Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றி எல்லாருக்கும் சொல்லுங்கள்

கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றி எல்லாருக்கும் சொல்லுங்கள்

‘கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுங்கள்.’—அப். 20:24.

பாடல்கள்: 101, 84

1, 2. கடவுளுடைய அளவற்ற கருணைக்கு பவுல் நன்றியோடு இருந்ததை எப்படி காட்டினார்?

கடவுள் “எனக்குக் காண்பித்த அளவற்ற கருணை வீண் போகவில்லை” என்று அப்போஸ்தலன் பவுலால் எந்த தயக்கமும் இல்லாமல் சொல்ல முடிந்தது. (1 கொரிந்தியர் 15:9, 10-ஐ வாசியுங்கள்.) இதற்கு முன்பு பவுல் கிறிஸ்தவர்களை துன்புறுத்தியதால், கடவுளுடைய இரக்கத்தை பெறுவதற்கு தனக்கு கொஞ்சமும் தகுதியில்லை என்றும் தன் சொந்த முயற்சியால் அதை பெறவில்லை என்றும் அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது.

2 அவருடைய வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தீமோத்தேயுவுக்கு இப்படி எழுதினார்: “என்னைப் பலப்படுத்திய நம் எஜமானராகிய கிறிஸ்து இயேசுவுக்கு நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்; ஏனென்றால், அவர் என்னை உண்மையுள்ளவனாகக் கருதி, அவரது ஊழியத்தைச் செய்வதற்கு என்னை நியமித்தார்.” (1 தீ. 1:12-14) அது என்ன ஊழியம்? எபேசு சபையிலிருந்த மூப்பர்களிடம் பவுல் இப்படி சொன்னார்: “என் உயிர் எனக்கு முக்கியமல்ல, எஜமானராகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தைச் செய்து முடிப்பதே எனக்கு முக்கியம்; கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுத்து என் ஓட்டத்தை முடிப்பதே எனக்கு முக்கியம்.”—அப். 20:24.

3. பவுலுக்கு என்ன விசேஷ ஊழிய நியமிப்பு கிடைத்தது? (ஆரம்பப் படம்)

3 பவுல் என்ன நற்செய்தியை சொன்னார், அது எப்படி கடவுளுடைய அளவற்ற கருணையின் வெளிக்காட்டாக இருந்தது? “உங்கள் நன்மைக்காகக் கடவுளின் அளவற்ற கருணையினால் எனக்கு நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்டதைப் பற்றி . . . நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்று எபேசு சபையில் இருந்தவர்களிடம் பவுல் சொன்னார். (எபே. 3:1-3) யூதராக இல்லாதவர்களுக்கு நற்செய்தியை சொல்லும்படி பவுலிடம் இயேசு சொன்னார். மேசியானிய அரசாங்கத்தில் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் கிடைத்தது. (எபேசியர் 3:5-9-ஐ வாசியுங்கள்.) சுறுசுறுப்பாக பிரசங்கித்ததன் மூலம் பவுல் இன்று நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். அதோடு, கடவுள் காட்டிய அளவற்ற கருணை “வீண் போகவில்லை” என்பதையும் தெளிவாக காட்டினார்.

நற்செய்தியை சொல்ல அளவற்ற கருணை உங்களை தூண்டுகிறதா?

4, 5. ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியும்’ ‘கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்தியும்’ ஒன்றுதான் என்று ஏன் சொல்கிறோம்?

4 இந்த கடைசி நாட்களில் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாக’ சொல்ல வேண்டிய பொறுப்பு யெகோவாவின் மக்களுக்கு இருக்கிறது. (மத். 24:14) நாம் சொல்லும் இந்த நற்செய்தி, ‘கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்தியாகவும்’ இருக்கிறது. எப்படி? கடவுளுடைய அரசாங்கத்தில் நாம் அனுபவிக்கப்போகும் எல்லா ஆசீர்வாதங்களும் யெகோவாவுடைய அளவற்ற கருணையினால்தான் கிடைக்கப்போகிறது. (எபே. 1:3) அந்த அளவற்ற கருணைக்கு பவுல் நன்றியோடு இருந்ததால்தான் ஊழியத்தை மும்முரமாக செய்தார். நாமும் பவுலைப் போல் ஊழியம் செய்வோமா?ரோமர் 1:14-16-ஐ வாசியுங்கள்.

5 நாம் பாவிகளாக இருந்தாலும் யெகோவாவுடைய அளவற்ற கருணையினால் நாம் அனுபவிக்கும் பல ஆசீர்வாதங்களைப் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். நாம் மட்டும் அந்த ஆசீர்வாதங்களை அனுபவித்தால் போதாது, அதைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. யெகோவா எப்படியெல்லாம் அன்பு காட்டுகிறார்... அதனால் அவர்கள் எப்படி நன்மையடையலாம்... என்பதை எல்லாம் அவர்களுக்கு விளக்க வேண்டும். அப்படியென்றால், கடவுளுடைய அளவற்ற கருணைக்கு அவர்களும் நன்றியோடு இருக்க நாம் எப்படி உதவலாம்?

மீட்பு பலியைப் பற்றி எங்கும் சொல்லுங்கள்

6, 7. மீட்புப் பலியை பற்றி மற்றவர்களிடம் சொல்வதன் மூலம் அளவற்ற கருணையை பற்றிய நற்செய்தியை எங்கும் சொல்கிறோம் என எப்படி சொல்லலாம்?

6 இன்று நிறையப் பேர் தங்கள் இஷ்டத்துக்கு வாழ்கிறார்கள். ஏதாவது தவறு செய்தாலும் அவர்களுடைய மனசாட்சி குத்துவதில்லை. அதனால் மனிதர்களுக்கு மீட்பு பலி தேவை என்றே அவர்கள் உணர்வதில்லை. அதேசமயம், அவர்கள் வாழும் விதம் சந்தோஷத்தை தருவதில்லை என்பதை போகப் போக புரிந்துகொள்கிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளிடம் பேசிய பிறகுதான் பாவம் என்றால் என்ன, அது நம்மை எப்படி பாதிக்கிறது, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்கிறார்கள். நல்மனம் உள்ளவர்கள் பாவத்தைப் பற்றி புரிந்துகொள்ளும்போது, யெகோவாவுக்கு தங்கள்மீது எவ்வளவு அன்பிருக்கிறது என்பதை புரிந்துகொள்கிறார்கள். அதோடு, யெகோவா தன் ஒரே மகனையே பலியாக கொடுத்ததற்காக ரொம்ப நன்றியோடும் இருக்கிறார்கள்.—1 யோ. 4:9, 10.

7 யெகோவாவுடைய அன்பு மகனை பற்றி பவுல் சொல்வதை கவனியுங்கள்: “[யெகோவாவுடைய] அளவற்ற கருணையின் ஐசுவரியத்தின்படியே, அந்த அன்பு மகன் தமது இரத்தத்தை மீட்புவிலையாகக் கொடுத்ததால் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது; ஆம், நம்முடைய மீறுதல்களுக்கு மன்னிப்புக் கிடைத்திருக்கிறது.” (எபே. 1:7) மனிதர்கள்மீது யெகோவாவுக்கு இருக்கும் அன்புக்கும் அவருடைய அளவற்ற கருணைக்கும் கிறிஸ்துவின் மீட்புப் பலிதான் மிகச்சிறந்த உதாரணம். நாம் கிறிஸ்துவின் பலியில் விசுவாசம் வைத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்படும்... நமக்கு சுத்தமான மனசாட்சி கிடைக்கும்... என்பதை தெரிந்துகொள்ளும்போது எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது! (எபி. 9:14) இந்த நல்ல செய்தியை நாம் எல்லாருக்கும் சொல்ல வேண்டும் இல்லையா!

கடவுளுடைய நண்பராவதற்கு உதவுங்கள்

8. பாவமுள்ள மனிதர்கள் ஏன் கடவுளோடு சமரசமாக வேண்டும்?

8 இயேசுவின் பலியில் மக்கள் விசுவாசம் வைக்கவில்லை என்றால் கடவுள் அவர்களை எதிரிகளாக பார்ப்பார். ஆனால் அவர்களும் கடவுளுடைய நண்பர்களாக முடியும் என்று சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “மகன்மீது விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லா வாழ்வு இருக்கிறது; மகனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவனுக்கோ முடிவில்லா வாழ்வு இல்லை, கடவுளுடைய கடுங்கோபத்திற்கே அவன் ஆளாவான்.” (யோவா. 3:36) இயேசுவின் பலியின் மூலமாகத்தான் நாம் கடவுளுடைய நண்பராக முடியும் என்பது நமக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இதைப் பற்றி பவுல் இப்படி சொன்னார்: “ஒருகாலத்தில் உங்கள் மனம் பொல்லாத செயல்களையே நினைத்துக்கொண்டிருந்ததால் நீங்கள் கடவுளுக்கு அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தீர்கள்; இப்போதோ கடவுள் . . . மனித உடலில் இருந்தவருடைய மரணத்தின் மூலம் உங்களைத் தம்முடன் சமரசமாக்கியிருக்கிறார்.”—கொலோ. 1:21, 22.

9, 10. (அ) கிறிஸ்து தன் சகோதரர்களுக்கு என்ன வேலையைக் கொடுத்தார்? (ஆ) ‘வேறே ஆடுகள்’ எப்படி அவர்களுக்கு உதவி செய்கிறார்கள்?

9 பரலோக நம்பிக்கையுள்ள தன் சகோதரர்களுக்கு கிறிஸ்து “சமரசமாக்கும் ஊழியத்தை” ஒப்படைத்திருக்கிறார். பவுல் அவர்களிடம் இப்படி சொன்னார்: “எல்லாம் கடவுளிடமிருந்தே வந்திருக்கின்றன; அவரே கிறிஸ்துவின் மூலம் எங்களைத் தம்மோடு சமரசமாக்கி, சமரசமாக்கும் ஊழியத்தை எங்களிடம் ஒப்படைத்தார்; அதாவது, உலகத்தாருடைய குற்றங்களை எண்ணிப் பார்க்காமல், கிறிஸ்து மூலம் அவர்களைத் தம்மோடு சமரசமாக்கி, சமரசம் உண்டாக்குகிற செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். ஆகவே, நாங்கள் கிறிஸ்துவின் சார்பில் தூதுவர்களாய் இருக்கிறோம்; அதனால், ‘கடவுளோடு சமரசமாகுங்கள்’ எனக் கிறிஸ்துவின் சார்பில் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்; எங்கள் மூலம் கடவுளே இந்த வேண்டுகோளை விடுப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்.”—2 கொ. 5:18-20.

10 இந்த ஊழியத்தை செய்ய பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதை ‘வேறே ஆடுகள்’ பாக்கியமாக நினைக்கிறார்கள். (யோவா. 10:16) கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக ‘வேறே ஆடுகள்தான்’ இந்த ஊழிய வேலையை அதிகளவில் செய்கிறார்கள். பைபிள் சத்தியங்களை மக்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்கள் யெகோவாவின் நண்பராவதற்கு உதவி செய்கிறார்கள். இப்படி செய்வது, கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதில் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறது.

கடவுள் ஜெபங்களை கேட்கிறார் என்ற நற்செய்தியை சொல்லுங்கள்

11, 12. யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வது மக்களுக்கு நற்செய்தியாக இருக்கும் என்று ஏன் சொல்கிறோம்?

11 ஜெபம் செய்தால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். இருந்தாலும், கடவுள் தங்களுடைய ஜெபங்களை கேட்கிறார் என்று அவர்கள் நம்புவதில்லை. யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்” என்று சங்கீதக்காரனான தாவீது எழுதினார்.—சங். 65:2, 3.

12 “என் பெயரில் நீங்கள் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” என்று இயேசு தன் சீடர்களிடம் சொன்னார். (யோவா. 14:14) “கேட்பதையெல்லாம்” என்றால் என்ன? யெகோவாவுடைய விருப்பத்துக்கு ஏற்ற விதத்தில் நாம் எதை கேட்டாலும் அதை கொடுப்பதாக இயேசு சொன்னார். “கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே நாம் அவர்மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை” என்று யோவான் எழுதினார். (1 யோ. 5:14) ஜெபம் மனநிம்மதியை மட்டும் தருவதில்லை, ‘கடவுளுடைய அளவற்ற கருணையின் சிம்மாசனத்தைத் தயக்கமில்லாமல் அணுகுவதற்கு’ ஒரு முக்கிய வழியாக இருக்கிறது. இந்த உண்மையை சொல்லிக்கொடுக்கும்போது அவர்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்! (எபி. 4:16) எப்படி ஜெபம் செய்ய வேண்டும், யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும், எந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுக்கும்போது அவர்கள் யெகோவாவுடைய நண்பராவதற்கு நாம் உதவுகிறோம். கஷ்டமான சமயங்களில் ஆறுதலை பெறவும் அவர்களுக்கு உதவுகிறோம். —சங். 4:1; 145:18.

புதிய உலகத்திலும் அளவற்ற கருணையை அனுபவிப்போம்

13, 14. (அ) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன அருமையான ஆசீர்வாதங்கள் கிடைக்கப்போகிறது? (ஆ) மனிதர்களுக்காக அவர்கள் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள்?

13 புதிய உலகத்தில் யெகோவாவுடைய அளவற்ற கருணையை நாம் இன்னும் அதிகளவில் அனுபவிப்போம். கிறிஸ்துவோடு ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேருக்கு கடவுள் ஒரு அருமையான பாக்கியத்தை கொடுக்கப்போகிறார். அதை பற்றி பவுல் இப்படி எழுதினார்: “குற்றங்களினால் நாம் இறந்த நிலையிலிருந்தபோதிலும், மகா இரக்கமுடைய கடவுள் நம்மீதுள்ள பேரன்பின் காரணமாக, கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நம்மை உயிர்ப்பித்திருக்கிறார்—அவருடைய அளவற்ற கருணையினால் உங்களுக்கு மீட்பளித்திருக்கிறார்—கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற நம்மை உயிர்த்தெழுப்பி, அவரோடு உன்னதங்களில் அமரச் செய்திருக்கிறார்; கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கும் நமக்கு அவர் பெருந்தன்மையுடன் அருளுகிற அளவற்ற கருணையின் ஈடிணையில்லாத ஐசுவரியம் இனிவரும் உலகத்தில் வெளிக்காட்டப்படுவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார்.”—எபே. 2:4-7.

14 கிறிஸ்துவோடு ஆட்சி செய்யும்போது பரலோக நம்பிக்கையுள்ளவர்களை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதிப்பார் என்பதை நம்மால் கற்பனை செய்யவே முடியாது. (லூக். 22:28-30; பிலி. 3:20, 21; 1 யோ. 3:2) முக்கியமாக அவர்களுக்கு, ‘அளவற்ற கருணையின் ஈடிணையில்லாத ஐசுவரியத்தை’ கொடுக்கப்போகிறார். அவர்கள் ‘புதிய எருசலேமாக இருப்பார்கள்,’ கிறிஸ்துவுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் இருப்பார்கள். (வெளி. 3:12; 17:14; 21:2, 9, 10) அவர்கள் இயேசுவோடு சேர்ந்து ‘தேசத்தாரை குணமாக்குவார்கள்.’ மனிதர்கள் எல்லாரும் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாவதற்கு உதவி செய்வார்கள்.வெளிப்படுத்துதல் 22:1, 2, 17-ஐ வாசியுங்கள்.

15, 16. எதிர்காலத்தில் ‘வேறே ஆடுகள்மீது’ யெகோவா எப்படி அளவற்ற கருணையைக் காட்டுவார்?

15 அளவற்ற கருணையை யெகோவா ‘இனிவரும் உலகத்தில் [அதாவது, சகாப்தத்தில்] வெளிக்காட்டப்போகிறார்’ என்று எபேசியர் 2:7 சொல்கிறது. அந்த சமயத்தில் பூமியில் இருக்கிற நாம் எல்லாரும் அவருடைய ‘அளவற்ற கருணையின் ஈடிணையில்லாத ஐசுவரியத்தை’ அனுபவிப்போம். (லூக். 18:29, 30) அதில் ஒன்றுதான் உயிர்த்தெழுதல். இது யெகோவாவுடைய அளவற்ற கருணையின் மிகச்சிறந்த வெளிக்காட்டாக இருக்கும். (யோபு 14:13-15; யோவா. 5:28, 29) யாரெல்லாம் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த கடவுளுடைய உண்மை ஊழியர்கள் எல்லாரும் உயிரோடு வருவார்கள். அதோடு, கடைசி நாட்களில் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்து இறந்துபோகிற “வேறே ஆடுகளும்” வருவார்கள். அதன்பின் இவர்கள் எல்லாரும் யெகோவாவை என்றென்றும் சேவிப்பார்கள்.

16 யெகோவாவை பற்றி தெரியாத லட்சக்கணக்கான ஜனங்களும் உயிர்த்தெழுந்து வருவார்கள். “இறந்துபோன பெரியோரும் சிறியோரும் சிம்மாசனத்திற்கு முன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்போது சுருள்கள் திறக்கப்பட்டன; வாழ்வின் சுருள் என்ற வேறொரு சுருளும் திறக்கப்பட்டது; அந்தச் சுருள்களில் எழுதப்பட்டவற்றின்படி, இறந்தவர்கள் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப நியாயத்தீர்ப்புப் பெற்றார்கள். கடல் தன்னிடமுள்ள இறந்தவர்களை ஒப்படைத்தது; அதேபோல், மரணமும் கல்லறையும் தங்களிடமுள்ள இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நியாயத்தீர்ப்புப் பெற்றார்கள்” என்று யோவான் எழுதினார். (வெளி. 20:12, 13) உயிர்த்தெழுந்து வருபவர்களுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளவும் அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கொடுக்கப்படும். அப்போது அவர்கள் பைபிள் விஷயங்களை கற்றுக்கொண்டு அதன்படி வாழ வேண்டும். அதோடு, “சுருள்களில்” சொல்லப்பட்ட ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இந்த புதிய ஆலோசனைகளும் யெகோவாவின் அளவற்ற கருணையின் வெளிக்காட்டாக இருக்கும்.

நற்செய்தியை தொடர்ந்து சொல்லுங்கள்

17. என்ன நோக்கத்தோடு நாம் நற்செய்தியை சொல்ல வேண்டும்?

17 முடிவு நெருங்கிக்கொண்டே வருவதால் இப்போது நற்செய்தியை சொல்வதுதான் ரொம்ப முக்கியமான வேலையாக இருக்கிறது. (மாற். 13:10) நற்செய்தி யெகோவாவுடைய அளவற்ற கருணையை சிறப்பித்துக் காட்டுகிறது. யெகோவாவுக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நாம் இந்த வேலையை செய்ய வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யலாம்? புதிய உலகத்தில் நமக்கு கிடைக்கப்போகும் எல்லா ஆசீர்வாதங்களும் யெகோவாவுடைய அளவற்ற கருணையின் வெளிக்காட்டு என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

‘கடவுளுடைய அளவற்ற கருணையின் சிறந்த நிர்வாகிகளாக’ நாம் நற்செய்தியை மும்முரமாக சொல்லலாம்.—1 பே. 4:10. (பாராக்கள் 17-19)

18, 19. யெகோவாவின் அளவற்ற கருணையை நாம் எப்படி புகழலாம்?

18 நற்செய்தியை சொல்லும்போது, கிறிஸ்துவின் ஆட்சியில் நாம் மீட்பு பலியின் நன்மைகளை அனுபவிப்போம்... எந்த குறையும் இல்லாமல் வாழ்வோம்... என்று மக்களுக்கு விளக்கலாம். “படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறுகிற எதிர்பார்ப்புடன் அவ்வாறு தள்ளப்பட்டது” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 8:21) இதெல்லாம் யெகோவாவுடைய அளவற்ற கருணையினால்தான் கிடைக்கப்போகிறது.

19 வெளிப்படுத்துதல் 21:4, 5-ல் உள்ள அருமையான ஆசீர்வாதத்தைப் பற்றி எல்லா மக்களுக்கும் சொல்லும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த வசனம் இப்படி சொல்கிறது: “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.” சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிற யெகோவா, “‘இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்’ என்றார். அதோடு, ‘இந்த வார்த்தைகள் உண்மையானவை, சத்தியமானவை, இவற்றை எழுது’ என்றார்.” இந்த நற்செய்தியை மும்முரமாக சொல்வதன் மூலம் யெகோவாவின் அளவற்ற கருணையை நாம் புகழ்கிறோம்.