பைபிள் தரும் பதில்

மரணம் என்கிற எதிரியைக் கண்டு நாம் பயப்படுவதால், நம்முடைய உயிரைப் பாதுகாக்க நியாயமான படிகளை எடுக்கிறோம். (1 கொரிந்தியர் 15:26) ஆனால், பொய்களின் அடிப்படையில் அல்லது மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்படுகிற தேவையில்லாத மரண பயம் மக்களை ‘வாழ்நாள் முழுவதும் அடிமைப்பட்டிருக்க’ செய்கிறது. (எபிரெயர் 2:15) மரணத்தைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டால், வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க முடியாதபடி தடுக்கிற... நம்மை நடுநடுங்க வைக்கிற... மரண பயத்திலிருந்து நாம் விடுதலையாவோம்!—யோவான் 8:32.

மரணத்தைப் பற்றிய உண்மை

  • இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது, எந்த உணர்வும் கிடையாது. (சங்கீதம் 146:4) இறந்த பிறகு வேதனையையும் சித்திரவதையையும் அனுபவிக்க வேண்டியிருக்கமோ என்று நினைத்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; ஏனென்றால், மரணத்தைத் தூக்கத்தோடு பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது.—சங்கீதம் 13:3, அடிக்குறிப்பு; யோவான் 11:11-14.

  • இறந்தவர்களால் நமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. ஒரு காலத்தில் பயங்கர எதிரிகளாக இருந்தவர்கள்கூட இப்போது ‘செத்துச் செயலிழந்து கிடக்கிறார்கள்.’ (நீதிமொழிகள் 21:16, அடிக்குறிப்பு) ‘அவர்கள் காட்டிய வெறுப்பும், பொறாமையும் ஏற்கெனவே அழிந்துவிட்டன’ என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:6.

  • நம்முடைய வாழ்க்கைக்கு மரணம் ஒரு முற்றுப்புள்ளி என நாம் நினைக்கத் தேவையில்லை. இறந்துபோனவர்களைக் கடவுள் திரும்ப உயிரோடு கொண்டுவரப்போகிறார், ஆம் அவர்களை உயிர்த்தெழுப்பப்போகிறார்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.

  • “இனிமேல் மரணம் இருக்காது” என்று கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:4) அப்படிப்பட்ட காலத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.” ஆம், மரண பயமே இல்லாமல் என்றென்றும் வாழ்வார்கள்!—சங்கீதம் 37:29.