Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“என்னை நினைத்து இப்போது நான் கூனிக்குறுகுவது இல்லை”

“என்னை நினைத்து இப்போது நான் கூனிக்குறுகுவது இல்லை”
  • பிறந்த வருஷம்: 1963

  • பிறந்த நாடு: மெக்சிகோ

  • என்னைப் பற்றி: தெரு வாழ்க்கை, தாழ்வு மனப்பான்மை

என் கடந்தகால வாழ்க்கை

 வட மெக்சிகோவில் இருக்கிற ஸ்யூதாத் ஓப்ரகான் என்ற நகரத்தில் நான் பிறந்தேன். என்னோடு சேர்த்து என் அப்பா அம்மாவுக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். நான் ஐந்தாவது பிள்ளை. நகரத்தைவிட்டு நாங்கள் வெளியே வாழ்ந்தோம். என் அப்பாவுக்கு ஒரு சின்ன பண்ணை இருந்தது. அந்த வாழ்க்கை ஓர் அருமையான வாழ்க்கை! நாங்கள் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தோம். எனக்கு ஐந்து வயது இருந்தபோது, ஒரு சோக சம்பவம் நடந்தது. ஒரு சூறாவளி வந்து எங்கள் பண்ணை முழுவதையும் அழித்துவிட்டது. அதனால், வேறொரு ஊருக்குக் குடிமாறிப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

 என் அப்பா நன்றாகச் சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனால், மதுபானத்துக்கு அடிமையாகிவிட்டார். அதனால், அப்பா அம்மாவுக்கு இடையே பிரச்சினைகள் வெடித்தன. பிள்ளைகளான எங்களையும் அது புரட்டிப்போட்டது. எங்கள் அப்பாவிடமிருந்த சிகரெட்டுகளைத் திருடி நாங்களும் புகைபிடிக்க ஆரம்பித்தோம். ஆறு வயதிலேயே போதை தலைக்கேறும் அளவுக்குக் குடித்தேன். ரொம்பச் சீக்கிரத்திலேயே அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டார்கள். என்னுடைய பழக்கவழக்கங்களும் தாறுமாறாக மாறின.

 என் அம்மா இன்னொருவரோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தபோது, எங்களையும் கூட்டிக்கொண்டு போனார். அம்மாவுக்கு அவர் பணமே கொடுக்க மாட்டார். அதனால், அம்மாவின் சம்பளத்தை வைத்துக்கொண்டு எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. நானும் என்கூடப் பிறந்தவர்களும் எங்களால் முடிந்த வேலைகளுக்குப் போனோம். ஆனாலும், அடிப்படைத் தேவைகளைக்கூட பார்த்துக்கொள்ள முடியவில்லை. காலணிகளுக்கு பாலிஸ் போடுவது... ரொட்டி விற்பது... செய்தித்தாள்களைப் போடுவது... சூயிங்கம் விற்பது... வேறுசில வேலைகள்... என நிறைய வேலைகளைச் செய்தேன். அதோடு, சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பதற்கு பணக்காரர்களின் வீட்டு குப்பைத் தொட்டிகளைத் தேடி நகரம் முழுவதும் அலைந்துதிரிந்தேன்.

 எனக்குப் பத்து வயது இருந்தபோது, நகரத்தின் குப்பைகளைக் கொட்டும் குப்பைமேட்டில் வேலை செய்வதற்கு ஒரு ஆள் என்னைக் கூப்பிட்டார். அதனால், பள்ளிப்படிப்பை நிறுத்தினேன், வீட்டைவிட்டு கிளம்பினேன். ஒரு நாளுக்கு, ஒரு டாலருக்கும் குறைவான சம்பளத்தைத்தான் அந்த ஆள் கொடுத்தார். குப்பைகளிலிருந்து பொறுக்கியெடுத்த உணவைத்தான் கொடுத்தார். அந்தக் குப்பைமேட்டிலிருந்த பொருள்களை வைத்து அங்கேயே ஒரு குடிசையைக் கட்டி, அதில் தங்கினேன். என்கூட இருந்தவர்கள் வாயில் கெட்ட வார்த்தைகள் சர்வசாதாரணமாக வரும். அவர்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதில் நிறைய பேர், மதுபானத்துக்கும் போதைப்பொருளுக்கும் அடிமைகளாக இருந்தார்கள். அந்தச் சமயம்தான் என்னுடைய வாழ்க்கையிலேயே ரொம்பவே இருண்டகாலம்! ஒவ்வொரு ராத்திரியும் பயத்தில் கதறி அழுவேன். வறுமை வாட்டியதாலும், அவ்வளவு படிப்பு இல்லாததாலும் கூனிக்குறுகிப் போனேன். மூன்று வருஷங்கள் அந்தக் குப்பைமேட்டில் வாழ்ந்தேன். பிறகு, மெக்சிகோவில் இருக்கிற இன்னொரு மாகாணத்துக்குக் குடிமாறினேன். அங்கே, வயலில் வேலை செய்தேன். பூக்களைப் பறிப்பது... பருத்தி எடுப்பது... கரும்புகளைச் சேர்ப்பது... உருளைக்கிழங்குகளை அறுவடை செய்வது... என நிறைய வேலைகளைச் செய்தேன்.

இதுபோன்ற ஒரு குப்பைமேட்டில்தான் மூன்று வருஷங்கள் வாழ்ந்தேன்

 நான்கு வருஷங்கள் இப்படியே உருண்டோடின. பிறகு, மறுபடியும் ஸ்யூதாத் ஓப்ரகானுக்கே போனேன். என்னுடைய பெரிய அத்தை, தன்னுடைய வீட்டில் எனக்கு ஒரு அறையைக் கொடுத்தார். அவர் ஒரு மந்திரவாதி! தன்னுடைய மந்திர சக்தியால் மற்றவர்களை குணமாக்குவார். ராத்திரி நேரத்தில் திகிலான கனவுகள் என்னை அமுக்கும். அதனால், மனஅழுத்தம் அதிகமாகி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்தது. ஒருநாள் ராத்திரி, “கர்த்தரே, நீங்க இருக்குறது உண்மையா இருந்தா, நான் உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசப்படறேன். வாழ்நாள் முழுசும் நான் உங்களுக்கு சேவை செய்யணும். உண்மையான மதம்னு ஒண்ணு இருந்தா, அத பத்தி நான் தெரிஞ்சிக்கணும்” என்று ஜெபம் செய்தேன்.

பைபிளால் என் வாழ்க்கையில் வசந்தம் வீசியது

 கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை எனக்கு எப்போதுமே இருந்துவந்தது. சின்னப் பையனாக இருந்தபோதே, வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த சர்ச்சுகளுக்குப் போனேன். ஆனால், எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பைபிளைப் பற்றி எந்தச் சர்ச்சுகளும் அவ்வளவாகச் சொல்லித்தரவில்லை. கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற என் ஆசையையும் நிறைவேற்றவில்லை. சிலர், பணத்திலேயே குறியாக இருந்தார்கள். இன்னும் சில பாதிரிகள், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

 எனக்கு 19 வயது ஆனபோது, என்னுடைய சின்ன அக்கா வீட்டுக்காரர், வழிபாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிற சிலைகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் தனக்குக் காட்டியதாகச் சொன்னார். யாத்திராகமம் 20:4, 5-ஐ எனக்கு வாசித்துக் காட்டினார். சிலைகளைச் செய்யக் கூடாது என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. 5-வது வசனம் இப்படிச் சொல்கிறது: “அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது. நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” பிறகு அவர், “உருவங்கள பயன்படுத்தி கடவுள் அற்புதங்கள செய்றதா இருந்தா... வழிபாட்டுல நாம உருவங்கள பயன்படுத்தணும்னு அவர் விரும்புறதா இருந்தா... அத ஏன் தடை செய்யணும்?” என்று கேட்டார். அப்போது, என் மனதின் ஓரத்தில் பொறிதட்டியது. அதற்குப் பிறகு, பைபிள் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைப் பேசினோம். நேரம் போனதே தெரியாதளவுக்குச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

 பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்துக்கு அவர் என்னைக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே பார்த்ததும் கேட்டதும் என் மனதைத் தொட்டன. இளம் பிள்ளைகள்கூட நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்கள், மேடையிலிருந்து சரளமாகப் பேசினார்கள். “ச்சே, எவ்வளவு அருமையான கல்வி இங்கே கிடைக்குது!” என்று சொல்லிக்கொண்டேன். நான் நீளமான முடி வைத்திருந்தேன். என் தோற்றமும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. ஆனாலும், யெகோவாவின் சாட்சிகள் என்னை முகம்மலர வரவேற்றார்கள். கூட்டம் முடிந்த பிறகு, ஒரு குடும்பத்தார் என்னை இரவு உணவு சாப்பிடுவதற்குக்கூட கூப்பிட்டார்கள்.

 யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படித்ததிலிருந்து யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன். பணம்... அந்தஸ்து... இனம்... படிப்பு... இப்படி எதையுமே அவர் பார்க்காதவர் என்பதையும், நம்மேல் அக்கறையோடு இருக்கிற அன்பு அப்பா என்பதையும் தெரிந்துகொண்டேன். உண்மையிலேயே அவர் பாரபட்சம் பார்க்காதவர்! (அப். 10:34, 35) கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை ஒருவழியாக நிறைவேறியது. வாழ்க்கையில் இருந்த வெறுமை உணர்வு என்னைவிட்டுப் போனது.

எனக்குக் கிடைத்த பலன்கள்

 என்னுடைய வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறியது! புகைபிடிப்பது... போதை தலைக்கேற குடிப்பது... கெட்ட வார்த்தைகளைப் பேசுவது... என எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். சின்னப் பையனாக இருந்தபோது என் மனதிலிருந்த கசப்பான எண்ணங்களும், திகிலூட்டுகிற கனவுகளால் ஏற்பட்ட நடுக்கமும் என்னைவிட்டுப் போக ஆரம்பித்தன. சின்ன வயதில் அனுபவித்த வேதனைகளாலும், அவ்வளவாகப் படிக்காததாலும் என் இதயத்தின் ஆழத்தில் தாழ்வு மனப்பான்மை வேர்விட்டு முளைத்திருந்தது. இப்போது அதையும் என்னால் பிடுங்கி எறிய முடிந்தது.

 எனக்கு ஓர் அருமையான மனைவி கிடைத்தாள்! யெகோவாவை அவள் ரொம்ப நேசிக்கிறாள், எனக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கிறாள். இப்போது நான் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்கிறேன். சபைகளுக்குப் போய், சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துகிறேன்; அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். அவர்கள் என்கூட பிறக்கவில்லை என்றாலும், என்னுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான் அவர்களை நினைக்கிறேன். ஆளை மாற்றுகிற சக்திபடைத்த பைபிளுக்கும், கடவுள் கொடுக்கிற உயர்தரமான கல்விக்கும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். என்னை நினைத்து இப்போது நான் கூனிக்குறுகுவது இல்லை.

எனக்கு மற்றவர்கள் உதவியதுபோல், என் மனைவியும் நானும் மற்றவர்களுக்கு உதவுகிறோம்