தில் யெகோவாவையும் இயேசுவையும் பவுல் பின்பற்றினார்.மாற்கு 1:9-11-ஐயும் யோவான் 1:47-ஐயும் வாசியுங்கள்; வெளி. 2:2, 13, 19.

9. பாராட்டைப் பெறும்போது சபையார் ஏன் அதிக சந்தோஷம் அடைகிறார்கள்?

9 மூப்பர்கள் இன்று சகோதர சகோதரிகளை வாயாரப் பாராட்டுவது மிகமிக முக்கியம் என்பதை அறிந்திருக்கிறார்கள். (நீதி. 3:27; 15:23) ஒரு மூப்பர் அப்படிச் செய்யும்போது, ‘நீங்கள் செய்ததை நான் கவனித்தேன்; உங்கள்மேல் அக்கறையாய் இருக்கிறேன்’ என்று அவர் சொல்வதுபோல் சகோதர சகோதரிகள் உணருவார்கள். மூப்பர்களின் ஊக்கமூட்டும் வார்த்தைகள் அவர்களுக்கு மிகவும் அவசியம். சுமார் 55 வயது சகோதரி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “வேலை செய்யுமிடத்தில் யாருமே என்னைப் பாராட்ட மாட்டார்கள். என்னைக் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். போட்டி பொறாமையோடுதான் நடந்துகொள்வார்கள். அதனால், சபையில் நான் செய்த ஒரு காரியத்திற்காக ஒரு மூப்பர் என்னைப் பாராட்டும்போது, மனமெல்லாம் குளிர்ந்துபோகிறது, புதுபலம் கிடைத்ததுபோல் இருக்கிறது. என் பரலோகத் தகப்பன் என்னை நேசிக்கிறார் என்ற உணர்வைத் தருகிறது.” இரண்டு பிள்ளைகளைத் தன்னந்தனியாக வளர்க்கும் ஒரு சகோதரர் அவ்விதமாகவே உணருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு, ஒரு மூப்பர் அவரை மனதாரப் பாராட்டினார். அப்போது, அந்தச் சகோதரருக்கு எப்படி இருந்தது? “அந்த மூப்பருடைய வார்த்தைகள் எனக்குப் புதுத்தெம்பு அளித்தன!” என்கிறார் அவர். உண்மையில், ஒரு மூப்பர் சகோதர சகோதரிகளை மனப்பூர்வமாகப் பாராட்டும்போது அவர்கள் அதிக உற்சாகமும் அதிக சந்தோஷமும் அடைகிறார்கள். இதன் காரணமாக, ‘சோர்ந்துபோகாமல்’ கடவுளுக்குச் சேவை செய்ய அதிக சக்தி பெறுகிறார்கள்.—ஏசா. 40:31.

‘கடவுளுடைய சபையாகிய மந்தையை மேய்த்து’ வழிநடத்துங்கள்

10, 11. (அ) நெகேமியாவின் உதாரணத்தை மூப்பர்கள் எப்படிப் பின்பற்றலாம்? (ஆ) மேய்ப்புச் சந்திப்புகளின்போது ஆன்மீக அன்பளிப்பைக் கொடுக்க மூப்பர்களுக்கு எது உதவும்?

10 சகோதரர்களிடம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டவும், அவர்களுடைய சந்தோஷத்தை அதிகரிக்கவும் மூப்பர்கள் பின்பற்ற வேண்டிய மற்றொரு முக்கியமான வழி என்ன? உற்சாகம் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக உதவ முன்வருவதுதான். (அப்போஸ்தலர் 20:28-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்யும்போது, மூப்பர்கள் கடவுளுடைய பூர்வகால ஊழியர்களைப் பின்பற்றுகிறார்கள். உதாரணத்திற்கு, நெகேமியா தன் யூத சகோதரர்கள் ஆன்மீக ரீதியில் பலவீனமடைந்தபோது என்ன செய்தாரெனக் கவனியுங்கள். உடனடியாக எழும்பிப் போய் அவர்களை உற்சாகப்படுத்தினார் என்று பைபிள் சொல்கிறது. (நெ. 4:14) இன்றும் மூப்பர்கள் அதையே செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் ‘எழும்பி,’ அதாவது தாங்களாகவே முன்வந்து, சகோதரர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார்கள். சூழ்நிலை அனுமதிக்கும்போது, சகோதர சகோதரிகளின் வீடுகளுக்குச் சென்றுகூட அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அத்தகைய மேய்ப்புச் சந்திப்புகளின்போது, ‘ஆன்மீக அன்பளிப்பைக் கொடுக்க’ விரும்புகிறார்கள். (ரோ. 1:11) அப்படிச் செய்ய மூப்பர்களுக்கு எது உதவும்?

11 மேய்ப்புச் சந்திப்பு செய்வதற்குமுன், அந்தச் சகோதரரைப் பற்றிய சில விஷயங்களைக் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும்: அந்தச் சகோதரருக்கு என்ன பிரச்சினைகள் இருக்கின்றன? எந்த விஷயத்தைச் சொன்னால் அவர் உற்சாகம் பெறுவார்? எந்த வசனம் அல்லது எந்த பைபிள் கதாபாத்திரம் அவருடைய சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கும்? மூப்பர்கள் இவ்வாறு முன்கூட்டியே யோசித்தால், பிரயோஜனமான விதத்தில் பேச முடியும், தேவையில்லாத விஷயங்களைத் தவிர்க்க முடியும். மேய்ப்புச் சந்திப்புகளின்போது, மனந்திறந்து பேச சகோதர சகோதரிகளை மூப்பர்கள் அனுமதிக்க வேண்டும்; அப்படி அவர்கள் பேசும்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். (யாக். 1:19) ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “நான் பேசுவதை ஒரு மூப்பர் அக்கறையோடு கேட்கும்போது, ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது.”—லூக். 8:18.

முன்கூட்டியே தயாரிப்பது மேய்ப்புச் சந்திப்புகளின்போது ‘ஆன்மீக அன்பளிப்பைக் கொடுக்க’ மூப்பர்களுக்கு உதவும்

12. சபையில் யாருக்கெல்லாம் மேய்ப்புச் சந்திப்பு தேவைப்படுகிறது, ஏன்?

12 யாருக்கெல்லாம் மேய்ப்புச் சந்திப்பு தேவைப்படுகிறது? “மந்தை முழுவதற்கும் கவனம் செலுத்துங்கள்” என்று பவுல் சக மூப்பர்களுக்கு அறிவுரை கூறினார். அப்படியானால், முழு சபைக்குமே, ஆம் உண்மையுடன் சேவை செய்கிற சபை அங்கத்தினர் எல்லோருக்குமே, பயனியர்களாக இருந்தாலும் சரி, பிரஸ்தாபிகளாக இருந்தாலும் சரி, எல்லோருக்குமே, தேவைப்படுகிறது. ஏன்? ஏனென்றால், இந்தப் பொல்லாத உலகிலிருந்து வரும் பிரச்சினைகள் விசுவாசத்தில் பலமாயிருப்பவர்களையும் சில சமயம் திணறடித்துவிடுகின்றன. அதனால் அவர்களுக்கும் நண்பர்களிடமிருந்து உதவி தேவைப்படுகிறது. தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் அதற்கு ஓர் உதாரணம்; என்ன சம்பவமென்று இப்போது பார்க்கலாம்.

‘அபிசாய் . . . உதவிக்கு வந்தான்’

13. (அ) எப்படிப்பட்ட சமயத்தில் தாவீதைத் தாக்க இஸ்பிபெனோப் முயற்சி செய்தான்? (ஆ) தாவீதின் உயிரை அபிசாயினால் எப்படிக் காப்பாற்ற முடிந்தது?

13 ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட சிறிது காலத்திற்குள்ளேயே இளம் தாவீது, மாமிச மலையாக நின்ற கோலியாத் என்ற ராட்சதனை எதிர்த்துப் போரிட்டார். தைரியமிக்க தாவீது அந்த ராட்சதனைக் கொன்றுபோட்டார். (1 சா. 17:4, 48-51; 1 நா. 20:5, 8) பல வருடங்கள் கழித்து, பெலிஸ்தருக்கு எதிராக நடந்த மற்றொரு போரில், தாவீது மீண்டும் ஒரு ராட்சதனை, இஸ்பிபெனோப் என்ற ராட்சதனை, எதிர்த்துப் போரிட்டார். (2 சா. 21:16;) ஆனால், இந்த முறை அந்த ராட்சதனின் கையில் தாவீது உயிரிழந்திருப்பார். ஏன்? ஏனென்றால், அவர் தைரியத்தை இழந்திருக்காவிட்டாலும் நொடிப்பொழுது உடல் பலத்தை இழந்திருந்தார். ‘தாவீது விடாய்த்துப்போனார்,’ அதாவது களைத்துப்போனார், என்று பைபிள் பதிவு சொல்கிறது. தாவீது களைத்துப்போனதைக் கவனித்த உடனேயே “தாவீதை வெட்ட வேண்டும்” என்று எண்ணம் இஸ்பிபெனோபுக்கு உதித்தது. ஆனால், அந்த ராட்சதன் தாவீதைக் கொல்லவிருந்த விநாடியில், “செருயாவின் குமாரனாகிய அபிசாய் [தாவீதுக்கு] உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான்.” (2 சா. 21:15-17) தாவீது மயிரிழையில் உயிர் தப்பினார்! தாவீதைவிட்டு தன் கண்களை விலக்காததால்தான் ஆபத்தான நொடியில் அவருடைய உயிரைக் காப்பாற்ற அபிசாயினால் முடிந்தது! அதற்காக, தாவீது எந்தளவு அவருக்கு நன்றியுள்ளவராக இருந்திருப்பார்! இந்தச் சம்பவத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

14. (அ) மலை போன்ற பிரச்சினைகளை நம்மால் எப்படி வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது? (ஆ) இழந்துபோன சந்தோஷத்தையும் பலத்தையும் திரும்பப் பெற மூப்பர்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவலாம்? உதாரணம் கொடுங்கள்.

14 சாத்தானும் அவனுடைய ஆட்களும் போடுகிற தடைக்கற்களையெல்லாம் தாண்டி, உலகம் முழுவதும் நாம் ஊழியம் செய்துவருகிறோம். நம்மில் சிலர் மலை போன்ற பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோது, யெகோவாமீது முழுமையாகச் சார்ந்திருந்து, அவற்றை வெற்றிகரமாக மேற்கொண்டோம். ஆனாலும், இந்த உலகத்திடமிருந்து வருகிற பிரச்சினைகளோடு நாம் சதா மல்லுக்கட்டுவதால் சிலசமயம் களைத்துப்போகிறோம், சோர்ந்துபோகிறோம். அத்தகைய பலவீனமான நிலையில், சாதாரணமாகச் சமாளிக்க முடிந்த பிரச்சினைகளைக்கூட சமாளிக்க முடியாமல் உள்ளம் உடைந்துபோகிறோம். இதுபோன்ற சமயங்களில் மூப்பர்கள் கொடுக்கும் உதவி, இழந்துபோன சந்தோஷத்தையும் பலத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவும்; அநேகருடைய அனுபவமும் அதுதான். சுமார் 65 வயதுள்ள பயனியர் சகோதரி ஒருவர் சொல்கிறார்: “கொஞ்ச நாட்களுக்கு முன்பு, என் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, ஊழியத்திற்குப் போய்வரும்போது ரொம்பவே களைப்பாக இருந்தது. நான் மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த ஒரு மூப்பர் என்னிடம் வந்து பேசினார். பைபிளிலிருந்து நிறைய விஷயங்களை எடுத்துச்சொன்னார், மனதிற்கு உற்சாகமாய் இருந்தது. அவர் கொடுத்த ஆலோசனைகளைப் பின்பற்றினேன், பயனடைந்தேன். அந்த மூப்பர் நான் பலவீனமாக இருந்ததைக் கவனித்து உதவிசெய்தார், எவ்வளவு அன்பு அவருக்கு!” ஆம், ‘தங்கள் கண்களை நம்மைவிட்டு விலக்காதிருக்கும்’ மூப்பர்கள், அபிசாயைப் போல ‘உதவிக்கு வர’ தயாராய் இருக்கிறார்கள் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது!

“உங்கள்மீது நான் வைத்திருக்கும் . . . அன்பை நீங்கள் அறிய வேண்டும்”

15, 16. (அ) சகோதரர்கள் பவுலை ஏன் நெஞ்சார நேசித்தார்கள்? (ஆ) அன்பான மூப்பர்களை நாம் ஏன் நேசிக்கிறோம்?

15 ஒரு மேய்ப்பராக இருப்பது சாதாரண வேலை அல்ல, அது கடினமான வேலை. சில சமயம் மூப்பர்கள், தங்கள் சகோதரர்களை நினைத்து இரவு தூக்கத்தையே துறக்கிறார்கள்; நள்ளிரவில் எழுந்து சகோதரர்களுக்காக ஜெபம் செய்கிறார்கள் அல்லது அவர்களுக்கு உதவிசெய்ய ஓடுகிறார்கள். (2 கொ. 11:27, 28) ஆனாலும், பவுலைப் போலவே தங்களுடைய பொறுப்பை முழுமையாகவும் சந்தோஷமாகவும் நிறைவேற்றுகிறார்கள். கொரிந்தியர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “என்னிடம் இருப்பவற்றை உங்களுக்காகச் சந்தோஷமாய்ச் செலவு செய்வேன், என்னையே முழுவதுமாக உங்களுக்கு அர்ப்பணிப்பேன்.” (2 கொ. 12:15) ஆம், சகோதரர்கள்மீது பவுலுக்கு அளவில்லா அன்பு இருந்ததால்தான், அவர்களைப் பலப்படுத்த தம்மையே அர்ப்பணித்தார். (2 கொரிந்தியர் 2:4-ஐ வாசியுங்கள்; பிலி. 2:17; 1 தெ. 2:8) பவுலை சகோதரர்கள் நெஞ்சார நேசித்ததில் ஆச்சரியமே இல்லை!—அப். 20:31-38.

16 கடவுளுடைய மக்களாகிய நாமும் அன்பான மூப்பர்களை நேசிக்கிறோம். அவர்களை நமக்குக் கொடுத்ததற்காக, யெகோவாவுக்கு நம் ஜெபங்களில் நன்றி தெரிவிக்கிறோம். மூப்பர்கள் நம்மேல் தனிப்பட்ட அக்கறை காண்பித்து, நம் சந்தோஷத்தை அதிகரிக்கிறார்கள். அவர்கள் செய்யும் மேய்ப்புச் சந்திப்புகளால் நாம் உற்சாகம் அடைகிறோம். இந்த உலகிலிருந்து வரும் பிரச்சினைகளால் நாம் திணறிக்கொண்டிருக்கும் சமயங்களில் ‘நம் உதவிக்கு வர’ தயாராய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! ஆம், மந்தையின்மேல் கவனமாக உள்ள மூப்பர்கள் ‘நம் சந்தோஷத்திற்குச் சக வேலையாட்கள்’ என்பதில் சந்தேகமே இல்லை!

^ “ஒரு மூப்பரிடம் எந்தக் குணம் முக்கியமாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள்?” என்று அதே சகோதர சகோதரிகளிடம் கேட்கப்பட்டபோது, “நட்புடன் பழகுவது” என்று பெரும்பாலோர் சொன்னார்கள். இனி வரும் இதழில் இந்த முக்கியமான குணத்தைப் பற்றிச் சிந்திப்போம்.