பைபிள் தரும் பதில்

ஆம், நிச்சயமாக! ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்கிறார் என்பதை பைபிள் பதிவுகளும் நிஜ வாழ்க்கை அனுபவங்களும் காட்டுகின்றன. “தனக்குப் பயந்து நடக்கிறவர்களின் ஆசையை [கடவுள்] நிறைவேற்றுகிறார். உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்டு, அவர்களைக் காப்பாற்றுகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 145:19) ஆனால், உங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா மாட்டாரா என்பது பெரும்பாலும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

கடவுளுக்கு இதெல்லாம் முக்கியம்:

  • கடவுளிடம் ஜெபம் செய்வது, இயேசுவிடமோ மரியாளிடமோ புனிதர்களிடமோ தேவதூதர்களிடமோ சிலைகளிடமோ அல்ல. யெகோவா மட்டும்தான் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’—சங்கீதம் 65:2.

  • கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக, அதாவது பைபிளிலுள்ள அவருடைய சட்டதிட்டங்களுக்கு இசைவாக, ஜெபம் செய்வது.—1 யோவான் 5:14.

  • இயேசுவுக்கு இருக்கிற அதிகாரத்தைப் புரிந்துகொண்டு, அவருடைய பெயரில் ஜெபம் செய்வது. “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 14:6.

  • விசுவாசத்தோடு ஜெபம் செய்வது, தேவைப்பட்டால் விசுவாசத்தை அதிகமாக்கும்படி கேட்பது.—மத்தேயு 21:22; லூக்கா 17:5.

  • மனத்தாழ்மையோடும் உண்மை மனதோடும் இருப்பது. “யெகோவா மிகவும் உயர்ந்தவராக இருந்தாலும், தாழ்மையானவர்களைக் கண்ணோக்கிப் பார்க்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 138:6.

  • விடாமல் தொடர்ந்து ஜெபம் செய்வது. “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 11:9.

கடவுளுக்கு இதெல்லாம் முக்கியமல்ல:

  • உங்கள் இனம் அல்லது தேசம். ‘கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.’—அப்போஸ்தலர் 10:34, 35.

  • உங்கள் அங்க நிலை. உட்கார்ந்தபடி, குனிந்தபடி, மண்டிபோட்டபடி, அல்லது நின்றபடி நீங்கள் ஜெபம் செய்யலாம்.—1 நாளாகமம் 17:16; நெகேமியா 8:6; தானியேல் 6:10; மாற்கு 11:25.

  • வாய்விட்டு ஜெபிக்கிறீர்களோ மனதுக்குள் ஜெபிக்கிறீர்களோ. மனதுக்குள் செய்யப்படுகிற ஜெபங்களுக்குகூட கடவுள் பதிலளிக்கிறார்.—நெகேமியா 2:1-6.

  • உங்கள் பிரச்சினைகள் பெரியதோ சிறியதோ. ‘உங்கள் கவலைகளையெல்லாம் கடவுள்மேல் போட்டுவிடுங்கள்’ என்று அவரே ஊக்கப்படுத்துகிறார்.—1 பேதுரு 5:7.