Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சவாலைச் சமாளித்தவர்கள்

நிஜக் கதைகள்

நிஜக் கதைகள்

பைபிள் தரும் கல்விக்கு, வாழ்க்கையையே மாற்றும் அபார சக்தி இருக்கிறது. ரிக்கார்டோ, ஆன்ட்ரேஸ் என்ற இரண்டு பேருடைய அனுபவமும் இதைத்தான் காட்டுகிறது. அவர்களே என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.

ரிக்கார்டோ: எனக்கு அப்போது 15 வயது. விவரம் தெரியாத அந்த வயதில் ஒரு ரவுடிக் கும்பலில் சேர்ந்தேன். என் புது ஃப்ரெண்ட்ஸ் மாதிரியே மாற ஆரம்பித்தேன். சொல்லப்போனால், பத்து வருஷங்கள் ஜெயிலில் இருப்பது என் லட்சியமாகிவிட்டது! ‘இதென்னடா பைத்தியக்காரத்தனம்’ என்று நினைக்கிறீர்களா? என்னுடைய ஊரில், ஜெயிலுக்குப் போனால்தான் மதிப்பு மரியாதை எல்லாம்!

போதைப்பொருள், செக்ஸ், அடிதடி... இப்படித்தான் என் ரவுடி வாழ்க்கை ஓடியது. ஒருநாள் ராத்திரி நாங்கள் துப்பாக்கியும் கையுமாக இன்னொரு கும்பலோடு சண்டை போட்டுக்கொண்டு இருந்தோம். என் கதை முடிந்தது என்று நினைத்தேன், ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டேன். அதற்குப் பிறகுதான், என்னுடைய வாழ்க்கையையும் லட்சியங்களையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். திருந்தி வாழ வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால், எப்படித் திருந்துவது... யார் உதவி செய்வார்கள்... என்றெல்லாம் யோசித்தேன்.

என்னுடைய சொந்தக்காரர்களில் முக்கால்வாசி பேருக்கு நிம்மதியே இல்லை, அந்தளவுக்குப் பிரச்சினைகள்! ஆனால், என் மாமா குடும்பத்தார் மட்டும் சந்தோஷமாக இருந்தார்கள். அவர்கள் ரொம்ப நல்லவர்கள், பைபிள் சொல்கிறபடி வாழ்ந்தார்கள். கடவுளுடைய பெயர் யெகோவா என்று அவர்கள்தான் எனக்கு ஒருசமயம் சொல்லியிருந்தார்கள். அந்தத் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு ஒருநாள், ‘யெகோவாவே, எனக்கு உதவி செய்யுங்க’ என்று கெஞ்சினேன். அடுத்த நாளே ஒரு யெகோவாவின் சாட்சி என் வீட்டுக் கதவைத் தட்டினார்! எனக்கு ஒரே ஆச்சரியம்! பைபிளிலுள்ள விஷயங்களை அவர் எனக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச நாளிலேயே, எனக்கு ஒரு பெரிய சவால் வந்தது. என்னுடைய பழைய ஃப்ரெண்ட்ஸ் அடிக்கடி போன் செய்து என்னைக் கூப்பிட்டார்கள். வர முடியாது என்று எப்படியோ கஷ்டப்பட்டுச் சொல்லிவிட்டேன். பைபிள் படிப்பதை விடவே கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். அதை நினைத்து இப்போதுகூட சந்தோஷப்படுகிறேன். பைபிள் படித்ததால்தான் எனக்கு அருமையான வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

ஒருநாள் நான் கடவுளிடம், ‘ஒரு ரவுடி கும்பல்-ல இருந்தப்போ, எனக்கு மரியாதை கிடைக்கணுங்கறதுக்காக பத்து வருஷம் ஜெயிலுக்கு போக ஆசப்பட்டேன். ஆனா இப்போ, என்னை மாதிரியே திருந்தி வாழ மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னு ஆசப்படுறேன். பத்து வருஷமாவது உங்களுக்கு முழுநேரமா ஊழியம் செய்ய நீங்கதான் உதவி செய்யணும்’ என்று வேண்டிக்கொண்டேன். கடவுளும் எனக்கு உதவி செய்தார். நான் முழுநேரமாக அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்து 17 வருஷங்கள் ஆகிவிட்டன! இன்னொரு விஷயம், நான் ஜெயிலுக்கே போகவில்லை.

என் பழைய ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் வருஷக்கணக்காக ஜெயிலில் இருக்கிறார்கள். சிலர் செத்தேபோய்விட்டார்கள். ஆனால், நான் இப்போது நல்லபடியாக வாழ்கிறேன். அதற்கு என் மாமா குடும்பத்துக்கு ரொம்ப நன்றி சொல்ல வேண்டும். பைபிள் சொல்கிறபடி வாழ்ந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அவர்கள் பயப்படாததால் அவர்கள்மேல் எனக்கு மரியாதை அதிகமானது; ரவுடிக் கும்பலில் இருந்தவர்கள்மேல்கூட எனக்கு அந்தளவு மரியாதை இருந்தது இல்லை. முக்கியமாக, கடவுளுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

ஆன்ட்ரேஸ்: நான் ஏழ்மையான ஒரு ஊரில் பிறந்து வளர்ந்தேன். அந்த ஊர் ஜனங்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார்கள், மற்றவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதும், கொலை செய்வதும், விபச்சாரம் பண்ணுவதுமாக இருந்தார்கள். என்னுடைய அப்பாவும் ஒரு குடிகாரர், போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார். அவரும் அம்மாவும் சண்டை போடாத நாளே இல்லை. இரண்டு பேருக்கும் வாய்த்தகராறும் நடக்கும், அடிதடியும் நடக்கும்.

நான் சின்ன வயதிலேயே குடிக்கவும், போதைப்பொருள் எடுத்துக்கொள்ளவும் ஆரம்பித்தேன். எப்போது பார்த்தாலும் தெருவில்தான் சுற்றிக்கொண்டு இருந்தேன். திருடுவதும் திருடியதை விற்பதுமாக இருந்தேன். நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு, போதைப்பொருளையும் மற்ற பொருள்களையும் வெளிநாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வந்து விற்பதற்கு என்னுடைய அப்பா கற்றுக்கொடுத்தார். ஒரு நல்ல அப்பாவாக இருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு அப்படிச் செய்தார்! நான் நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தேன், அதுவும் கொஞ்ச நாளில்! ஒரு தடவை, போலீஸ் என்னைத் தேடி வந்தார்கள். கொலை முயற்சி செய்ததற்காக என்னைக் கைது பண்ணினார்கள். எனக்கு ஐந்து வருஷ ஜெயில் தண்டனை கிடைத்தது.

ஒருநாள் காலையில், பைபிளைப் பற்றிப் பேசுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் வந்திருப்பதாக ஜெயிலில் அறிவிப்பு செய்யப்பட்டது. விருப்பம் இருக்கிறவர்கள் வந்து கேட்கலாம் என்று சொல்லப்பட்டதால், நானும் போக முடிவு செய்தேன். அவர்கள் சொன்ன விஷயங்கள் எனக்கு நியாயமாகப் பட்டன. அதனால், அவர்களிடம் பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கடவுள் என்னென்ன பழக்கங்களை வெறுக்கிறார் என்று அவர்கள் வெளிப்படையாகச் சொல்லிக்கொடுத்தார்கள்.

கடவுளுடைய உதவி இல்லாமல் நானாக மாற்றங்களைச் செய்ய முடியாது என்ற உண்மையைச் சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன். அதுவும், நான் செய்வது பிடிக்காமல் மற்ற கைதிகள் என்னை மிரட்ட ஆரம்பித்தபோது தனியாகச் சமாளிப்பது எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அதனால், தைரியமாக இருக்கவும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளவும் உதவும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொண்டேன். அவரும் உதவி செய்தார். சொல்லப்போனால், மற்ற கைதிகளிடம் பைபிளைப் பற்றிப் பேசுவதற்குக்கூட எனக்குத் தைரியத்தைக் கொடுத்தார்.

நான் விடுதலையாகும் நாள் வந்தபோது, வெளி உலகத்தைச் சந்திக்க எனக்குப் பயமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நாள் சிறையிலேயே இருந்துவிடலாம் என்றுகூட தோன்றியது. நிறைய கைதிகள் எனக்கு விடைகொடுத்து அனுப்பினார்கள். சிலர் பாசமாக, “சின்ன மேய்ப்பரே! பத்திரமா போங்க” என்றுகூடச் சொன்னார்கள்.

கடவுள் சொல்வதை நான் கேட்காமல் போயிருந்தால் என் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்? நினைத்தாலே குலைநடுங்குகிறது! நான் திருந்த மாட்டேன் என்று நினைத்துக் கடவுள் என்னை அப்படியே விட்டுவிடவில்லை. அதற்குப் பதிலாக, என்மேல் அன்பு காட்டினார். அதற்காக நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். *

^ வாழ்க்கையையே மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது என்பதை இன்னும் பலருடைய அனுபவங்கள் காட்டுகின்றன. jw.org வெப்சைட்டில், லைப்ரரி > தொடர் கட்டுரைகள் > பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது என்ற தலைப்பின் கீழ் இருக்கும் கட்டுரைகளைப் பாருங்கள்.