பைபிள் தரும் பதில்

”ஷியோல்” என்ற எபிரெய வார்த்தையையும், அதற்கு இணையான “ஹேடீஸ்” என்ற கிரேக்க வார்த்தையையும் சில பைபிள் மொழிபெயர்ப்புகள் “நரகம்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன; அந்த இரண்டு வார்த்தைகளுமே மனிதர்களின் பொதுக் கல்லறையைத்தான் குறிக்கின்றன. (சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 2:27) எரிநரகம் என்ற இடம் இருப்பதாக நிறைய பேர் நம்புவதை இந்தக் கட்டுரையில் இருக்கிற மதச் சித்திரம் காட்டுகிறது. ஆனால், பைபிள் வேறு விதமாகச் சொல்கிறது.

  1. நரகத்தில் இருப்பவர்கள் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு வலியே தெரியாது. “கல்லறையில் [“ஷியோலில்”] வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.”—பிரசங்கி 9:10.

  2. நல்லவர்கள் நரகத்திற்குப் போகிறார்கள். கடவுளுக்கு விசுவாசமாக இருந்த யாக்கோபும் யோபுவும் அங்கே போவதற்குக் காத்திருந்தார்கள்.—ஆதியாகமம் 37:35; யோபு 14:13.

  3. பாவத்தின் தண்டனை மரணம், எரிநரகம் அல்ல. “இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்.”—ரோமர் 6:7.

  4. என்றென்றும் சித்திரவதை செய்வது கடவுளுடைய நீதிநியாயத்திற்கு முரணானது. (உபாகமம் 32:4) முதல் மனிதனான ஆதாம் பாவம் செய்தபோது, “நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்ற தண்டனைத் தீர்ப்பைக் கடவுள் கொடுத்தார்; அதாவது, அவன் எங்கேயும் இல்லாதபடி அழிந்துபோவான் என்று சொன்னார். (ஆதியாகமம் 3:19) ஒருவேளை, ஆதாமைக் கடவுள் எரிநரகத்திற்கு அனுப்பியிருந்தார் என்றால், அவர் பொய் சொல்பவராகத்தான் ஆகியிருப்பார்.

  5. என்றென்றும் சித்திரவதை செய்வதைக் கடவுள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. எரிநரகத்தில் மக்களைக் கடவுள் வாட்டி வதைப்பார் என்ற கருத்து, “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்ற பைபிள் போதனைக்கு முரணாக இருக்கிறது.—1 யோவான் 4:8; எரேமியா 7:31.