“எனக்கு ஆர்வம் இல்லை” என்று முன்பு சொன்ன ஒருவரிடம் யெகோவாவின் சாட்சிகள் ஏன் மறுபடியும் பேசுகிறார்கள்?
யெகோவாவின் சாட்சிகளாகிய எங்களுக்குக் கடவுள்மேலும் மனிதர்கள்மேலும் அன்பு இருப்பதால், எல்லா மக்களிடமும் சந்தோஷமாக பைபிள் செய்தியைச் சொல்கிறோம். “எனக்கு ஆர்வம் இல்லை” என்று முன்பு சொன்ன ஒருவரிடம்கூட நாங்கள் மறுபடியும் அந்தச் செய்தியைச் சொல்கிறோம். (மத்தேயு 22:37-39) கடவுள்மேல் எங்களுக்கு அன்பு இருப்பதால் அவருடைய மகன் கட்டளை கொடுத்தபடியே, “முழுமையாகச் சாட்சி கொடுக்க” முயற்சி செய்கிறோம். (அப்போஸ்தலர் 10:42; 1 யோவான் 5:3) அதனால்தான், முன்பு வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் மாதிரியே, நாங்களும் பைபிள் செய்தியைத் திரும்பத் திரும்ப மக்களிடம் சொல்கிறோம். (எரேமியா 25:4) அதேபோல், மக்கள்மேலும் எங்களுக்கு அன்பு இருப்பதால், முன்பு ஆர்வம் காட்டாதவர்களிடம்கூட உயிர்காக்கும் செய்தியைச் சொல்கிறோம். அதாவது ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ சொல்கிறோம்.—மத்தேயு 24:14.
நிறைய சமயங்களில், ஆர்வம் காட்டாதவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பப் போகும்போது நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. அதற்கு மூன்று காரணங்களைப் பாருங்கள்:
மக்கள் குடிமாறிப் போகிறார்கள்.
அதே வீட்டிலுள்ள மற்றவர்கள் பைபிள் செய்திமேல் ஆர்வம் காட்டுகிறார்கள்.
மக்களுடைய மனநிலை மாறுகிறது. உலக சம்பவங்களாலும் தங்களுடைய வாழ்க்கையில் வந்த மாற்றங்களாலும் சிலர் ‘தங்களுடைய ஆன்மீகத் தேவையை உணர்ந்திருக்கிறார்கள்.’ அதனால், பைபிள் செய்தியில் ஆர்வம் காட்ட ஆரம்பிக்கிறார்கள். (மத்தேயு 5:3, அடிக்குறிப்பு) பைபிள் செய்தியை எதிர்க்கிறவர்கள்கூட அப்போஸ்தலன் பவுலைப் போலவே மனம் மாறலாம்.—1 தீமோத்தேயு 1:13.
இருந்தாலும், எங்கள் செய்தியைக் கேட்கச் சொல்லி யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. (1 பேதுரு 3:15) வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒவ்வொருவரும் சொந்தமாக முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.—உபாகமம் 30:19, 20.