கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாமல் சேவை செய்யுங்கள்
‘பின்னானவற்றை மறந்து, முன்னானவற்றை எட்டிப்பிடிக்க நாடுகிறேன்.’—பிலி. 3:13.
1-3. (அ) வருத்தப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது, கடந்த கால தவறுகளைக் குறித்து சிலர் எவ்வாறு உணருகிறார்கள்? (ஆ) பவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
‘எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!’—எழுதப்பட்ட... சொல்லப்பட்ட... சோகமான வார்த்தைகளிலேயே இவைதான் மிகமிக சோகமானவை” என்று எழுதினார் கவிஞர் ஜே. ஜி. வைட்டியர். ஒரு காரியத்தை வேறு விதமாகச் செய்திருக்கலாமே என்று நாம் நினைத்து வருத்தப்படுவதைப் பற்றித்தான் அவர் குறிப்பிட்டார். “வருத்தப்படுவது” என்பது ஒரு காரியத்தைச் செய்ததைக் குறித்தோ செய்யாமல் போனதைக் குறித்தோ ஏற்படுகிற மன வேதனையை, மனத்துயரத்தை அர்த்தப்படுத்துகிறது; “நினைத்து நினைத்து அழுவதையும்” அது அர்த்தப்படுத்தலாம். “ஏன்தான் அப்படிச் செய்தோமோ? அதற்குப் பதிலாக இப்படிச் செய்திருக்கலாமே” என்று நினைத்து நாம் எல்லோருமே எத்தனையோ முறை வருத்தப்பட்டிருக்கலாம். கடந்த காலத்தில் செய்த அல்லது செய்யாமல் போன ஏதோவொன்றை நினைத்து நீங்களும் அவ்வாறு வருத்தப்பட்டிருக்கிறீர்களா?
2 சிலர் தங்கள் வாழ்க்கையில் பெரிய தவறுகளை, ஏன் பயங்கரமான பாவங்களைக்கூட, செய்திருக்கிறார்கள். சிலர் அந்தளவுக்கு மோசமான எதையும் செய்திருக்க மாட்டார்கள்; ஆனால், வாழ்க்கையில் தாங்கள் எடுத்த தீர்மானங்கள் சிறந்தவைதானா என்று யோசிக்கிறார்கள். சிலர் சதா தங்கள் கடந்த காலத்தையே நினைத்து, ‘இப்படிச் செய்யாமல் இருந்திருக்கலாமே!’ என்று புலம்புகிறார்கள். (சங். 51:3) ஆனால் சிலர், கடந்த காலத்தை மறந்து நிகழ்கால வாழ்க்கைக்குக் கவனம் செலுத்துகிறார்கள். இவர்களில் நீங்கள் எந்த ரகம்? செய்த தவறுகளையே நினைத்து நினைத்து வருத்தப்படாமல் கடவுளுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய விரும்புகிறீர்களா—ஒருவேளை இன்று முதல்? அவ்வாறு செய்த நபருடைய உதாரணம் பைபிளில் இருக்கிறதா? ஆம், இருக்கிறது; அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணம்தான் அது.
3 பவுல் தன் வாழ்க்கையில் படுமோசமான தவறுகளையும் செய்தார், ஞானமான தீர்மானங்களையும் எடுத்தார். கடந்த கால தவறுகளை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டார், ஆனாலும், கடவுளுடைய சேவையைச் சிறப்பாகச் செய்வதில் முழு கவனம் செலுத்தினார். வருத்தப்படாமல் சேவை செய்வது சம்பந்தமாக இவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது சிந்திப்போம்.
பவுலின் கடந்த காலம்
4. அப்போஸ்தலன் பவுல் இளம் வயதில் வருந்தத்தக்க என்ன தவறுகளைச் செய்தார்?
4 பரிசேயனாக இருந்த சவுல் தன் இளம் வயதில், வருந்தத்தக்க தவறுகளைச் செய்தார். உதாரணத்திற்கு, கிறிஸ்துவின் சீடர்களைப் பயங்கரமாகத் துன்புறுத்தினார். பவுல் என்று பிற்பாடு அழைக்கப்பட்ட அவர், ஸ்தேவான் கொலை செய்யப்பட்ட பிறகு உடனடியாக ‘சபையை வெறித்தனமாகத் துன்புறுத்த ஆரம்பித்தார். வீடுவீடாகப் புகுந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய்ச் சிறையில் அடைத்தார்’ என்று பைபிள் பதிவு சொல்கிறது. (அப். 8:3) ‘வெறித்தனமாகத் துன்புறுத்துவது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை “வலிமையானது; [சவுல்] எந்தளவு மூர்க்கத்தனத்தோடும் கோபாவேசத்தோடும் துன்புறுத்தினார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது” என ஆல்பர்ட் பார்ன்ஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டார். “கிறிஸ்தவ சபைமீது சவுல் ஒரு கொடிய மிருகத்தைப் போல் சீறிப் பாய்ந்தார்” என்றும் அவர் குறிப்பிட்டார். பக்திவைராக்கியமிக்க யூதனாக இருந்த சவுல் கிறிஸ்தவ சபையை அழித்துப்போடுவதைத் தன்னுடைய தெய்வீகக் கடமையாக நினைத்தார். அதனால், அந்தச் சபையைச் சேர்ந்த “ஆண்களையும் பெண்களையும்” ஈவிரக்கமின்றி ‘மிரட்டிக்கொண்டும் கொன்றுபோடத் துடித்துக்கொண்டும் இருந்தார்.’—அப். 9:1, 2; 22:4. *
5. இயேசுவின் சீடர்களைத் துன்புறுத்திக்கொண்டிருந்த சவுல் எப்படி அவருடைய சீடரானார் என்று விளக்குங்கள்.
5 தமஸ்குவுக்குச் சென்று, இயேசுவின் சீடர்களுடைய வீடுகளுக்குள் புகுந்து அவர்களை வெளியே இழுத்து, எருசலேமுக்குக் கொண்டுபோய் நியாயசங்கத்திற்குமுன் நிறுத்துவது சவுலின் நோக்கமாய் இருந்தது. ஆனால், அந்த நோக்கம் நிறைவேறவில்லை; காரணம், கிறிஸ்தவ சபையின் தலைவர் அவரைத் தடுத்து நிறுத்தினார். (எபே. 5:23) ஆம், தமஸ்குவுக்குப் போகும் வழியில் இயேசு அவருக்குத் தரிசனமானார்; வானத்திலிருந்து தோன்றிய அற்புத ஒளியால் பார்வை இழந்தார். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லப்படும்வரை தமஸ்குவில் காத்திருக்கும்படி இயேசுவிடமிருந்து கட்டளையைப் பெற்றார். பின்பு என்ன நடந்ததென்று நமக்குத் தெரியும்.—அப். 9:3-22.
6, 7. தான் மாபெரும் தவறுகள் செய்திருந்ததை பவுல் நன்றாகவே அறிந்திருந்தார் என எது காட்டுகிறது?
6 தான் செய்வது தவறு என்பதை அறிந்ததும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதை பவுல் உடனடியாக நிறுத்தினார். கிறிஸ்தவத்தின் பரம எதிரியாக இருந்தவர், அதன் தீவிர ஆதரவாளரானார். ஆனாலும், தன்னைப் பற்றி பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “நான் யூத மதத்திலிருந்தபோது எப்படி நடந்துகொண்டேன் என்று நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள்; கடவுளுடைய சபையைப் பயங்கரமாகத் துன்புறுத்திக்கொண்டும் பாழாக்கிக்கொண்டும் இருந்தேன்.” (கலா. 1:13) அதன்பின்பு, கொரிந்தியருக்கும் பிலிப்பியருக்கும் தீமோத்தேயுவுக்கும் எழுதிய கடிதத்தில் தன் கடந்த கால தவறுகளைப் பற்றி மீண்டும் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 15:9-ஐ வாசியுங்கள்; பிலி. 3:6; 1 தீ. 1:13) தன்னைப் பற்றிப் பெருமையடித்துக்கொள்வதற்காக அதை எழுதவில்லை; அதே சமயத்தில், அப்படி எதுவும் நடக்காததுபோல் காட்டிக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை. தான் மாபெரும் தவறுகள் செய்திருந்ததை அவர் நன்றாகவே அறிந்திருந்தார்.—அப். 26:9-11.
7 கிறிஸ்தவர்களை சவுல் “மூர்க்கவெறியோடு துன்புறுத்தியது” பற்றி ஃபிரெட்ரிக் டபிள்யூ. ஃபரார் என்ற பைபிள் அறிஞர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். கிறிஸ்தவர்களைப் பயங்கரமாகத் துன்புறுத்தியதை நினைத்து பவுல் எந்தளவு வருத்தப்பட்டிருப்பார், மற்றவர்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் எந்தளவு ஆளாகியிருப்பார் என்பதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். பவுல் பல்வேறு சபைகளுக்குச் சென்றபோது, அவரை முதன்முறையாகச் சந்தித்த சகோதரர்கள் அவரிடம் வந்து, ‘ஓ, நீங்கள்தான் பவுலா? நீங்கள்தான் எங்களைத் துன்புறுத்தியவரா?’ என்றுகூட ஒருவேளை கேட்டிருப்பார்கள்.—அப். 9:21.
8. யெகோவா மற்றும் இயேசு தன்மீது காட்டிய அளவற்ற கருணையையும் அன்பையும் பற்றி பவுல் எப்படி உணர்ந்தார், பவுலுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 கடவுள் அளவற்ற கருணை காட்டியதால்தான் தன்னால் அப்போஸ்தலனாகச் சேவை செய்ய முடிகிறதென்பதை பவுல் உணர்ந்திருந்தார். தன்னுடைய 14 கடிதங்களில், கடவுளுடைய அந்தக் குணத்தைப் பற்றி ஏறக்குறைய 90 முறை அவர் குறிப்பிட்டிருந்தார்—வேறெந்த பைபிள் எழுத்தாளரும் இத்தனை முறை அதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. (1 கொரிந்தியர் -ஐ வாசியுங்கள்.) கடவுள் தன்னை இரக்கத்தோடு நடத்திய விதத்திற்காக பவுல் அதிக நன்றியுள்ளவராக இருந்தார்; கடவுள் தன்மேல் காட்டிய அளவற்ற கருணை வீண் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதனால், மற்றெல்லா அப்போஸ்தலர்களையும்விட ‘அதிகமாகவே உழைத்தார்.’ நம் பாவங்களை அறிக்கையிட்டு, முழுமையாக மனந்திரும்பினால், இயேசுவுடைய மீட்புப் பலியின் அடிப்படையில் பயங்கரமான பாவங்களைக்கூட யெகோவா மன்னித்துவிடுவார் என்பதற்கு பவுலின் உதாரணம் தெளிவான அத்தாட்சியாக இருக்கிறது. ஒருவேளை கிறிஸ்துவின் மீட்புப் பலியினால்கூட உங்கள் பாவங்களை நீக்க முடியாதென நினைத்தீர்களென்றால், பவுலுடைய உதாரணத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ( 15:101 தீமோத்தேயு 1:15, 16-ஐ வாசியுங்கள்.) பவுல் ஈவிரக்கமில்லாமல் கிறிஸ்துவைத் துன்புறுத்தியபோதிலும், “கடவுளுடைய மகன் . . . என்மீது அன்பு வைத்து எனக்காகத் தம்மையே தியாகம் செய்தார்” என்று எழுதினார். (கலா. 2:20; அப். 9:5) ஆம், கடந்த கால தவறுகளை நினைத்து நினைத்து வருத்தப்படுவதற்குப் பதிலாக, கடவுளுக்குச் சிறந்த விதத்தில் சேவை செய்ய வேண்டுமென்பதை பவுல் கற்றுக்கொண்டார். நீங்களும் அதைக் கற்றுக்கொண்டீர்களா?
கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாமல் கடவுளுக்குச் சேவை செய்ய பவுல் கற்றுக்கொண்டார்
எதையாவது நினைத்து வருத்தப்படுகிறீர்களா?
9, 10. (அ) நாம் ஏன் சிலசமயம் வருத்தப்படுகிறோம்? (ஆ) கடந்த கால தவறுகளை நினைத்து சதா கவலைப்படுவது ஏன் நல்லதல்ல?
9 எப்போதோ செய்த காரியங்களை நினைத்து இப்போது வருத்தப்படுகிறீர்களா? முக்கியமான காரியங்களுக்காக நேரத்தையும் சக்தியையும் செலவிடாததை எண்ணி வேதனைப்படுகிறீர்களா? மற்றவர்களுக்கு ஏதாவது தீங்கு செய்தீர்களா? அல்லது வேறு ஏதோவொன்றை நினைத்து ‘ஏன்தான் இப்படிச் செய்தோமோ’ என வருத்தப்படுகிறீர்களா? எதுவாக இருந்தாலும் சரி, அதைக் குறித்து இப்போது நீங்கள் என்ன செய்யலாம்?
10 பலர் கவலைப்படுகிறார்கள். சதா கவலைப்படுவது தன்னையே வாதிப்பதை, நொந்துகொள்வதை, துன்புறுத்திக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. அப்படிக் கவலைப்படுவதால் மிகுந்த தவிப்பும் தத்தளிப்புமே மிஞ்சும். கவலைப்படுவதால் எந்தப் பிரச்சினையாவது தீருமா? தீரவே தீராது! சற்று யோசித்துப் பாருங்கள்: சாய்ந்தாடும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி மணிக்கணக்காக ஆடிக்கொண்டே இருந்தாலும் உங்களால் அரை அங்குலமாவது முன்னே நகர முடியுமா? முடியாது, எவ்வளவு முயன்றாலும் அதே இடத்தில்தான் இருப்பீர்கள்! கவலைப்படுவதற்குப் பதிலாக, பிரச்சினையைத் தீர்க்க உங்கள் பங்கில் முயற்சி செய்தீர்களென்றால், நல்ல பலன்களைக் காண்பீர்கள். நீங்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டு, சமாதானமாகுங்கள். புண்படுத்தும் விதத்தில் ஏன் நடந்தீர்கள் என்பதை யோசித்துப் பார்த்து, எதிர்காலத்தில் அதே தவறைச் செய்யாதபடி கவனமாயிருங்கள். இதெல்லாம் செய்தாலும், சிலசமயம் உங்கள் தவறினால் ஏற்பட்ட விளைவுகளை நீங்கள் காலாகாலத்திற்கு அனுபவிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், செய்த தவறை நினைத்துக் கவலைப்படுவது உங்களுக்கு எவ்விதத்திலும் நன்மை அளிக்காது. மாறாக, கடவுளுடைய சேவையை முழுமையாய்ச் செய்யாதபடி உங்களை அப்படியே முடக்கிப்போட்டுவிடும்.
11. (அ) யெகோவாவின் இரக்கத்தையும் அன்பையும் நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? (ஆ) குற்றவுணர்விலிருந்து விடுபட்டு மனநிம்மதியைப் பெற நாம் எந்த பைபிள் நியமத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்?
11 பயங்கரமான தவறுகளைச் செய்ததால் கடவுளுடைய தயவைப் பெற முடியாதென நினைத்து சிலர் கவலையில் மூழ்கிப்போயிருக்கிறார்கள். அந்தளவுக்குத் தாங்கள் மோசமான தவறுகளைச் செய்திருப்பதாக அல்லது ஏராளமான தவறுகளைச் செய்திருப்பதாக நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், கடந்த காலத்தில் எப்படிப்பட்ட தவறு செய்திருந்தாலும், அவர்கள் மனந்திரும்பலாம், மாற்றம் செய்யலாம், யெகோவாவிடம் மன்னிப்பு கேட்கலாம். (அப். 3:19) அப்போது, அவர் இரக்கத்தையும் அன்பையும் அநேகர்மீது காட்டியதுபோல அவர்கள்மீதும் காட்டலாம். மனத்தாழ்மையையும் நேர்மையையும் உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலையும் காட்டுகிறவர்களை யெகோவா அன்போடு மன்னிப்பார். “தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் [அதாவது, வருத்தப்படுகிறேன்]” என்று சொன்ன யோபுவைக் கடவுள் அப்படித்தான் மன்னித்தார். (யோபு 42:6) குற்றவுணர்விலிருந்து விடுபட்டு மனநிம்மதியைப் பெற வேண்டுமானால் நாம் எல்லோருமே இந்த பைபிள் நியமத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதி. 28:13; யாக். 5:14-16) எனவே, நம் பாவங்களை கடவுளிடம் அறிக்கை செய்ய வேண்டும், அவருடைய மன்னிப்புக்காக மன்றாட வேண்டும், செய்த தவறைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். (2 கொ. 7:10, 11) இதையெல்லாம் செய்தோமென்றால், ‘மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிற’ கடவுள் நம்மேல் இரக்கத்தைப் பொழிந்தருளுவார்.—ஏசா. 55:7.
12. (அ) குற்றவுணர்வு வாட்டும்போது தாவீதின் உதாரணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? (ஆ) எந்த அர்த்தத்தில் யெகோவா வருத்தப்பட்டார், அதைத் தெரிந்துகொள்வது நமக்கு எப்படி உதவுகிறது? (பெட்டியைப் பாருங்கள்.)
12 ஜெபத்திற்கு வல்லமை இருக்கிறது; கடவுளுடைய உதவியைப் பெற அது வழிசெய்கிறது. தாவீது தன் உள்ளப்பூர்வமான உணர்ச்சிகளைக் கொட்டி விசுவாசத்தோடு செய்த ஜெபம் அவர் எழுதிய அழகான சங்கீதத்தில் காணப்படுகிறது. (சங்கீதம் 32:1-5-ஐ வாசியுங்கள்.) குறுகுறுக்கும் மனசாட்சியை அடக்க முயன்றபோது, தாவீது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தன் பாவத்தை கடவுளிடம் அறிக்கை செய்யாததால் உடலிலும் உள்ளத்திலும் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தார், சந்தோஷத்தைத் தொலைத்தார். தாவீதுக்கு எப்போது மன்னிப்பும் மனநிம்மதியும் கிடைத்தது? தன் பாவத்தைக் கடவுளிடம் அறிக்கை செய்த பிறகே கிடைத்தது. தாவீதின் ஜெபங்களை யெகோவா கேட்டார், அவருக்கு மன வலிமை அளித்தார், சரியானவற்றைச் செய்ய துணைபுரிந்தார். தாவீதைப் போலவே உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்தீர்களென்றால், உங்கள் மன்றாட்டுக்கு யெகோவா செவிசாய்ப்பார் என்பதில் நிச்சயமாய் இருக்கலாம். கடந்த கால தவறுகளை நினைத்து வேதனைப்படுகிறீர்களென்றால், உங்களால் முடிந்தளவு அந்தத் தவறுகளைச் சரிசெய்யப் பாருங்கள். அதோடு, யெகோவா உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்களை மன்னித்துவிட்டார் என்பதை உறுதியாக நம்புங்கள்.—சங். 86:5.
எதிர்காலத்தை நம்பிக்கையோடு பாருங்கள்
13, 14. (அ) நம் கவனமெல்லாம் எதன்மீது இருக்க வேண்டும்? (ஆ) நம் வாழ்க்கையைச் சீர்தூக்கிப் பார்க்க எந்தக் கேள்விகள் நம்மைத் தூண்டலாம்?
13 உண்மைதான், நம் கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம், ஆனால் சதா அதைப் பற்றி நினைத்துக் கவலைப்படக் கூடாது. நம் கவனமெல்லாம் நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும்தான் இருக்க வேண்டும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இப்போது எடுக்கும் தீர்மானங்களை நினைத்து பல வருடங்களுக்குப் பின் நான் வருத்தப்படுவேனா? வேறு விதமான தீர்மானங்களை எடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென நினைப்பேனா? எதிர்காலத்தில் எதைக் குறித்தும் வருத்தப்படாத விதத்தில் இப்போது கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்துவருகிறேனா?’
14 மிகுந்த உபத்திரவம் வெகு சீக்கிரத்தில் வரப்போவதால் பின்வரும் கேள்விகள் நம் மனதை வாட்டியெடுக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்: ‘கடவுளுடைய சேவையில் நான் இன்னும் அதிகத்தைச் செய்திருக்கலாமோ? வாய்ப்புக் கிடைத்தும் நான் ஏன் பயனியர் ஊழியம் செய்யவில்லை? ஓர் உதவி ஊழியராகத் தகுதிபெற நான் ஏன் முயற்சி செய்யவில்லை? புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள உண்மையிலேயே நான் முயற்சி செய்தேனா? புதிய உலகத்தில் வாழ எனக்குத் தகுதி இருப்பதாக யெகோவா நினைப்பாரா?’ செய்யாத காரியங்களை நினைத்து வருத்தப்படுவதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளின் அடிப்படையில் நம்மையே சீர்தூக்கிப் பார்த்து யெகோவாவின் சேவையில் முடிந்தளவு மிகச் சிறந்ததைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், வருத்தப்படுவதே வாழ்க்கையாகிவிடும்.—2 தீ. 2:15.
கடவுளுக்குச் சேவை செய்ததை நினைத்து ஒருபோதும் வருத்தப்படாதீர்கள்
15, 16. (அ) யெகோவாவின் சேவைக்கு முதலிடம் தருவதற்காக அநேகர் என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்? (ஆ) யெகோவாவுக்காகச் செய்திருக்கும் தியாகங்களை நினைத்து நாம் ஏன் வருத்தப்படவே கூடாது?
15 யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்வதற்காக நீங்கள் தியாகங்கள் செய்திருக்கிறீர்களா? அதற்காக, நல்ல வேலையையோ லாபம் கொழிக்கும் தொழிலையோ நீங்கள் விட்டுவிட்டிருக்கலாம். அல்லது திருமணம் வேண்டாமென முடிவுசெய்திருக்கலாம், ஒருவேளை திருமணமாகியிருந்தால்—பெத்தேல் சேவை, சர்வதேச கட்டுமானப் பணி, வட்டார ஊழியம், மிஷனரி சேவை ஆகியவற்றில் ஈடுபடுவதற்காக—பிள்ளைகள் வேண்டாமெனத் தீர்மானித்திருக்கலாம். இப்போது வயதாகிவிட்ட காலத்தில் அந்தத் தீர்மானங்களை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டுமா? அந்தத் தியாகங்களைத் தேவையில்லாமல் செய்ததாக அல்லது தவறான காலகட்டத்தில் செய்ததாக நீங்கள் நினைக்க வேண்டுமா? வேண்டியதே இல்லை!
16 யெகோவாமீதுள்ள ஆழ்ந்த அன்பின் காரணமாகவும், மற்றவர்கள் அவருடைய ஊழியர்களாவதற்கு உதவ வேண்டுமென்ற உள்ளப்பூர்வ ஆசையின் காரணமாகவும்தான் அப்படிப்பட்ட தீர்மானங்களை நீங்கள் எடுத்தீர்கள். எனவே, வேறுவிதமான தீர்மானங்களை எடுத்திருந்தால் நல்லபடியாக வாழ்ந்திருக்கலாம் என நீங்கள் நினைக்கத் தேவையில்லை. சரியான தீர்மானங்களை எடுத்ததற்காக நீங்கள் உள்ளூர சந்தோஷப்படலாம். யெகோவாவுக்காக உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ததை நினைத்து அகமகிழலாம். நீங்கள் செய்த தியாகங்களையெல்லாம் யெகோவா மறக்கவே மாட்டார். வரவிருக்கிற புதிய உலகில்... உண்மையான வாழ்வில்... நீங்கள் கற்பனை செய்யாதளவுக்கு உங்கள்மேல் ஆசி மழை பொழிவார்!—சங். 145:16; 1 தீ. 6:19.
வருத்தப்படாமல் இனி சேவை செய்ய...
17, 18. (அ) பிற்பாடு வருத்தப்படாமல் சேவை செய்ய எந்த நியமம் பவுலுக்கு உதவியது? (ஆ) கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து உங்கள் தீர்மானம் என்ன?
17 வாழ்க்கையில் பிற்பாடு வருத்தப்படாமல் இருக்க உதவுகிற என்ன நியமத்தை பவுல் கற்றுக்கொண்டார்? ‘பின்னானவற்றை மறந்து, முன்னானவற்றை எட்டிப்பிடிக்க நாடுகிறேன்’ என பவுல் எழுதினார். (பிலிப்பியர் 3:13, 14-ஐ வாசியுங்கள்.) யூத மதத்தில் இருந்தபோது செய்த தவறுகளை நினைத்து நினைத்து அவர் வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை. மாறாக, முடிவில்லா வாழ்வெனும் பரிசை அடைவதற்காக விசுவாசத்தோடும் முழுமூச்சோடும் செயல்பட்டார்.
18 பவுலின் வார்த்தைகளில் பொதிந்துள்ள நியமத்தை நாம் எல்லோருமே கடைப்பிடிக்கலாம். சரிசெய்ய முடியாத கடந்த கால தவறுகளை நினைத்து நினைத்து மனம் குமைவதற்குப் பதிலாக, எதிர்கால ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள இப்போது என்ன செய்யலாம் என்பதற்கு நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். கடந்த கால தவறுகளை நம்மால் முழுமையாக மறக்க முடியாதுதான் என்றாலும், அவற்றைப் பற்றியே நினைத்து சதா நம்மை நொந்துகொள்ளத் தேவையில்லை. ஆம், கடந்த காலத்தை நினைத்து நம்மால் கவலைப்படாமல் இருக்க முடியும்! நிகழ்காலத்தில் கடவுளுக்கு மிகச் சிறப்பாகச் சேவை செய்ய முடியும்! எதிர்காலத்தில் மகத்தான வாழ்வை அனுபவிக்க முடியும்!
^ சவுல் பெண்களையும் துன்புறுத்தினார் என்று பைபிள் பலமுறை சொல்வதால், கிறிஸ்தவத்தைப் பரப்பியதில் முதல் நூற்றாண்டு பெண்கள் பெரும் பங்கு வகித்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றும் பெண்கள் நற்செய்தியை அறிவிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.—சங். 68:11, NW.