Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் விழிப்போடு இருக்க வேண்டும்?

நாம் ஏன் விழிப்போடு இருக்க வேண்டும்?

“உங்கள் எஜமானர் எந்த நாளில் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது.”—மத். 24:42.

பாடல்கள்: 136, 129

1. நாம் வாழ்கிற காலத்தை பற்றியும் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை பற்றியும் புரிந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள் (ஆரம்பப் படம்)

மாநாட்டு நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. சேர்மன் மேடைக்கு வந்து எல்லாரையும் அன்போடு வரவேற்கிறார். இன்னும் சில நொடிகளில் இசை ஆரம்பிக்கப் போகிறது. அங்கு வந்திருக்கும் எல்லாரும் தங்கள் இடங்களில் போய் உட்காருகிறார்கள். இனிமையான இசையை கேட்டு மகிழ்கிறார்கள். அன்றைக்கு கொடுக்கப்போகும் பேச்சுகளை கேட்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், ஒருசிலர் சேர்மன் மேடைக்கு வந்ததையோ அல்லது இசை ஆரம்பமானதையோ கவனிக்கவில்லை. அங்கும் இங்கும் நடந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாநாடு ஆரம்பமானதையும் அவர்களை சுற்றி நடப்பதையும் கவனிக்காமல் இருக்கிறார்கள். இந்த சூழலில் இருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொள்ளலாம். நாம் வாழ்கிற காலத்தை பற்றி அல்லது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை பற்றி நாம் புரிந்துகொள்ளாமல் இருந்தால் நாமும் இவர்களைப் போல்தான் இருப்போம். அப்படியென்றால், சீக்கிரத்தில் நடக்கப்போகிற முக்கியமான சம்பவத்துக்கு நம்மை தயார்ப்படுத்துவது எவ்வளவு முக்கியம்! ஆனால் அது என்ன சம்பவம்?

2. “விழிப்புடன் இருங்கள்” என்று இயேசு ஏன் சீடர்களை எச்சரித்தார்?

2 இந்த சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடக்கப்போகும் விஷயங்களை பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தபோது தன் சீடர்களிடம் “இதெல்லாம் நடக்கப்போகிற காலம் உங்களுக்குத் தெரியாததால் எச்சரிக்கையுடன் இருங்கள், விழிப்புடன் இருங்கள்” என்று சொன்னார். அதன்பின் நிறைய தடவை அவர்களிடம் “விழிப்புடன் இருங்கள்” என்று சொன்னார். (மத். 24:3; மாற்கு 13:32-37-ஐ வாசியுங்கள்.) சீடர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று இயேசு எச்சரித்ததை மத்தேயு புத்தகத்தில் இருந்தும் தெரிந்துகொள்ள முடிகிறது. அவர் சீடர்களிடம் “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்கள் எஜமானர் எந்த நாளில் வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது” என்றார். அதன்பின் அவர்களிடம், “தயாராக இருங்கள்; நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வரப்போகிறார்” என்று எச்சரித்தார். மறுபடியும் “விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” என்று சொன்னார்.—மத். 24:42-44; 25:13.

3. இயேசுவின் எச்சரிப்புக்கு நாம் ஏன் கவனம் செலுத்துகிறோம்?

3 யெகோவாவின் மக்களாக நாம் இயேசு கொடுத்த எச்சரிப்புக்கு கவனம் செலுத்துகிறோம். நாம் ‘முடிவு காலத்தில்’ வாழ்வதால் சீக்கிரத்தில் “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பமாகப் போகிறது என்று நமக்கு தெரியும். (தானி. 12:4; மத். 24:21) இயேசு சொன்னதுபோல் இன்று உலகம் முழுவதும் கடவுளுடைய அரசாங்கத்தை பற்றிய நற்செய்தியை நாம் பிரசங்கிக்கிறோம். அதேசமயம் நிறைய இடங்களில் போர், கொள்ளைநோய், பூமியதிர்ச்சி, பஞ்சம் ஏற்படுவதை பார்க்கிறோம். பொய் மதத்தினால் மக்கள் குழம்பிப்போய் இருப்பதையும் குற்றச்செயலும் வன்முறையும் நாளுக்கு நாள் அதிகமாவதையும் பார்க்கிறோம். (மத். 24:7, 11, 12, 14; லூக். 21:11) இயேசு சீக்கிரத்தில் வரப்போவதையும் தன் அப்பாவுடைய விருப்பத்தை நிறைவேற்ற போவதையும் பார்க்க நாம் ஆசையாக காத்துக்கொண்டு இருக்கிறோம்.—மாற். 13:26, 27.

அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது

4. (அ) அர்மகெதோன் வரும் தேதி இயேசுவுக்கு தெரியும் என்று எப்படி சொல்கிறோம்? (ஆ) நமக்கு அந்த தேதி தெரியாவிட்டாலும் எதை குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம்?

4 பொதுவாக, மாநாட்டுக்கு போகும்போது அங்கு நிகழ்ச்சிகள் எப்போது ஆரம்பமாகும் என்று நமக்கு தெரியும். ஆனால், மிகுந்த உபத்திரவம் எப்போது ஆரம்பமாகும் என்று நமக்கு தெரியாது. பூமியில் இருந்தபோது இயேசு சீடர்களிடம், “அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்திலுள்ள தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது” என்று சொன்னார். (மத். 24:36) ஆனால், சாத்தானுடைய உலகத்தை அழிப்பதற்கான அதிகாரம் இப்போது இயேசுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், அர்மகெதோன் எப்போது வரும் என்று இயேசுவுக்கு தெரிந்திருக்கும். (வெளி. 19:11-16) இருந்தாலும், நமக்கு அர்மகெதோன் எந்த தேதியில் வரும் என்று தெரியாததால் நாம் எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்க போகும் தேதியை யெகோவா ஏற்கெனவே தீர்மானித்துவிட்டார். அந்த நாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, அது நிச்சயமாக வரும், கொஞ்சமும் ‘தாமதிக்காது.’ (ஆபகூக் 2:1-3-ஐ வாசியுங்கள்.) அதை நாம் எப்படி அவ்வளவு உறுதியாக சொல்லலாம்?

5. யெகோவா சொன்ன தீர்க்கதரிசனங்கள் எப்போதும் துல்லியமாக நிறைவேறும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

5 யெகோவா சொன்ன தீர்க்கதரிசனங்கள் எல்லாமே சரியான நேரத்தில் நடந்திருக்கிறது. உதாரணத்துக்கு, கி.மு. 1513 நிசான் 14-ல் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையானார்கள். அந்த நாளை பற்றி மோசே பின்னர் இப்படி எழுதினார்: ‘நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைய தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.’ (யாத். 12:40-42) இங்கே சொல்லப்பட்டுள்ள 430 வருஷங்கள் எப்போது ஆரம்பமானது? கி.மு. 1943 நிசான் 14-ல் யெகோவா ஆபிரகாமோடு ஒப்பந்தம் செய்த சமயத்தில் இது ஆரம்பமானது. (கலா. 3:17, 18) அதற்கு பிறகு யெகோவா ஆபிரகாமிடம், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி” என்று சொன்னார். (ஆதி. 15:13, NW; அப். 7:6) அந்த 400 வருஷ காலப்பகுதி கி.மு. 1913-ல் ஈசாக்கை இஸ்மவேல் தரக்குறைவாக பேசியபோது ஆரம்பமானது. இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையான நாளில் அது துல்லியமாக முடிவுக்கு வந்தது. (ஆதி. 21:8-10; கலா. 4:22-29) தன்னுடைய மக்களை எந்த தேதியில் விடுதலை செய்யப்போகிறார் என்பதை பல நூறு வருஷங்களுக்கு முன்பே யெகோவா தீர்மானித்துவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

6. யெகோவா தன்னுடைய மக்களை காப்பாற்றுவார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

6 எகிப்திலிருந்து விடுதலையானவர்களில் யோசுவாவும் ஒருவர். விடுதலையாகி பல வருஷங்களுக்குப் பிறகு யோசுவா இஸ்ரவேலர்களிடம் இப்படி சொன்னார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.” (யோசு. 23:2, 14) வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தில் இருந்து தன்னுடைய மக்களை காப்பாற்றி அவர்களை புதிய உலகத்தில் வாழ வைக்கப்போவதாக யெகோவா வாக்கு கொடுத்திருக்கிறார். அதை அவர் நிறைவேற்றுவார் என்பதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். ஆனால், புதிய உலகத்தில் நாம் வாழ வேண்டுமென்றால் இப்போதே விழிப்புடன் இருக்க வேண்டும்.

உயிர் பிழைக்க விழிப்போடு இருங்கள்

7, 8. (அ) காவல்காரர்களின் பொறுப்பு என்ன, அவர்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) காவல்காரர்கள் தூங்கிவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

7 பூர்வ காலங்களில் வாழ்ந்த காவல்காரர்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? எருசலேம் போன்ற பெரிய நகரங்களை சுற்றி உயரமான மதிற்சுவர்கள் இருந்தன. அந்த சுவர்கள் எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாத்தன. காவல்காரர்களால் அந்த சுவரின்மீது நின்றுகொண்டு நகரத்தை சுற்றியிருந்த பகுதிகளை பார்க்க முடிந்தது. சில காவல்காரர்கள் நகரத்தின் வாசலில் நின்றார்கள். எதிரிகள் யாராவது வருகிறார்களா என்று அவர்கள் இரவும் பகலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிரிகள் வருவதை பார்த்தால் உடனே மக்களை எச்சரித்தார்கள். (ஏசா. 62:6) அவர்கள் தூங்கிவிட்டால் மக்களுடைய உயிர் ஆபத்தில் இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால், விழித்திருந்து காவல் காப்பது எவ்வளவு முக்கியம் என்று அவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள்.—எசே. 33:6.

8 கி.பி. 70-ல் ரோம படை எப்படி எருசலேமுக்குள் வந்தது என்பதை பற்றி யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் தன் புத்தகத்தில் எழுதினார். எருசலேமின் ஒரு வாசலை காவல் காத்துக்கொண்டிருந்தவர்கள் தூங்கிவிட்டதால் ரோம படைவீரர்கள் நகரத்துக்குள் நுழைந்தார்கள். ஆலயத்துக்கு தீ வைத்ததோடு முழு நகரத்தையும் அழித்தார்கள். இந்த மாதிரியான ஒரு பயங்கரமான அழிவு எருசலேமுக்கு இதுவரை வந்ததே இல்லை.

9. இன்று நிறையப் பேர் எதை புரிந்துகொள்வதில்லை?

9 இன்றும் நிறைய நாடுகள் எல்லை பாதுகாப்பு படையை பயன்படுத்தி தங்கள் நாட்டை பாதுகாக்கிறார்கள். அதோடு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் எல்லையை கண்காணிக்கிறார்கள். எதிரிகளிடமிருந்தும் ஆபத்தை ஏற்படுத்துகிற விஷயங்களில் இருந்தும் நாட்டை பாதுகாக்கிறார்கள். ஆனால், மனிதர்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை மட்டும்தான் இவர்களால் பார்க்க முடிகிறது. மனித அரசாங்கங்களைவிட மிகவும் சக்திவாய்ந்த பரலோக அரசாங்கம் ஒன்று இருப்பதை இவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அந்த அரசாங்கத்தின் ராஜாவான கிறிஸ்து இயேசு சீக்கிரத்தில் மனித அரசாங்கங்களை எல்லாம் அழிக்கப் போகிறார். (ஏசா. 9:6, 7; 56:10; தானி. 2:44) அந்த நாளுக்காக நாம் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு தயாராக இருக்க நாம் விரும்புவதால்தான் பைபிள் தீர்க்கதரிசனத்துக்கு கவனம் செலுத்துகிறோம்; யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்கிறோம்.—சங். 130:6.

கவனச்சிதறலை குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்

10, 11. (அ) நாம் எதை குறித்து கவனமாக இருக்க வேண்டும், ஏன்? (ஆ) மக்களுடைய மனதை சாத்தான் குருடாக்கியிருக்கிறான் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்?

10 இரவு முழுவதும் விழித்திருக்கும் ஒரு காவல்காரனை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் அப்படி விழித்திருந்ததால் மிகவும் களைப்பாக இருப்பார். அதனால் பொழுது விடியும் சமயத்தில் விழிப்போடு இருப்பது அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதேபோல், உலகத்துக்கு அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிற இந்த சமயத்தில் விழிப்பாக இருப்பது நமக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால், நாம் விழிப்பாக இல்லையென்றால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாக இருக்குமென்று யோசித்துப் பாருங்கள்! விழிப்பாக இருப்பதற்கு தடையாக இருக்கும் 3 விஷயங்களை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

11 சாத்தான் மக்களை ஏமாற்றுகிறான். சாத்தானே ‘இந்த உலகத்தை ஆளுகிறான்.’ இயேசு இறப்பதற்கு கொஞ்சம் முன்பு தன் சீடர்களுக்கு இந்த உண்மையை அவர் 3 முறை ஞாபகப்படுத்தினார். (யோவா. 12:31; 14:30; 16:11) சாத்தான் பொய்மதத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறான். அதனால்தான், இந்த உலக முடிவை பற்றி பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்கள் அவ்வளவு தெளிவாக இருந்தாலும் மக்கள் அதற்கு கவனம் செலுத்துவதே இல்லை. (செப். 1:14) மக்களின் ‘மனக்கண்களை சாத்தான் குருடாக்கியிருப்பது’ தெளிவாக தெரிகிறது, இல்லையா? (2 கொ. 4:3-6) இப்படி குருடாக்கியிருப்பதால்தான் ஊழியத்தில் நாம் சொல்வதை மக்கள் காதுகொடுத்து கேட்பதில்லை. இந்த உலகத்துக்கு முடிவு நெருங்கிவிட்டதையும் இயேசு இப்போது ஆட்சி செய்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

12. சாத்தான் நம்மை ஏமாற்ற நாம் ஏன் அனுமதிக்க கூடாது?

12 பைபிளிலுள்ள விஷயங்களுக்கு மக்கள் கவனம் செலுத்தாததை பார்த்து நாம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. விழிப்பாய் இருப்பது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெரியும். “இரவில் திருடன் வருகிற விதமாக யெகோவாவின் நாள் வருமென்று நீங்களே நன்கு அறிந்திருக்கிறீர்கள்” என்று பவுல் தன் சகோதரர்களிடம் சொன்னார். (1 தெசலோனிக்கேயர் 5:1-6-ஐ வாசியுங்கள்) “தயாராயிருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வரப்போகிறார்” என்ற எச்சரிப்பை இயேசு நம் எல்லாருக்கும் கொடுத்தார். (லூக். 12:39, 40) உலகத்தில் ‘சமாதானமும் பாதுகாப்பும்’ வந்துவிட்டது என்று சொல்லி சீக்கிரத்தில் சாத்தான் மக்கள் எல்லாரையும் ஏமாற்ற போகிறான். அதன்பின் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் யெகோவாவின் நாள் திடீரென அவர்கள்மீது வரும். ஆனால் நம்மை பற்றி என்ன? இப்போதே நாம் “விழிப்போடும் தெளிந்த புத்தியோடும்” இருந்தால் அந்த நாளுக்காக தயாராக இருப்போம். அப்போது சாத்தானால் நம்மை ஏமாற்ற முடியாது. அதற்கு நாம் தினமும் பைபிளை வாசித்து அதை ஆழ்ந்து யோசிக்க வேண்டும். அப்படி செய்தால் யெகோவா நமக்கு சொல்லும் விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

13. இந்த பொல்லாத உலகம் நம்முடைய கவனத்தை எப்படி திசைதிருப்புகிறது, இதை நாம் எப்படி தவிர்க்கலாம்?

13 இந்த பொல்லாத உலகம். இன்று நிறையப் பேர் சொந்த வாழ்க்கையில் மூழ்கிப் போயிருப்பதால் கடவுளை பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. (மத். 5:3) அதற்கு பதிலாக இந்த உலகத்திலுள்ள கண்ணை கவரும் பொருள்களை வாங்கிக் குவிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதற்காக தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள். (1 யோ. 2:16) அதுமட்டுமல்ல, இன்று மக்கள் பொழுதுபோக்குக்கும் அடிமையாக இருக்கிறார்கள். சொந்த ஆசைகளை திருப்தி செய்யவும், ஆசைப்பட்டதை அடையவும் பொழுதுபோக்கு மக்களை தூண்டுகிறது. (2 தீ. 3:4) முக்கியமான விஷயங்களுக்கு கவனம் செலுத்தாதபடி இது மக்களை திசைதிருப்புகிறது. அதனால், கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இருப்பதில்லை. ஆனால் நாம் விழிப்போடு இருப்பதற்காகத்தான் பவுல், “பாவ இச்சைகளின்படி நடக்க நீங்கள் திட்டமிடாதீர்கள்” என்று சொன்னார்.—ரோ. 13:11-14.

14. லூக்கா 21:34, 35-ல் என்ன எச்சரிப்பு இருக்கிறது?

14 இந்த உலகம் நம்மீது செல்வாக்கு செலுத்த நாம் விரும்புவதில்லை. கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படவே நாம் விரும்புகிறோம். எதிர்காலத்தில் நடக்கப்போகிற விஷயங்களை புரிந்துகொள்ள யெகோவா தன் சக்தியின் மூலம் நமக்கு உதவி செய்கிறார். (1 கொ. 2:12)  [1] (பின்குறிப்பு) நாம் விழிப்பாக இல்லையென்றால் சாதாரண விஷயங்கள்கூட நம்மை திசைதிருப்பி விடலாம். (லூக்கா 21:34, 35-ஐ வாசியுங்கள்) நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்று மற்றவர்களிடம் சொல்லும்போது அவர்கள் நம்மை கேலி செய்யலாம். (2 பே. 3:3-7) ஆனால், முடிவு சீக்கிரத்தில் வருவதற்கான எல்லா அத்தாட்சிகளும் தெளிவாக இருப்பதால் நாம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. கடவுளுடைய சக்தி நம்மை வழிநடத்த வேண்டுமென்றால் நாம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

விழிப்புடன் இருக்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறீர்களா? (பாராக்கள் 11-16)

15. பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானுக்கு என்ன நடந்தது, நமக்கும் என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது?

15 நம்முடைய பலவீனங்கள். நாம் எல்லாரும் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் நம்மிடம் பலவீனங்கள் இருக்கிறது என்று இயேசுவுக்கு தெரியும். அவர் இறப்பதற்கு முந்தின இரவில் என்ன நடந்தது என்று யோசித்துப் பாருங்கள். இயேசு எந்த தவறும் செய்யாதவராக இருந்தார். என்றாலும், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் அவருடைய உதவி தேவை என்று நினைத்தார். அதற்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். இயேசு ஜெபம் செய்தபோது பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானிடம், “நீங்கள் இங்கேயே இருந்து விழித்திருங்கள்” என்று சொன்னார். ஆனால் விழித்திருப்பதன் அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் களைப்பாக இருந்ததால் தூங்கிவிட்டார்கள். இயேசுவும் களைப்பாகத்தான் இருந்தார். ஆனாலும் விழித்திருந்து யெகோவாவிடம் ஜெபம் செய்தார். சீடர்களும் அவரோடு சேர்ந்து விழிப்புடன் இருந்திருக்க வேண்டும்.—மாற். 14:32-41.

16. லூக்கா 21:36-ன்படி விழிப்போடு இருக்க என்ன செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார்?

16 “விழித்திருந்து” யெகோவாவின் நாளுக்காக தயாராக இருக்க எது நமக்கு உதவும்? சரியானதை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது, விழிப்போடு இருக்க உதவும்படி யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். இப்படி ஜெபம் செய்யும்படி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இயேசுவும் தன் சீடர்களிடம் சொன்னார்.லூக்கா 21:36-ஐ வாசியுங்கள்; 1 பே. 4:7.

எப்போதும் விழிப்புடன் இருங்கள்

17. சீக்கிரத்தில் வரப்போகிற அழிவிலிருந்து தப்பிக்க நாம் எப்படி தயாராகலாம்?

17 ‘நீங்கள் நினைக்காத நேரத்தில் அழிவு வரப்போகிறது’ என்று இயேசு சொன்னார். (மத். 24:44) அதனால் நாம் எப்போதுமே விழிப்பாக இருக்க வேண்டும். இந்த உலகத்தில் இருக்கும் மக்களைப் போல் ஆடம்பரமாக வாழ இது நேரமில்லை. ஏனென்றால் இதெல்லாம் சீக்கிரத்தில் அழியப்போகிறது. அதற்கு பதிலாக விழிப்பாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவாவும் இயேசுவும் பைபிளில் சொல்லியிருக்கிறார்கள். அதனால் பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். யெகோவாவிடம் நெருங்கி இருக்கவும் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்கவும் வேண்டும். அப்படி செய்தால் நாம் அந்த நாளுக்காக தயாராக இருப்போம், பத்திரமாக உயிர் தப்புவோம்.—வெளி. 22:20.

^ [1] (பாரா 14) கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது (God’s Kingdom Rules!) என்ற ஆங்கில புத்தகத்தில் அதிகாரம் 21-ஐயும் ஜூலை 15, 2013 காவற்கோபுரத்தில் இவையெல்லாம் எப்போது நடக்கும்?” என்ற கட்டுரையையும் பாருங்கள்