Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 49

யெகோவா என் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பாரா?

யெகோவா என் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பாரா?

“நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள். என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். நான் அதைக் கேட்பேன்.” —எரே. 29:12.

பாட்டு 41 நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!

இந்தக் கட்டுரையில்... a

1-2. சிலசமயம் நம் ஜெபங்களுக்கு யெகோவா ஏன் பதில் கொடுக்காததுபோல் தோன்றலாம்?

 “யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படு. அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்” என்று பைபிள் சொல்கிறது. (சங். 37:4) இது எப்பேர்ப்பட்ட வாக்குறுதி! ஆனால் அதற்காக, நாம் கேட்பதையெல்லாம் யெகோவா உடனடியாக கொடுத்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாமா? இதைப் பற்றி நன்றாக யோசித்துப்பார்ப்பது நல்லது. இப்போது சில சூழ்நிலைமைகளைக் கவனியுங்கள்: கல்யாணமாகாத ஒரு சகோதரி, ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள ஆசைப்பட்டு, ஜெபம் செய்கிறார். பல வருஷங்கள் கடந்துபோகிறது, ஆனால், அதில் கலந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இளம் சகோதரர் ஒருவருக்கு தீராத வியாதி வந்துவிடுகிறது. ‘யெகோவாவே என்னைக் குணப்படுத்துங்கள், நான் உங்களுக்கு நிறைய செய்ய ஆசைப்படுகிறேன்’ என்று ஜெபம் செய்கிறார். ஆனால், அவருக்குப் பதில் கிடைக்கவில்லை. பிள்ளைகள் யெகோவாவை விட்டுவிட்டு போய்விடக் கூடாது என்று ஒரு பெற்றோர் ஜெபம் பண்ணுகிறார்கள். ஆனால், அவர்களுடைய பிள்ளைகள் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிடுகிறார்கள்.

2 ஒருவேளை நீங்களும் எதையாவது கேட்டு ஜெபம் செய்திருக்கலாம், ஆனால் பதில் கிடைக்காமல் போயிருக்கலாம். அதனால், ‘யெகோவா மற்றவர்களுடைய ஜெபங்களுக்கெல்லாம் பதில் கொடுக்கிறார், எனக்கு அவர் பதில் கொடுப்பதே இல்லை’ என்று உங்களுக்குத் தோன்றலாம். அல்லது, ‘நான் ஏதோ தவறு செய்திருப்பதால்தான் அவர் எனக்குப் பதில் தருவதில்லை’ என்ற முடிவுக்குக்கூட நீங்கள் வந்துவிடலாம். ஜானஸ் b என்ற சகோதரியும் அப்படித்தான் நினைத்தார். பெத்தேலில் சேவை செய்ய வேண்டும் என்று அவரும் அவருடைய கணவரும் ஆசைப்பட்டார்கள்; அதற்காக ஜெபம் செய்தார்கள். “சீக்கிரத்திலேயே பெத்தேலுக்கு எங்களைக் கூப்பிடுவார்கள் என்று நினைத்தேன்” என்கிறார் ஜானஸ். மாதங்கள் வருஷங்களாக உருண்டோடின. ஆனால், அவர்களுக்கு அழைப்பு வரவே இல்லை. அதைப் பற்றி ஜானஸ் சொல்கிறார்: “எனக்கு ரொம்ப கஷ்டமாகவும் குழப்பமாகவும் இருந்தது. பெத்தேலில் சேவை செய்ய ஆசைப்படுகிறோம் என்று குறிப்பாக சொல்லி ஜெபம் செய்தும், யெகோவா ஏன் எனக்குப் பதில் தரவில்லை என்று யோசித்தேன். ஒருவேளை, ‘யெகோவாவுக்கு என்மேல் கோபமோ?’ என்றுகூட நினைத்தேன்.”

3. இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

3 யெகோவா உண்மையிலேயே என்னுடைய ஜெபத்தைக் கேட்கிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு ஒருவேளை வரலாம். யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்த சிலருக்கும் இதே சந்தேகம் வந்தது. (யோபு 30:20; சங். 22:2; ஆப. 1:2) யெகோவா கண்டிப்பாக நம்முடைய ஜெபங்களைக் கேட்டு அதற்குப் பதில் கொடுப்பார் என்ற நம்பிக்கையை எப்படி வளர்த்துக்கொள்வது? (சங். 65:2) இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள மூன்று கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். (1) யெகோவா என்ன செய்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம்? (2) நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்? (3) நாம் ஜெபத்தில் கேட்கிற விஷயங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்குமா?

யெகோவா என்ன செய்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம்?

4. எரேமியா 29:12 சொல்வதுபோல் யெகோவா என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்?

4 நம்முடைய ஜெபங்களைக் கவனித்துக் கேட்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். (எரேமியா 29:12-ஐ வாசியுங்கள்.) தன்னை உண்மையாக வணங்குகிறவர்களை யெகோவாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் செய்யும் ஜெபங்களை அவர் கேட்காமல் இருக்கவே மாட்டார். (சங். 10:17; 37:28) ஆனால் அதற்காக, நாம் கேட்பதையெல்லாம் யெகோவா இப்போதே கொடுத்துவிடுவார் என்றும் அர்த்தம் கிடையாது. நாம் ஆசைப்படுகிற சில விஷயங்கள் நடப்பதற்காக, புதிய உலகம் வரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

5. நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பதற்கு முன்பு யெகோவா எதையெல்லாம் யோசித்துப்பார்க்கிறார்? விளக்குங்கள்.

5 நாம் கேட்கிற விஷயங்கள் தன்னுடைய விருப்பத்தோடு எப்படி ஒத்துப்போகிறது என்பதை யெகோவா பார்க்கிறார். (ஏசா. 55:8, 9) இந்தப் பூமியில் சந்தோஷமான ஒற்றுமையான மக்கள் வாழ வேண்டும் என்பதும், அவர்கள் தன்னுடைய ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பதும் யெகோவாவின் விருப்பம். ஆனால், மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்துகொண்டால், சந்தோஷமாக இருப்பார்கள் என்று சாத்தான் சொல்கிறான். (ஆதி. 3:1-5) அவன் சொல்வது பொய் என்பதை நிரூபிப்பதற்காக, மனிதர்கள் தங்களையே ஆட்சி செய்ய யெகோவா கொஞ்ச காலம் விட்டிருக்கிறார். ஆனால், மனித ஆட்சி ஏகப்பட்ட பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. (பிர. 8:9) ஒருவேளை, இப்போதே யெகோவா இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்துவிட்டால், ‘பரவாயில்லையே! மனிதர்கள் ஆட்சி செய்வதே நன்றாக இருக்கிறதே’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதனால்தான், சில பிரச்சினைகளை யெகோவா இப்போதே சரி செய்வது கிடையாது.

6. யெகோவா எப்போதுமே அன்பாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்?

6 ஒரேமாதிரியான ஜெபங்களுக்கு யெகோவா வித்தியாசமான பதில்களைக் கொடுக்கலாம். உதாரணத்துக்கு, எசேக்கியா ராஜா உடம்பு முடியாமல் போனபோது, தன்னைக் குணப்படுத்த சொல்லி யெகோவாவிடம் கெஞ்சினார். யெகோவாவும் அவரைக் குணப்படுத்தினார். (2 ரா. 20:1-6) ஆனால், அப்போஸ்தலன் பவுலுக்கு என்ன நடந்தது? தன்னுடைய உடலில் இருந்த ‘ஒரு முள்ளை,’ ஒருவேளை உடல்நல பிரச்சினையை, எடுத்துப்போட சொல்லி அவரும் யெகோவாவிடம் கெஞ்சினார். ஆனால் அவருக்கு அது சரி ஆகவில்லை. (2 கொ. 12:7-9) அப்போஸ்தலர்களான யாக்கோபு மற்றும் பேதுருவுக்கு என்ன ஆனது? அவர்கள் இரண்டு பேரையும் ஏரோது ராஜா கொலை செய்ய தீவிரமாக இருந்தான். அவர்களைக் காப்பாற்ற சொல்லி சபையில் இருந்த எல்லாரும் ஜெபம் செய்தார்கள். ஆனால், யாக்கோபை ஏரோது ராஜா கொலை செய்துவிட்டான்; பேதுருவையோ யெகோவா அற்புதமாக காப்பாற்றினார். (அப். 12:1-11) ‘யெகோவா ஏன் பேதுருவைக் காப்பாற்றினார், ஆனால் யாக்கோபைக் காப்பாற்றவில்லை?’ என்று நாம் யோசிக்கலாம். பைபிள் அதற்கு பதில் சொல்லவில்லை. c ஆனால், யெகோவாவின் அங்கீகாரம் யாக்கோபின் மேலும் இருந்தது பேதுருவின் மேலும் இருந்தது என்பது நமக்கு தெரியும். (வெளி. 21:14) அதுமட்டுமல்ல, யெகோவா “அநியாயமே செய்யாதவர்” என்பது நமக்கு நன்றாகத் தெரியும். (உபா. 32:4) சிலசமயம், நம் ஜெபங்களுக்கு நாம் எதிர்பார்க்கும் பதில்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், யெகோவா எப்போதுமே அன்பாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வார் என்று நாம் நம்புவதால், அவர் பதில் கொடுக்கும் விதத்தை நாம் கேள்வி கேட்பதில்லை.—யோபு 33:13.

7. நாம் என்ன செய்யக் கூடாது, ஏன்?

7 நம்முடைய சூழ்நிலையை மற்றவர்களுடைய சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இதை யோசித்துப்பாருங்கள்: ஒரு விஷயத்துக்காக நாம் ஜெபம் செய்திருக்கலாம், ஆனால் யெகோவா அதற்கு பதில் கொடுக்காமல் இருக்கலாம். அதேமாதிரியான ஒரு விஷயத்துக்காக இன்னொருவர் ஜெபம் செய்ததாகவும், அதற்கு யெகோவா பதில் கொடுத்ததாகவும் நாம் கேள்விப்படலாம். அப்படி ஒரு அனுபவம் சகோதரி ஆனாவுக்கு நடந்தது. அவருடைய கணவர் மேத்யூ புற்றுநோயால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அதேசமயத்தில், வயதான இரண்டு சகோதரிகளும் புற்றுநோயோடு போராடிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் மூன்று பேருக்காகவும் ஆனா ரொம்பவே உருக்கமாக ஜெபம் செய்தார். அந்த இரண்டு சகோதரிகள் குணமானார்கள். வருத்தமான விஷயம் என்னவென்றால், ஆனாவின் கணவர் இறந்துவிட்டார். ஒருவேளை, யெகோவாதான் அந்த இரண்டு சகோதரிகளையும் குணப்படுத்தி இருப்பாரோ என்று ஆரம்பத்தில் ஆனா யோசித்தார். ‘அப்படியென்றால், என் கணவரை யெகோவா ஏன் காப்பாற்றவில்லை?’ என்ற யோசனையும் அவருக்கு வந்தது. அந்த இரண்டு சகோதரிகள் எப்படிக் குணமானார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால், நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வு யெகோவாவிடம் இருக்கிறது என்பது மட்டும் நமக்கு தெரியும். அதுமட்டுமல்ல, இறந்துபோன தன் நண்பர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர யெகோவா ஏங்குகிறார் என்றும் தெரியும்.—யோபு 14:15.

8. (அ) ஏசாயா 43:2 சொல்வதுபோல், யெகோவா நமக்கு எப்படித் துணையாக இருக்கிறார்? (ஆ) சோதனைகள் வரும்போது ஜெபம் எப்படி உதவி செய்யும்? (பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ள ஜெபம் உதவும் என்ற வீடியோவைப் பாருங்கள்.)

8 யெகோவா எப்போதுமே நமக்குத் துணையாக இருப்பார். ஒரு அன்பான அப்பாவாக, நாம் வலியில் துடிப்பதைப் பார்த்துக்கொண்டு அவரால் சும்மா இருக்க முடியாது. (ஏசா. 63:9) இருந்தாலும், நமக்கு சோதனையே வராதபடி அவர் தடுத்து நிறுத்தவும் மாட்டார். சோதனைகள் ஆற்றைப் போல அல்லது நெருப்பைப் போல நம்மேல் பாய்ந்தாலும், நாம் அவற்றை ‘கடந்து போக’ அவர் உதவுவார். (ஏசாயா 43:2-ஐ வாசியுங்கள்.) அவருக்கும் நமக்கும் இடையில் இருக்கிற பந்தத்தை, இந்தமாதிரி சோதனைகள் கெடுத்துப்போட விடவே மாட்டார். தன்னுடைய சக்தியைக் கொடுத்து பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ள உதவுவார். (லூக். 11:13; பிலி. 4:13) அதனால், சகித்திருப்பதற்கும் அவருக்கு எப்போதும் உண்மையாக இருப்பதற்கும் நமக்கு என்ன தேவையோ அவற்றை யெகோவா தருவார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். d

நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

9. யாக்கோபு 1:6, 7 காட்டுவதுபோல், யெகோவா நமக்கு உதவி செய்வார் என்பதை நாம் ஏன் முழுமையாக நம்ப வேண்டும்?

9 நாம் அவரை முழுமையாக நம்ப வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (எபி. 11:6) சிலசமயங்களில் சோதனைகள் நம்மைத் திணறடிக்கலாம்; அவை நமக்கு முன்பாக ஒரு பெரிய மதிலைப் போல் நிற்கலாம். அப்போது யெகோவா உண்மையிலேயே நமக்கு உதவி செய்கிறாரா என்ற சந்தேகம்கூட வந்துவிடலாம். ஆனால், கடவுளுடைய சக்தியால் எப்பேர்ப்பட்ட ‘மதிலையும் தாண்ட’ முடியும் என்று பைபிள் சொல்கிறது. (சங். 18:29) அதனால், சந்தேகப்படுவதற்குப் பதிலாக முழு விசுவாசத்தோடு நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். அவர் கண்டிப்பாக நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பார் என்றும் நம்ப வேண்டும்.யாக்கோபு 1:6, 7-ஐ வாசியுங்கள்.

10. நாம் எப்படி ஜெபங்களுக்கு ஏற்றபடி நடந்துகொள்ளலாம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

10 நம்முடைய ஜெபங்களுக்கு ஏற்றபடி நாம் நடக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். இந்த சூழ்நிலைமையைக் கற்பனை செய்யுங்கள்: மாநாட்டில் கலந்துகொள்வதற்கு லீவ் கிடைக்க வேண்டுமென்று ஒரு சகோதரர் ஜெபம் செய்கிறார். இந்த ஜெபத்துக்கு யெகோவா எப்படிப் பதில் தருவார்? முதலாளியிடம் பேசுவதற்குத் தைரியத்தை யெகோவா தரலாம். ஆனால், அந்த சகோதரர்தான் முதலாளியிடம் போய் பேச வேண்டும். ஒருவேளை, முதலாளிக்கு அடிக்கடி அதைப் பற்றி அவர் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கலாம். அல்லது, கூடவேலை செய்யும் ஒருவரிடம் பேசி, வேலை செய்கிற நேரத்தில் அவர்களுக்குள் சில மாற்றங்களைச் செய்யவும் அவர் முயற்சி எடுக்கலாம். தேவைப்பட்டால், அந்த நாட்களுக்கான சம்பளத்தைக்கூட அவர் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கலாம்.

11. நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி நாம் ஏன் திரும்பத் திரும்ப ஜெபம் செய்ய வேண்டும்?

11 நம் பிரச்சினைகளைப் பற்றி நாம் திரும்பத் திரும்ப ஜெபம் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (1 தெ. 5:17) நாம் செய்யும் சில ஜெபங்களுக்கு உடனேயே பதில் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. இதைத்தான் இயேசுவின் வார்த்தைகளும் காட்டுகின்றன. (லூக். 11:9) ஆனால், நாம் சோர்ந்துபோக வேண்டிய அவசியம் இல்லை. நாம் திரும்பத் திரும்ப உருக்கமாக யெகோவாவிடம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். (லூக். 18:1-7) அப்படிக் கேட்பதன் மூலம், அந்த விஷயம் நமக்கு எந்தளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறோம். அதோடு, நமக்கு உதவி செய்ய யெகோவாவுக்கு சக்தி இருக்கிறது என்று நம்புவதையும் காட்டுகிறோம்.

நாம் ஜெபத்தில் கேட்கிற விஷயங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்குமா?

12. (அ) நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி என்ன, ஏன்? (ஆ) நாம் செய்யும் ஜெபங்கள் யெகோவாவுக்கு மதிப்பு காட்டுவதுபோல் இருக்கிறதா என்பதை எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்? (“ நான் செய்யும் ஜெபம் யெகோவாவுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் இருக்கிறதா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

12 நாம் செய்த ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், மூன்று கேள்விகளை நாம் யோசித்துப்பார்க்கலாம். முதல் கேள்வி: நான் சரியான விஷயத்துக்காக ஜெபம் செய்கிறேனா?’  பெரும்பாலும், நமக்கு எது நல்லதென்று நமக்கே தெரியும் என்று நினைப்போம். ஆனால், அது உண்மையிலேயே நமக்கு நல்லதாக இருக்காது. அல்லது, நாம் எதிர்பார்ப்பது போல் ஒரு பிரச்சினையை தீர்த்து வைக்க சொல்லி ஜெபம் செய்யலாம். ஆனால், அதற்கு வேறொரு நல்ல தீர்வு இருக்கலாம். அல்லது, நாம் கேட்கிற விஷயங்கள் யெகோவாவின் விருப்பத்துக்கு ஏற்றபடி இல்லாமல் இருக்கலாம். (1 யோ. 5:14) முதல் பாராவில் பார்த்த அந்த பெற்றோரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஜெபம் செய்தார்கள். அவர்கள் கேட்பது நியாயமாகத் தோன்றலாம். ஆனால், தனக்கு சேவை செய்ய சொல்லி யெகோவா யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார். நம் பிள்ளைகள் உட்பட, நாம் எல்லாருமே அவரை ஆசைப்பட்டு வணங்க வேண்டும் என்றுதான் அவர் எதிர்பார்க்கிறார். (உபா. 10:12, 13; 30:19, 20) அதனால், பெற்றோர்கள் அப்படி ஜெபம் செய்வதற்குப் பதிலாக, பிள்ளைகளுடைய மனதைத் தொடும் விதத்தில் கற்றுக்கொடுக்க உதவ சொல்லி யெகோவாவிடம் கேட்கலாம். அப்படிக் கற்றுக்கொடுத்தால், பிள்ளைகளுக்குத் தானாகவே யெகோவாமேல் அன்பு வளரும்; அவருடைய நண்பராக ஆசைப்படுவார்கள்.—நீதி. 22:6; எபே. 6:4.

13. எபிரெயர் 4:16 காட்டுவதுபோல், யெகோவா நமக்கு எப்போது உதவி செய்யலாம்? விளக்குங்கள்.

13 இரண்டாவது கேள்வி: என்னுடைய ஜெபத்துக்கு யெகோவா இப்போதே பதில் தர நினைக்கிறாரா?’  நம்முடைய ஜெபங்களுக்கு உடனேயே பதில் கிடைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படலாம். ஆனால் எப்போது பதில் கொடுத்தால் சரியாக இருக்கும் என்பது உண்மையிலேயே யெகோவாவுக்குத்தான் தெரியும். (எபிரெயர் 4:16-வாசியுங்கள்.) ஜெபத்துக்கு உடனேயே பதில் கிடைக்காதபோது, யெகோவா ‘முடியாது’ என்று சொல்வதாக நாம் நினைக்கலாம். ஆனால், ‘பொறுமையாக இரு! கொஞ்ச நாளில் நான் அதை செய்கிறேன்’ என்பது அவருடைய பதிலாக இருக்கலாம். நாம் முன்பு பார்த்த அந்த இளம் சகோதரரின் ஜெபத்தைப் பற்றி யோசித்துப்பாருங்கள். யெகோவா அவரை குணப்படுத்த வேண்டும் என்று அவர் ஜெபம் செய்தார். ஆனால், யெகோவா அவரை அற்புதமாகக் குணப்படுத்தினால் சாத்தான் என்ன சொல்வான்? யெகோவா அவரைக் குணப்படுத்தியதால்தான் அவர் தொடர்ந்து சேவை செய்கிறார் என்று குறை சொல்வான். (யோபு 1:9-11; 2:4) அதுமட்டுமல்ல, எல்லா வியாதிகளையும் சரி செய்ய யெகோவா ஒரு காலத்தை ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. (ஏசா. 33:24; வெளி. 21:3, 4) அதுவரை, யெகோவா நம்மை அற்புதமாக சுகப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்க முடியாது. அதனால், அந்த சகோதரர் அப்படி ஜெபம் செய்வதற்குப் பதிலாக, வியாதியை சகித்துக்கொள்வதற்கும், தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்வதற்கும் தேவையான பலத்தையும் மனநிம்மதியையும் கேட்கலாம்.—சங். 29:11.

14. சகோதரி ஜானஸின் உதாரணத்தில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

14 பெத்தேலில் சேவை செய்ய ஆசைப்பட்ட சகோதரி ஜானஸின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். தன்னுடைய ஜெபத்துக்கு யெகோவா எப்படி பதில் கொடுத்திருக்கிறார் என்பதை ஐந்து வருஷங்கள் கழித்து அவர் புரிந்துகொண்டார். “பதிலுக்காக நான் காத்துக்கொண்டிருந்த சமயத்தில் யெகோவா எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார். ஒரு நல்ல கிறிஸ்தவராக மாறுவதற்கு உதவினார். அவரை நான் இன்னும் அதிகமாக நம்ப வேண்டியிருந்தது. பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கும் விஷயத்தில், நான் இன்னும் முன்னேற வேண்டியிருந்தது. சூழ்நிலைமை எப்படி இருந்தாலும் சந்தோஷமாக இருப்பதற்கு நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது” என்று அவர் சொல்கிறார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு சகோதரி ஜானஸ்க்கும் அவருடைய கணவருக்கும் வட்டார சேவை செய்ய நியமிப்பு கிடைத்தது. கடந்துவந்த பாதையை நினைத்து ஜானஸ் இப்படி சொல்கிறார்: “என்னுடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்திருக்கிறார். ஆனால், நான் எதிர்பார்த்த விதத்தில் அல்ல. யெகோவா எவ்வளவு அழகான ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள எனக்குக் கொஞ்ச நாள் எடுத்தது. ஆனால் அவர் காட்டிய அன்புக்கும் இரக்கத்துக்கும் நான் நன்றியோடு இருக்கிறேன்.”

ஜெபத்தில் நீங்கள் கேட்ட ஒரு விஷயத்துக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், வேறு விஷயங்களுக்காக ஜெபம் செய்யுங்கள் (பாரா 15) f

15. ஏதோ ஒன்றை மட்டுமே ஜெபத்தில் கேட்டுக்கொண்டிருப்பதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)

15 மூன்றாவது கேள்வி: ‘ஏதோ ஒன்றை மட்டுமே கேட்டு ஜெபம் செய்துகொண்டிருக்கிறேனா?‘ சில விஷயங்களுக்காகக் குறிப்பாக ஜெபம் செய்வது நல்லதுதான். ஆனால், ஒரே விஷயத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது நல்லதல்ல. யெகோவாவின் விருப்பத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள மற்ற விஷயங்களையும் கேட்டு ஜெபம் செய்வது நல்லது. ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள ஆசைப்பட்ட சகோதரியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தேவை அதிகம் இருக்கிற இடத்தில் சேவை செய்ய ஆசைப்பட்டதால்தான் அந்த பள்ளியில் கலந்துகொள்ள அவர் நினைத்தார். அதற்காக ஜெபம் செய்வதோடு, ஊழியத்தை அதிகமாக செய்ய என்னவெல்லாம் வழி இருக்கிறது என்று காட்ட சொல்லி அவர் ஜெபம் செய்யலாம். (அப். 16:9, 10) பிறகு, ஜெபத்துக்கு ஏற்றபடி செயல்படலாம். அதாவது, வட்டாரக் கண்காணியிடம் தேவை அதிகம் இருக்கிற சபை ஏதாவது பக்கத்தில் இருக்கிறதா என்று கேட்கலாம். அல்லது, கிளை அலுவலகத்துக்குக்கூட அவர் எழுதிக் கேட்கலாம். e

16. நாம் எந்த விஷயத்தில் உறுதியாக இருக்கலாம்?

16 நாம் இதுவரை பார்த்தபடி அன்பான விதத்திலும் நியாயமான விதத்திலும் யெகோவா நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். (சங். 4:3; ஏசா. 30:18) ஆனால், சில சமயங்களில் நாம் எதிர்பார்த்த பதில் கிடைக்காமல் இருக்கலாம். அதற்காக, யெகோவா நம் ஜெபங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்க வேண்டாம். அவர் நம்மீது உயிரையே வைத்திருக்கிறார்; நம்மைக் கைவிடவே மாட்டார். (சங். 9:10) அதனால் “எப்போதும் அவர்மேல் நம்பிக்கை வையுங்கள்.” உங்கள் இதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும் அவர் முன் கொட்டிவிடுங்கள்.—சங். 62:8.

பாட்டு 43 நெஞ்சமெல்லாம் நன்றி!

a யெகோவா எப்போதும் அன்பான விதத்திலும் நியாயமான விதத்திலும் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பார். இதை உறுதியாக நம்புவதற்கு இந்தக் கட்டுரை உதவும்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

c பிப்ரவரி 2022 காவற்கோபுரத்தில் “யெகோவா எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்வார் என்று நம்புகிறீர்களா?” என்ற கட்டுரையில் பாராக்கள் 3-6-ஐ பாருங்கள்.

d கஷ்டமான சோதனைகளை சகித்துக்கொள்ள யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார் என்று தெரிந்துகொள்ள, பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ள ஜெபம் உதவும் என்ற வீடியோவை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.

e வேறொரு நாட்டில் போய் சேவை செய்ய நீங்கள் விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள, யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு என்ற புத்தகத்தில் 10-வது அதிகாரத்தில் பாராக்கள் 6-9-ஐப் பாருங்கள்.

f பட விளக்கம்: இரண்டு சகோதரிகள் ஜெபம் செய்துவிட்டு, ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பத்தைப் போடுகிறார்கள். ஒருவருக்கு அழைப்பு வருகிறது, இன்னொருவருக்கு வரவில்லை. அழைப்பு வராத சகோதரி சோர்ந்துபோய்விடவில்லை. அதற்குப் பதிலாக, அதிகமாக ஊழியம் செய்ய வாய்ப்புகளைக் காட்டச் சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார். பிறகு, தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்ய தனக்கு விருப்பம் இருக்கிறது என்று கிளை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதுகிறார்.