பைபிள் தரும் பதில்

கடவுளுக்கு நிஜமாகவே ஒரு மனைவியோ, அந்த மனைவி மூலம் பிள்ளைகளோ கிடையாது. ஆனால், எல்லா உயிர்களையும் படைத்தவர் அவர்தான். (வெளிப்படுத்துதல் 4:11) அதனால்தான், கடவுள் படைத்த முதல் மனிதனாகிய ஆதாம் “கடவுளின் மகன்” என்று அழைக்கப்படுகிறான். (லூக்கா 3:38) இயேசுவின் விஷயத்திலும் அதுதான் உண்மை; இயேசு கடவுளால் படைக்கப்பட்டார் என்று பைபிள் கற்பிக்கிறது. அதனால்தான், இயேசுவும் “கடவுளுடைய மகன்” என்று அழைக்கப்படுகிறார்.—யோவான் 1:49.

ஆதாமைப் படைப்பதற்கு முன்பே இயேசுவைக் கடவுள் படைத்தார். இயேசுவைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும் படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும் இருக்கிறார்.” (கொலோசெயர் 1:15) பெத்லகேமிலுள்ள தொழுவத்தில் குழந்தையாகப் பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னரே இயேசு உயிர் வாழ்ந்துகொண்டிருந்தார். சொல்லப்போனால், “அவர் எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பிருந்தே, எத்தனையோ காலங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்துவருகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (மீகா 5:2) ஆம், கடவுளுடைய முதல் மகனான இயேசு பூமியில் ஒரு மனிதனாகப் பிறப்பதற்கு முன்பே பரலோகத்தில் வாழ்ந்துவந்தார். “பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன்” என்று இயேசுவே சொன்னார்.—யோவான் 6:38; 8:23.