பைபிள் வசனங்களின் விளக்கம்

எரேமியா 11:11—”தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்“

எரேமியா 11:11—”தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்“

“அதனால் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவர்களை அழிக்கப்போகிறேன். அவர்களால் தப்பிக்கவே முடியாது. உதவிக்காக அவர்கள் என்னைக் கூப்பிட்டாலும் நான் கேட்க மாட்டேன்.’”—எரேமியா 11:11, புதிய உலக மொழிபெயர்ப்பு.

“ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—எரேமியா 11:11, தமிழ் O.V. பைபிள்.

எரேமியா 11:11-ன் அர்த்தம்

 எரேமியா தீர்க்கதரிசியின் காலத்தில் வாழ்ந்த யூதர்களிடம்தான் கடவுள் பேசிக்கொண்டிருந்தார். யெகோவாவுடைய a நீதியான சட்டங்களையும் அவர்கள் மதிக்கவில்லை, அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் அவர் அன்பாக திருத்தியபோது அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய கெட்ட நடத்தையால் வந்த மோசமான பின்விளைவுகளிலிருந்து கடவுள் அவர்களை பாதுகாக்கப் போவதில்லை.—நீதிமொழிகள் 1:24-32.

 “அதனால் யெகோவா இப்படிச் சொல்கிறார்.” இங்கே சொல்லப்பட்டிருக்கிற “அதனால்” என்ற வார்த்தை அதற்கு முந்தின வசனத்துக்கும் அடுத்து வருகிற வசனங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது. தங்களுடைய முன்னோர்கள் கடவுளோடு செய்திருந்த ஒப்பந்தத்தை இந்த யூதர்கள் மீறிவிட்டதாக எரேமியா 11:1-10-ல் யெகோவா சொன்னார். (யாத்திராகமம் 24:7) படைப்பாளராக இருக்கிற அவரை வணங்குவதற்கு பதிலாக இந்த யூதர்கள் சிலைகளை வணங்கினார்கள். விசுவாச துரோகிகளாக ஆகிவிட்ட இவர்கள் எல்லா விதமான அக்கிரமங்களையும் செய்ய ஆரம்பித்தார்கள். ஏன், குழந்தைகளை நரபலி கூட கொடுத்தார்கள்!—எரேமியா 7:31.

 “நான் அவர்களை அழிக்கப்போகிறேன்.” பைபிளில் நிறைய சமயங்களில் கடவுள் ஒரு காரியத்தை செய்வதாக சொல்லும்போது அவர் அதை வெறுமனே அனுமதித்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். இந்த ஜனங்களுடைய விஷயத்தில் கடவுள் என்ன செய்தார்? இந்த ஜனங்கள் தங்களுடைய நல்லதுக்காக யெகோவா கொடுத்திருந்த சட்டங்களை மீறி பொய் கடவுட்களை வணங்கியதால் தாங்களாகவே பெரிய கஷ்டத்தில் மாட்டிக்கொண்டார்கள். அதோடு கடவுளுடைய பாதுகாப்பையும் இழந்துவிட்டார்கள். அதனால் பலம் படைத்த எதிரியான பாபிலோன் ராஜா எருசலேமை கைப்பற்றி அங்கிருந்த மக்களை சிறைபிடித்துக்கொண்டு போனார். அவர்கள் மலை மாதிரி நம்பியிருந்த பொய் கடவுட்களால் அவர்களை காப்பாற்றவே முடியவில்லை.—எரேமியா 11:12; 25:8, 9.

 இந்த கஷ்டங்களை எல்லாம் கடவுள் அவர்கள்மேல் வருவதற்கு அனுமதித்ததால் கடவுளே அவர்களுக்கு கெடுதல் செய்துவிட்டதாகவோ தீங்கு செய்துவிட்டதாகவோ அர்த்தம் கிடையாது. ஏனென்றால், யாக்கோபு 1:13 இப்படிச் சொல்கிறது: “கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது.” ஆனால், எரேமியா 11:11-ல் வருகிற வார்த்தைகளை தமிழ் O.V. பைபிள் இப்படி மொழிபெயர்க்கிறது: “தீங்கை அவர்கள்மேல் [அதாவது, யூதர்கள்மேல்] வரப்பண்ணுவேன்.” ‘தீங்கு’ என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற மூல வார்த்தையை b “அழிவு” அல்லது “பேரழிவு” என்றும்கூட மொழிபெயர்க்கலாம். இந்த வார்த்தைகள், யூதர்களுக்கு வந்த கஷ்டங்களை ரொம்ப தெளிவாக விவரிக்கிறது.

 “உதவிக்காக அவர்கள் என்னைக் கூப்பிட்டாலும் நான் கேட்க மாட்டேன்.” ‘கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறவர்களுடைய’ ஜெபத்தையும், பொய் கடவுள்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களுடைய ஜெபத்தையும் யெகோவா கேட்கவே மாட்டார். (ஏசாயா 1:15; 42:17) ஆனால், தங்களுடைய கெட்ட வழிகளை விட்டு மனம் திருந்தி தாழ்மையோடு அவரிடம் வருகிறவர்களுடைய ஜெபத்தை கண்டிப்பாக கேட்பார்.—ஏசாயா 1:16-19; 55:6, 7.

எரேமியா 11:11-ன் பின்னணி

 கி.மு. 647-ல் யெகோவா எரேமியாவை தன்னுடைய தீர்க்கதரிசியாக நியமித்தார். யூதா மக்கள்மேல் கடவுள் கொண்டு வரப்போகிற நியாயத்தீர்ப்பை பற்றி 40 வருஷங்களாக எரேமியா அவர்களுக்கு எச்சரித்தார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இந்த சமயத்தில்தான் எரேமியா 11:11-ல் இருக்கிற வார்த்தைகளை எரேமியா தீர்க்கதரிசி எழுதினார். கி.மு. 607-ல் பாபிலோனியர்கள் எருசலேமை அழித்தபோது அவர் எச்சரிப்பு கொடுத்த மாதிரியே நடந்தது.—எரேமியா 6:6-8; 39:1, 2, 8, 9.

 எரேமியா புத்தகத்தில் ஒரு நம்பிக்கையான செய்தியும் இருக்கிறது. யெகோவா இப்படி சொல்கிறார்: “நீங்கள் பாபிலோனில் 70 வருஷம் இருந்த பின்பு, நான் வாக்குக் கொடுத்தபடியே மறுபடியும் உங்களுடைய தேசத்துக்கு [அதாவது, தாய்நாடான யூதாவுக்கு] உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.” (எரேமியா 29:10) பாபிலோனை மேதிய பெர்சியர்கள் கைப்பற்றிய பின்பு கி.மு. 537-ல் யெகோவா “வாக்குக் கொடுத்தபடியே” செய்தார். பாபிலோன் பேரரசு முழுவதும் சிதறிக்கிடந்த தன்னுடைய மக்கள் தங்களுடைய தாய்நாட்டுக்கு திரும்பி வருவதற்கும், சரியான முறையில் அவரை வணங்குவதற்கும் உதவி செய்தார்.—2 நாளாகமம் 36:22, 23; எரேமியா 29:14.

 எரேமியா புத்தகத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

a எபிரெய மொழியில் இருக்கிற கடவுளுடைய பெயர், தமிழில் யெகோவா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில பைபிள் மொழிபெயர்ப்புகள் அவருடைய பெயருக்கு பதிலாக “கர்த்தர்” என்று ஏன் மொழிபெயர்த்திருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, “யெகோவா யார்?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

b பழைய ஏற்பாடு என்று பொதுவாக அழைக்கப்படுகிற எபிரெய வேதாகமம் ஆரம்பத்தில் எபிரெய மற்றும் அரமேயிக் மொழிகளில் எழுதப்பட்டது.