Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

கடைசியில் அப்பாவோடு ஒன்றுசேர்ந்தேன்!

கடைசியில் அப்பாவோடு ஒன்றுசேர்ந்தேன்!
  • பிறந்த வருஷம்: 1954

  • பிறந்த நாடு: பிலிப்பைன்ஸ்

  • என்னைப் பற்றி: கொடுமைக்கார அப்பாவைவிட்டுப் பிரிந்திருந்தேன்

என் கடந்தகால வாழ்க்கை

 பிலிப்பைன்சில், பாக்சாங்ஹான் என்ற ஊருக்குப் பக்கத்தில் புகழ்பெற்ற ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது. நிறைய சுற்றுலாப் பயணிகள் அங்கே வருவார்கள். அந்த ஊரில்தான் வறுமையான சூழலில் என் அப்பா நார்டோ லரோன் வளர்ந்தார். அதோடு, அரசாங்க அதிகாரிகள், போலீஸ்காரர்கள், கூட வேலை செய்கிறவர்கள் என எல்லாருமே ஊழல் செய்வதைப் பார்த்து அவர் கொதித்துப்போயிருந்தார்.

 எட்டுப் பிள்ளைகளையும் வளர்க்க என் அப்பாவும் அம்மாவும் ரொம்பவே பாடுபட்டார்கள். முக்கால்வாசி நேரம் அவர்கள் வீட்டிலேயே இருக்க மாட்டார்கள்; மலைகளில் இருந்த வயல்களில் வேலை செய்வதற்காகப் போய்விடுவார்கள். என் அண்ணன் ரோடீலியோவும் நானும் எங்களை நாங்களே கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. நிறைய நேரம் நாங்கள் பசியில் வாடினோம். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் அதற்கான வாய்ப்பே எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஏனென்றால், ஏழு வயதிலிருந்து நாங்களும் தோப்பு வேலைக்குப் போக வேண்டியிருந்தது. தேங்காய்களை மூட்டை மூட்டையாகத் தூக்கிக்கொண்டு போனோம், அதுவும் உயரமான மலைமேல்! தூக்க முடியாத அளவுக்கு நிறைய தேங்காய்கள் இருந்தால், மூட்டையை இழுத்துக்கொண்டு போக வேண்டியிருந்தது.

 அப்பா அடிக்கடி எங்களை அடித்து உதைத்தார். அதுகூடப் பரவாயில்லை, எங்கள் அம்மாவையும் அடித்ததைத்தான் எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்ன செய்து பார்த்தும் அவரைத் தடுக்க எங்களால் முடியவில்லை. அதனால், வளர்ந்து ஆளான பிறகு அவரைத் தீர்த்துக்கட்டிவிட வேண்டுமென்று நானும் அண்ணனும் ரகசியமாகப் பேசி வைத்துக்கொண்டோம். பாசமான ஒரு அப்பாவுக்காக நான் ஏங்காத நாளே இல்லை.

 அப்பா செய்த கொடுமைகளைப் பார்க்கப் பார்க்க எரிச்சலாக இருந்தது; கடைசியில், வெறுத்துப்போய் வீட்டைவிட்டே வந்துவிட்டேன். அப்போது எனக்கு 14 வயது. கொஞ்ச நாளுக்குத் தெருத் தெருவாக அலைந்துகொண்டிருந்தேன். போதைப்பொருளை (மரிஹுவானா) எடுத்துக்கொள்ளவும் ஆரம்பித்தேன். அதன் பிறகு, ஒரு வேலையில் சேர்ந்தேன்; சுற்றுலாப் பயணிகளை நீர்வீழ்ச்சிக்குப் படகில் கூட்டிக்கொண்டு போவதுதான் அந்த வேலை.

 சில வருஷங்களுக்குப் பிறகு மணிலாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால், வேலை செய்ய ஒவ்வொரு சனி ஞாயிறும் பாக்சாங்ஹானுக்குப் போய்விட்டு வந்தேன். அதனால், படிப்பதற்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. அர்த்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வதுபோல் தோன்றியது. மரிஹுவானா எடுத்தும் என் கவலை குறையவில்லை. அதனால், இன்னும் சக்திவாய்ந்த போதைப்பொருள்களை (மெத்தம்ஃபெட்டமைன்ஸ், கொக்கெயின், ஹெராயின்) எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். போதைப் பழக்கம் வந்ததும் பெண்கள் சகவாசமும் வந்துவிட்டது. அதோடு, வறுமையையும், அநீதியையும், கஷ்டங்களையும் பார்க்கப் பார்க்க வெறுப்பாக இருந்தது. அரசாங்கத்தால்தானே இந்த நிலைமை என்று நினைத்து அரசாங்கத்தை வெறுக்க ஆரம்பித்தேன். “வாழ்க்கை ஏன் இவ்ளோ மோசமா இருக்கு?” என்று கடவுளிடம் கேட்டேன். நிறைய மதங்களில் பதில் தேடினேன், ஆனால் கிடைக்கவில்லை. கவலை அதிகமானதுதான் மிச்சம். கவலையை மறக்க இன்னுமதிக போதைப்பொருளை எடுத்துக்கொண்டேன்.

 1972-ல், பிலிப்பைன்சில் இருந்த மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டங்கள் ஒன்றில் நானும் கலந்துகொண்டேன்; அது பயங்கர அடிதடியில் போய் முடிந்தது. நிறைய பேர் கைது செய்யப்பட்டார்கள். சில மாதங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

 போராட்டத்தில் கலந்துகொண்டதால் எங்கே மாட்டிக்கொள்வேனோ என்று பயந்து, மறுபடியும் தெருவில் வாழ ஆரம்பித்தேன். போதைப்பொருள்களை வாங்க பணம் தேவைப்பட்டதால் திருடவும் ஆரம்பித்துவிட்டேன். சொல்லப்போனால், பணக்காரர்களுக்கும் வெளிநாட்டுக்காரர்களுக்கும் என் உடம்பை விற்கும் அளவுக்குப் போய்விட்டேன். ‘வாழ்ந்தா என்ன, செத்தா என்ன’ என்ற நினைப்புகூட எனக்கு வந்துவிட்டது.

 இதற்கிடையில், என் அம்மாவும் தம்பியும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்து அப்பாவுக்குக் கோபம் தலைக்கேறியது. அவர்களுடைய பைபிள் புத்தகங்களை தீ வைத்துக் கொளுத்திவிட்டார். ஆனாலும், அவர்கள் இரண்டு பேரும் தளர்ந்துபோகவே இல்லை. அவர்கள் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள்.

 ஒருநாள், ஒரு யெகோவாவின் சாட்சி பைபிளைப் பற்றி என் அப்பாவிடம் பேசினார்; இந்த உலகத்தில் கடவுளுடைய நீதியான ஆட்சி வரப்போவதைப் பற்றி அவரிடம் சொன்னார். (சங்கீதம் 72:12-14) அநியாய அக்கிரமங்களுக்குக் கடவுள் முடிவுகட்டுவார் என்ற விஷயம் அப்பாவின் மனதைத் தொட்டது. அதனால், பைபிளைப் படித்துப்பார்க்க அவர் முடிவு செய்தார். கடவுளுடைய நீதியான ஆட்சியைப் பற்றி மட்டுமல்ல, கணவர்களுக்கும் அப்பாக்களுக்கும் கடவுள் கொடுத்திருக்கும் பொறுப்புகளைப் பற்றியும் பைபிளிலிருந்து அவர் தெரிந்துகொண்டார். (எபேசியர் 5:28; 6:4) கொஞ்ச நாளில், அவரும் என்கூடப் பிறந்த எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். ஆனால், அப்போது நான் வீட்டில் இல்லாததால், இதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது

 1978-ல் நான் ஆஸ்திரேலியாவுக்குக் குடிமாறிப் போனேன். அது அமைதியான நாடு, வசதியான நாடும்கூட. ஆனால், அங்குகூட எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அதனால், குடிப்பதையும் போதைப்பொருள் எடுத்துக்கொள்வதையும் நான் நிறுத்தவில்லை. சில மாதங்கள் கழித்து யெகோவாவின் சாட்சிகள் என்னைச் சந்தித்தார்கள். அமைதியும் சமாதானமுமான உலகம் வரப்போவதைப் பற்றி பைபிளிலிருந்து அவர்கள் காட்டினார்கள். அந்த விஷயம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆனாலும், அவர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

 கொஞ்ச நாளுக்குப் பிறகு, மறுபடியும் பிலிப்பைன்சுக்குப் போய் சில வாரம் தங்கினேன். என் அப்பா அடியோடு மாறிவிட்ட விஷயத்தை என்கூடப் பிறந்தவர்கள் அப்போதுதான் சொன்னார்கள். ஆனாலும், என் மனம் ஆறவே இல்லை, அதனால் அப்பாவின் முகத்தில் முழிக்கக்கூட எனக்குப் பிடிக்கவில்லை.

 இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு கஷ்டங்களும் அநியாயங்களும் இருக்கின்றன என்று என் கடைசி தங்கை பைபிளிலிருந்து எடுத்துக் காட்டினாள். அப்போது அவளுக்கு டீனேஜ் வயதுதான். அவ்வளவு சின்ன வயதில் என் கேள்விகளுக்கு அவள் பதில் சொன்னதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் கிளம்பி வருவதற்கு முன்பு, என் அப்பா என்னிடம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் a என்ற புத்தகத்தைக் கொடுத்து, “இனி நீ நிம்மதிய தேடி வேற எங்கயும் அலைய வேண்டாம், இத படிச்சாலே போதும்” என்று சொன்னார். ஆஸ்திரேலியாவுக்குப் போன பிறகு யெகோவாவின் சாட்சிகளைப் பார்த்துப் பேசும்படியும் சொன்னார்.

 அப்பா சொன்னபடியே நான் யெகோவாவின் சாட்சிகளைத் தேடினேன். பிரிஸ்பேனில் என் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய ராஜ்ய மன்றம் இருந்ததைக் கண்டுபிடித்தேன். அவர்களிடம் பைபிளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஊழலே இல்லாத கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் என்று (தானியேல் 7-ஆம் அதிகாரம், ஏசாயா 9-ஆம் அதிகாரம் போன்ற பகுதிகளில்) பைபிள் சொல்வதை நான் தெரிந்துகொண்டேன். பூஞ்சோலையாக மாறப்போகும் இந்தப் பூமியில் நாம் சந்தோஷமாக வாழப்போவதைப் பற்றிக் கற்றுக்கொண்டேன். அதனால், கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கு என்னுடைய குணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்... போதைப்பொருள் பழக்கத்தையும் குடிப்பழக்கத்தையும் விட்டொழிக்க வேண்டும்... ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்வதை நிறுத்த வேண்டும்... என்றெல்லாம் தெரிந்துகொண்டேன். எப்படியோ கஷ்டப்பட்டு என்னுடைய கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டேன். என்னோடு வாழ்ந்துகொண்டிருந்த பெண்ணின் சகவாசத்தையும் விட்டுவிட்டேன். மற்ற விஷயங்களிலும் மாற்றங்கள் செய்ய யெகோவாவிடம் உதவி கேட்டேன். அவர்மேல் நான் வைத்திருந்த நம்பிக்கை அதிகமாகிக்கொண்டே போனது.

 ஒருவரை அடியோடு மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டேன். நாம் முயற்சி செய்தால், நம் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:9, 10) அப்படி நான் முயற்சி செய்தபோதுதான், என் அப்பாவும் உண்மையிலேயே மாறியிருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகு அவர்மேல் இருந்த வெறுப்பும் கோபமும் போய்விட்டது. அவரோடு சமாதானமாக வேண்டுமென்று நினைத்தேன். அதனால், சின்ன வயதிலிருந்து அவர்மேல் வளர்த்திருந்த மனக்கசப்பை விட்டுவிட்டு, அவரை மனதார மன்னித்தேன்.

எனக்குக் கிடைத்த நன்மைகள்

 இளவயதில் நான் மற்றவர்களைப் பார்த்துக் கெட்ட வழியில் போனேன். கெட்ட சகவாசம் நம்மைக் கெடுத்துவிடும் என்று பைபிள் சொல்வது என் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது. (1 கொரிந்தியர் 15:33) ஆனால், யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் எனக்கு நல்ல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். திருந்தி வாழ அவர்கள் எனக்கு உதவியிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்திதான் என் அருமையான மனைவி லோரெட்டா. இப்போது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து, பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவி செய்துவருகிறோம்.

என் மனைவியோடும் நண்பர்களோடும் சேர்ந்து சாப்பிட்டபோது

 பைபிள் என் அப்பாவை ஒரு நல்ல கணவராக... பணிவும் சாந்தமும் உள்ள கிறிஸ்தவராக... மாற்றியது. அவர் அப்படி மாறுவார் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லை. 1987-ல் நான் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறிய பிறகு என் அப்பாவை மறுபடியும் சந்தித்தேன். அப்போதுதான், என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக அவர் என்னைக் கட்டிப்பிடித்தார்!

 என் அப்பா என் அம்மாவோடு சேர்ந்து, 35 வருஷத்துக்கும் மேலாக, பைபிளில் இருக்கும் சந்தோஷமான செய்தியைப் பற்றி மற்றவர்களுக்குச் சொன்னார். கடின உழைப்பாளி, கரிசனையானவர், ஓடி ஓடி உதவுகிறவர் என்றெல்லாம் என் அப்பா பெயரெடுத்தார். அவரிடம் மதிப்புமரியாதையோடும் பாசத்தோடும் நடந்துகொள்ள நான் பழகிக்கொண்டேன். சொல்லப்போனால், அவருடைய மகனாக இருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டேன். 2016-ல் அவர் இறந்துவிட்டார். ஆனால், அடிக்கடி அவரை ஆசையாக நினைத்துப் பார்க்கிறேன். பைபிள் ஆலோசனைகளின்படி நடந்ததால் அவரும் நானும் எங்கள் சுபாவத்தை அடியோடு மாற்றிக்கொண்டோம். இப்போது என் மனதில் எந்த விதமான வெறுப்பும் இல்லை. முக்கியமாக, பரலோகத் தகப்பனாகிய யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றியோடு இருக்கிறேன். குடும்பங்கள் படுகிற கஷ்டங்களுக்குக் காரணமான எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டப்போவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.

a இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது, ஆனால் இப்போது அச்சிடப்படுவது இல்லை.