பார்வை இல்லாதவர்கள் பார்த்த அன்பு
யோமாராவும் அவளுடைய இரண்டு தம்பிகளான மார்சீலோவும் ஐவரும், குவாதமாலாவில் இருக்கும் ஒரு சின்னக் கிராமத்தில் இருக்கிறார்கள். முதலில் யோமாரா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு அவளுடைய தம்பிகளும் படிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் மூன்று பேருக்குமே கண் தெரியாது, பிரெயில் மொழியைப் படிக்கவும் தெரியாது. அதனால், அவர்களுக்கு பைபிளைச் சொல்லிக்கொடுத்த சகோதரரே பாடத்திலுள்ள பாராக்களையும் வசனங்களையும் வாசித்துக் காட்டுவார்.
கூட்டங்களுக்குப் போவதும் அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால், அவர்களுடைய வீட்டிலிருந்து ராஜ்ய மன்றத்துக்குப் போக 40 நிமிஷம் ஆகும். அவ்வளவு தூரம் அவர்களால் தனியாகப் போக முடியவில்லை. அதனால், சபையில் இருந்த சகோதரர்கள் அவர்களை எல்லா கூட்டங்களுக்கும் கூட்டிக்கொண்டு போனார்கள். வார நாளில் நடக்கும் கூட்டத்தில் மாணாக்கர் நியமிப்புகளைச் செய்வதுகூட அந்த மூன்று பேருக்கும் சவாலாக இருந்தது. அதனால், எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து பேசுவதற்கு அல்லது வாசிப்பதற்கு சகோதரர்கள் அவர்களுக்கு உதவி செய்தார்கள்.
மே 2019-லிருந்து அவர்களுடைய கிராமத்திலேயே கூட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. அதற்குள், ஒழுங்கான பயனியர்களாக இருந்த ஒரு தம்பதி அந்தக் கிராமத்துக்குக் குடிமாறி வந்திருந்தார்கள். பிரெயில் மொழியை எழுதவும் படிக்கவும் அந்த மூன்று பேருக்கும் எப்படியாவது சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று அந்தத் தம்பதி முடிவு செய்தார்கள். ஆனால், அவர்களுக்கே அந்த மொழி தெரியாது. அதனால், ஒரு லைப்ரரிக்குப் போய் பிரெயில் மொழியைக் கற்றுக்கொண்டார்கள், அதை எப்படிச் சொல்லிக்கொடுப்பது என்றும் கற்றுக்கொண்டார்கள்.
ஒரு சபைக் கூட்டத்தில் மார்சீலோ பதில் சொல்கிறார்
சில மாதங்களிலேயே யோமாராவும் அவளுடைய தம்பிகளும் பிரெயிலை நன்றாக வாசிக்கக் கற்றுக்கொண்டார்கள். யெகோவாவுடன் இன்னும் நெருக்கமாவதற்கு அது அவர்களுக்கு உதவியது. a இப்போது அவர்கள் மூன்று பேரும் ஒழுங்கான பயனியர்களாக இருக்கிறார்கள். மார்சீலோ உதவி ஊழியராக இருக்கிறார். இவர்கள் யெகோவாவுக்கு சுறுசுறுப்பாகச் சேவை செய்வதைப் பார்த்து மற்றவர்களும் அதேபோல் செய்கிறார்கள்.
யோமாராவும் அவளுடைய தம்பிகளும், சகோதர சகோதரிகள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள். “நாங்கள் சாட்சிகளை சந்தித்த முதல் நாளிலிருந்தே அவர்கள் எங்கள்மேல் உண்மையான அன்பைக் காட்டியிருக்கிறார்கள்” என்று யோமாரா சொல்கிறாள். “எங்களுடைய சபையில் எங்களுக்கு நல்லநல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அன்பையும் பாசத்தையும் கொட்டுகிற ஒரு உலகளாவிய குடும்பத்தில் இப்போது நாங்களும் ஒரு பாகமாக இருக்கிறோம்” என்று மார்சீலோ சொல்கிறார். இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறப்போகும் நாளைத் தங்கள் கண்களாலேயே பார்ப்பதற்காக யோமாராவும் அவளுடைய தம்பிகளும் ஆசையாகக் காத்திருக்கிறார்கள்.—சங். 37:10, 11; ஏசா. 35:5.
a பார்வை இல்லாதவர்கள் அல்லது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பிரெயில் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதற்காக, பிரெயில் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஆங்கில சிற்றேடு தயாரிக்கப்பட்டிருக்கிறது.