உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
வாழ்க்கையை மாற்றுகிற புள்ளிகள்
அக்டோபர் 1, 2021
ஜூன் 1, 1912 காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “கண்பார்வை இல்லாதவர்களை நம்முடைய வாசகர்கள் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். கண்பார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக நாம் பிரசுரங்களை அச்சிடுகிறோம். . . . அவர்கள் வாசிப்பதற்கு எளிதாக அவை மேடான எழுத்துக்களில் அச்சிடப்படுகிறது. இந்த உலகத்துக்கு ஆசீர்வாதங்களை அள்ளி அள்ளித் தரப்போகிற அந்த நாள் சீக்கிரத்திலேயே வரப்போகிறது என்பதைப் பற்றி கண்பார்வை இல்லாதவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். அந்த செய்திக்காக அவர்கள் ரொம்ப நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.“
இந்த பத்திரிகை வெளியிடப்பட்ட சமயத்தில், உலகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு விதமாக பிரெயில் (Braile) எழுத்துக்கள் எழுதப்பட்டன. இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் அந்த சமயத்திலேயே பிரெய்லில், அதாவது “மேடான எழுத்துக்களில்”, பைபிள் சத்தியங்களை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போதும் நாம் அதை செய்துகொண்டிருக்கிறோம். இன்று நமக்கு 50-க்கும் அதிகமான மொழிகளில் பிரெயில் பிரசுரங்கள் இருக்கின்றன. இது எப்படி தயாரிக்கப்படுகிறது?
ஒன்று முதல் ஆறு புள்ளிகள் கொண்டதுதான் ஒரு பிரெயில் எழுத்து. இந்த மேடான புள்ளிகள் ஆறு செவ்வக அணிகளில் இருக்கும்.
பிரெயில் எழுத்துக்களாக மாற்றுவதும் பதிப்பதும்
பிரெயில் பிரசுரங்களை தயாரிப்பதற்கான முதல்படி, ஒரு மொழியில் இருக்கிற எழுத்துக்களை பிரெயில் எழுத்துக்களாக மாற்றுவதுதான். “முன்பெல்லாம் நாம் இதற்காக மற்றவர்கள் தயாரித்த சாஃப்ட்வேரை பயன்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால் நமக்கு தேவையான எல்லா மொழிகளையுமே பிரெயில் எழுத்துக்களாக மாற்ற முடியவில்லை. இன்று நாம் உவாட்ச்டவர் டிரான்ஸ்லேஷன் சிஸ்டம்-ஐ (Watchtower Translation System) பயன்படுத்துகிறோம். இதை வைத்து உலகத்தில் இருக்கிற கிட்டத்தட்ட எல்லா மொழிகளையும் பிரெயில் எழுத்துக்களாக மாற்ற முடியும். இது மாதிரி ஒன்று வேறு எங்கேயுமே இல்லை என்று நான் அடித்து சொல்வேன்“ என்று நியுயார்க் பேட்டர்ஸனில் இருக்கிற டெக்ஸ்ட் பிராஸசிங் சர்வீஸ்-ல் (Text Processing Service) வேலை செய்யும் மைக்கேல் மிலன் சொல்கிறார்.
நம்முடைய பிரெயில் பிரசுரங்களில் ஒரு கட்டுரை மட்டுமல்ல, அதற்கான பட விளக்கங்களும் இருக்கும். அதற்கு ஒரு உதாரணம், இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் பிரெயில் பதிப்பில் இருக்கிற அட்டைப் பட விளக்கம். அது இப்படிச் சொல்கிறது: “வளைந்து நெளிந்து போகிற ஒரு பாதையில் ஒருவர் நடந்துபோகிறார். அழகான செடி கொடிகளும் மலைகளும் அவரை சூழ்ந்திருக்கின்றன.” உதவி ஊழியராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்கிற ஜம்ஷெத் என்ற கண்பார்வை இல்லாத சகோதரர் இப்படி சொல்கிறார்: “இந்த பட விளக்கங்கள் எனக்கு பொக்கிஷம் மாதிரி. அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.“
பிரெயில் எழுத்துக்களாக மாற்றிய பின்பு அந்த ஃபைல்கள் அச்சடிப்பதற்காக கிளை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கே இந்த மேடான எழுத்துக்கள் கடினமான பேப்பர்களில் பதிக்கப்படும். அப்படி செய்யும்போது அந்த பேப்பர்களில் ஓட்டையும் விழாது, அடிக்கடி பயன்படுத்துவதால் அதனுடைய வடிவமும் மாறாது. பின்பு இந்த பக்கங்கள் எல்லாம் ஒன்றுசேர்க்கப்பட்டு சுருள் பைன்டிங் பண்ணப்படும். அதற்கு பின்பு சபைகளுக்கு மற்ற பிரசுரங்களை அனுப்பி வைக்கப்படுவது போலவே இவையும் அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை “கண் பார்வை இல்லாதவர்களுக்கு இலவசமாக பொருள்கள்“ அனுப்பும் வசதி அந்த தபால் அலுவலகங்களில் இருந்தால் அது பயன்படுத்தப்படும். பார்வை இழந்தவர்களுக்கும் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் சபை கூட்டங்களில் பயன்படுத்துவதற்கு இந்த பிரசுரங்கள் அவசரமாக தேவைப்பட்டால், அதிவிரைவு தபால் மூலமாகவும் கிளை அலுவலகம் அனுப்பி வைக்கும்.
இதை எல்லாம் செய்வதற்கு நிறைய பணமும் நேரமும் தேவை. சொல்லப்போனால், நியு யார்க் வால்கில்லில் இருக்கிற நம்முடைய அச்சகத்தில் 50,000 பைபிள்களை தயாரிப்பதற்கு எடுக்கும் நேரத்தில், பிரெயில் மொழியில் இரண்டே இரண்டு பைபிள்களைத்தான் தயாரிக்க முடியும். கிரேடு-2 ஆங்கில பிரெயில் பைபிள் ஒவ்வொன்றுமே 25 தொகுதிகள் கொண்டது. சாதாரண பைபிள்களை தயாரிப்பதற்கான பொருள்களை விட 123 மடங்கு அதிகமான பொருள்கள் இந்த பைபிள்களை தயாரிக்க தேவைப்படுகிறது. a இந்த 25 தொகுதிகளுக்கான அட்டைகளை தயாரிப்பதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 150 அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.
கிரேடு-2 ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் 25 தொகுதிகள் கொண்டது!
பிரெயில் பிரசுரங்களை தயாரிக்கும் வேலை செய்கிறவர்கள் அதைப் பற்றி எப்படி உணருகிறார்கள்? தென் ஆப்பிரிக்கா கிளை அலுவலகத்தில் சேவை செய்யும் நாடியா என்ற ஒரு சகோதரி இப்படி சொல்கிறார்: “கண்பார்வை இல்லாத அல்லது கண்பார்வை குறைபாடு உள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுடைய வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்தது. அதனால், இந்த பிரசுரங்களை அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு வரமாகத்தான் நான் பார்க்கிறேன். கண் பார்வை இல்லாத இவர்களை யெகோவா கண்ணுக்குள்ளே வைத்து தாங்குகிறார் என்பதற்கு இதுதான் பெரிய அத்தாட்சி.“
பிரெயில் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பார்வை இல்லாத ஒருவரால் பிரெயில் எழுத்துக்களை வாசிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? சில வருடங்களுக்கு முன்னால் பிரெயில் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஒரு ஆங்கில சிற்றேட்டை நம்முடைய அமைப்பு வெளியிட்டது. அந்த சிற்றேட்டில் பிரெயில் எழுத்துக்களும் இருந்தன, சாதாரண எழுத்துக்களும் இருந்தன. பார்வை இல்லாதவர்களும் பார்வை உள்ளவர்களும் சேர்ந்து பயன்படுத்துகிற மாதிரி இது தயாரிக்கப்பட்டது. இந்த சிற்றேட்டுடன், பார்வை இல்லாதவர்கள் எழுதி பழகுவதற்கு தேவையான கருவிகளும் கொடுக்கப்பட்டது. பிரெயில் மொழியை கற்றுக்கொள்கிற ஒருவரால் இந்த கருவிகளை பயன்படுத்தி பிரெயில் எழுத்துகளை அவரே எழுத முடியும். அப்படி எழுதுவதால் அந்த ஒவ்வொரு எழுத்துக்களையும் அவரால் நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, அதை தொட்டு பார்த்து அது என்ன எழுத்து என்பதையும் அவரால் கண்டுபிடிக்க முடியும்.
“நான் அதற்கு அடிமையே ஆகிவிட்டேன்“
பார்வை குறைபாடு உள்ளவர்களும் பார்வை இழந்தவர்களும் இந்த பிரசுரங்களிலிருந்து எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள்? ஹெய்டியில் வாழ்கிற எர்ன்ஸ்ட் என்ற சகோதரர் சபை கூட்டங்களுக்கு தவறாமல் போகிறார். ஆனால் அவரிடம் பிரெயில் மொழியில் எந்த பிரசுரங்களும் இல்லை. அதனால் மாணவர் நியமிப்பு கொடுக்கும் போதும், கேள்வி பதில் பகுதியில் பதில் சொல்லும் போதும் அவர் மனப்பாடம் பண்ணித்தான் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், “இப்போது எல்லாத்துக்கும் என்னால் கை தூக்கி பதில் சொல்ல முடிகிறது. நம்முடைய சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஒற்றுமையாக கடவுளை வணங்க முடிகிறது. ஏனென்றால், நம் எல்லாருக்கும் கிடைப்பது ஒரே ஆன்மீக உணவு“ என்று அவர் சொல்கிறார்.
ஆஸ்திரியாவில் மூப்பராக சேவை செய்கிற ஜன் என்ற சகோதரர் பார்வை குறைபாடு உள்ளவர். அவர் சபையில் காவற்கோபுர படிப்பும், சபை பைபிள் படிப்பும் நடத்துகிறார். அவர் இப்படி சொல்கிறார்: “நான் வாசித்திருக்கிற மற்ற பிரெயில் பிரசுரங்களை விட நம் பிரசுரங்கள் ரொம்பவே தெளிவாக இருக்கிறது. அதில் பக்கங்களுடைய எண்கள் இருக்கிறது, அடிக்குறிப்புகளும் ரொம்ப ஈசியாக கண்டுபிடிக்கிற மாதிரி இருக்கிறது. பட விளக்கம் தெளிவாகவும் புரிந்துகொள்கிற மாதிரியும் இருக்கிறது.“
தென் கொரியாவில் பயனியராக சேவை செய்கிற சோன்-உக் என்ற சகோதரிக்கு கண்ணும் தெரியாது காதும் கேட்காது. முன்பெல்லாம் தொட்டு சைகை செய்கிற முறையில்தான் அவரால் சபை கூட்டங்களை கவனிக்க முடிந்தது. ஆனால், இப்போது அவரால் பிரெயில் மொழியில் இருக்கிற பைபிள் படிப்பு கருவிகளை பயன்படுத்தி வாசிக்க முடிகிறது. “மற்ற பிரெயில் பிரசுரங்களை வாசிப்பது ரொம்ப கஷ்டம். ஏனென்றால் அதில் சில புள்ளிகள் இருக்காது, வரிகளும் மேலும் கீழுமாக இருக்கும், அந்த பேப்பரும் ரொம்ப மெல்லிசாக இருக்கும். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் நல்ல தரமான பேப்பரை பயன்படுத்துகிறார்கள். புள்ளிகளும் தெளிவாக அடையாளம் கண்டுபிடிக்கிற மாதிரி இருக்கும். அதனால் அதை படிப்பது எனக்கு ரொம்ப ஈசி. முன்பெல்லாம் பைபிள் பிரசுரங்களை மற்றவர்களுடைய உதவியோடு மட்டும்தான் என்னால் படிக்க முடிந்தது. ஆனால் இப்போது நானே தனியாக படிக்கிறேன். என்னால் சபை கூட்டங்களுக்காக தயாரிக்கவும் முடிகிறது. அதில் நன்றாக கலந்துகொள்ளவும் முடிகிறது. அதனால், நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். பிரெயில் மொழியில் இருக்கிற எல்லா பிரசுரங்களையும் படித்துவிடுவேன். சொல்லப்போனால், நான் அதற்கு அடிமையே ஆகிவிட்டேன்.“
நம்முடைய அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் மாதிரியே பிரெயில் பிரசுரங்களிலும் இந்த வரிகள் இருக்கும்: “இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.” donate.jw.org-ல் குறிப்பிடப்பட்டிருக்கிற முறைகளை பயன்படுத்தி நீங்கள் கொடுக்கிற நன்கொடைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி! நீங்கள் தாராளமாக கொடுப்பதால்தான் எல்லாருக்கும், குறிப்பாக பார்வை இல்லாதவர்களுக்கும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும், பைபிள் பிரசுரங்கள் கிடைக்கிறது.
a சில பிரெயில் முறைகளில் பக்கங்களை குறைப்பதற்காக வார்த்தைகளை சுருக்கியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கிரேடு-2 பிரெயிலில், பொதுவான வார்த்தைகளும் எழுத்து சேர்க்கைகளும் சுருக்கப்பட்டுள்ளன. எனவே, கிரேடு-2 பிரெயிலில் உள்ள ஒரு புத்தகம் கிரேடு-1 பிரெயிலில் உள்ள அதே புத்தகத்தை விட சிறியதாக இருக்கும்.