படிப்புக் கட்டுரை 48
இக்கட்டான காலத்திலும் நீங்கள் நம்பிக்கையோடு இருக்கலாம்!
“‘தைரியமாக இரு . . . நான் உங்களோடு இருக்கிறேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”—ஆகா. 2:4.
பாட்டு 118 எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்
இந்தக் கட்டுரையில்... a
1-2. நம்முடைய சூழ்நிலைக்கும் எருசலேமுக்குத் திரும்பி வந்த யூதர்களுடைய சூழ்நிலைக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? (“ ஆகாய், சகரியா மற்றும் எஸ்றாவுடைய நாட்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
வேலை போய்விட்டதால் குடும்பத்தை எப்படிப் பார்த்துக்கொள்வது என்று கவலைப்படுகிறீர்களா? நிலையில்லாத அரசியல் சூழ்நிலை அல்லது பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு இருப்பதால் குடும்பத்தின் பாதுகாப்பை நினைத்து பயப்படுகிறீர்களா? உண்மைதான், இந்த மாதிரியான சூழ்நிலைகளில் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கேள்வி நம் மனதைக் குடையும். அன்றைக்கு வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கும் இதே மாதிரியான பிரச்சினைகள் இருந்தன. அவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்தார் என்று தெரிந்துகொள்ளும்போது உங்களால் நம்பிக்கையோடு இருக்க முடியும்.
2 பாபிலோனின் வாழ்ந்த யூதர்கள் ரொம்ப வசதியாகவும் சௌகரியமாகவும் இருந்தார்கள். ஆனால், அதை விட்டுவிட்டு, தங்களுக்குக் கொஞ்சம்கூட தெரியாத ஒரு நாட்டுக்கு வருவதற்கு நிறைய விசுவாசம் தேவைப்பட்டது. எருசலேமுக்கு வந்து கொஞ்ச நாளில் பொருளாதார நெருக்கடி, மோசமான அரசியல் சூழ்நிலைமை, எதிர்ப்பு என எல்லாமே வந்தது. அதனால், யெகோவாவுடைய ஆலயத்தைத் திரும்ப கட்டுகிற வேலையில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த சமயத்தில், அதாவது கிட்டத்தட்ட கி.மு. 520-ல், ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகளை அனுப்பி மக்களுடைய ஆர்வத்தை யெகோவா தூண்டிவிட்டார். (ஆகா. 1:1; சக. 1:1) அவர்கள் கொடுத்த உற்சாகம் மக்களை ரொம்பவே பலப்படுத்தியது. ஆனால், கிட்டத்தட்ட 50 வருஷங்கள் கழித்து அந்த யூதர்களுடைய உற்சாகம் மறுபடியும் குறைந்தது. அதனால், திருச்சட்டத்தை திறமையாக நகல் எடுக்கிறவராக இருந்த எஸ்றாவை யெகோவா பயன்படுத்தினார். அவர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு வந்து உண்மை வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்க சொல்லி மக்களை உற்சாகப்படுத்தினார்.—எஸ்றா 7:1, 6.
3. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்? (நீதிமொழிகள் 22:19)
3 ஆகாய் மற்றும் சகரியா சொன்ன தீர்க்கதரிசனங்கள் அன்றைக்கு இருந்த கடவுளுடைய மக்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தன. எதிர்ப்பு இருந்தாலும் யெகோவாமேல் நம்பிக்கை வைக்க அது அவர்களுக்கு உதவியது. நாமும் கஷ்டங்களால் திணறும்போது, யெகோவாமேல் நம்பிக்கை வைக்க அந்த தீர்க்கதரிசனங்கள் உதவும். (நீதிமொழிகள் 22:19-ஐ வாசியுங்கள்.) ஆகாய் மற்றும் சகரியா சொன்ன செய்திகளைப் பற்றியும் எஸ்றாவின் உதாரணத்தை பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதிலிருந்து இந்த கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வோம்: திரும்பி வந்த யூதர்களுடைய வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாக இருந்தது? இக்கட்டான காலத்திலும் நாம் ஏன் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்? நெருக்கடியான சூழ்நிலையில் நாம் எப்படி யெகோவாமேல் இருக்கிற நம்பிக்கையை அதிகமாக்கலாம்?
திரும்பி வந்த யூதர்கள் சந்தித்தக் கஷ்டங்கள்
4-5. யூதர்களுடைய உற்சாகம் குறைந்ததற்கு எதுவெல்லாம் காரணமாக இருந்திருக்கும்?
4 யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தப் பிறகு, அவர்களுக்கு நிறைய வேலை இருந்தது. அவர்கள் மடமடவென்று ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டார்கள்; பலிபீடத்தையும் கட்டினார்கள். (எஸ்றா 3:1-3, 10) ஆனால் அவர்களுடைய ஆர்வம் சீக்கிரத்திலேயே குறைந்தது. ஏன்? ஆலயம் கட்டுவதோடு சேர்த்து, அவர்கள் தங்களுடைய வீடுகளையும் கட்ட வேண்டியிருந்தது. வயல்களில் பயிர் செய்து, குடும்பத்துக்கு சாப்பாடு கொடுக்க வேண்டியிருந்தது. (எஸ்றா 2:68, 70) அதுமட்டுமல்ல, எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு எதிர்ப்பும் வந்தது. ஆலயத்தைக் கட்டும் வேலையை அந்த எதிரிகள் தடுத்து நிறுத்த பார்த்தார்கள்.—எஸ்றா 4:1-5.
5 திரும்பி வந்த யூதர்கள் பொருளாதார நெருக்கடியாலும் நிலையில்லாத அரசியல் சூழ்நிலையாலும் பாதிக்கப்பட்டார்கள். எருசலேம் நகரம் அப்போது பெர்சிய சாம்ராஜ்யத்தின் கீழே இருந்தது. கி.மு. 530-ல் பெர்சிய ராஜா கோரேசு இறந்துபோனார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த கேம்பிசஸ், எகிப்தை நோக்கி படையெடுத்தார். எகிப்தை நோக்கிப் போனபோது அவருடைய படை வீரர்கள் ஒருவேளை இஸ்ரவேலர்களிடம் சாப்பாடு, தண்ணீர் மற்றும் தங்கும் வசதிகளைக் கேட்டிருக்கலாம். கேம்பிசஸ்க்கு அடுத்து ஆட்சிக்கு வந்த முதலாம் தரியுவின் ஆட்சியின் ஆரம்பத்திலும் நிறையக் கலவரங்கள் நடந்தன. அரசியல் நிலைமையும் ரொம்ப கொந்தளிப்பாக இருந்தது. இந்த சூழ்நிலைமைகளால் இஸ்ரவேலர்களுடைய வாழ்க்கை பெரிய போராட்டமாக ஆனது. குடும்பத்தை எப்படிக் கவனித்துக்கொள்வது என்று நிறையப் பேர் கவலைப்பட்டிருப்பார்கள். ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு இது சரியான நேரம் இல்லை என்றுகூட சிலர் நினைத்தார்கள்!—ஆகா. 1:2.
6. சகரியா 4:6, 7 சொல்வதுபோல் யூதர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது? சகரியா அவர்களை என்ன சொல்லி உற்சாகப்படுத்தினார்?
6 சகரியா 4:6, 7-ஐ வாசியுங்கள். பொருளாதார நெருக்கடியும் நிலையில்லாத அரசியல் சூழ்நிலையும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் யூதர்களுக்குத் துன்புறுத்தலும் வந்தது. கி.மு. 522-ல் ஆலயத்தைக் கட்டும் வேலைக்கு எதிரிகள் தடையுத்தரவு போட வைத்தார்கள். ஆனால், யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி எந்த ஒரு தடையையும் நீக்குவார் என்று சகரியா யூதர்களை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்னது போலவே, கி.மு. 520-ல் தரியு ராஜா தடை உத்தரவை நீக்கினார். அதுமட்டுமல்ல, யூதர்களுக்குத் தேவையான பணத்தையும் கொடுத்தார். அங்கிருந்த ஆளுநர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கட்டளையையும் கொடுத்தார்.—எஸ்றா 6:1, 6-10.
7. யெகோவாவுடைய விருப்பத்தை செய்வதற்கு யூதர்கள் முதலிடம் கொடுத்தபோது அவர்களுக்கு என்ன ஆசீர்வாதம் கிடைத்தது?
7 ஆலயத்தைக் கட்டும் வேலைக்கு யூதர்கள் முதலிடம் கொடுத்தால், கண்டிப்பாக தன்னுடைய துணை இருக்கும் என்று யெகோவா ஆகாய் மற்றும் சகரியா மூலமாக சொன்னார். (ஆகா. 1:8, 13, 14; சக. 1:3, 16) இந்த தீர்க்கதரிசிகள் சொன்னதைக் கேட்டு யூதர்கள் ரொம்ப உற்சாகமடைந்தார்கள். அதனால், கி.மு. 520-ல் ஆலயத்தை கட்டுகிற வேலையை மறுபடியும் ஆரம்பித்தார்கள். ஐந்து வருஷங்களுக்குள் அதைக் கட்டி முடித்தார்கள். இக்கட்டான காலத்திலும் யெகோவாவுடைய விருப்பத்தை செய்வதற்கு முதலிடம் கொடுத்ததால், வாழ்க்கையை ஓட்டுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். அவரோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும் உதவினார். அதனால், யூதர்கள் சந்தோஷமாக யெகோவாவை வணங்கினார்கள்.—எஸ்றா 6:14-16, 22.
யெகோவாவுடைய விருப்பத்தை செய்வதிலேயே உங்கள் கவனம் இருக்கட்டும்
8. யெகோவாவுடைய விருப்பத்தை செய்வதிலேயே முழு கவனம் செலுத்துவதற்கு ஆகாய் 2:4-ல் இருக்கிற வார்த்தைகள் நமக்கு எப்படி உதவும்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
8 ஊழியத்தை அதிகமாக செய்ய வேண்டிய அவசியம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு இருக்கிறது. ஏனென்றால், மிகுந்த உபத்திரவம் ரொம்ப சீக்கிரத்தில் வரப் போகிறது. (மாற். 13:10) பொருளாதார நெருக்கடியையோ பிரசங்க வேலைக்கு எதிர்ப்பையோ இப்போது நாம் சந்தித்துக்கொண்டு இருந்தால், ஊழியத்தில் கவனம் செலுத்துவது கஷ்டமாக இருக்கலாம். இந்த மாதிரி சூழ்நிலைகளிலும் யெகோவாவுடைய வேலைக்கு முதலிடம் கொடுக்க எது நமக்கு உதவும்? “பரலோகப் படைகளின் யெகோவா” b நம் பக்கம் இருக்கிறார் என்ற நம்பிக்கை உதவும்! நம்முடைய தேவைகளையும் கவலைகளையும்விட யெகோவாவுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்கு முதலிடம் கொடுத்தால், அவர் கண்டிப்பாக நமக்கு ஆதரவு கொடுப்பார். எதை கண்டும் நாம் பயப்படத் தேவையில்லை.—ஆகாய் 2:4-ஐ வாசியுங்கள்.
9-10. மத்தேயு 6:33-ல் இயேசு சொல்லியிருப்பது உண்மை என்பதை ஒரு தம்பதி எப்படி உணர்ந்தார்கள்?
9 பயனியர்களாக சேவை செய்யும் ஆலெக் மற்றும் அவருடைய மனைவி ஐரீனாவுடைய c உதாரணத்தைக் கவனியுங்கள். தேவை அதிகம் இருக்கிற ஒரு சபைக்கு உதவி செய்ய அவர்கள் வேறொரு பகுதிக்குக் குடிமாறி போனார்கள். ஆனால், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமானதால் அவர்களுக்கு வருமானம் இல்லாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு நிலையான ஒரு வேலை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், அந்த சமயத்தில் யெகோவாவுடைய அன்பையும் ஆதரவையும் அவர்கள் உணர்ந்தார்கள். சகோதர சகோதரிகளும் அவர்களுக்கு அவ்வப்போது உதவினார்கள். ஆரம்பத்தில் சகோதரர் ஆலெக்குக்குக் கொஞ்சம் மனச் சோர்வாகத்தான் இருந்தது. இருந்தாலும், இந்த மோசமான சூழ்நிலையை சமாளிக்கக் குறிப்பாக எது அவர்களுக்கு உதவியது? “ஊழியத்தில் பிஸியாக இருந்ததால், முக்கியமான விஷயத்துக்கு எங்களால் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க முடிந்தது” என்று ஆலெக் சொல்கிறார். அவரும் அவருடைய மனைவியும் வேலை தேடிய அதேசமயத்தில், ஊழியத்திலும் பிஸியாக இருந்தார்கள்.
10 ஒரு நாள், ஊழியத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவர்களுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துவந்து, இரண்டு பை நிறைய மளிகை சாமான்களை வைத்துவிட்டு போயிருந்தது தெரியவந்தது. “யெகோவாவுக்கும் சபையில் இருக்கிறவர்களுக்கும் எங்கள்மேல் எவ்வளவு அன்பு இருந்தது என்பதை அன்றைக்கு நாங்கள் புரிந்துகொண்டோம். ‘வாழ்க்கை இனி அவ்வளவுதான்! வேறு வழியே இல்லை’ என்பதுபோல் சிலசமயம் தோன்றலாம். ஆனால், அது உண்மை கிடையாது. யெகோவா தன்னுடைய ஊழியர்களைக் கண்டிப்பாக மறக்க மாட்டார் என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்கிறார் ஆலெக்.—மத். 6:33.
11. நம்முடைய கவனமெல்லாம் யெகோவாவுடைய வேலையை செய்வதிலேயே இருந்தால் என்ன நன்மை கிடைக்கும்?
11 உயிர் காக்கிற ஊழிய வேலையில் நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். 7-வது பாராவில் கவனித்தது போல் ஆலயத்தைக் கட்டும் வேலையில் கவனம் செலுத்த சொல்லி ஆகாய் தீர்க்கதரிசி மக்களை உற்சாகப்படுத்தினார். ‘இவ்வளவு நாள் போனது எல்லாம் போகட்டும். புதிதாக ஒரு வேலையை ஆரம்பித்தால், அதை எவ்வளவு சுறுசுறுப்பாக செய்வோமோ, அதேமாதிரி ஆலயத்தைக் கட்டும் வேலையை செய்யுங்கள்!’ என்று அவர் சொல்வதுபோல் இருந்தது. அப்படி அவர்கள் செய்தால் யெகோவா அவர்களை ‘ஆசீர்வதிப்பார்’ என்றும் ஆகாய் சொன்னார். (ஆகா. 2:18, 19) யெகோவா கொடுத்திருக்கும் வேலையை செய்வதில் நாமும் முழு கவனத்தை வைத்தால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதில் உறுதியாக இருக்கலாம்.
யெகோவாமேல் நம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
12. எஸ்றாவுக்கும் அவரோடு வந்த யூதர்களுக்கும் ஏன் நிறைய விசுவாசம் தேவைப்பட்டிருக்கும்?
12 கி.மு. 468-ல் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு இன்னும் கொஞ்சம் யூதர்கள் வந்தார்கள்; எஸ்றாவும் அவர்களோடு வந்தார். அந்தப் பயணத்தை செய்ய அவர்களுக்கு நிறைய விசுவாசம் தேவைப்பட்டிருக்கும். ஏனென்றால், அவர்கள் பயணம் செய்த பாதை ரொம்ப ஆபத்தானது. அதுமட்டுமல்ல, ஆலயத்தைக் கட்டுவதற்காக நன்கொடையாக கிடைத்த எக்கச்சக்கமான தங்கமும் வெள்ளியும் அவர்களிடம் இருந்தது. வழியில் திருடர்கள்கூட அவர்களைத் தாக்கும் ஆபத்து இருந்தது. (எஸ்றா 7:12-16; 8:31) எருசலேம் நகரத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? அதுவும் பாதுகாப்பு இல்லாத நிலைமையில்தான் இருந்தது. அங்கே கொஞ்ச பேர்தான் வாழ்ந்தார்கள். மதில்களும் கதவுகளும் பழுது பார்க்க வேண்டிய நிலைமையில் இருந்தது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையிலும் எஸ்றாவால் எப்படி யெகோவாமேல் நம்பிக்கை வைக்க முடிந்தது? அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13. எஸ்றா எப்படி யெகோவாமேல் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
13 இக்கட்டான ஒரு சூழ்நிலையில் யெகோவா தன்னுடைய மக்களை பாதுகாத்ததை எஸ்றா பார்த்திருக்கிறார். கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு, அதாவது கி.மு. 484-ல், எஸ்றா பாபிலோனில் அகாஸ்வேரு ராஜாவின் ஆட்சியின் கீழே இருந்தார். அந்த சமயத்தில், பெர்சிய சாம்ராஜ்யம் முழுவதும் இருந்த யூதர்களைக் கொன்றுபோடும்படி ஒரு கட்டளை போடப்பட்டிருந்தது. (எஸ்தர் 3:7, 13-15) எஸ்றாவின் உயிரும் ஆபத்தில் இருந்தது. அப்போது, எல்லா ‘மாகாணங்களிலும்’ இருந்த யூதர்கள் விரதமிருந்து துக்கம் அனுசரித்தார்கள். உதவிக் கேட்டு யெகோவாவிடம் கெஞ்சினார்கள். (எஸ்தர் 4:3) எதிரிகள் வெட்டிய குழியில் அவர்களே விழுந்ததை பார்த்தபோது எஸ்றாவுக்கும் மற்ற யூதர்களுக்கும் எப்படி இருந்திருக்கும்! (எஸ்தர் 9:1, 2) யெகோவாவால் தன்னுடைய மக்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை அந்த சமயத்தில் எஸ்றாவுக்கு இன்னும் அதிகமாகியிருக்கும். எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் அதை சந்திக்க அவர் தயாராகியிருப்பார். d
14. சகோதரி அனாஸ்டாசியாவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
14 வாழ்க்கையே இருண்டு போன ஒரு சூழ்நிலையிலும் யெகோவா நம்மை அக்கறையாக கவனித்துக்கொள்கிறார்; அதைப் பார்க்கும்போது அவர்மேல் இருக்கிற நம்பிக்கை இன்னும் அதிகமாகும். கிழக்கு ஐரோப்பாவில் இருக்கிற அனாஸ்டாசியா என்ற சகோதரி அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை சந்தித்தார். நடுநிலையை விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் தன்னுடைய வேலையை விட்டுவிட்டார். அவர் இப்படி சொல்கிறார்: “கையில் காசே இல்லாமல் இருக்கும் நிலைமை இதுவரைக்கும் என் வாழ்க்கையில் வந்ததே இல்லை. ஆனால், நான் பிரச்சினையைக் யெகோவாவின் கையில் விட்டுவிட்டேன். அவர் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார். வேலை இல்லாத ஒரு சூழ்நிலை மறுபடியும் வந்தாலும், நான் கவலைப்பட மாட்டேன். யெகோவா அப்பா இன்றைக்கு என்னைப் பார்த்துக்கொள்கிறார் என்றால், எதிர்காலத்திலும் பார்த்துக்கொள்வார்.”
15. யெகோவாமேல் தொடர்ந்து நம்பிக்கை வைப்பதற்கு எஸ்றாவுக்கு எது உதவியது? (எஸ்றா 7:27, 28)
15 யெகோவா தனக்குத் துணையாக இருந்ததை எஸ்றா நிறைய சமயங்களில் பார்த்தார். “என் கடவுள் யெகோவா எனக்குத் துணையாக இருந்ததால்” என்று எஸ்றா 7:27, 28-ல் அவர் எழுதினார். (வாசியுங்கள்.) இதே மாதிரியான வார்த்தைகளை எஸ்றா புத்தகத்தில் இன்னும் நான்கு தடவைப் பார்க்க முடிகிறது. யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை எஸ்றா அடிக்கடி யோசித்துப் பார்த்தார். அதனால்தான், யெகோவாமேல் இருந்த நம்பிக்கை அவருக்கு குறையவே இல்லை.—எஸ்றா 7:6, 9; 8:18, 31.
என்ன மாதிரியான சூழ்நிலைகளில் யெகோவா நமக்குத் துணையாக இருப்பதை பார்க்க முடியும்? (பாரா 16) e
16. யெகோவா நமக்குத் துணையாக இருப்பதை எந்த மாதிரியான சமயங்களில் பார்க்க முடியும்? (படத்தையும் பாருங்கள்.)
16 ஒரு கஷ்டமான சூழ்நிலை வரும்போது யெகோவாவால் நமக்கு உதவ முடியும். உதாரணத்துக்கு, மாநாட்டுக்காக மேனேஜரிடம் லீவ் கேட்கும்போது அல்லது கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வேலை நேரத்தில் மாற்றம் செய்ய சொல்லி கேட்கும்போது, யெகோவா நமக்குத் துணையாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும்; எதிர்பார்க்காத ஒரு நல்ல திருப்பம்கூட ஏற்படலாம். அந்த மாதிரி சமயங்களில் யெகோவாமேல் நமக்கு இருக்கிற நம்பிக்கை இன்னும் பலமாகும்.
மக்கள் செய்த பாவங்களை நினைத்து எஸ்றா ஆலயத்தில் அழுது புலம்பி ஜெபம் செய்கிறார். மக்களும் அழுகிறார்கள். செக்கனியா எஸ்றாவிடம், “இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது . . . நாங்கள் உங்களோடு இருப்போம்” என்று சொல்லி ஆறுதல்படுத்துகிறார்.—எஸ்றா 10:2, 4. (பாரா 17)
17. சவாலான சூழ்நிலைமையிலும் எஸ்றா எப்படி மனத்தாழ்மையைக் காட்டினார்? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)
17 எஸ்றா மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் உதவிக் கேட்டார். தனக்கு முன்பு இருந்த பொறுப்புகளை நினைத்து பயந்துபோன ஒவ்வொரு சமயத்திலும் எஸ்றா மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் உதவிக் கேட்டு ஜெபம் செய்தார். (எஸ்றா 8:21-23; 9:3-5) அவர் அந்தளவுக்கு யெகோவாவை நம்பியிருந்ததைப் பார்த்து, மக்களும் யெகோவாவை நம்பினார்கள். எஸ்றாவுக்குத் தங்களுடைய ஆதரவையும் கொடுத்தார்கள். (எஸ்றா 10:1-4) குடும்பத்தின் தேவைகளையும் பாதுகாப்பையும் நினைத்து சிலசமயம் நாம் ரொம்ப கவலைப்படலாம். அந்த மாதிரி சமயங்களில், நம்பிக்கையோடு யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்.
18. யெகோவாமேல் இருக்கிற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கு எது நமக்கு உதவும்?
18 நாம் மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் உதவி கேட்கும்போதும் சகோதர சகோதரிகள் செய்கிற உதவியை ஏற்றுக்கொள்ளும்போதும் யெகோவாமேல் இருக்கிற நம்பிக்கை இன்னும் அதிகமாகும். மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிற எரிக்காவும் அப்படித்தான் உணர்கிறார். வாழ்க்கையில் பேரிடி விழுந்த சமயத்திலும் அவர் யெகோவாவையே நம்பியிருந்தார். அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையும் அவருடைய கணவரும் அடுத்தடுத்து கொஞ்சம் நாட்களில் இறந்துபோனார்கள். வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் திரும்பிப் பார்த்து அவர் இப்படி சொல்கிறார்: “யெகோவா நமக்கு எப்படி உதவி செய்வார் என்று முன்னாடியே தெரியாது. நாம் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத இடங்களில் இருந்து உதவி கிடைக்கலாம். நான் செய்த நிறைய ஜெபங்களுக்கு, என்னுடைய நண்பர்கள் சொன்ன அல்லது செய்த விஷயங்கள் மூலமாக பதில் கிடைத்தது. நண்பர்களிடம் மனம்விட்டு பேசும்போது அவர்களால் எனக்கு இன்னும் நன்றாக உதவி செய்ய முடிகிறது.”
கடைசிவரை யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்
19-20. எருசலேமுக்கு திரும்பி வர முடியாத யூதர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
19 எருசலேமுக்கு திரும்பி வர முடியாத யூதர்களிடமிருந்தும் நல்ல பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். வயதானதாலோ உடல்நல பிரச்சினையாலோ குடும்ப சூழ்நிலையாலோ சில யூதர்களால் எருசலேமுக்குத் திரும்பி வர முடியவில்லை. இருந்தாலும், திரும்பி வந்த யூதர்களுக்கு அவர்கள் மனதார ஆதரவு கொடுத்தார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான பொருள்களை நன்கொடையாக கொடுத்து அனுப்பினார்கள். (எஸ்றா 1:5, 6) யூதர்கள் திரும்பி வந்து கிட்டத்தட்ட 19 வருஷங்களுக்கு பிறகும்கூட, பாபிலோனில் இருந்த யூதர்கள் நன்கொடை கொடுத்துவந்ததாக தெரிகிறது.—சக. 6:10.
20 யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய முடியவில்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்! அவருக்காக நீங்கள் மனதார செய்கிற விஷயங்களை அவர் உயர்வாக நினைக்கிறார். சகரியாவுடைய நாளில் யெகோவா சொன்ன ஒரு விஷயத்தை வைத்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. திரும்பி வர முடியாமல் பாபிலோனில் இருந்த யூதர்கள் கொடுத்த தங்கத்தையும், வெள்ளியை வைத்து யெகோவா ஒரு கிரீடத்தை செய்ய சொன்னார். (சக. 6:11) அந்த “மகா கிரீடம்” அவர்கள் தாராளமாக கொடுத்த நன்கொடைக்கு “நினைவாக” இருக்கும் என்று சொன்னார். (சக. 6:14) அப்படியென்றால், இக்கட்டான சூழ்நிலையிலும் அவருக்கு சேவை செய்வதற்காக நாம் எடுக்கிற முயற்சிகளை அவர் கண்டிப்பாக மறக்க மாட்டார் என்று நம்பலாம்.—எபி. 6:10.
21. எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திக்க எது நமக்கு உதவும்?
21 கடைசி நாட்களில் நமக்கு நிறைய நெருக்கடியான சூழ்நிலைகள் வரும். எதிர்காலத்தில் நிலைமைகள் இன்னும் மோசமாகக்கூட ஆகலாம். (2 தீ. 3:1, 13) ஆனால் அதற்காக, நாம் கவலையிலேயே துவண்டுபோய்விட வேண்டிய அவசியம் இல்லை. ஆகாய் மூலம் யெகோவா சொன்ன இந்த வார்த்தைகளை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்: “நான் உங்களோடு இருக்கிறேன் . . . பயப்படாமல் இருங்கள்.” (ஆகா. 2:4, 5) அவருடைய வேலையை செய்வதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது, யெகோவா நமக்குத் துணையாக இருப்பார்; இதில் நாம் உறுதியாக இருக்கலாம். ஆகாயும் சகரியாவும் சொன்ன தீர்க்கதரிசனங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் எஸ்றாவிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களையும் கடைப்பிடிக்கும்போது, எதிர்காலம் இருண்டு போனதுபோல் தோன்றினாலும் யெகோவா நமக்குக் கண்டிப்பாக வெளிச்சம் காட்டுவார் என்பதில் நம்பிக்கையாக இருக்கலாம்.
பாட்டு 122 அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!
a பொருளாதார நெருக்கடி... நிலையில்லாத அரசியல் சூழ்நிலைமை... பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு... இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளிலும் யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும்.
b “பரலோகப் படைகளின் யெகோவா” என்ற வார்த்தைகள் ஆகாய் புத்தகத்தில் மொத்தம் 14 தடவை வருகிறது. யெகோவாவுடைய சக்திக்கு எல்லையே இல்லை என்பதையும், கோடிக்கணக்கான தேவதூதர்கள் இருக்கிற ஒரு பெரிய படை அவரிடம் இருக்கிறது என்பதையும் இந்த வார்த்தைகள் யூதர்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கும். இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது நமக்கும் அது ஞாபகத்துக்கு வருகிறது.—சங். 103:20, 21.
c சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
d எஸ்றா திருச்சட்டத்தை நகல் எடுப்பவராக இருந்ததால், பாபிலோனில் இருந்தபோதே யெகோவாவுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளைப் படித்திருப்பார். பலமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவை அவருக்கு உதவியிருக்கும்.—2 நா. 36:22, 23; எஸ்றா 7:6, 9, 10; எரே. 29:14.
e பட விளக்கம்: மாநாட்டில் கலந்துகொள்ள ஒரு சகோதரர் தன்னுடைய மேனேஜரிடம் லீவ் கேட்கிறார். மேனேஜர் முடியாது என்று சொல்லிவிடுகிறார். மறுபடியும் மேனேஜரிடம் போய் பேசுவதற்கு உதவ சொல்லி சகோதரர் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார். மேனேஜரிடம் மாநாட்டின் அழைப்பிதழை அவர் காட்டுகிறார்; பைபிள் எப்படி மக்களை நல்ல விதமாக மாற்றுகிறது என்று விளக்குகிறார். சகோதரர் சொன்னது மேனேஜருக்குப் பிடித்துவிடுகிறது; அவர் தன் மனதை மாற்றிக்கொள்கிறார்.