Skip to content

‘கடைசி நாட்கள்’ அல்லது ‘கடைசிக் கட்டத்தின்’ அடையாளம் என்ன?

‘கடைசி நாட்கள்’ அல்லது ‘கடைசிக் கட்டத்தின்’ அடையாளம் என்ன?

பைபிள் தரும் பதில்

 “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கு” அல்லது இந்த ‘உலகத்தின் முடிவுக்கு’ அடையாளமாக இருக்கக்கூடிய சம்பவங்களையும் நிலைமைகளையும் மனப்பான்மைகளையும் பைபிள் சொல்கிறது. (மத்தேயு 24:3, தமிழ் O.V. [BSI]) இந்தக் காலப்பகுதியை பைபிள் ‘கடைசி நாட்கள்’ என்றும் ‘கடைசிக் கட்டம்’ என்றும் அழைக்கிறது.—2 தீமோத்தேயு 3:1; தானியேல் 8:19.

‘கடைசி நாட்களை’ பற்றிய சில பைபிள் தீர்க்கதரிசனங்கள்

 ஒரே சமயத்தில் நடக்கிற நிறைய சம்பவங்கள் கடைசி நாட்களுக்கு ‘அடையாளமாக’ இருக்கும் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது. (லூக்கா 21:7) அதற்கு சில உதாரணங்களை பார்க்கலாம்.

 உலகம் முழுவதும் நடக்கிற போர்கள். “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்” என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். (மத்தேயு 24:7) அதே மாதிரி, போரை குறிக்கிற அடையாள அர்த்தமுள்ள ஒரு குதிரை வீரரை பற்றி வெளிப்படுத்துதல் 6:4 சொல்கிறது. அந்த போர்கள், “பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும்”என்றும் அது சொல்கிறது.

 பஞ்சங்கள். ‘பஞ்சங்கள் ஏற்படும்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:7) அடையாள அர்த்தமுள்ள இன்னொரு குதிரை வீரரைப் பற்றியும் வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. அதன் விளைவாக பல இடங்களில் பஞ்சங்கள் ஏற்படும் என்று அது சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 6:5, 6.

 பெரிய நிலநடுக்கங்கள். ‘அடுத்தடுத்து பல இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும்’ என்றும் இயேசு சொன்னார். (மத்தேயு 24:7; லூக்கா 21:11) உலகின் பல இடங்களில் ஏற்படுகிற இந்த பெரிய நிலநடுக்கங்களால் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு மரணங்களையும் வேதனையையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

 நோய்கள். ‘கொள்ளைநோய்கள்’ அல்லது பெருந்தொற்றுகள் வரும் என்று இயேசு சொன்னார்.—லூக்கா 21:11.

 குற்றச்செயல். குற்றச்செயல்கள் காலங்காலமாக நடந்துவந்தாலும் கடைசி நாட்களில் ‘அக்கிரமம் அதிகமாகும்’ என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 24:12.

 பூமியை நாசப்படுத்துதல். மனிதர்கள் இந்த ‘பூமியை நாசமாக்குவார்கள்’ என்று வெளிப்படுத்துதல் 11:18 முன்கூட்டியே சொன்னது. நிறைய விதங்களில் அவர்கள் இதை செய்கிறார்கள். கொடூரமான அநியாயமான செயல்களை செய்வதன் மூலமாக மட்டுமல்ல சுற்றுச்சூழலை கெடுப்பதன் மூலமாகவும்.

 மோசமாகிக்கொண்டே போகும் மனப்பான்மைகள். மக்கள் பொதுவாக ‘நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக’ இருப்பார்கள் என்று 2 தீமோத்தேயு 3:1-4 சொல்கிறது. இப்படிப்பட்ட மனப்பான்மைகளை மக்கள் அதிகமாக காட்டுவதால் இந்த காலகட்டத்தை “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக” இருக்கிற காலம் என்று பைபிள் சொல்கிறது.

 குடும்பத்தில் பாசப்பிணைப்பு குறைதல். நிறைய மக்கள் தங்களுடைய குடும்பத்தில் “பந்தபாசம் இல்லாதவர்களாக”, பிள்ளைகள் “அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக” இருப்பார்கள் என்று 2 தீமோத்தேயு 3:2, 3 முன்கூட்டியே சொன்னது.

 கடவுள்மேல் இருக்கிற அன்பு குறைதல். “பெரும்பாலானவர்களின் அன்பு குறைந்துவிடும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:12) நிறைய மக்களுக்கு கடவுள்மேல் இருக்கிற அன்பு குறையும் என்றுதான் இங்கே இயேசு அர்த்தப்படுத்தினார். அதைப் போலவே, கடைசி நாட்களில் மக்கள் “கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக” இருப்பார்கள் என்று 2 தீமோத்தேயு 3:4 சொல்கிறது.

 பக்திமான்போல் வேஷம். கடவுள் பக்தி இருப்பதுபோல் மக்கள் காட்டிக்கொள்வார்கள். ஆனால், உண்மையிலேயே அவருக்கு பிடித்த மாதிரி வாழ மாட்டார்கள் என்று 2 தீமோத்தேயு 3:5 முன்கூட்டியே சொன்னது.

 பைபிள் தீர்க்கதரிசனங்களை நன்றாக புரிந்துகொள்வது. ‘முடிவு காலத்தில்’ நிறைய பேர் பைபிள் சத்தியங்களை, குறிப்பாக கடைசி நாட்கள் பற்றிய தீர்க்கதரிசனங்களை, நன்றாக புரிந்துகொள்வார்கள் என்று தானியேல் புத்தகம் முன்கூட்டியே சொன்னது.—தானியேல் 12:4.

 உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலை. “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசு முன்கூட்டியே சொன்னார்.—மத்தேயு 24:14.

 பரவலாக இருக்கும் ஆர்வக் குறைவும் கேலிக் கிண்டலும். முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு தெளிவான அத்தாட்சிகள் இருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். (மத்தேயு 24:37-39) அதுமட்டுமல்ல, கடைசி நாட்களுக்கான அத்தாட்சிகளை மக்கள் கேலி செய்வார்கள் என்றும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் 2 பேதுரு 3:3, 4 முன்கூட்டியே சொன்னது.

 எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும். கடைசி நாட்களைப் பற்றி சொல்லும்போது ஒரு சில தீர்க்கதரிசனங்களோ அல்லது பல தீர்க்கதரிசனங்களோ அல்ல, மேலே சொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒரே சமயத்தில் நிறைவேறும் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 24:33.

நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?

 ஆம். 1914-ல் முதல் உலக போர் வெடித்த சமயத்தில்தான் கடைசி நாட்கள் ஆரம்பித்தது என்பதை இந்த உலக நிலைமைகளும் பைபிள் காலக்கணக்கும் தெளிவாக காட்டுகிறது. நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதை இந்த உலக நிலைமைகள் எப்படி சுட்டிக்காட்டுகின்றன என்பதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யத் தொடங்கியது. பிசாசாகிய சாத்தானையும் அவனோடு சேர்ந்துகொண்ட கெட்ட தூதர்களையும் பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளியதுதான் அது செய்த முதல் வேலை. அவர்களால் இனி பூமியில் மட்டுமே செயல்பட முடியும். (வெளிப்படுத்துதல் 12:7-12) இன்றைக்கு இருக்கிற நிறைய பேருடைய கெட்ட மனப்பான்மைகளுக்கும் செயல்களுக்கும் பின்னால் இருப்பது சாத்தான்தான். அதனால்தான் இந்த கடைசி நாட்களில் ‘நிலைமை சமாளிக்க முடியாத அளவுக்கு படுமோசமாக’ இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1.

 இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாததால் நிறைய மக்கள் மனதளவில் உடைந்துபோய் இருக்கிறார்கள். மனிதர்களால் இனிமேல் ஒற்றுமையாக வாழவே முடியாது என்று சிலர் கவலைப்படுகிறார்கள். இன்னும் சிலர் மனித இனமே இல்லாமல் போகும் அளவுக்கு ஒருவரையொருவர் கொன்று குவித்துவிடுவார்களோ என்றும் கூட பயப்படுகிறார்கள்.

 இந்த உலக சூழ்நிலைமைகளை பார்த்து சிலர் நொந்துபோனாலும் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் இந்த உலகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவு கட்டிவிடும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:3, 4) கடவுள் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு, ‘முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்’ என்று இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதல் தருகிறது.—மத்தேயு 24:13; மீகா 7:7.