வாழ்க்கை சரிதை
யெகோவாவை நம்பியதால் பாதுகாப்பாக இருந்தேன்
உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று யாராவது என்னிடம் கேட்டால், “நான் யெகோவாவின் கையில் இருக்கும் ஒரு சூட்கேஸ் மாதிரி!” என்று சொல்வேன். நாம் எங்கெல்லாம் போகிறோமோ அங்கெல்லாம் நம்முடைய சூட்கேஸையும் தூக்கிக்கொண்டு போவோம். அதே மாதிரி, யெகோவாவும் அவருடைய அமைப்பும் எங்கெல்லாம் போக சொல்கிறார்களோ அங்கெல்லாம் நானும் போக ஆசைப்படுகிறேன். இதுவரை, ரொம்ப கஷ்டமான நியமிப்புகளை நான் செய்திருக்கிறேன்; சில ஆபத்துகளையும் சந்தித்திருக்கிறேன். அதுபோன்ற சமயங்களில் யெகோவாவை நம்பியிருப்பதுதான் பாதுகாப்பு என்பதைக் கற்றுக்கொண்டேன்.
யெகோவாவை தெரிந்துகொண்டேன், அவரை நம்ப ஆரம்பித்தேன்
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியிலிருந்த ஒரு சின்ன கிராமத்தில் 1948-ல் நான் பிறந்தேன். அந்தச் சமயத்தில், என்னுடைய சித்தப்பா முஸ்தஃபாவும் என்னுடைய அண்ணா வஹாபியும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். எனக்கு ஒன்பது வயது இருந்தபோது, என் அப்பா இறந்துவிட்டார். அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை; ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்பாவை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியும் என்று அப்போது என்னுடைய அண்ணன் சொன்னார். அது எனக்கு ஆறுதலாக இருந்தது. அதனால், நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். 1963-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போதுதான் என்னுடைய இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும்கூட ஞானஸ்நானம் எடுத்தார்கள்.
1965-ல் லாகோஸில், என்னுடைய அண்ணா வில்சனுடன் தங்கியிருந்தேன். அப்போது, இக்போபி சபையிலிருந்த ஒழுங்கான பயனியர்களோடு நிறைய நேரம் ஊழியம் செய்ய முடிந்தது. அவர்களோடு இருந்ததை நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். அவர்கள் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் யெகோவாவுக்கு சேவை செய்ததைப் பார்த்தபோது, எனக்கும் ஆசையாக இருந்தது. அதனால், 1968 ஜனவரி மாதத்தில் நானும் பயனியராக ஆனேன்.
பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்த சகோதரர் ஆல்பர்ட், இளைஞர்களுக்கு ஒரு விசேஷக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். வடக்கு நைஜீரியாவில் விசேஷ பயனியர்களுக்கான தேவை எவ்வளவு இருக்கிறது என்பதைப் பற்றி அந்தக் கூட்டத்தில் எடுத்து சொன்னார். “நீங்கள் இளைஞர்களாக இருக்கிறீர்கள். யெகோவாவுக்குக் கொடுப்பதற்கு உங்களிடம் நிறைய நேரமும் சக்தியும் இருக்கிறது. செய்ய வேண்டிய வேலையும் நிறைய இருக்கிறது!” என்று சொல்லி சகோதரர் ஏசா. 6:8.
ஆல்பர்ட் எங்களுக்குள் ஆர்வத் தீயை மூட்டிவிட்டார். ஏசாயா தீர்க்கதரிசியைப் போல், யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நானும் உடனேயே விண்ணப்பத்தை போட்டேன்.—1968-ன் மே மாதத்தில், வடக்கு நைஜீரியாவில் இருக்கிற கானோ என்ற ஊருக்கு என்னை விசேஷ பயனியராக நியமித்தார்கள். அந்தச் சமயத்தில் பயங்கரமான உள்நாட்டுப் போர் அங்கே நடந்துகொண்டிருந்தது. மக்கள் ரொம்ப அவதிப்பட்டார்கள்; நிறையப் பேர் இறந்துபோனார்கள். அந்த ஊருக்குப் போக வேண்டாம் என்று ஒரு சகோதரர் என்னிடம் அக்கறையோடு சொன்னார். ஆனால் நான் அவரிடம், “நீங்கள் என்மேல் நிறைய அன்பு வைத்திருப்பதால்தான் இப்படி சொல்கிறீர்கள் என்று தெரியும். ஆனால், நான் அங்கே போய் சேவை செய்ய வேண்டும் என்று யெகோவா நினைத்தால், அவர் கண்டிப்பாக என்கூட இருப்பார். எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று சொன்னேன்.
யெகோவாமேல் நம்பிக்கையோடு யுத்த பூமியில் சேவை
கானோவில் நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. உள்நாட்டுப் போரால் ஊரே நாசமாகியிருந்தது. ஊழியத்துக்குப் போகும்போது போரில் இறந்துபோயிருந்தவர்களின் பிணங்களைப் பார்த்தோம். கானோவில் நிறைய சபைகள் இருந்தாலும், அங்கே இருந்த சகோதரர்கள் வெவ்வேறு ஊர்களுக்குத் தப்பித்துப் போயிருந்தார்கள். நாங்கள் போயிருந்த சமயத்தில், 15 பிரஸ்தாபிகள்கூட அங்கே இல்லை. இருந்த சிலரும் ரொம்பவே பயந்துபோய், சோர்ந்துபோய் இருந்தார்கள். விசேஷ பயனியர்களாக நாங்கள் ஆறு பேர் அங்கே போய் இறங்கியபோது அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். நாங்கள் அவர்களை உற்சாகப்படுத்தினோம்; அவர்களுக்குத் தெம்பு கிடைத்தது. மறுபடியும் கூட்டங்களை நடத்துவதற்கும் ஊழியத்தை செய்வதற்கும் நாங்கள் அவர்களுக்கு உதவினோம். கானோவில் இருந்து ஊழிய அறிக்கைகளும் பிரசுர ஆர்டர்களும் அமைப்புக்குப் போக ஆரம்பித்தது.
விசேஷ பயனியர்களாக இருந்த நாங்கள் எல்லாரும் ஹவுசா மொழியைக் கற்றுக்கொண்டோம். சொந்த மொழியிலேயே நல்ல செய்தியைக் கேட்டதும் அந்த ஊர் மக்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். கானோவில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நம் ஊழியத்தை எதிர்த்தார்கள். அதனால் நாங்கள் ஜாக்கிரதையாக ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு தடவை, என்னையும் என்கூட ஊழியம் செய்துகொண்டிருந்த சகோதரரையும் கத்தி வைத்திருந்த ஒருவன் துரத்த ஆரம்பித்தான். நல்லவேளை, அவனைவிட எங்களால் வேகமாக ஓட முடிந்தது; நாங்கள் தப்பித்தோம்! இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும் யெகோவா எங்களுக்கு ‘பாதுகாப்பு தந்தார்’; கானோவில் பிரஸ்தாபிகளுடைய எண்ணிக்கையும் அதிகமானது. (சங். 4:8) இன்று, கிட்டத்தட்ட 500 பிரஸ்தாபிகள் அங்கே இருக்கிறார்கள்; 11 சபைகள் இருக்கின்றன.
நைஜரில் வந்த எதிர்ப்பு
நைஜரில் உள்ள நியாமேவில் விசேஷ பயனியராக சேவை செய்தபோது
நான் கொஞ்ச மாதங்கள்தான் கானோவில் இருந்தேன். 1968 ஆகஸ்ட் மாதத்தில் என்னை நியாமேக்கு போக சொன்னார்கள்.
அது நைஜர் நாட்டின் தலைநகரம். என்னோடு சேர்ந்து இன்னும் இரண்டு விசேஷ பயனியர்களும் வந்தார்கள். அந்த நாடு, மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. உலகத்தில் இருக்கிற ரொம்ப சூடான பகுதிகளில் அதுவும் ஒன்று என்று அங்கே போன பிறகுதான் தெரிந்தது. அந்த ஊரின் சூட்டையும் சமாளிக்க வேண்டியிருந்தது, அங்கே பேசப்பட்ட பிரெஞ்சு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கஷ்டங்கள் இருந்தாலும், யெகோவாவை நம்பியிருந்தோம்; அந்த ஊரிலிருந்த கொஞ்ச பிரஸ்தாபிகளோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். கொஞ்ச நாளிலேயே நியாமேயில் இருந்த படிக்க தெரிந்த எல்லாருக்கும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகத்தை எங்களால் கொடுக்க முடிந்தது. மக்களும் எங்களைத் தேடி வந்து அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு போவார்கள்!அந்த ஊரிலிருந்த அதிகாரிகளுக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பிடிக்கவில்லை என்பதை சீக்கிரத்தில் தெரிந்துகொண்டோம். 1969 ஜூலை மாதத்தில், அந்த நாட்டில் முதல் முதலில் வட்டார மாநாடு நடந்தது. கிட்டத்தட்ட 20 பேர் வந்திருந்தார்கள்; இரண்டு பேர் ஞானஸ்நானம் எடுக்க இருந்தார்கள். நாங்கள் அதற்காக ரொம்ப ஆசையாக காத்துக்கொண்டிருந்தோம். ஆனால், மாநாட்டின் முதல் நாளிலேயே போலீஸ் வந்து நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்கள். விசேஷ பயனியர்களையும் வட்டாரக் கண்காணியையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். ஸ்டேஷனில் வைத்து எங்களை விசாரித்துவிட்டு, அடுத்த நாளும் வர வேண்டும் என்று சொன்னார்கள். பெரிய பிரச்சினை வெடிக்கப்போகிறது என்பதை புரிந்துகொண்டு, ரகசியமாக ஞானஸ்நான பேச்சைக் கொடுப்பதற்கும் ஞானஸ்நானத்துக்கும் ஏற்பாடு செய்தோம். பக்கத்தில் இருந்த ஒரு ஆற்றில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தோம்.
கொஞ்சம் வாரங்களிலேயே அந்த அரசாங்கம் என்னையும் ஐந்து விசேஷ பயனியர்களையும் நாட்டை விட்டு போக சொன்னது. வெறும் 48 மணிநேரத்துக்குள் எங்களை கிளம்ப சொன்னது; அதுவும், எங்கள் சொந்த செலவில்! நாங்கள் அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிந்தோம். நைஜீரியாவில் இருந்த கிளை அலுவலகத்துக்குப் போனோம். அங்கே எங்களுக்குப் புதிய நியமிப்பு கிடைத்தது.
நைஜீரியாவில் இருந்த ஒரீசன்பாரே என்ற கிராமத்துக்கு அமைப்பு என்னைப் போக சொன்னது. அந்தக் கிராமத்தில் கொஞ்ச பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். அவர்களோடு ஊழியம் செய்வது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு கிளை அலுவலகத்தில் இருந்த சகோதரர்கள் என்னை மறுபடியும் நைஜர்க்கே போக சொன்னார்கள். முதலில் ரொம்ப ஆச்சரியமாகவும் பதட்டமாகவும் இருந்தது. ஆனால் நைஜரில் இருந்த சகோதரர்களை மறுபடியும் பார்க்கப் போவதை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
நைஜரின் தலைநகரமான நியாமேக்கு வந்துசேர்ந்தேன். அடுத்த நாள், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒரு தொழிலதிபரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று கண்டுபிடித்துவிட்டார். பைபிளைப் பற்றி நிறைய கேள்விகளைக் கேட்டார். நாங்கள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தோம். புகை பிடிக்கும் பழக்கத்தையும் அளவுக்கு அதிகமாக குடிக்கும் பழக்கத்தையும் அவர் விட்டுவிட்ட பிறகு ஞானஸ்நானம் எடுத்தார். நைஜர் நாட்டின் நிறைய பகுதிகளில் இருந்த சகோதர சகோதரிகளோடு ஊழிய செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சத்தியம் இங்கே மெதுமெதுவாக வளர ஆரம்பித்தது. நான் முதல் முதலில் அந்த நாட்டுக்கு வந்தபோது 31 சாட்சிகள்தான் இருந்தார்கள். ஆனால், அங்கிருந்து கிளம்பியபோது 69 சாட்சிகள் இருந்தார்கள்.
“கினியில் நம்முடைய வேலை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை”
1977 டிசம்பர் மாதத்தில் ஒரு பயிற்சிக்காக நைஜீரியாவுக்கு நான் போனேன். அது 3 வாரத்துக்கு நடந்தது. அதை முடித்த பிறகு கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சகோதர் மால்கம் வீகோ என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். சியர்ரா லியோன் கிளை
அலுவலகத்திலிருந்து அந்த கடிதம் வந்திருந்தது. அதில் வட்டார கண்காணியாக சேவை செய்ய ஒரு பயனியர் சகோதரர் தேவை என போட்டிருந்தது. அவர், கல்யாணம் ஆகாதவராகவும் ஆரோக்கியமானவராகவும் இருக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் பேச தெரிந்திருக்க வேண்டும் என்றும் போட்டிருந்தது. இந்த நியமிப்புக்காகத்தான் எனக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருப்பதாக சகோதரர் வீகோ சொன்னார். அந்த நியமிப்பு அவ்வளவு சுலபமாக இருக்காது என்றும் சொன்னார். அதனால், “இதை ஏற்றுக்கொள்ளும் முன்பு நன்றாக யோசித்து முடிவெடு” என்றார். அதற்கு, “யெகோவா என்னை அனுப்புவதால் நான் கண்டிப்பாக போவேன்” என்று உடனடியாக அவருக்கு சொன்னேன்.நான் சியர்ரா லியோனுக்கு போய் அங்கே இருந்த சகோதரர்களை சந்தித்தேன். கிளை அலுவலகத்தில் இருந்த ஒரு சகோதரர் என்னிடம், “கினியில் நம்முடைய வேலை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை” என்றார். கினியில் நடக்கும் வேலைகளைக் கவனிக்கிற பொறுப்பு சியர்ரா லியோன் கிளை அலுவலகத்துக்குத்தான் இருந்தது. ஆனால், கினியில் மோசமான அரசியல் சூழ்நிலை இருந்ததால், அங்கே இருந்த சகோதரர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. அமைப்பு சார்பாக ஒரு சகோதரரை அனுப்ப நிறைய முயற்சி எடுத்தார்கள்; ஆனால் முடியவில்லை. அதனால், கினி நாட்டின் தலைநகரமான கோனாக்ரீக்கு என்னை போக சொன்னார்கள். அங்கே போய் தங்குவதற்கு, அரசாங்க அனுமதி கிடைக்குமா என்று பார்க்க சொன்னார்கள்.
“யெகோவா என்னை அனுப்புவதால் நான் கண்டிப்பாக போவேன்”
நான் கோனாக்ரீக்கு வந்த பிறகு நைஜீரியா நாட்டின் தூதரகத்துக்குப் போனேன். அங்கே இருந்த அதிகாரியை சந்தித்து, கினியில் நான் ஊழியம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன். கினியில் தங்கினால் நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்றார் அவர். ஒருவேளை, அங்கே இருக்கிறவர்கள் என்னைக் கைதுகூட செய்துவிடலாம் என்றார். அதனால், “நைஜீரியாவுக்கே திரும்பி போய்விடுங்கள்; அங்கே ஊழியம் செய்யுங்கள்” என்று சொன்னார். ஆனால், “கினியில் தங்க வேண்டும் என்ற முடிவோடு நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னேன். அதனால், கினியில் இருந்த ஒரு அமைச்சருக்குக் கடிதம் எழுதி கொடுத்தார். அந்த கடிதத்தைப் பார்த்துவிட்டு அமைச்சர் எனக்கு உதவினார்.
கொஞ்ச நாளில் நான் சியர்ரா லியோன் கிளை அலுவலகத்துக்குத் திரும்பவும் போனேன். கினியில் நான் தங்குவதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்ததைப் பற்றி சகோதரர்களிடம் சொன்னேன். நான் எடுத்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்ததைப் பார்த்து அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
சியர்ரா லியோனில் வட்டார சேவை செய்தபோது
1978-1989 வரை, சியர்ரா லியோனில் இருக்கும் கினியில் வட்டாரக் கண்காணியாகவும் லைபீரியாவில் துணை வட்டாரக் கண்காணியாகவும் சேவை செய்தேன். ஆரம்பத்தில் எனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போனது. அதுவும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் இருந்தபோது அப்படி ஆனது. ஆனால், அங்கே இருந்த சகோதரர்கள் என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போவதற்கு அவர்களால் முடிந்த எல்லா முயற்சியையும் எடுத்தார்கள்.
ஒருசமயம் எனக்கு மலேரியாவும் குடல்புழு தொல்லையும் வந்தது. ரொம்ப மோசமான நிலைமைக்கு போய்விட்டேன். நான் செத்துவிட்டால் என்னை எங்கே புதைக்கலாம் என்றுகூட சகோதரர்கள் பேசிக்கொண்டார்களாம்! உடம்பு சரியான பிறகு நான் அதைக் கேள்விப்பட்டேன். இந்த மாதிரி, உயிருக்கே உலை வைக்கும் சூழ்நிலைகள் வந்த சமயத்திலும் என் நியமிப்பை விட்டுவிட நான் நினைக்கவே இல்லை. இறந்தவர்களையே உயிரோடு கொண்டுவருகிற கடவுள், கண்டிப்பாக எனக்குப் பாதுகாப்பு கொடுப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தம்பதியாக யெகோவாவை நம்பினோம்
1988-ல், எங்கள் கல்யாண நாளில்
1988-ல் டார்கஸ் என்ற பெண்ணை சந்தித்தேன். அவள் பயனியராக இருந்தாள். மனத்தாழ்மையான ஒரு பெண். யெகோவாவை அதிகமாக நேசித்தாள். நாங்கள் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கொண்டோம். வட்டார சேவையில், நாங்கள் ஒன்றாக சேர்ந்து உழைத்தோம். டார்கஸ் அன்பான ஒரு மனைவி. நிறைய தியாகங்கள் செய்வாள். சபைகளுக்குப் போவதற்காக நாங்கள் ரொம்ப தூரம் நடப்போம். பைகளைத் தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் தூரமெல்லாம் நடந்தே போவோம். தூரத்திலிருந்த சபைகளை
சந்திக்க குண்டும் குழியுமான, சேரும் சகதியுமான சாலைகளில் பயணம் செய்தோம்.டார்கஸ் ஒரு தைரியசாலி. சிலசமயங்களில், முதலைகள் இருந்த ஆறுகளை கடக்க வேண்டியிருந்தது. ஒரு சபைக்குப் போய் சேர்வதற்கு, ஒருசமயம் ஐந்து நாட்கள் பயணம் செய்தோம். அப்போது, ஒரு ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆற்றுப்பாலம் உடைந்திருந்ததால், படகில் போனோம். படகிலிருந்து இறங்குவதற்காக டார்கஸ் எழுந்து நின்றபோது, தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டாள். அதுவும், அந்த இடம் ரொம்பவே ஆழமாக இருந்தது. எங்களுக்கு நீச்சல்கூட தெரியாது. ஆற்றில் நிறைய முதலைகளும் இருந்தன! நல்லவேளை, அங்கிருந்த சில ஆட்கள் டக்கென்று தண்ணீருக்குள் குதித்து அவளை காப்பாற்றினார்கள். இந்த சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் எங்களுக்கு அப்படியே கதிகலங்கி போய்விடும். இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும், நாங்கள் எங்களுடைய சேவையை தொடர்ந்து செய்தோம்.
எங்கள் பிள்ளைகள், ஜாஹ்கிஃப்ட் மற்றும் எரிக். யெகோவா எங்களுக்கு தந்த சொத்து!
1992-ல் டார்கஸ் கர்ப்பமானாள். இது, எங்களுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தது. இனிமேலும் நாங்கள் தொடர்ந்து விசேஷ முழுநேர சேவை செய்ய முடியுமா என்று யோசித்தோம். ஆனால், “இந்த குழந்தையும் யெகோவா நமக்கு கொடுத்த பரிசுதானே!” என்று நினைத்துக்கொண்டோம். அதனால், எங்களுடைய முதல் குழந்தைக்கு ஜாஹ்கிஃப்ட் என்று பெயர் வைத்தோம். நான்கு வருஷங்களுக்குப் பிறகு எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு எரிக் என்று பெயர் வைத்தோம். எங்களுடைய இரண்டு பிள்ளைகளுமே யெகோவா கொடுத்த பரிசுதான்! கோனாக்ரீயில் இருந்த மொழிப்பெயர்ப்பு அலுவலகத்தில் ஜாஹ்கிஃப்ட் கொஞ்ச நாள் வேலை செய்தாள். எரிக் உதவி ஊழியராக சேவை செய்கிறான்.
குழந்தைகள் பிறந்த சமயத்தில், டார்கஸால் கொஞ்ச காலத்துக்கு விசேஷ பயனியராக சேவை செய்ய முடியவில்லை. ஆனாலும் அவள் தொடர்ந்து ஒழுங்கான பயனியராக இருந்தாள். யெகோவாவின் உதவியோடு நான் தொடர்ந்து விசேஷ பயனியராக சேவை செய்தேன். குழந்தைகள் வளர்ந்த பிறகு, டார்கஸ் மறுபடியும் விசேஷ பயனியராக ஆனாள். இப்போது நாங்கள் இரண்டு பேரும் கோனாக்ரீயில் மிஷனரிகளாக சேவை செய்கிறோம்.
உண்மையான பாதுகாப்பைத் தருகிறவர் யெகோவா மட்டுமே
யெகோவா எங்கே எல்லாம் போக சொன்னாரோ அங்கே எல்லாம் நான் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் டார்கஸும் நானும் யெகோவா தருகிற பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவித்திருக்கிறோம். இன்று நிறைய பேர் யெகோவாவை நம்புவதற்குப் பதிலாக சொத்து சுகங்களை நம்புகிறார்கள். அதனால், நிறைய கவலையிலும் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் யெகோவாவை நம்பியதால் அந்தமாதிரி எந்த பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளவில்லை. யெகோவாவால் மட்டும்தான் உண்மையிலேயே நமக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதை நானும் என் மனைவியும் எங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம். யெகோவா மட்டும்தான் நம்மை ‘மீட்கிற கடவுள்.’ (1 நா. 16:35) தன்னை நம்புகிறவர்களின் “உயிரைத் தன்னுடைய பொக்கிஷப் பையில் வைத்துப் பாதுகாப்பார்” என்பதில் எனக்குக் துளிகூட சந்தேகம் இல்லை.—1 சா. 25:29.