வாழ்க்கை சரிதை
யெகோவாவின் மக்களுக்கு இருக்கும் விசுவாசத்தைப் பார்த்திருக்கிறேன்
வாழ்க்கையில் சிலரோடு பேசிய தருணங்களை நம்மால் மறக்கவே முடியாது, அது நமக்கு ரொம்ப முக்கியமாக இருக்கும். அந்த மாதிரி ஒரு அனுபவம்தான் 50 வருஷத்துக்கு முன்பு எனக்குக் கிடைத்தது. நானும் என் ஃப்ரெண்டும் மாதக்கணக்காக ஊர் சுற்றிக் கருத்துப்போய், கடைசியில் கென்யாவில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, அதற்குப் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். மதம் சம்பந்தப்பட்ட ஒரு சினிமாவைப் பற்றி நாங்கள் பேசினோம். “பைபிளில் இல்லாததையெல்லாம் அந்த சினிமாவில் காட்டியிருக்கிறார்கள்” என்று என் ஃப்ரெண்டு சொன்னான்.
அவன் அப்படிச் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். அவனுக்கு மதத்தில் ஈடுபாடு இருக்கும் என்று நான் யோசித்ததே இல்லை. அவனிடம், “பைபிளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டேன். அவன் உடனே பதில் சொல்லவில்லை. ஆனால், அவனுடைய அம்மா ஒரு யெகோவாவின் சாட்சி என்று அப்புறம் சொன்னான். அம்மாவிடமிருந்து இவன் சில விஷயங்களைத் தெரிந்துகொண்டானாம். அவன் அப்படிச் சொன்னதும் அதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அதனால், இன்னும் நிறைய சொல்லும்படி அவனிடம் கேட்டேன்.
ராத்திரி ரொம்ப நேரம் நாங்கள் பேசினோம். சாத்தான்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்வதாக பைபிள் சொல்கிறதென்று என் ஃப்ரெண்டு சொன்னான். (யோவா. 14:30) ஒருவேளை, உங்களில் சிலருக்கு இது சின்ன வயதிலிருந்தே தெரிந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் எனக்கு, அது ரொம்ப புதிதாக இருந்தது, அதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையையும் அது தூண்டிவிட்டது. அன்பான, ஞானமான ஒரு கடவுள் கையில் இந்த உலகம் இருக்கிறது என்றுதான் அதுவரை நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அந்த விஷயத்துக்கும் நான் வாழ்க்கையில் பார்த்த விஷயங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. எனக்கு அப்போது 26 வயதுதான். ஆனால், வாழ்க்கையில் எத்தனையோ பார்த்துவிட்டேன், அதெல்லாம் என் மனதை ரொம்ப பாதித்தது.
என் அப்பா அமெரிக்க விமானப் படையில் விமானியாக இருந்தார். அதனால், அணு ஆயுதப் போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று சின்ன வயதிலேயே எனக்குப் புரிந்தது. ராணுவப் படை எந்த நிமிஷத்திலும் அணுகுண்டு போடுவதற்குத் தயாராக இருந்தார்கள். கலிபோர்னியாவில் நான் காலேஜ் படித்துக்கொண்டு இருந்தபோது வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்தது. மாணவர்களுடைய போராட்டங்களில் நானும் சேர்ந்துகொண்டேன். போலீஸ் லத்தியோடு எங்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள், நாங்கள் ஓடினோம். அவர்கள் கண்ணீர் புகைக் குண்டு போட்டதால் எங்களுக்கு மூச்சு முட்டியது, கண்ணும் சரியாகத் தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அரசியல் தலைவர்களைக் கொன்றுபோட்டார்கள், போராட்டமும் கலவரமுமாக இருந்தது. நிலைமையை எப்படிச் சரிபண்ணுவது என்பதைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதனால் மக்கள் ரொம்பக் குழம்பிப்போயிருந்தார்கள்.
லண்டனிலிருந்து மத்திய ஆப்பிரிக்காவுக்கு
1970-ல் அலாஸ்காவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. நான் கைநிறைய சம்பாதித்தேன். அதன் பிறகு, அங்கிருந்து விமானத்தில் லண்டனுக்குப் போனேன். அங்கு போய் ஒரு பைக் வாங்கினேன். பிறகு, எங்கே போவது என்றே யோசிக்காமல் தெற்குப் பக்கமாக பைக்கில் போய்க்கொண்டே இருந்தேன். சில மாதங்கள் கழித்து ஆப்பிரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்தேன். வழியில், என்னைப் போலவே
யோசிக்கும் சில ஆட்களைப் பார்த்தேன். அவர்களும் பிரச்சினைகளிலிருந்து எப்படியாவது தப்பிக்க நினைத்தார்கள்.நான் பார்த்த விஷயங்களையும் கேட்ட விஷயங்களையும் வைத்துப் பார்த்தபோது, சாத்தானின் கையில்தான் இந்த உலகம் இருக்கிறதென்று பைபிள் சொல்வது எனக்கு நியாயமாகப் பட்டது. ‘ஆனால், கடவுள் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்? அவர் ஏன் எதையும் தடுக்கவில்லை?’ என்று யோசித்தேன். அதற்குப் பதிலைத் தெரிந்துகொள்ள துடித்தேன்.
சில மாதங்களில், எனக்குப் பதில் கிடைத்தது. போகப்போக, நான் நிறைய நல்ல ஆட்களோடு பழகினேன். அவர்கள் எல்லாரும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒரே உண்மையான கடவுளுக்கு விசுவாசமாக இருந்தார்கள். அதனால் அவர்களை எனக்கு ரொம்பப் பிடித்துப்போய்விட்டது.
வட அயர்லாந்து—“குண்டுகளும் தோட்டாக்களும் பாயும் பூமி”
நான் லண்டனுக்குத் திரும்பி வந்த பிறகு என் ஃப்ரெண்டின் அம்மாவைப் போய்ப் பார்த்தேன். அவர் எனக்கு ஒரு பைபிளைக் கொடுத்தார். பிறகு, நெதர்லாந்தில் இருக்கும் ஆம்ஸ்டர்டாமுக்குப் போனேன். அங்கே ஒரு தெருவிளக்குக்குக் கீழ் உட்கார்ந்து அந்த பைபிளை நான் படித்துக்கொண்டிருந்தேன். அதை ஒரு யெகோவாவின் சாட்சி பார்த்தார். பைபிளைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள அவர் எனக்கு உதவினார். அதன் பிறகு, அயர்லாந்தில் இருக்கும் டப்ளினுக்குப் போனேன். அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அதன் வாசல்கதவைத் தட்டினேன். அங்குதான் ஆர்த்தர் மாத்யூஸ் என்ற சகோதரரைப் பார்த்தேன். அவர் ரொம்ப அனுபவமுள்ள ஒரு சகோதரர். எனக்கு பைபிளைப் பற்றிச் சொல்லித்தர முடியுமா என்று அவரிடம் கேட்டேன், அவரும் ஒத்துக்கொண்டார்.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்கள், பத்திரிகைகள் என்று எல்லாவற்றையும் விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தேன். அதேசமயத்தில், பைபிளையும் படித்தேன். அதெல்லாம் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது! கூட்டங்களில் ஒரு விஷயத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ரொம்ப காலமாக பெரிய பெரிய அறிவாளிகள் பதில் தேடிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்குப் பிள்ளைகள்கூட பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்! ‘நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்? கடவுள் யார்? செத்த பிறகு என்ன நடக்கிறது?’ போன்ற கேள்விகளுக்கெல்லாம் அவர்கள் பதில் சொன்னார்கள். எனக்கு ஃப்ரெண்ட்ஸ் என்றால் அது யெகோவாவின் சாட்சிகள்தான். அவர்களை மட்டுமே ஃப்ரெண்ட்ஸாக வைத்துக்கொள்வது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது. ஏனென்றால், அந்த நாட்டில் வேறு யாரையுமே எனக்குத் தெரியாது. யெகோவாவை நேசிக்கவும், அவருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ளவும் அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.
நைஜலும் டெனிஸும் நானும்
1972-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு பயனியர் சேவையை ஆரம்பித்தேன். அதன் பிறகு, வட அயர்லாந்தில் நூரி என்ற இடத்திலிருந்த ஒரு குட்டி சபைக்குப் போனேன். மலையோரமாக வாடகைக்கு ஒரு வீடு எடுத்தேன். அந்த வீட்டுக்குப் பக்கத்திலிருந்த வயலில் நிறைய மாடுகள் இருக்கும். சபையில் ஏதாவது பேச்சு நியமிப்பு கிடைத்தால், தயாரித்துவிட்டு, அந்த மாடுகளுக்கு முன்னால்தான் பேசிப் பார்ப்பேன். அந்த மாடுகளும் அசைபோட்டுக்கொண்டே நான் பேசுவதைக் கவனமாகக் கேட்பதுபோல் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும்! பேச்சு எப்படி இருந்தது என்றெல்லாம் அந்த மாடுகள் சொல்லாது, ஆனால் சபையாரைப் பார்த்துப் பேச அந்த மாடுகளை வைத்துக் கற்றுக்கொண்டேன். 1974-ல் நான் விசேஷப் பயனியராக ஆனேன். என்னோடு நைஜல் பிட் என்ற சகோதரரும் நியமிக்கப்பட்டார். இப்போதுவரை நாங்கள் இரண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!
அந்தச் சமயத்தில் வட அயர்லாந்தில் எங்கு பார்த்தாலும் அடிதடியும் சண்டையுமாக இருந்தது. அதனால், சிலர் வட
அயர்லாந்தை “குண்டுகளும் தோட்டாக்களும் பாயும் பூமி” என்று சொன்னார்கள். தெருச் சண்டை நடப்பது, மறைந்திருந்து தாக்குவது, துப்பாக்கி சூடு நடப்பது, காரில் குண்டு வைப்பது... இதெல்லாம் சர்வசாதாரணமாக இருந்தன. அதுவும், இதெல்லாம் அரசியல் பெயரிலும் மதத்தின் பெயரிலும் நடந்தன. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் அரசியலில் எந்தப் பக்கமும் சாய மாட்டார்கள் என்பது புராட்டஸ்டன்ட் பிரிவினருக்கும் கத்தோலிக்கப் பிரிவினருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், சாட்சிகளால் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் பிரசங்க வேலையைச் செய்ய முடிந்தது. ஊழியத்தில் நாங்கள் பார்த்த ஆட்களுக்கு எங்கே, எப்போது பிரச்சினை வெடிக்கும் என்று நன்றாகத் தெரிந்திருந்தது. நாங்கள் அங்கே போய் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அதைப் பற்றி எங்களுக்குச் சொல்லிவிடுவார்கள்.இருந்தாலும், எங்களுக்குச் சில ஆபத்துகள் வந்தன. ஒருநாள் நானும் டெனிஸ் காரகன் என்ற பயனியர் சகோதரரும் சேர்ந்து சாட்சிகளே இல்லாத ஒரு ஊருக்குப் போய் ஊழியம் செய்தோம். அதற்குமுன் ஒரேவொரு தடவைதான் அங்கு போயிருந்தோம். நாங்கள் ஒரு காஃபி ஷாப்பில் இருந்தபோது ஒரு பெண் எங்களைப் பார்த்து நாங்கள் ரகசிய பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் என்று சொல்லிவிட்டார். ஒருவேளை நானும் டெனிஸும், அயர்லாந்துக்காரர்களைப் போல் ஆங்கிலம் பேசாமல் பிரிட்டிஷ்காரர்களைப் போல் பேசியதால் அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதைக் கேட்டதும் எங்களுக்கு ‘பக்’ என்றாகிவிட்டது. ஏனென்றால், பிரிட்டிஷ் ராணுவ வீரர்களிடம் யாராவது சிரித்துப் பேசினால்கூட போதும், போட்டுத் தள்ளிவிடுவார்கள் அல்லது முட்டியில் சுட்டுவிடுவார்கள். நாங்கள் வெளியில் வந்து குளிரில் தனியாக பஸ்ஸுக்காக நின்றுகொண்டிருந்தபோது, அந்த காஃபி ஷாப்புக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது. எங்கள்மேல் பழிபோட்ட அந்தப் பெண் வெளியே வந்து, அந்தக் காரில் இருந்த இரண்டு ஆட்களிடம் ஏதோ ஆவேசமாகப் பேசினார், அதுவும் எங்களைக் கைகாட்டிப் பேசினார்! அதற்குப் பிறகு, அந்தக் கார் மெதுவாக எங்களிடம் வந்தது. பஸ் எப்போது வருமென்று அந்த ஆட்கள் எங்களிடம் கேட்டார்கள். பஸ் வந்ததும், டிரைவரிடம் அவர்கள் பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எங்களுக்குக் கேட்கவில்லை. பஸ்ஸில் வேறு யாருமே இல்லாததால், ஊருக்கு வெளியில் கூட்டிக்கொண்டுபோய் எங்களுக்குச் சமாதி கட்டப்போகிறார்கள் என்று நினைத்தோம். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால், பஸ்ஸிலிருந்து இறங்கும்போது நான் டிரைவரிடம், “அந்த இரண்டு ஆட்கள் வந்தார்களே, அவர்கள் எங்களைப் பற்றி ஏதாவது கேட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும், அவர்களிடம் சொல்லிவிட்டேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒன்றும் ஆகாது” என்று சொன்னார்.
மார்ச் 1977-ல் எங்களுக்குக் கல்யாணமானபோது
1976-ல் டப்ளினில் ஒரு மாவட்ட மாநாடு a நடந்தது. அங்குதான் பாலீன் லோமாக்ஸ் என்ற சகோதரியைப் பார்த்தேன். அவர் இங்கிலாந்தில் விசேஷப் பயனியராகச் சேவை செய்துகொண்டிருந்தார். அவர் யெகோவாவை ரொம்ப நேசித்தார், பணிவாகவும் பாசமாகவும் நடந்துகொண்டார். அவரும் அவருடைய தம்பி ரேயும் சின்ன வயதிலிருந்தே யெகோவாவை வணங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு வருஷத்துக்குப் பிறகு பாலீனும் நானும் கல்யாணம் செய்துகொண்டோம். பிறகு, வட அயர்லாந்தில் இருக்கும் பாலிமீனா என்ற இடத்தில் விசேஷப் பயனியராகச் சேவை செய்தோம்.
பெல்ஃபாஸ்ட், லன்டன்டெரி மாதிரியான ஆபத்தான இடங்களில் கொஞ்ச நாளுக்கு நாங்கள் வட்டார ஊழியம் செய்தோம். அங்கிருந்த சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தைப் பார்த்து நாங்கள் அசந்துபோனோம். அவர்கள் தங்களுடைய மனதில் ஊறிப்போயிருந்த மத நம்பிக்கைகளையும் தப்பெண்ணங்களையும் வெறுப்பையும் விட்டுவிட்டு யெகோவாவுக்குச் சேவை செய்துகொண்டிருந்தார்கள். யெகோவா அவர்களை எந்தளவுக்குப் பாதுகாத்தார், எந்தளவுக்கு ஆசீர்வதித்தார் என்றெல்லாம் நாங்கள் கண்ணாரப் பார்த்தோம்!
நான் பத்து வருஷம் அயர்லாந்தில் இருந்தேன். பிறகு 1981-ல், கிலியட் பள்ளியின் 72-வது வகுப்பில் நாங்கள் இரண்டு பேரும் கலந்துகொண்டோம். பட்டம் வாங்கிய பிறகு, மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த சியர்ரா லியோனுக்கு அனுப்பப்பட்டோம்.
சியர்ரா லியோன்—வறுமையின் மத்தியிலும் விசுவாசம்
நாங்கள் ஒரு மிஷனரி இல்லத்தில் தங்கினோம். எங்களோடு 11 மிஷனரிகள் தங்கியிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் ரொம்ப தங்கமானவர்கள். எங்கள் எல்லாருக்கும் சேர்த்து ஒரு சமையலறை, மூன்று கழிவறைகள், இரண்டு குளியல் அறைகள், ஒரு டெலிபோன், ஒரு வாஷிங் மெஷின், ஒரு டிரையர் இருந்தன. அங்கே அடிக்கடி கரெண்ட் போய்விடும், எப்போது போகும் என்று யாருக்கும் தெரியாது. வீட்டின் கூரையில் எலிகளின் பட்டாளமே இருக்கும், அடித்தளத்தில் நல்ல பாம்புகள் அடிக்கடி வந்துபோகும்.
பக்கத்திலிருந்த கினியில் நடந்த மாநாட்டுக்குப் போவதற்காக ஆற்றைக் கடந்தோம்
எல்லா வசதிகளோடும் நாங்கள் வாழவில்லை என்றாலும், ஊழியத்தை ரொம்ப சந்தோஷமாகச் செய்தோம். மக்கள் பைபிளை மதித்தார்கள், நாங்கள் சொல்வதை ஆர்வமாகக் கேட்டார்கள். நிறைய பேர் பைபிளைப் படித்து யெகோவாவின்
சாட்சியாக ஆனார்கள். ஊர் மக்கள் என்னை “மிஸ்டர் ராபர்ட்” என்று கூப்பிடுவார்கள், பாலீனை “மிசஸ் ராபர்ட்” என்று கூப்பிடுவார்கள். கொஞ்ச நாளுக்குப் பிறகு, கிளை அலுவலகத்தில் எனக்கு நிறைய வேலைகளைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதனால், என்னால் ஊழியத்துக்கு அவ்வளவாகப் போக முடியவில்லை. ஆனால், பாலீன் போனாள். அதனால், ஊர் மக்கள் பாலீனை “மிசஸ் பாலீன்” என்றும் என்னை “மிஸ்டர் பாலீன்” என்றும் கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அதைக் கேட்கும்போது பாலீனுக்கு குஷியாகிவிடும்!சியர்ரா லியோனில் ஊழியத்துக்குப் புறப்பட்டபோது
நிறைய சகோதர சகோதரிகள் ஏழைகளாக இருந்தார்கள். ஆனால், யெகோவா அவர்களுடைய தேவைகளை எப்போதுமே கவனித்துக்கொண்டார், சிலசமயம் அற்புதமான விதத்தில்கூடக் கவனித்துக்கொண்டார். (மத். 6:33) ஒரு சகோதரி என் ஞாபகத்துக்கு வருகிறார். அவருக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் அந்த நாளுக்குத் தேவையான சாப்பாடு வாங்கத்தான் காசு இருந்தது. ஆனாலும், மலேரியாவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த இன்னொரு சகோதரருக்கு அந்தக் காசைக் கொடுத்துவிட்டார். ஏனென்றால், மருந்து வாங்கக்கூட அந்தச் சகோதரரிடம் பணம் இல்லை. அதே நாள், ஒரு பெண் அந்தச் சகோதரியிடம் வந்து ஹேர் ஸ்டைல் செய்யச் சொல்லிக் காசு கொடுத்தாள். இதை அந்தச் சகோதரி சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை. இந்த மாதிரி நிறைய நடந்திருக்கிறது.
நைஜீரியா—புது கலாச்சாரத்தைக் கற்றுக்கொண்டோம்
நாங்கள் ஒன்பது வருஷங்களாக சியர்ரா லியோனில் இருந்தோம். அதன் பிறகு, நைஜீரியா பெத்தேலுக்கு அனுப்பப்பட்டோம். அது ஒரு பெரிய கிளை அலுவலகம். சியர்ரா லியோனில் நான் பார்த்த அதே ஆபீஸ் வேலையைத்தான் அங்கும் செய்தேன். ஆனால், பாலீனுக்கு அது ஒரு பெரிய மாற்றமாக இருந்தது, கஷ்டமாகவும் இருந்தது. ஏனென்றால், முன்பு ஒவ்வொரு மாதமும் 130 மணிநேரம் ஊழியம் செய்தாள், நல்லநல்ல பைபிள் படிப்புகளையும் நடத்தினாள். ஆனால் இங்கு, கிழிந்த துணிமணிகளை நாள் முழுக்கத் தைப்பதுதான் அவளுடைய வேலை. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அவளுக்குக் கொஞ்சம் காலம் எடுத்தது. ஆனால், அவள் செய்த வேலையை மற்றவர்கள் எந்தளவுக்கு உயர்வாகப் பார்த்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். அதோடு, பெத்தேலில் இருந்த மற்றவர்களை எப்படியெல்லாம் உற்சாகப்படுத்தலாம் என்று யோசித்து யோசித்து உற்சாகப்படுத்தினாள்.
நைஜீரிய நாட்டு கலாச்சாரம் எங்களுக்கு ரொம்ப புதிதாக இருந்தது, நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒருசமயம், ஒரு சகோதரர் என் ஆபீசுக்கு வந்து, பெத்தேலுக்குப் புதிதாக வந்திருந்த ஒரு சகோதரியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தச் சகோதரிக்குக் கை கொடுக்கலாம் என்று போனபோது திடீரென்று என் காலில் விழுந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! இரண்டு வசனங்கள்தான் என் ஞாபகத்துக்கு வந்தன. ஒன்று அப்போஸ்தலர் 10:25, 26, இன்னொன்று வெளிப்படுத்துதல் 19:10. ‘இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லிவிடலாமா?’ என்று என் மனதில் யோசித்துக்கொண்டிருந்தேன். அதேசமயம், இப்போது அவர் பெத்தேலுக்கு வந்திருக்கிறார் என்றால் இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று அவருக்குத் தெரிந்திருக்கும் என்றும் யோசித்தேன்.
எனக்கு ரொம்ப தர்மசங்கடமாகிவிட்டது, அதனால் அந்தச் சகோதரியிடம் என்னால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. அதன் பிறகுதான் நான் ஆராய்ச்சி செய்து ஒரு விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். அந்த நாட்டில் சில இடங்களில் மற்றவர்களுடைய காலில் விழும் பழக்கம் அப்போதும் இருந்ததைத் தெரிந்துகொண்டேன். ஆண்களும் அப்படிச் செய்வது வழக்கமாக இருந்தது. மற்றவர்களை வணங்குவதற்காக அல்ல, அவர்களுக்கு மரியாதை காட்டுவதற்காகத்தான் அப்படிச் செய்தார்கள். 1 சா. 24:8) நல்லவேளை, அந்தச் சகோதரியிடம் நான் எதுவும் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் அவருடைய மனதை ரொம்ப கஷ்டப்படுத்தியிருப்பேன்.
பைபிளில்கூட இதுபோல் சில உதாரணங்கள் இருக்கின்றன. (நைஜீரியாவில் பயங்கர விசுவாசத்தைக் காட்டிய நிறைய பேரை நாங்கள் சந்தித்தோம். அவர்களில் ஒருவர்தான் ஐசாயா ஆடக்போனே. b இள வயதில் அவர் சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஆனால் அதன் பிறகு அவருக்குத் தொழுநோய் இருப்பது தெரியவந்தது. அதனால், அவரைத் தொழுநோயாளிகளின் முகாமுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். அங்கே அவர் மட்டும்தான் யெகோவாவின் சாட்சி. அவருக்கு நிறைய எதிர்ப்பு வந்தது. ஆனாலும், சத்தியத்தை ஏற்றுக்கொள்ள 30-க்கும் அதிகமான தொழுநோயாளிகளுக்கு உதவி செய்தார். அங்கு ஒரு சபையையே உருவாக்கினார்.
கென்யா—சகோதரர்கள் என்னிடம் பொறுமையாக நடந்துகொண்டார்கள்
கென்யாவில் அநாதையாக இருந்த குட்டி காண்டாமிருகத்தைப் பார்த்தபோது
1996-ல், கென்யா கிளை அலுவலகத்தில் சேவை செய்ய நாங்கள் நியமிக்கப்பட்டோம். ஆரம்பத்தில் நான் சொன்ன அனுபவத்துக்குப் பிறகு இப்போதுதான் முதல் தடவையாக அந்த நாட்டுக்குப் போனேன். நாங்கள் பெத்தேலில் தங்கியிருந்தோம். பெத்தேலை சுற்றிப்பார்க்க நிறைய பேர் வந்தார்கள். ஆனால், ஸ்பெஷல் விருந்தாளிகள் யார் தெரியுமா? குரங்குகள்! சகோதரிகள் ஏதாவது பழங்களைக் கொண்டுபோனால் அவ்வளவுதான், அந்தக் குரங்குகள் ‘கைவரிசையைக் காட்டிவிடும்’! ஒருநாள், பெத்தேலில் இருந்த ஒரு சகோதரி தன்னுடைய ஜன்னலைத் திறந்து வைத்திருந்தார். அவர் திரும்பிவந்து பார்த்தபோது, குரங்கின் குடும்பம் மொத்தமும் அங்குதான் இருந்தது! அங்கிருந்த சாப்பாட்டையெல்லாம் அந்தக் குரங்குகள் ஜாலியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தன. அதைப் பார்த்ததும் அந்தச் சகோதரி அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினார். அந்தக் குரங்குகளும் அலறியடித்துக்கொண்டு ஜன்னல் வழியாகக் குதித்து ஓடிவிட்டன.
நானும் பாலீனும் ஸ்வாஹிலி மொழி சபைக்குப் போனோம். கொஞ்ச நாளிலேயே, சபை புத்தகப் படிப்பை (இப்போது, சபை பைபிள் படிப்பு என்று சொல்கிறோம்) நடத்தும்படி என்னிடம் சொன்னார்கள். ஆனால், அந்தச் சமயத்தில் ஸ்வாஹிலி மொழி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. அதனால், படிக்கப்போவதை முன்கூட்டியே தயாரித்து வைத்துவிடுவேன். அப்போதுதான், அதில் இருக்கும் கேள்விகளை என்னால் சரியாக வாசிக்க முடியும். பதில் சொல்கிறவர்கள் புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றி சொன்னால்கூட எனக்குப் புரியாது. எனக்கு ஒரே சங்கடமாக இருக்கும்! அதேசமயத்தில், சகோதர சகோதரிகளைப் பார்க்கும்போது ரொம்ப பாவமாக இருக்கும். நான் படிப்பு நடத்துவதை அவர்கள் பொறுமையாகவும் மனத்தாழ்மையாகவும் சகித்துக்கொண்டார்கள். அது என் மனதை ரொம்பவும் தொட்டது.
அமெரிக்கா—செழிப்பின் மத்தியிலும் விசுவாசம்
கிட்டத்தட்ட ஒரு வருஷம் நாங்கள் கென்யாவில் இருந்தோம். அதன் பிறகு, 1997-ல் நியு யார்க்கில் புருக்லினில் இருக்கும் பெத்தேலுக்கு எங்களைக் கூப்பிட்டார்கள். இந்தத் தடவை செல்வச் செழிப்பான நாட்டில் சேவை செய்தோம். இந்த மாதிரி நாடுகளில்கூட ஏதாவது பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். (நீதி. 30:8, 9) ஆனால் இங்கேயும், பயங்கர விசுவாசத்தைக் காட்டும் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய நேரத்தையும் சொத்துப்பத்துகளையும் பயன்படுத்தி பெரிய ஆளாக வேண்டுமென்று நினைப்பதில்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவின் அமைப்பில் நடக்கும் வேலையை ஆதரிப்பதற்காக அதையெல்லாம் பயன்படுத்துகிறார்கள்.
இத்தனை வருஷமாக, வேறுவேறு சூழ்நிலைகளிலும் யெகோவாவின் சாட்சிகள் எவ்வளவு விசுவாசமாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். அயர்லாந்தில், உள்ளூர் கலவரம் நடந்தபோதும் அவர்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள். ஆப்பிரிக்காவில், வறுமையில் இருந்தபோதும்... யெகோவாவின் சாட்சிகளே இல்லாத இடங்களில் இருந்தபோதும்... விசுவாசத்தைக் காட்டினார்கள். அமெரிக்காவில், செழிப்பான சூழ்நிலையிலும் விசுவாசத்தைக் காட்டுகிறார்கள். இப்படி, எல்லா விதமான சூழ்நிலைகளிலும் தன்மீது அன்பு காட்டுகிறவர்களை யெகோவா பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷப்படுவார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
வார்விக் பெத்தேலில் பாலீனும் நானும்
வருஷங்கள் வேகமாக ஓடிவிட்டன. ‘நெசவுத் தறியைவிட வேகமாக ஓடிவிட்டன.’ (யோபு 7:6) இப்போது நாங்கள் நியு யார்க்கில் வார்விக்கில் இருக்கும் உலகத் தலைமை அலுவலகத்தில் சேவை செய்கிறோம். ஒருவர்மேல் ஒருவர் உண்மையான அன்பு காட்டுகிற சகோதர சகோதரிகளோடு சேர்ந்து வேலை செய்யும் பெரிய பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நம் ராஜா இயேசு கிறிஸ்துவை ஆதரிப்பதற்காக எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதை நினைக்கும்போது சந்தோஷமாகவும், மனநிறைவாகவும் இருக்கிறது. விசுவாசமாக இருக்கும் அத்தனை பேருக்கும் இயேசு கிறிஸ்து சீக்கிரத்தில் பலன் கொடுப்பார்!—மத். 25:34.
a மண்டல மாநாடுகளைத்தான் அப்போது மாவட்ட மாநாடுகள் என்று சொன்னோம்.
b ஐசாயா ஆடக்போனேயின் வாழ்க்கை சரிதையை 1998 காவற்கோபுரம், ஏப்ரல் 1 இதழில் பக்கங்கள் 22-27-ல் பாருங்கள். அவர் 2010-ல் இறந்துவிட்டார்.